வாசிப்பும் சிந்தனையும் 5 – பக்தி

பதிவு எண்: 5 நாள்: பிப்ரவரி 7, 2023

பக்தி

புராணங்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவதம். ஸ்ரீகிருஷ்ணர் பற்றிப் பேசும் புராணம். இதை எழுதியர் வியாசர். இதைத் துறக்கவேண்டும் என்ற எந்த ஒன்றையும் சொல்லவில்லை. எதை விடவேண்டும் என்று சொல்லாமல் எதைப் பிடித்துக் கொள்வது என்று சொல்கிறது. வேண்டாதவை தாமே உதிர்ந்துவிடும்.

காட்டுக்குக்குப் போய் தியானம் செய்யாத கோபிகைகளும் அமரத்வம் பெற்றனர். பக்தி என்னும் ஒன்றே அவர்கள் பிடித்துக் கொண்ட வழி. இதைத்தான் ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

பக்தி என்றால் என்ன? இறைவனின் மீது பற்று எனலாம். இதுவும் பயன்கருதி செய்யப்படுகிறது, இது வேறு பற்றை நிறைவேற்ற செய்யும் பக்தி. ஆனால் உண்மை பக்தி கடவுளின் மீது பற்று மட்டும் அல்ல, கூட அவர்மீது நம்பிக்கையும் கொண்டது. அதாவது அனைத்தையும் செய்பவர் அவரே என்ற ஞானம் கொண்டு பக்தி செய்வது.

அவர்தான் தாமே எல்லாவற்றையும் செய்யவல்லவர் ஆயிற்றே, நாம் எதற்கு தனியாக அவர்மீது பக்தி என்னும் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

அதுதானே, அவர் நமக்கு வேண்டியவைகளையும் செய்வாரே, நாம் நம் வேலையைப் பார்க்கப் போகலாமே என்றும் தோன்றலாம்.

நாம் நம் வேலையைச் சரியாக செய்ய ஒரு உதவி தேவையில்லையா?

ஆமாம். எதற்குத் தேவை ? எனக்குத்தான் உயிரைக் கொடுத்து உடலைக் கொடுத்து மனம், அறிவு, சிந்தனை அனைத்தையும் கொடுத்து விட்டு நீயே செய் என்றுதான் இப்பூமியில் விட்டுவிட்டாரே. அப்புறமும் எதற்கு அவர் எண்ணம் ?

துப்பாக்கி என்னும் ஏ. ஆர். முருகதாசின் படம் பார்த்தீர்களா ? அதில் கதாநாயகன் தன் கையில் ட்ராக்கிங் சிப் ஒன்றைப் பொருத்திக் கொள்கிறான் அல்லவா.

அதைப் போன்ற ஒரு தொடர்புதான்.

செக்குமாடு ஒன்று செக்கைச் சுற்றிச் சுற்றி வருகிறதே அதைப் போன்ற தொடர்பு அல்ல.

மாட்டை மேய்க்கவிடும்போது மாட்டோடு ஒரு மரத்தை ஒரு நீளமான கயிறு கொண்டு கட்டுவார்களே அது போன்றது.

ஆனால் மனிதர்களுக்கு கட்டப்படும் இக்கயிற்றின் நீளம் அளக்கமுடியாதது.

சரி, நமக்கு சக்தியும் கொடுத்துள்ளார் இறைவன். அது ஏற்கனவே கொடுத்து விட்டார். இருந்தாலும் நம் சக்தி நம் செயல்களால் ஷார்ட்சர்க்யூட் ஆகாமல் இருக்க ஒரு நியூட்ரல் அல்லது ஒரு எர்த் கனெக்ஷன் போன்றதுதான் இந்த பக்தி எனப்படுவது.

எர்த் கனெக்ஷன் இருந்தால் விபத்து ஏற்படாது நம்பிக்கையுடன் வாழ்வின் செயல்களை மேற்கொள்ளலாம்.

அதனால் பக்தி தேவை.

இன்னொன்றும் இருக்கிறது. ஆபத்துக் காலங்களில் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் நம்மைப் பாதிக்காமல் இருக்க, வயிற்றில் இருக்கும்போது நம்மைத் தாயுடன் பிணைத்ததல்லவா தொப்புள் கொடி அதுபோல நமக்கு பாசிடிவ் சார்ஜும் இந்த பக்தி கொடுக்கும்.

நமக்குள் ஏற்கனவே இருப்பது மட்டுமல்லாமல் நம் சிந்தனைகளாலும் நெகடிவ் சார்ஜ் கிடைக்கிறது.

உள்ளே இருக்கும்போது பத்து மாதத்துக்கு தேவைப்பட்ட தொப்புள்கொடி, வெளியே வந்த பிறகு இறைவனிடமிருந்து நம் வாழ்க்கை முழுவதற்கும் தேவைப் படும் தொப்புள் கொடியாக நிச்சயமாக உருமாறிவிட்டிருக்கிறது.

அதைக் காய்ந்து விடாமல் பாதுகாத்துக் கடைசிவரை இறைவனின் பாதுகாப்பில் நாம் வாழ்வதற்கு இறைபக்தி ஒன்றே உபாயம்.

இப்போதைக்கு இவ்வளவுதான். இறைவன் அருள் கைகூடும்போது தொடரும்.

***

யோகசிம்மபுத்ரன் என்னும் ந. கணபதி சுப்ரமணியன்.

Leave a comment