பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 2


*ஞானத்தேடல் பதிவு எண்: 088 நாள்: 02.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம்2*

சுலோகம் 3: *சில அறிஞர்கள், கர்மங்கள் அனைத்தும் குற்றமுடையவை, ஆகவே, துறக்கப்பட வேண்டியவை என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் வேள்வி, தானம், தவம் என்கிற கர்மங்கள் துறக்கத் தகுந்தன அல்ல என்று கூறுகிறார்கள்.*

சுலோகம் 4: *மனிதர்களில் சிறந்தவனே! அர்ஜுனா! சன்யாசம், தியாகம் இவை இரண்டிலும் முதலில் தியாகத்தைப் பற்றி, நீ என்னுடைய கொள்கையைக் கேள். ஏனெனில் தியாகம் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்ற பிரிவுகளோடு மூன்றுவிதமாகக் கூறப்பட்டுள்ளது.*

சுலோகம் 5: *வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் துறக்கத் தக்கனவல்ல. அவை கட்டாயம் செய்யப்பட வேண்டியவைதான். ஏனெனில், வேள்வி, தானம், தவம் இம்மூன்றுமே அறிவுடையவர்களைப் பரிசுத்தப்படுத்தக் கூடியன.*

சுலோகம் 6: *ஆகையால் பார்த்தனே! இந்த வேள்வி, தானம், தவம் என்ற கர்மங்களும், அப்படியே மேலும் செய்யவேண்டிய கடமைகளும், பற்றையும் பயன்களையும் தியாகம் செய்து கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியன என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கை.*

சுலோகம் 7: (விலக்கப்பட்ட கர்மங்களும், பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் கர்மங்களும் துறக்கப்பட வேண்டியனவே.) ஆனால், விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யாமல் விடுதல் தகாது. ஆகையால், அறியாமையினால் அதைத் தியாகம் செய்தல் தாமஸத் தியாகம் என்று சொல்லப்படுகிறது.

சுலோகம் 8: எது செய்ய வேண்டிய கர்மமோ, அதைத் துன்பம் என்றே நினைத்து உடல் வருந்துமோ என்ற பயத்தினால் ஒருவன் செய்யாமல் விடுவானேயானால், அவன் ராஜஸத் தியாகத்தைச் செய்து, தியாகத்திற்குரிய பயனை அடையவே மாட்டான்.

சுலோகம் 9: அர்ஜுனா! சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எந்தக் கர்மம் கட்டாயம் செய்யப்படத்தான் வேண்டும் என்று கருதிப் பற்றையும் பயனையும் விடுத்துச் செய்யப் படுகிறதோ, அதுவே சாத்விகமான தியாகம் என்று மதிக்கப்படுகிறது.

சுலோகம் 10: எந்த மனிதன் நன்மை பயக்காத கர்மத்தை வெறுப்பதில்லையோ, மேலும் நன்மை பயக்கக் கூடிய கர்மத்தில் பற்றும் கொள்வதில்லையோ, அந்த சுத்தமான சத்துவ குணம் நிறைந்தவன் தான் ஸந்தேகம் நீங்கப் பெற்றவனும் அறிஞனும் உண்மையான தியாகியும் ஆவான்.

சுலோகம் 11: ஏனெனில், உடல்பெற்ற மனிதன் யாராலும் கர்மங்கள் அனைத்தையும் முற்றிலுமாகத் தியாகம் செய்வது சாத்தியமன்று. ஆகையால், எவன் கர்மத்தின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகம் செய்தவன் என்று சொல்லப் படுகிறான்.

சுலோகம் மூன்று முதல் பதினொன்று வரையில் மேலே குறிப்பிட்டுள்ள பொழிப்புரையே போதுமான விளக்கம் தருகிறது. இது மேலும் விளக்கப் படுகிறது.

இந்த நூலின் (தொடரின்) 3ஆம் அத்தியாயத்தில் கடமைகளைப் பற்றிக் கூறுகையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன்.

இது தவிர *மனிதனின் கடமைகள் என்று ஐவகைக் கடன்கள்* (hygiene factors) சொல்லப்படுகின்றன. இந்து மதம் எல்லா உயிரினங்களுமே உலகின் சுற்றுச்சூழலின் அங்கம் என்கிறது. எனவே மனிதன் மற்ற மனிதருக்கும், மற்ற உயிரினங்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறான்.

  1. *தேவ ருணம்*: கடவுளுக்காக நாம் பட்ட கடன்
  2. *ரிஷி ருணம்*: முனிவர்களுக்கு நாம் பட்ட கடன்
  3. *பித்ரு ருணம்*: முன்னோர்களுக்குப் பட்ட கடன்
  4. *நர ருணம்*: மனித சமூகத்துக்கு நாம் பட்ட கடன்
  5. *பூத ருணம்*: மனிதனல்லாத உயிர்களுக்குப் பட்ட கடன்

நிரந்தரமான இந்த நீதி முறைகளைத் தோற்றுவித்து அதைக் காப்பவரும் கடவுள்தான் என்று வேதங்கள் கூறுகின்றன.

அகில உலகமே இந்த நீதி நெறிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. இவ்வுலகில் உள்ள எவராலும் இந்த நீதிகளில் இருந்து தப்ப முடியாது.

சுலோகம் 12: *கர்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்குக் கர்மத்தினுடைய நல்லதும் தீயதும் மேலும் இரண்டும் கலந்ததுமான மூன்றுவிதமான பயன் இறந்தபின் கட்டாயமாகக் கிடைக்கின்றது. ஆனால், கர்மபயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் ஏற்படாது.*

பயனை விரும்பாவிடினும் ஸத்கர்ம பலனை அனுபவித்தேயாக வேண்டும் என்ற நிலையில் அவன் எப்படித் தியாகி ஆவான்? என்பது வினா.

‘தியாகிகளல்லாதவர்க்கு மரணத்திற்குப்பிறகு, இன்னாதது, இனியது, இவ்விரண்டும் கலந்தது என மூன்றுவிதமான வினைப்பயன்கள் கிடைக்கின்றன. தியாகிகளுக்கோ கர்மங்களின் பயன்கள் ஒருபொழுதும் ஏற்படாது.’

தாம் செய்யும் அனைத்துக் கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும், மமகாரம், ஆசை, பற்று இவற்றைத் துறக்காதவர்களும் பற்றுடனும் பயனை எதிர்பார்த்தும் கர்மங்கள் எல்லாவற்றையும் செய்பவர்களுமான சாதாரண பாமர மனிதர்களை இங்கே ‘அத்தியாகி’ என்று சொல்லுகிறார். அதாவது த்யாகமேதும் செய்யாதவன் என்பது பொருள்.

இந்தப் பிறவியில் பெரும்பாலான மனிதர்களுக்கு முன்பிறவியின் கர்மபலன்களாகிய ப்ராரப்தங்களின் அனுபவமே ஏற்படும். இந்தப் பிறவியில் செய்யும் புதிய கர்மங்களின் பயன்களை ரொம்பவும் குறைவாகவே அனுபவிக்க நேரும். ஆகவே ஒரு பிறவியின் செய்வினைப் பயன்களைப் பல பிறவிகளில் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதைக் குறிப்பிடவே இங்கே மரணத்திற்குப் பிறகு என்று கூறினார். மரணத்திற்குப்பின் அவ்வினைப் பயன்களை அவன் அனுபவித்தேயாக வேண்டும் என்பது பொருள்.

சன்யாசிகள் பண்ணும் கர்மகாரியங்களுக்குப் பயன்கள் ஒன்றும் விளைந்து விடுவது இல்லை. அதாவது தியாகிகள் எத்தனை கர்மங்களைப் பண்ணினாலும் அவை வறுத்தெடுத்த விதைகளைப் போலவே திறன் இல்லாமல் போகும்.

இப்படி யாகத்திற்காக நிஷ்காமமாய் செய்கின்ற கர்மங்கள் முன் வினைகளான, நல்ல, தீய கர்மங்கள் எல்லாவற்றையும் பயன்தராதபடி அழித்துவிடும்.

இக்காரணங்களினால், இப்பிறவியிலும் அப்பிறவியிலும் செய்த, அவர்களின் எந்தவிதமான கர்மத்திற்கும், எந்தவிதமான பயனும் எந்த நிலையிலும் இப்பிறவியிலோ அல்லது இறந்த பிறகோ எப்பொழுதுமே உண்டாகாது. அவர்கள் கர்மங்களிலிருந்து விடுபட்டு விடுகிறார்கள்.

சுலோகம் 13: *அகன்ற தோள் படைத்தவனே! எல்லாக் கர்மங்களும் நிறைவேறுதற்கு இந்த ஐந்து காரணங்கள் கர்மங்களின் முடிவிற்கான உபாயத்தைக் கூறும் ஸாங்க்ய சாஸ்திரத்தில் கூறப்பட்டன. அவற்றை நீ என்னிடமிருந்து நன்கு அறிந்துகொள்.*

சாஸ்திரங்கள் ஆறு. இவற்றுள் நான்காவது இடம் பெறுகிறது ஸாங்கிய சாஸ்திரம்.  கபில முனிவர் இயற்றிய சாங்கியம் வேறு என்று சொல்கிறார் சுவாமி சித்பவானந்தர். இயற்கையின் தத்துவங்களை விளக்குவதற்கு இதுவே முடிவான பிரமாணம். *ஸாங்கியத்தில் பல புருஷர்களைப் பற்றிக் கூறினும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதைக் கூறவில்லை. பரப்ரம்மத்தை அறிய இந்த ஸாங்கியம் பிரமாணம் இல்லை.*

சுலோகம் 14: *கர்மங்களின் ஸித்தியைப் பெறும் விஷயத்தில் கர்மம் செய்கிற உடலும், செய்கிறவனும், தனித்தனியான இந்திரியங்களும் அதன் உபகரணங்களும், பலவிதமான தனித்தனியான செயல்களும், அவ்வாறே ஐந்தாவதாக தெய்வமும் காரணமாகும்.*

விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குவதற்கு இருப்பிடம் உடல். அதனால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்கள் எனப்படுகின்றன. பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன. பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது. அந்தராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல் புரிகிறது.

சுலோகம் 15: *மனிதன் மனம்-வாக்கு-உடலினால் சாஸ்திரங்களுக்கு இசைந்தவாறோ அல்லது அதற்கு முரணாகவோ எந்தச் செயல்களைச் செய்கிறானோ, அதற்கு இந்த ஐந்தும் காரணங்கள்.*

உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கையில் திரிகரணங்களைக் கொண்டு செய்தவை என்று சொல்கிறோம். மனம், வாக்கு, காயம் ஆகியவை கரணங்கள். சிந்திப்பதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும் தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.

சுலோகம் 16: *ஆனால், இங்ஙனம் இருக்க, எந்த மனிதன் புத்தியில் தூய்மை இல்லாமையினால் கர்மங்களைச் செய்வதில் தூயதான ஆத்மாவையே செய்பவனாகக் காண்கிறானோ, அந்தத் தூய்மையற்ற புத்தியுடைய அஞ்ஞானி உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை.*

எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன. ஐந்து காரணங்களில் ஒன்று ஆகிய அந்தராத்மா அல்லது தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழலாம். ஆனால் ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம் (consciousness). மாயையால் இயற்கை ஆத்மாவோடு ஒட்டி கொண்டு ஆத்மா செயல்புரிவதாக்க் காட்டுகிறது.

சுலோகம் 17: *எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ, அவ்வாறே எவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும் செயல்களிலும் ஒட்டுவதில்லையோ, அவன் இவ்வுலகங்கள் அனைத்தையும் (மக்கள் அனைவரையும்) கொன்றாலும் உண்மையில் கொல்வதில்லை. மேலும், பாவத்தினால் தளைப்படுவதும் இல்லை.*

இயற்கை வரைந்துள்ள இந்த நாடகத்தில் வேடமேற்ற ஒருவன் கொலை செய்தாலும் அது அவனால் செய்யப்பட்டதல்ல.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment