வாசிப்பும் சிந்தனையும் 4 – சிந்தனை 1

*வாசிப்பும் சிந்தனையும் 4 – வெறும் சிந்தனை 1

பதிவு எண்: 4 நாள்: பிப்ரவரி 1, 2023

******இப்பகுதியைத் தவிர்த்து விடலாம்.

வாசிப்பும் சிந்தனையும் என்று தொடங்கிவிட்டு ஏன் ஆன்மீகம் மட்டும் என்று ஒரு நண்பர் கேட்கிறார். அவருக்கு ஆன்மீகம் என்னும் சொல்லே அலர்ஜியாகிவிட்டது. அவர் நாத்திகர் என்று நினைக்க வேணாடாம். உண்மையான ஆத்திகர் அவர். ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் பல விஷயங்கள் அடிப்படையான ஆன்மீக உண்மைகளைக் கருத்தில் வைக்காது நடைபெறுவதால். இவற்றின் நிறை, குறை பற்றிப் பேச இது இடமில்லை.

நண்பரின் கேள்விக்குப் பதில்: 68 வயதிலும் இன்னும் அறிந்து கொள்ளும் முயற்சியில் உள்ள மாணவன் நான். ஆன்மீகம் பற்றிய நிபுணனும் அல்ல. மற்றவற்றைப் படித்து முடித்துவிட்டேன் என்பதும் அல்ல. ஆனால் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதனால் ஆன்மீகமும் மற்றவையும் தொடரும்.***

****

மேற்கண்டதைத் தவிர்த்து விட்டு இங்கிருந்தே படிக்கலாம்.

*மனசாட்சி*

*அறமும் ஆன்மிகமும்* வேறுவேறு அல்ல. மனிதனின் அறிவு மனிதனின் பண்புகளுடன் கைகோர்க்கையில்தான் அறம் வளர்கிறது. இதுவே ஆன்மிகம் சொல்வதும். மனிதன் 90% பேசுகிறான், 10% கேட்கிறான் என்று சொல்வர்.

முதலது குறைந்து இரண்டாவது அதிகமானால் சுய சிந்தனை பெருக வழியுண்டு.

சுயசிந்தனை ஆன்மிகத்தின் பாதையில் முதற்கல்.

பெரும் போராட்டமான வாழ்க்கையில் எங்கிருக்கிறது சுயசிந்தனைக்கு கால அவகாசம் என்பர். ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டே பேசுகிறார்கள். நாம் எதைச் செய்யும்போதும் சிந்தனை தொடர்பில்லாமல் செய்வதில்லை.

ஆனால் அச்சிந்தனைக்கு நேரம் வந்தால் கூட சுயசிந்தனையைத் தவிர்க்கவே இன்பம் ஊட்டுவதாக நினைக்கும் பழக்கங்களில் திளைக்கின்றனர்.

இங்கே பாருங்கள், என்னால் என் மனச்சாட்சியுடன் பேசுவதற்குப் பிடிக்காது. எதை நான் பிடித்துச் செய்கிறேன். பிறர் வற்புறுத்தல், பொருளீட்டும் கடமை இவற்றால் அல்லவோ நான் அலைக்கழிக்கப் படுகிறேன் என்கின்றனர்.

ஒரு சிறந்த தமிழ்ப் பேராசிரியர் 40 ஆண்டுகளுக்கு முன் தாம் எழுதிய கவிதையில் *புத்தி நிறுத்தம்* என்ற புதுச் சொல்லைக் கையாண்டு இருக்கிறார்.

ஆழ்கடல் தண்ணீரில் அமைதி இருக்கும். ஆறுவந்து சேரும் இடத்தில் வேகம் இருக்கும். அந்த வேகத்தில் கடலில் இருப்பது என்ன, வந்து சேரும் நீரில் இருப்பது என்ன என்ற வேற்றுமை காணாத அளவுக்கு ஒரு கலப்படமான நிலை இருக்கும். தொழிற்சாலைக் கழிவுகளும், நகரக் கழிவுகளும் வந்து கலக்கும் இட்த்தை நொடி நேரம் மட்டும் நினையுங்கள். அதிகம் நினைத்தால் அந்த நாற்றம் நம் சிந்தனையில் ஒட்டிக் கொள்ளும்.

நாற்றம் சிந்தனையில் எப்படி ஒட்டும் ? ஒரு மலர்த்தோட்டத்தில் நிற்பதற்கும் ஒரு மலக்கோட்டைக்குள் நிற்பதற்கும் உள்ள வேறுபாடு சொல்லத் தேவையில்லை. உள்ளம் மட்டும் வெள்ளை, அறிவு மட்டும் தூய்மை என்பவர் கூட பின்னதாக சொல்லப்படும் இடத்தில் நிற்க முடியுமா ? நாற்றத்தின் தாக்கம் நாசிவழியாக உட்செல்லும். ஆனால் நாம் நாசியை நிறுத்திவிட்டு வேலை செய்யமுடியாது.

இப்படி நாசி மட்டுமல்ல, நமக்கு ஐம்புலன்கள் உள்ளன. இந்த ஐம்புலனுக்குப் பின்னே நம் உள்ளம் இருக்கிறது. உண்மையில் இந்த உள்ளம் இப்புலன்களை ஆள்வது. ஆனால் புலன்களின் கட்டுப்பாட்டில் நம் உள்ளம் உழலும்போது நமக்கு இன்பமாக இருக்கிறது.

ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. நம் புலன்கள் தோற்கும்போதும் நம் உள்ளம் துன்புறுகிறது. அது எப்படி புலன்கள் தோற்கும்?

புலன் நாடிய பொருள் கிடைக்கவில்லையானால், கிடைத்தும் அதைத் துய்க்க முடியாமல் போனால், புலன் நாடும் பொருள் விரும்பும் அளவுக்குக் கிடைக்கவில்லையானால் உள்ளம் திசைமாறும்.

திசைமாறும் உள்ளம் பல வேலைகளில் இறங்கும். நல்லது கொஞ்சமும் தீயது பலவும் அனைத்துமே நல்லவழிகளாகத் தோன்றும் உள்ளத்திற்கு இப்போது.

நம் நாகரிக உலகில் ஒட்டு மொத்த சமுதாயத்தை அல்லது தனிமனித வாழ்வை சிதைக்கும் வழிகளில் ஈடுபடுவதை இத்தகைய உள்ளங்கள் செய்கின்றன. எப்படி? புத்தி கொண்டுதான் செய்கின்றன. இத்தகைய அவலத்துக்கு ஒரு தடை இருக்கக் கூடாதா என்கிற அங்கலாய்ப்பு, அதாவது *புத்தி நிறுத்தம்* என்ற ஒன்று இப்போதாவது ஏற்படலாகாதா என்ற ஏக்கம் நம் அனைவருக்கும் வரும்.

ஆன்மீகத்தில் புத்தியை ஒரு தொந்தரவு செய்யும் நண்பனாகச் சொல்கிறார்கள். இந்தத் தொந்தரவை அடக்க முடியுமா ? முடியும் என்று சொல்கின்றன நம் நீதி நூற்கள். ஆனால் நமக்கு மிகச் சங்கடமான ஒன்றுதான் நீதி நூற்கள் என்று இக்காலப் படிப்பில் நீதிநூற்களே தடை செய்யப்பட்டுள்ளன.

நீதி நூற்கள் என்ன சொல்லும்? எதைச் செய்யவேண்டும் , எதைச் செய்யக் கூடாது என்று சொல்லும்.

நமக்குப் பக்கத்தில் நின்று கொண்டு (நமக்குத்தான் அந்த உணர்வில்லை) நமக்கு இவற்றைச் சொல்பவர் திருவள்ளுவர்.

அறத்தான் வருவதே இன்பம் என்றார். மற்றவை இன்பமும் தராது, புகழும் தராது.

அந்த அறத்தைப் பற்றி நாம் சிந்திக்க விழைந்தால் ஒரு நாள் ஒரு குறள் என்று ஒரு நாள் முழுதும் ஒரு குறளை மட்டும் சிந்தியுங்கள்.இப்படிப் பட்ட சிந்தனைப் பயிற்சி நல்லன பலவற்றுக்கு வித்தாகும்.

நான் ஞானப் பாதையில் செல்கிறேன் என்று பலரும் சொல்கிறார்கள், குறைந்த பட்சம் போதிய அனுபவங்கள் பெற்றுவிட்ட முதிர் வயதில்.

ஞானப் பாதை, பக்திப் பாதை, ஆன்மிகப் பாதை என்று எந்த பாதையில் நடக்க ஆரம்பித்தாலும் அறனெனப் பட்டதே வாழ்க்கை என்று பெருந்தகை கூறியதை மறக்கக் கூடாது.

எது அறன் என்று நான் இங்கு பட்டியலிடப் போவதில்லை.

திருக்குறளையாவது பிடித்துக் கொள்ளுங்கள் கெட்டியாக.

மனச் சாட்சியோடு கொஞ்சம் நட்பு கொள்ளுங்கள். அதை ஒதுக்கித் தள்ளாதீர்கள். அதை போன்ற நல்லாசிரியரும் இல்லை, நல்ல நண்பரும் இல்லை.

***

இப்போதைக்கு இவ்வளவுதான். இறைவன் அருள் கைகூடும்போது தொடரும்.

***

யோகசிம்மபுத்ரன் என்னும் ந. கணபதி சுப்ரமணியன்.

Leave a comment