பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் – சிரத்தாத்ரய விபாக யோகம் – 2


*ஞானத்தேடல் பதிவு எண்: 084 நாள்: 26.11 2022*

*பகவத்கீதை – பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத்ரய விபாக யோகம் – 2*

சுலோகம் 5 &6 : *எந்த மனிதர்கள் சாஸ்திர விதிமுறைகளை விடுத்து, மனம் போனபடி கொடிய தவம் செய்கிறார்களோ, டாம்பீகம், அகங்காரம் இவற்றோடு பேராசை, விருப்பம் மற்றும் உடல்வலிமை இவற்றின் மீது கர்வமும் கொண்டுள்ளார்களோ உடல் உருவில் உள்ள பூத சமுதாயத்தையும், உள்ளத்தில் உறையும் பரமாத்மாவான என்னையும் துன்புறுத்துகிறார்களோ, அந்த அறிவிலிகளை, நீ அசுரப் பண்பு உடையவர்கள் என அறிந்து கொள்.*

அசுர இயல்புடையவர் செய்யும் கொடுந்தாம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள் மீது படுக்கின்றனர், கையைத் தூக்கி ஒற்றைக் காலில் நிற்கின்றனர். பார்க்கிறவர்களுக்கும் அவை துன்பம் தரும். சூரியனி உற்று நோக்கித் தவம் செய்வோர் தம் புலன் களையே கெடுக்கிறார்கள். ஆணவமும் ஆசையும் நிறைந்த அவர்கள் மனதில் உள்ளே உள்ள இறைவனின் இருப்பிடம் உணரப்படுவது இல்லை.

சுலோகம் 7: *உணவும் எல்லோருக்கும் தத்தம் இயல்புக்கேற்றவாறு மூன்று வகைகளில் பிடித்ததாக உள்ளது. மேலும், அவ்வாறே யாகமும் தவமும் தானமும் மூவகைப்படும். அவற்றின் தனித்தன்மை கொண்ட இந்த வேறுபாட்டை (நீ என்னிடமிருந்து) கேட்டுக் கொள்.*

மனிதன் உண்ணும் உணவிற்கேற்பவே அவனின் மனப்பாங்கும் அமையும். மனப்பாங்கிற்கேற்ப சிரத்தை அமையும். உணவு ஸுத்தம் அவசியமானது. உள்ளம் சுத்தமாக இருந்தால் எண்ணம், மனப்பாங்கு, சிரத்தை முதலிய குணங்களும், செயல்களும் தூய்மையாக அமையும். எனவே தான் இங்கு உணவு பற்றிய விளக்கமும் அவசியமாயிற்று. மூன்றுவித (ஸத்வம், ரஜஸ், தமஸ்) குணமுடையோரை உணவுக் கோணத்தாலும் அடையாளம் காணமுடியும்.

ஆஹாரஸுத்தெள ஸத்வஸுத்தி: (7/26/2) என்கிறது ஸாந்தோக்ய உபநிஷத்.

யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்து உள்ளது. முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியுள்ளது.

சுலோகம் 8: *ஆயுள், அறிவு, வலிமை, உடல்நலம், இன்பம், அன்பு இவற்றை வளர்க்கின்றவையாகவும், ரஸம் உள்ளவையாகவும், நெய்ப்புடையவையாகவும், உடலில் நீண்ட நேரம் தங்குபவையாகவும், இயல்பாகவே மனத்திற்குப் பிடித்தவையாகவும் இருக்கக் கூடிய உணவு வகைகள் சத்துவ குணமுடையவர்களுக்கு விருப்பமானவை.*

‘அர்ஜுன! தீர்க்காயுள், ஸாந்தம், இடம், தருப்தி, நோயின்மை, ப்ரியம் ஆகிய இவற்றை விருத்தி செய்பவைகளாகவும், மாதுர்யமானவைகளாகவும், நெய் பால் இவற்றின் பசுமை உள்ளனவாகவும், தேகத்தில் (உடலில்) வெகு காலத்திற்குத் திடத்தை (வலிமையை) உண்டாக்கிக் கொண்டிருப்பனவாகவும், நினைப்பதற்கே வெகு மனோகரமானவைகளாகவும் உள்ள உணவுகள் ஸாத்வீகர்களுக்குப் பிரியமானவைகளாம்.’

ப்ரீதி என்பது பசியை உண்டு பண்ணும்; ஸ்திரம் என்பது நெடுநேரம் தாங்கும் உணவு; சத்தில்லா உணவு விரைவில் ஜீரணமாகும்; அவ்வுணவு உடலுக்கு வலிமையைத் தராது; கடின உணவு ஜீரணக் கருவிகளை கெடுக்கும்; ஆயுளும் குறையும்.

காலை உணவு லேசானதாயும், இரவு உணவு மிதமாய் ஜீரணமாகும் வகையில் இருக்க வேண்டும். பகல் உணவு அலங்காரமாய் இருக்க வேண்டும்.

இவ்வுணவு வகைகள் இடம், காலம் இவற்றிற்கேற்ப அமையும்.

உணவு வகைகளை ரஸ்யா:, ஸ்நிக்தா:, ஸ்திரா:, ஹ்ருத்யா: என்று வகைப்படுத்துகிறார் பகவான். மனிதர்களின் குணங்களை அவரவர் உண்ணும் உணவு வகைகளைக் கொண்டே அறியலாம். உணவிற்கேற்பவே அறிவும் அமையும்.

சுலோகம் 9: *கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூடு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட, எரிச்சல் உண்டுபண்ணக் கூடிய மற்றும் துன்பம், கவலை, நோய் இவற்றை உருவாக்கக் கூடிய உணவு வகைகள் ரஜோ குணமுடையவனுக்கு விருப்பமானவை.* —

‘கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூடு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட எரிச்சல் உண்டு பண்ணக்கூடிய மற்றும் துன்பம், கவலை, நோய் இவற்றை உண்டாக்கக்கூடிய உணவு வகைகள் ரஜோகுணம் உடையவனுக்கு விருப்பமானவை.’

விளக்கம் : வேம்பு, பாகற்காய் இவை கசப்பானவை. ஒரு சிலர் மிளகு முதலிய உறைப்புகளையும் அதில் சேர்ப்பார்கள். ஆனால் உறைப்பு என்ற சொல் தனியாகச் சொல்லப்படுகிறது. கசப்பும் இதில் சேரலாம். ஆனால் ‘கடு’ என்பதற்கு இங்கே பொருள் கசப்பு என்று பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது.

புளி முதலியவை புளிப்பானவை. பலவகை உப்புகள் உவர்ப்பானவை. அதிக சூடான பொருள்கள் உஷ்ணமானவை. மிளகாய் வற்றல் முதலியவை உறைப்பு. வாணலியில் வறுக்கப்பட்ட தான்யங்கள் வறண்ட உணவில் வருவன. சிறு கடுகு இவை எல்லாம் எரிச்சலை உண்டு பண்ணக்கூடியவை.

து:கஸோக மயப்ரதா:

உணவை உண்ணுகையில் தொண்டைக்குத் துன்பம் தருபவை. நாக்கு, கடைவாய் இவற்றில் எரிச்சல், பற்கள் கூசுவது, மெல்லுகையில் வலி உண்டாதல், கண்களில் நீர், மூக்கில் நீர், விக்கல், துன்பங்கள். இவற்றை து:கங்கள் என்கிறார்.

உண்டபின் உண்டாகும் வயிற்றுவலி போன்ற உபாதைகள் ‘ஆமயம்’ என்பர்; கசப்பான, புளிப்பான, கெட்டியான உணவுகளை உண்டால் துன்பம், கவலை, நோய் முதலியவை உண்டாகின்றன. இவற்றை விலக்க வேண்டும் என்பது பொருள். 

இப்படிப்பட்ட உணவுகளை உண்பவர் ரஜோ குணம் அமைந்தவர்கள்.

சுலோகம் 10: *எந்த உணவு அரைவேக்காடு ஆனதோ, ரசமற்றதோ, துர்நாற்றமுடையதோ, பழையதோ, மேலும் உண்டு மிகுந்ததோ, தூய்மையும் அற்றதோ, அந்த உணவு தாமஸ குணமுடையவர்களுக்கு விருப்பமானது.*

‘யாமம் கழிந்த (நாள்பட்ட) சுவையற்ற, துர்நாற்றமெடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாருக்குப் பிரியமானது.’

மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைத்த உணவு யாமம் கழிந்த உணவாகிறது. அது சுவையை இழந்துவிடும். ஊசிப் போய்விடும். துர்நாற்றமெடுக்கும்.

1. யாதயாமம் – மூன்று மணி நேரம் கொண்ட கால அளவு. 

2. பர்யுஷிதம் – நேற்றைப் பழையதைக் குறிக்கும். அரை வேக்காடு உள்ள உணவு. 

3. கதரஸம் – தீ அதிகமானால் அல்லது காற்றுப்பட்டதால், பருவம் கடந்துவிட்டதால், பொருள்களின் சாறு வற்றி உலர்ந்து போவதாகும். உலர்ந்த ஆரஞ்சுப்பழம் கரும்பு போன்றவை. 

4. பூதி – துர்நாற்றமுடைய பண்டங்கள். வெங்காயம், உலர் பூண்டு போன்றவை. 

5. உச்சிஷ்டம் – தானோ, பிறரோ உண்டபின் எஞ்சிய உணவு, எச்சில் பண்டங்கள். 

6. அமேத்யம் – புலால், முட்டை முதலியவை. ஹிம்சையால் பெறப்பட்டமையால் விலக்கல்கள், சாராயம், போதையூட்டும் பொருள்கள், பூஜையில் தடை செய்யப்பட்டவை.

தாமஸ குணமுடையோர் இப்பொருள்களை விரும்பி உண்பர்.

சுலோகம் 11: *எந்த யாகம் சாஸ்திரங்களுக்கு உட்பட்டதோ, செய்யப்பட வேண்டிய கடமைதான் என்று மனத்தை ஒருநிலைப்படுத்திப் பயனில் பற்றற்றவர்களால் செய்யப் படுகின்றதோ, அது சாத்விகமான யாகம்.*

எந்த யாகம் சாஸ்த்ரங்கட்கு உட்பட்டதோ, செய்யப்பட வேண்டிய கடமைதான் என மனத்தை ஒருநிலைப்படுத்திப் பயனில் பற்றற்றவராய் இருந்து கொண்டு செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விக யக்ஞமாகும். ஸத்வ குணத்தைப் பிரதானமாகக் கொண்ட யாகமாகும்.’

தெய்வங்களை உத்தேசித்து உறுதியுடன் நெய் முதலான பல் பொருள்களையும் அக்நியில் ஹோமம் செய்வதே யாகம். தேவதைகளைத் தக்கபடி பூஜித்து ஹோமம் செய்வதே யாகமாகும்.

இஹ பர ஸுகங்களைப் பெற வேண்டும் என நினையாமல், பயனில் கருத்தின்றி புரியும் வேள்வி ஸாத்விகமானது. வர்ணாசிரமங்களுக்கு உரிய கடமைகளை சாஸத்ரம் விதித்துள்ளது. மனிதன் தன் கடமைகளைச் செய்தே ஆகவேண்டும். பயனில் சிறிதும் கருத்தின்றி உலக நன்மைக்காக மனஉறுதியுடன் செய்வதே சாத்விகமாகும்.

வனவாஸத்தில் பாண்டவர் பட்ட கஷ்டங்கள் எண்ணில் அடங்கா! அப்போது தருமனிடம் துரௌபதி கேட்டாள். தர்மமே வடிவு எடுத்த தங்களுக்கு ஏன் இந்த கஷ்டங்கள்? தருமன் சொன்னான் – ‘தேவீ! அதோ பார். தூரத்தில் ஹிமாசலம் தென்படுகிறது! மஹிமையும், பெருமையும் உடைய அதை நான் வணங்குகிறேன். எந்தத் துன்பமும் என்னை ஓட்டவில்லை. நல்லது செய்தலே கடமை. பயன் கருதலாகாது’. ஸாத்விக குணமுடைய ஒருவனால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.

சுலோகம் 12: *ஆனால் அர்ஜுனா! பகட்டுக்காகவோ அல்லது பயனைக் கருத்தில் கொண்டோ, எந்த யாகம் செய்யப்படுகிறதோ, அந்த யாகத்தை ராஜஸம் என்று தெரிந்து கொள்.*

‘பரத குல உத்தமனே! அர்ஜுன! கேள். வெற்றுப் பகட்டுக்காகவோ, அல்லது யாதேனும் ஒரு ப்ரதிபலனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு யாகம் செய்யப்படுகிறதோ அந்த யக்ஞத்தை ‘ராஜஸம்’ என்று அறிவாயாக.’ ஸாத்விக யாகத்திலிருந்து இது வேறுபட்ட யக்ஞம்! சிரத்தை இல்லை. உலகவர் தன்னைத் தர்மவாந் என்று நினைக்க வேண்டும். இக்குறிக்கோளுடன் செய்வது பகட்டு! ஸாஸ்த்ர ஸம்மதி; சிரத்தை இரண்டுமிருப்பினும் இது ராஜஸமே! இவ்விரண்டு குற்றமுடையதாதலின் இது ராஜஸமே.

சுலோகம் 13: *சாஸ்திரமுறை வழுவியும் அன்னதானம் அளிக்கப் படாமலும், தட்சணை கொடுக்கப் படாமலும், மேலும் சிரத்தை இல்லாமலும் செய்யப் படுகின்ற யாகத்தைத் தாமஸம் என்று கூறுவார்கள்.*

‘வேதநெறி வழுவியது; அன்னதானம் இல்லாதது; மந்த்ரங்களும் இல்லாதது; தக்ஷிணையும் இல்லாதது; சிரத்தையற்றது; இத்தகைய யக்ஞம் தாமஸிகமாகும். இது தவிர்க்கப்பட வேண்டும்.’

1. ஆஸ்ருஷ்டாந்தம் – வேதியர், ஏனையோர் எவருக்கும் உணவு அளிக்கப்படாமை. 

2. மந்த்ரஹீநம் – ஸாஸ்த்ர விதிப்படி மந்த்ரங்கள் உச்சரிக்கப்படாமை. 

3. அதக்ஷிணம் – யாகம் செய்வோர், அதில் கலந்து கொள்வோருக்கு தக்ஷிணை தராமை. 

4. ஸாஸ்த்தாவிரஹிதம் – உண்மையான சிரத்தையின்றி, மோஹம் பகட்டுக்காக செய்பவை.

இப்படியாக தாமஸிக யக்ஞம் உள்ளடக்கிய, அதாவது – ஸாத்விக – ராஜஸ – தாமஸ் மூன்றுவித யாகங்களைப் பற்றி பகவான் பார்த்தனுக்குச் சொன்னார். 

இனி மேலும் நான்கு சுலோகங்களின் மூலம் தவத்தின் இலக்கணங்களைச் சொல்லுகிறார்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment