வாசிப்பும் சிந்தனையும் 3 – ஆன்மிகம் 3

வாசிப்பு எண்: 3 நாள்: ஜனவரி 31, 2023

*தர்மம்*

கர்மம் என்பது செயல், தர்மம் என்பது கர்மத்தில் வைக்க வேண்டிய பாவனை. இது பொதுத் தர்மம், சிறப்புத் தர்மம் என்று வகைப்படுத்தப் படுகிறது.

பொதுத் தர்மம் என்பது உண்மை பேசுதல், திருடாமை, பிறன் மனை நயவாமை, கொல்லாமை, அஹிம்சை போன்றன. எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் எல்லா மனிதருக்கும் பொருந்துவன.

சிறப்புத் தர்மம் என்பது காலம், இடம், மனிதர் குறித்து மாறும். உதாரணமாக வீரனுக்கு அஹிம்சை 100% இருப்பது கூறப்படவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி அவன் ஹிம்சையும் செய்யலாம். நம் நிலைமை, இளமை, நடுவயது, முதுமை, தனி ஆள், குடும்பம் என்றெல்லாம் பார்க்கும் போது சிறப்பு தர்மம் மாறும்.

சில சமயங்களில் பொதுத் தர்மமும் சிறப்புத் தர்மமும் முரண்படும். இதுவே தர்மசங்கடம் எனப்படுகிறது. மஹாபாரதத்தில் குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு இப்படித்தான் தர்மசங்கடம் ஏற்பட்டது. குருவை, உறவினரைக் கொல்லலாமா என்ற வேதனை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சில நேரங்களில் பொதுத் தர்மத்தை விட சிறப்புத் தர்மம் கடைப்பிடிக்கவேண்டி வரும்.

குருக்ஷேத்ர யுத்தத்தைக் குறித்து உள்ளார்ந்த நிலையில் பொருள் கொள்ளலாம். தர்மத்தை செய்வதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் மனித உடலைத் தர்மக்ஷேத்திரம் என்றும் கூறலாம். இந்த மனித உடலில் மனம் என்றும், புத்தி என்றும் இரண்டு இருக்கின்றன. இரண்டுக்கும் இடையே போராட்டம்.

உணர்வும் அறிவும் மோதிக் கொள்கின்றன. மனம் ஆசை வயப்பட்டு இயங்கும். புலன்களையும் புலன்களுக்கான விஷயங்களையும் நாடி வெளிப் புறமாகச் செல்லும். புத்தி ஞானத்தைத் தேடி உள்புறமாகச் செல்வது. ஒன்று வெளியே இழுக்கிறது. இன்னொன்று உள்நுழையப் பார்க்கிறது.

இரண்டுமே உள்ளம் என்னும் அந்தக் கரணத்தின் இரு பிரிவுகள்தான்.

சத்துவ குணம் மிக்க புத்தி, வெண்ணிறம் கொண்ட பாண்டுவையும் அவரது குமாரர் ஐவரையும் குறிக்கிறது.

அறியாமை எனும் மனம் பார்வையற்ற ராஜாவைக் குறிக்கிறது. மனத்தில் தோன்றும் நூறுவிதமான விகல்பங்கள் அவரது நூறு புதல்வர்களைக் குறிக்கின்றன.

இந்த இரண்டுக்கும் நிகழும் போராட்டமே குருக்ஷேத்திர யுத்தம்.

இறுதியில் ஞானம் வெல்கிறது என்பது பகவத்கீதை சொல்வது.

***

பேராசிரியர் க. மணி அவர்களின் பகவத்கீதை உரையில் படித்ததன் சுருக்கம்.

Leave a comment