பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் – சிரத்தாத்ரய விபாக யோகம் – 3


*ஞானத்தேடல் பதிவு எண்: 085 நாள்: 26.11 2022*

*பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத்ரய விபாக யோகம் – 3*

*_தவத்தின் விதங்கள் சொல்லப்படுகின்றன மூன்று சுலோகங்களில்: 14: உடலால் செய்யும் தவம்; 15. வாக்கினால் செய்யும் தவம்; 16. மனத்தால் செய்யும் தவம்._*

சுலோகம் 14: *தெய்வங்கள், அந்தணர்கள், பெரியோர்கள், ஞானிகள் இவர்களைப் பூஜித்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், அகிம்சை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகிறது.*

*தெய்வங்கள், பிராம்மணர்கள், வயதில் மூத்த பெரியோர்கள், ஞானிகள் ஆகிய இவர்களைப் பூஜித்தலும், தூய்மையும், நேர்மையும், பிரம்மசர்யமும், அஹிம்சையும், உடலால் செய்யப்படும் தவம் என்று சொல்லப்படுகிறது.*

1. தேவதைகள் – பிரம்மா, சிவன், சூர்யன், சந்திரன், அக்னி, வருணன், இந்தரன், யமன், இவர்கள் சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட தெய்வங்கள். பூஜிக்கும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.

2. த்விஜர் – இருபிறப்பாளர்கள். (பிராம்மணர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள்) இவர்கள் இருபிறப்பாளர்கள். ஆயினும் அந்தணரே த்விஜர் எனப்படுகிறார்.

3. குரு – தாய்-தந்தையர்; ஆசாரியர்; வயது முதிர்ந்தோர்; தன்னை விட வர்ணத்திலும், ஆஸ்ரமத்திலும், வயதிலும் மூத்தவர் என்பது பொருள். 

4. ப்ராக்ஞ: – பரமாத்மாவை அறிந்து உணர்ந்த மஹாத்மாக்கள் ஞானிகள் இவர்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள்.

சுலோகம் 15: *எது பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் இனிமையும் நலனும் அளிக்கக் கூடியதாகவும், உண்மையாகவும் இருக்குமோ, அந்தப் பேச்சும், வேத சாஸ்திரங்களை ஓதுதலும், பகவானுடைய நாம கீர்த்தனமும் வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்று கூறப்படுகிறது.*

‘பிறரைத் துன்பப்படுத்தாத வாய்மையும், இனிமையும், நலனும் தரக்கூடிய சொல், மற்றும் வேதாத்யயனம் செய்தல் ஆகியனவும், வாங்மயமான தவம் என்று சொல்லப்படுகிறது.’

1. அநுத்வேககரம் – மற்றவர் மனம் வருந்தாமல் பேசுதல், நிந்தை -கோள் சொல்லாமை, குற்றமில்லாத சொற்களைச் சொல்லுதல்.

2. ஸத்யம் – பார்த்தது, கேட்டது, அனுபவித்தது அனைத்தையும் மாறுபடுத்தாமல், உள்ளதை உள்ளபடியே பிறரிடம் சொல்லி மகிழ்தல், அதாவது உண்மையே பேசுதல்.

3. ப்ரியஹிதம் – கேட்போர் விரும்பும்படியே பேசுதல், கடுகடுப்பு, கடுமை, குத்திக்காட்டல், அலட்சியம், அவமதிப்பு முதலிய குற்றங்கள் நீக்கி அன்பு, நேர்மை, இனிமை, அமைதி இவற்றுடன் பிறரிடம் பேசி மகிழ்தல்.

4. சொல்வழித்தவம் – பிறர் மனம் புண்படாமல், சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட குற்றம் இல்லாத, அன்பாகப் பேசுவதே ஒரு தவம்.

5. ஸ்வாத்யாய அப்யஸநம் – அவரவர்கள் தகுதிக்கேற்ப, அவரவர்களுக்கு உரிய வேதங்கள், வேத அங்கங்கள், ஸ்மிருதி புராணம், ஸ்தோத்திரங்கள் முதலியவற்றை அத்யயனம் பண்ணுதல், படித்தல், குருமுகமாகக் கேட்டல், பகவத் பிரபாவங்கள், பகவந்நாமாவைப் பாடிப் பரவுதல், பஜனை நாமாவளிகளைக் கற்றல் ஆகிய நற்பண்புகள் அப்யஸநமாகும்.

*மேற்சொன்ன அனைத்தும் வாக்குடன் தொடர்புள்ளவை. மாசு களைந்து மனத்தையும், பேச்சையும் தூய்மைப்படுத்தி நன்மை தரப் பேசுவதே ஒரு தவமாகும்*.

சுலோகம் 16: *மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, பகவானை இடைவிடாது சிந்தித்திருக்கின்ற இயல்பு, மனவடக்கம், உள்ளத்தூய்மை இவையெல்லாம் மனத்தால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.*

‘மனத்தில் சினம் முதலியவையற்றிருத்தல், பிறருக்கு க்ஷேமம் உண்டாக்குவதில் ஆசை கொளல், அதிகம் பேசாமல் பகவத் தியானம் செய்தல், மனவடக்கம், மனத்தூய்மையுடன் இருத்தல், ஆத்மாவை யொழிந்த மற்றவைகளில் சிந்தை அற்றிருத்தல் ஆகிய இவை மனத்தவம் என்றறிவாயாக.’

மேற்சொல்லியிருக்கும் கருத்துகள் எல்லாம் மனத்துடன் தொடர்பு கொண்டவை. மனமாசகற்றி பரிசுத்தமாக்குபவை. எனவே இவை மனத்தால் ஆற்றக்கூடிய தவம் என்று சொல்லப்படும்.

*_தவத்தின் மூன்று தன்மைகள் சொல்லப்படுகின்றன: 17: சாத்வீக தவம், 18: ராஜச தவம், 19. தாமச தவம்._*

சுலோகம் 17: *பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்றுவிதமான தவம் சாத்விகமானது என்று சொல்லப்படுகிறது.*

பலனில் ஆசையற்று இது பகவானுக்கு ஆராதனம் என்ற, சிரத்தையோடு இருப்பவர்களாலே, சிரத்தையுடன் எந்தத் தவம் செய்யப்படுமோ, முன்சொன்ன மூன்றுவித தவமானது ஸாத்விகம் என்று சொல்லப்படும்.’

இவ்வுலகிலோ, பரலோகத்திலோ எவ்விதமான ஸுகபோகத்தையும் நினையாதவன்; துயரம் தீரவேண்டும் என ஒருபோதும் எண்ணாதவன் எவனோ அவன்தான் (யோகி) ‘அபலா காங்க்ஷி’ எனப்படுகிறான்.

மனம், புத்தி, புலன்கள் இவற்றில் பற்று நீங்கி, அடங்கி, தூய்மையாக இருப்பதால், எப்பொழுதும் எந்தவிதமான ஸுகபோகங்கள் கிடைத்தாலும் அவற்றில் ஆவலின்றி நிலைகுலையாமல் இருப்பதால், அவனே யுக்தன் (யோகி) என்று சொல்லப்படுகிறான்.

மனம், மொழி, மெய் பற்றிய மேற்சொன்ன தவங்கள் ஸாத்வீகமானவை. இவற்றை இந்த சுலோகத்தில் கூறப்பட்ட மனப்பாங்குடன் அனுஷ்டித்தால் மட்டுமே இவை முழுமை பெற்ற ஸாத்விகமாகும்.

சுலோகம் 18: *எந்தத் தவம் பாராட்டுதலையும் பெருமையையும் போற்றுதலையும் குறிக்கோளாகக் கொண்டதோ மற்றும் தன்னலம் கருதும் இயல்பினாலோ, ஆடம்பரத்திற்காகவோ செய்யப் படுகிறதோ, பயன் தருமா, தராதா என்ற நிச்சயமில்லாத, அழியக் கூடிய, உறுதியற்ற பயனைத் தரும் அந்தத் தவம், இங்கு ராஜஸம் என்று கூறப்படுகிறது.*

எந்த நோக்கில் பயன்பெற ஒரு தவம் செய்யப்படுகிறதோ, அந்தத் தவம் சாஸ்த்ர விதிமுறைக்கு உட்பட்டு, சிரத்தையுடன் செய்யப்படுகிறதாயினும், பெருமைக்காகச் செய்யப்படுமேயானால், அந்தத் தவம் பலன் தருவது உறுதி இல்லை. அது ‘அத்ருவம்’ எனப்படும். தாற்காலிகப் பயன் கிட்டினும் அப்பயன் அழிந்து போகும். எனவே அது ராஜஸமே.

சுலோகம் 19: *எந்தத் தவம் முரட்டுப் பிடிவாதத்தினால் மனம்-மொழி-மெய்களுக்குத் துன்பம் இழைப்பதற்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு இழைப்பதற்காகவோ செய்யப் படுகிறதோ, அந்தத் தவம் தாமஸம் எனப்படும்.*

‘பிடிவாதமான முரட்டுத்தனத்தால் மனம், சொல், உடல்களுக்குத் தீங்கிழைப்பதாக எந்தத் தவம் செய்யப்படுகிறதோ, அந்தத் தவம் தவிர்க்கப்பட வேண்டிய தாமஸத் தவமே.’

*_அடுத்து வரும் சுலோகங்கள் தானத்தின் மூன்றுவகைகள் சொல்லப்படுகின்றன: 20: சாத்வீக தானம்; 21: ராஜச தானம்; 22: தாமச தானம்._*

சுலோகம் 20: *தானம் செய்வது தம் கடமை எனக்கருதி, எந்த தானம் உரிய இடத்திலும் உரிய காலத்திலும் தகுதியானவருக்கும், தனக்குப் பிரதி உபகாரம் செய்யாதவர் ஆயினும் அவருக்கும் தன்னலமின்றிக் கொடுக்கப் படுகிறதோ, அத்தகைய தானம் சாத்விகம் என்று கருதப்படுகிறது.*

‘அர்ஜுனா! ஈஸ்வர அர்ப்பணமாகக் கொடுக்க வேண்டுமென்னும் நிச்சயத்தோடு எந்தத் தானமானது, புண்ய க்ஷேத்திரத்திலும், புண்ய காலத்திலும், ப்ரத்யுபகாரம் செய்ய மாட்டாத, வேத, சாஸ்த்ர, ஸம்பன்னர்களாகிய பிரம்மக்ஞானிகள் முதலிய தகுதி உள்ளோருக்குக் கொடுக்கப்படுகின்றதோ அந்த தானமானதுதான் சாத்வீகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.’

ஸத்வ குணம் முழுமைபெற நிஷ்காம பாவனையுடன் (பிரதிபலன் நோக்காமல்) தானம் கொடுக்க வேண்டும். வர்ணம், ஆஸ்ரமம், நிலை, சூழ்நிலை இவற்றை மனத்தில் வைத்து சாஸ்த்ர முறைப்படி தானம் கொடுக்க வேண்டும். அதுதான் ஸாத்விக தானம்.

பிறர் நலத்திற்காகச் செய்யப்படும் தானம் புண்யம் தேடித் தரும். குருக்ஷேத்ரம், மதுரா, கயா, காசி, பத்ரிகாஸ்ரம புண்ய ஸ்தலங்களில் தானம் பண்ணினால் கோடி புண்யம்.

இராமாயணத்தில் இராமனின் மனம் பிராட்டியைத் தேடி இலங்கை சென்று மீண்ட அனுமன், இராமனை நோக்கி ஓடிவந்து ‘கண்டேன் ஸீதையை’ என்று மொழிந்தான். இராமனின் உள்ளம் குளிர்ந்தது. உடலும் புளகாங்கிதம் அடைந்தது. அனுமன் சீதை தந்த அடையாளமாக சூளாமணி அணிகலனை இராமனிடம் தந்தான். அதைப் பெற்ற இராமன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

அப்போது இராமன் அனுமனிடம் இப்படிக் கூறினான். ‘என் மனத்துக்கு இனிய வானரத் தோழனே! அனுமனே! கேள். உன்னைப் போல உபகாரம் செய்தவன் – தேவனோ, மனிதனோ, முனிவரோ, உடம்பு பெற்ற வேறு எவருமோ இல்லை. உனக்கு நான் என்ன பதில் உதவி செய்ய முடியும்? என் மனம் கூட உன் முன்னே நிற்காது, நிற்க முடியாது’ என்றான் ஸ்ரீராமன். 

கூர்ந்து நோக்குங்கள். ஸாத்விகத் தானத்தின் மஹிமை இங்கே காணமுடிகிறது. பெருமைக்காகத் தானம் செய்வதில் ஒரு பயனும் இல்லை.

சுலோகம் 21: *ஆனால், எந்த தானம் மன வருத்தத்தோடோ, கைம்மாறு கருதியோ, பயனைக் கருத்தில் கொண்டோ கொடுக்கப் படுகிறதோ, அந்த தானம் ராஜஸம் எனப்படும்.*

‘பிரதி யுபகாரத்தை யுத்தேசித்தாவது மனவருத்தத்தோடு எந்தத் தானம் கொடுக்கப் படுகின்றதோ அது ராஜஸம் என்று சொல்லப்படுகின்றது.’

வழக்கமாக உதவி செய்பவருக்குக் கொடுக்கப்படுகின்ற தானமும், எதிர்காலத்தில் தன் கார்யம் நிறைவேற வகை செய்பவருக்குக் கொடுக்கப்படும் தானமும் உண்மையான தானம் இல்லை. அவை முன் பணம் தருவது போன்றதே.

தானம் கொடுக்கும்போது ‘வலக்கரம் செய்வதை இடக்கரம் அறியலாகாது’ என்று சொல்வதுண்டு. 

கோயிலில் ஸ்வாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்பர் சிலர். அது பலன் தரும். பெயர், கோத்ரம். நட்சத்ரம் சொல்லி ஸங்கல்பம் பண்ணி அர்ச்சனை செய்யும் என்பர் சிலர். இது ரஜோ குணத்தில் உதித்தது. ஸ்வாமி தனக்கு நன்மை செய்வார் என்ற எண்ணத்துடன் பலனை உத்தேசித்துச் செய்யும் அர்ச்சனை. இதுவும் ராஜஸமே.

சுலோகம் 22: *எந்த தானம், மரியாதையின்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும் தகாத காலத்திலும் தகுதியற்றவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ, அது தாமஸம் எனப்படுகிறது.*

‘புனிதமான ஸுத்தமான தேசத்திலும், காலத்திலும், அயோக்யர்களின் பொருட்டு பூஜை முதலியவை செய்யாமல் அவமரியாதையோடு எந்தத் தானம் கொடுக்கப்படுகின்றதோ, அது தாமஸமென்று சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது இடமில்லாத இடத்திலும், – காலமில்லாத காலத்திலும், அபாத்திரங்களுக்கு (தகுதியற்றவர்க்கு) எந்தத் தானம் கொடுக்கப்படுகிறதோ அதுவும், காலலம்புதல் முதலிய கௌரவங்களில்லாமல், அவமதிப்புடன், அதாவது உபசார வார்த்தை முதலியன இல்லாமலும் எது கொடுக்கப்படுகிறதோ, அது தாமஸ மென்று சொல்லப்பட்டது.’

அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் போன்றவர்களின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழங்கும் தானமும், தமோ குணமான தானமே.

புனிதமற்ற, வசிக்க உதவாத, தகாத இடத்தில், தூங்கும் வேளையில், உடலின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் தானம் செய்தல் கூடாது. இவை தானம் வழங்குவதற்குச் தகாத வேளைகள் ஆகும்.

வருணத்தில் உயர்ந்தோர் ஆயினும் ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் இல்லாதவர்கள், பொது நலசேவை செய்யாதவர்கள், செல்வத்தை வீணில் அழிப்பவர்கள் தானம் பெறத் தகுதியற்றவர்கள்.

செய்கின்ற யக்ஞ, தான, தபோ கர்மங்களில், குற்றம் வராமல் தடுத்துக் காத்தல் வேண்டும்.

தக்க இடத்தில், தக்க சமயத்தில், தகுதி உடைய ஒருவருக்கு முகமலர்ச்சியுடன், இன்மொழிகளுடன், சுயபுத்தியுடன், தூய்மையான உள்ளத்துடன் தானம் செய்தால் பரலோகத்தில் பலமடங்கு பயன் பெறலாம். இது சாஸ்த்ர சம்மதியே.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment