பகவத்கீதை – பதினைந்தாம் அத்தியாயம் – புருஷோத்தம யோகம் – 3


*ஞானத்தேடல் பதிவு எண்: 081 நாள்: 25.11 2022*

*பகவத்கீதை – பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் – 3*

**சுலோகம் பன்னிரண்டு முதல் இருபது வரை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியீடான “அண்ணா” அவர்களின் பகவத்கீதையின் பொழிப்புரையில் இருந்து:*

ஸ்ரீபகவான் கூறியது:

(12)சூரியனைச் சார்ந்த எந்த ஒளி உலகனைத்தையும் பிரகாசிப்பிக்கின்றதோ, சந்திரனிடம் உள்ளது எதுவோ, அக்னியுடன் உள்ளது எதுவோ அவ்வொளியை என்னுடையதாக அறிவாய்.

(13)நான் என் சக்தியினால் பூமியினுள் புகுந்து உயிர்களைத் தாங்குகிறேன், ரஸமயமான சந்திரனாக இருந்துகொண்டு எல்லாப் பயிர்கலையும் போஷிக்கின்றேன்.

(14)நான் வைச்வாநரனாக ஆகிப் பிராணிகளின் உடலை இருப்பிடமாகக் கொண்டு பிராணனுடனும் அபானனுடனும் கூடி நான்கு விதமான உணவைப் பக்குவம் செய்கிறேன்.

(15)“எல்லோருடைய இருதயத்திலும் புகுந்திருப்பவன் நான்; நினைவும், அறிவும், மறதியும் என்னிடமிருந்தே; எல்லா வேதங்களாலும் அறியவேண்டிய பொருளும் நானே; வேதாந்தத்தை ஆக்கியவனும் வேதத்தை உணர்ந்தவனும் நானே.

(16)க்ஷரன் அக்ஷரன் என்னும் இவ்விருவர்களே உலகில் புருஷர்கள் எனப்படுவோர். உருப்படைத்த அனைத்தும் க்ஷரபுருஷன்; கூடஸ்தன் அக்ஷரபுருஷன்.

(17)ஆனால், எவன் மூவுலகிலும் புகுந்து தாங்குகின்றானோ, மாறுதல் இல்லாதவனோ, இறைவனோ, பரமாத்மா என்று கூறப்பட்ட உத்தம புருஷனோ, அவன் வேறானவன்.

(18)எக்காரணத்தால் நான் க்ஷரத்தைக் கடந்தவனோ, அக்ஷரத்திற்கும் கூட மேலானவனோ, அதனால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று பிரசித்தி அடைந்துள்ளேன்.

(19)“அர்ஜுனா, எவன் இவ்வாறு மதிமயக்கம் இல்லாதவனாய்ப் புருஷோத்தமனாகிய என்னை அறிகின்றானோ, அவன் அனைத்தும் அறிந்தவனாய் அனைத்தையும் நான் என பாவித்து என்னை வணங்குவான்.

(20)பாவமற்றவனே, இங்ஙனம் மிக ரகசியமான இச்சாஸ்திரம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. அர்ஜுனா, இதை அறிந்து புத்திமான் ஆகவும், செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்து முடித்தவன ஆகவும் ஒருவன் ஆகின்றான்.

சுலோகம் 12: சூரியனில் உள்ள எந்த ஒளி உலகனைத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, மேலும் எந்த ஒளி சந்திரனிடத்திலும் நெருப்பினிடத்திலும் (உள்ளதோ), அது என்னுடைய ஒளியே என்று தெரிந்துகொள்.

வெளிச்சத்தின் மூலம் தான் ஜடப்பொருட்கள் இருக்குமிடத்தை நாம் தெரிந்துக் கொள்ளமுடியும். நமக்குத் தெரிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடமிருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள்.

எங்கு வெளிச்சம் இருக்கிறதோ, அங்கு சத்துவ குணத்தின் தோற்றமுண்டு. கண்ணாடியில் நமது பிம்பம் தெரிவதைப்போல, சத்துவ குணத்திலே (சாத்வீக) ஆத்மாவின் பிரகாசம் ஒளிர்கிறது. ஆத்ம ஒளியை விளக்குகிற சத்துவ குணம் பரமாத்மாவிடமிருந்து வந்தது.

சூரிய வெளிச்சம், ஒருபொருளை வெளிப்படுத்திக் காட்டுவதைப் போல, ஆத்ம பிரகாசம் “நான் இருக்கிறேன்” என்று உணர்வை விளக்குகிறது. சூரியனிடத்தில் இருப்பது பொருள்களைக் காண உதவும் “ஜடப்பிரகாசம்” என்றால், ” நான் இருக்கிறேன்” என்ற உணர்ச்சியோ, “ஆத்மப் பிரகாசம்” எனலாம்.

சூரியன், சந்திரன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடமிருந்து வந்துள்ள ஜடப் பிரகாசத்தை, ஈசுவரன் என்னும் ஆத்ம பிரகாசம் அறிகிறது. அவ்வாறு அறிபவனுடைய அறிவே, அறியப்படு பொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்னி ஆகியன அறியப்படு பொருள்களாகும்.

சூரிய, சந்திரர்களின் வெளிச்சமாகவும், அக்னியின் ஒளியாகவும் இருப்பது எனது ஒளியே! என்று அர்ஜுனனுக்குப் போதிக்கிறார், ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 13: மேலும், நான் பூமியினுட்புகுந்து என் சக்தியினால் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குகிறேன். ரஸமே வடிவான அதாவது அமுதமே நிறைந்த நிலவும் ஆகி, அனைத்து பயிர்பச்சைகளையும் மரங்களையும் போஷிக்கிறேன்.

ஈசுவர சக்தி “ஓஜஸ்” எனப் பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் பரவி, அதை உறுதியாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அண்டமெல்லாம் பகவானிடத்திலிருந்தே நிலைபேறடைகின்றன. சந்திரனின் ஒளியிலுள்ள சக்தி பூமியில் படிவதால், பூமியிலுள்ள பயிர்களெல்லாம் செழித்து வளருகின்றன! என்பது கோட்பாடு.

தாவரங்கள் வளர சூரிய ஒளி அவசியம்! என்றாலும், தொடர்ந்து சூரிய ஒளியே கடுமையாக இருந்தால், பயிர்கள் அனைத்தும் வாடிவிடும்; எனவே பயிர்களைப் பாதுகாக்கவும், வளரச் செய்யவும் சந்திரனின் தண்ணொளியும் அவசியம். பயிர்களின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் சந்திரனின் ஒளியும் அவசியம். இவ்வாறு உயிர்கள் அனைத்திற்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவிடமிருந்தே வருகிறது.


சூரியன், சந்திரன், அக்னி ஆகியவற்றின் ஒளிகளெல்லாம் என்னிடமிருந்து வந்ததே! என 12ஆம் சுலோகத்தில் ஶ்ரீகிருஷ்ணர் கூறினார். இதில் எனது சக்தியாலேயே பூமியிலுள்ள உயிர்களை எல்லாம் தாங்குகிறேன்! சந்திரனின் தண்ணொளியாகவும் நானே விளங்கி, பயிர்களைக் காத்து, வளரச் செய்கிறேன்! என்கிறார் கண்ணபிரான்; இனி உயிர்களைக் காக்கும் மூன்றாவது வல்லமை எதுவென? அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார் கிருஷ்ணர்.

சுலோகம் 14: நானே எல்லா உயிரினங்களுடைய உடலில் உறைபவனாகி, பிராண-அபான வாயுக்களுடன் கூடி வைசுவாநரன் என்ற அக்னியாக ஆகி, நான்கு வகையான உணவை ஜீரணிக்கிறேன்.

மனிதனின் வயிற்றினுள் இருக்கும் உஷ்ணம் உதரக்கனல் எனப்படுகிறது. நாம் உணவு உண்டபிறகு, அவ்வுணவு செரிமானமாக வேண்டுமானால் வயிற்றினுள் ஒரு உஷ்ணம் தேவை. இவ்வாறு வயிற்றினுள் இருந்து உணவைச் செரிக்க வைக்கும் உஷ்ணத்திற்கு “வைசுவானரன்” என்கிற பெயருண்டு.


ஜீரணமாவதற்கு உணவு நான்கு விதங்களில் வயிற்றுக்கு அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல்_ என நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது.

இவையாவையும் ஜீரணம் செய்வது #வைசுவானரன் என்ற அக்னி. எனவே தான் உணவை உண்ட உடனே நீராடக்கூடாது! என நம் முன்னோர்கள் கூறி வைத்தார்கள். உணவு செரிமினமாவதற்கு நம் வயிற்றில் உதரக்கனல் அவசியம். வயிறு குளிர்ச்சியடைந்தால் உணவு ஜீரணமாகக் காலதாமதமாகும்.


உயிர்கள் உண்ணும் உணவு வயிற்றில் ஜீரணமாக, உதரக்கனலாகவும் இருந்து, ஆக்ஸிஜன் என்ற பிராணவாயுவோடும், அபானவாயு என்ற கார்பன்டைஆக்ஸைடுடனும் சேர்ந்து நான்கு விதங்களில் உணவை செரிமானமாகச் செய்கிறேன்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர் இந்தச் சுலோகத்தில்.


உயிர்களைப் படைப்பவனும், தாங்கிப் பாதுகாப்பவனும், அவ்வுயிர்கள் உண்ணும் உணவைச் செரிக்கச் செய்பவனும் நானே! என்கிறார் கண்ணபரமாத்மா.

சுலோகம் 15: நானே எல்லாப் பிராணிகளுடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டு இருக்கிறேன். என்னிடமிருந்துதான் நினைவும் அறிவும் ஐயம்-திரிபுகளில் இருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களாலும் நானே அறியத் தக்கவன். வேதாந்தத்தைச் செய்தவனும் வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும் நானே.

எல்லோருடைய உள்ளத்திலும் சுய உணர்வு அல்லது அறிவுசொரூபமாக பகவான் இருக்கிறார். எனவே முன் செய்தவைகளைப் பற்றிய நினைவும், ஆய்ந்து அறிய வேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது அவைகளை அழித்து விடுவதுமாகிய, இவையாவும் பகவானிடமிருந்தே வருகின்றன.

வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனை வடிவங்களாகவும் இருப்பது பரம்பொருளே. இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனின் மகிமையை விளக்கிக் கொண்டிருக்கின்றன.

அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது. இதனைப் படைத்த இறைவன் மாபெரும் அறிவாளி! என நம்மை வியக்க வைக்கிறது. அவன் மாபெரும் கலைஞன்! என்பதை கலையம்சம் நிறைந்த அவனது படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

பகவானின் ஆற்றல் இயற்கையினூடே தோற்றமளித்துக் கொண்டே யிருக்கிறது.

பரமாத்மா அழகன்! என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் “திரிபுர சுந்தரி” எனப்படுவதும் இக்காரணத்தினாலேயே. பிரபஞ்சமே இறைவனின் விளக்கமாகும். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன்! அது அவனுடைய ஒரு சிறு பகுதியே.

எனவே அவன் வேதவித் ,வேதத்தைஅறிபவன் ஆகிறான்! அல்லது இயற்கையை அறிபவனே! பரமாத்மா. (பரம்பொருள்) இதனால் தான் ‘இயற்கையில் இறைவனே மறைந்துறைவதாக’ அறிஞர்கள் சொல்லி வைத்தனர்.

பிரபஞ்சத்தையும் கடந்து வேதாந்த சொரூபமாக இருப்பதும் பரமாத்மாவே.

அனைவரின் இதயத்திலும் இருப்பதும் நானே! வேதங்கள் கூறும் பரம்பொருளும் நானே! வேதாந்தத்தைச் செய்தவனும், வேதமாக இருப்பவனும் நானே! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 16: இவ்வுலகில் அழிபவன் என்றும் அழியாதவன் என்றும் இரண்டு வகையான புருஷர்கள் உள்ளனர். (இவர்களில்) எல்லா உயிரினங்களின் உடலனைத்தும் அழியக்கூடியது (என்றும்), மேலும், இவ்வுடலில் இருக்கும் ஜீவாத்மா அழியாதவன் (என்றும்) கூறப்படுகின்றது.

கூடஸ்தன் என்றால் வெவ்வேறு வடிவங்களும், தோற்றங்களும், மாயக்காட்சிகளும் காட்டவல்லவர்! என்பது பொருள்.  க்ஷரம்=  அழியக்கூடியது, அக்ஷரம்=  அழியாதது.

பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயசக்தி, என்றும் நிலைத்திருக்கிறது; ஈசுவரனை அது நிரந்தரமாகச் சார்ந்துள்ளது. . பரமாத்மா அல்லது சகுண பிரமத்தின் வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி,விஷ்ணு, மகாலட்சுமி, விநாயகர், முருகன் முதலியன ஒன்று சேர்ந்து கூடஸ்தன் ஆகிறது; இதுவே புருஷன் என அழைக்கப்படுகிறது. .

பிறவியெடுத்தவர்கள் எல்லாம் அழியும் தன்மையுடையவர்கள்; பரமாத்மாவோ, தன் சக்தியால் வெவ்வேறு வடிவங்களையும், மாயக்காட்சிகளையும் காட்டவல்லவர்! என்றென்றும் அழியாது நிலைத்திருப்பவர்! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 17: எவர் உலகம் மூன்றிலும் உட்புகுந்து எல்லோரையும் தாங்கிப் போஷிக்கிறாரோ, (மேலும்) அழிவற்றவர், பரமேசுவரன், பரமாத்மா என்றும் அழைக்கப் படுகிறாரோ அந்த புருஷோத்தமன், இந்த க்ஷர-அக்ஷர புருஷர்களிடமிருந்து வேறுபட்டவர்.

சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாவடிவினர். உலகங்களும், உயிர்களும் (பிரபஞ்சம், ஜீவன்) அவருடைய தோற்றங்களாகும். நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் படைப்புகள் (விபூதி) யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள்; அதற்கு அப்பாற்பட்டவர் புருஷோத்தமன்.

பிரம்மம் அல்லது பரமாத்மாவிடம் எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. சுத்த சைதன்யமாக அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

சுலோகம் 18: எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜடவர்க்கத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், அக்ஷரனான (அழியாத) ஜீவாத்மாவைக் காட்டிலும் சிறந்தவனாகவும் உள்ளேனோ, அக்காரணத்தினால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் எனப் புகழ் பெற்றுள்ளேன்.

க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். அது அரசமரத்தோடு ஒப்பிடப்பட்டு, ஏற்கனவே விளக்கப்பட்டது. அக்ஷரம் என்பது உலகிற்கு மூலகாரணமாக இருக்கும் மூலபிரகிருதியோடு கூடிய ஈசுவரன். சித்சக்தியாக இந்த மூலப்பொருளைக் கருதினால், அச்சக்தியைப் #பரமேஸ்வரி என்கிறோம்.

ஜீவாத்மாக்கள் எல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர்விகாரமாக இருப்பவர் பரப்பிரம்மம். பக்தர்களும் , கவிகளும் அவரைப் புருஷோத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது. அனைத்துவிதமான கல்யாண குணங்களும் நிறைந்திருப்பவரையே *புருஷோத்தமன் என்கிறோம். அழியும் தன்மையுடைய பிரபஞ்சத்தைக் கடந்து, உலகிற்கு மூலகாரணமாக இருக்கும் பரபிரம்மத்திற்கும் மேலானவனாக இருப்பதாலேயே உலகிலும், வேதத்திலும் நான் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றிருக்கிறேன்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 19: பரதகுலத் தோன்றலே! எந்த ஞானி என்னை இவ்விதம் புருஷோத்தமன் என்று (தத்துவரீதியாக) அறிகிறானோ, எல்லாமறிந்த அவன் எல்லாவிதமாகவும் எப்போதும் வாசுதேவனும் பரமேசுவரனுமான என்னையே வழிபடுகிறான்.

இராமகிருஷ்ணபரமஹம்சரின்_உபதேசம்: “ஈசுவர தரிசனம் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும். ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது. இன்னும் அதைவிட மேலான தோற்றமோ, சுத்த சாத்விகமான பக்தர்களிடம் இருக்கும்”.

சுலோகம் 20: பாவமற்றவனே! அர்ஜுனா! இவ்வாறு மிகவும் ரகசியமாக மறைத்துப் போற்றத்தக்க இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது. இதைத் தத்துவரீதியாக அறிந்து கொண்ட மனிதன் ஞானியாகவும் செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும் ஆகிறான்.

பகவத்கீதை சிறந்த சாஸ்திரம் என்றாலும், இந்தவொரு அத்தியாயம் மட்டுமே சிறப்பான சாஸ்திரம் ஆகும். ஏனென்றால் வேதாந்தத்தின் சாரம் முழுவதும் இந்த அத்தியாயத்திலுள்ளது. பரம்பொருளை அறிபவன் ஞானியாகிறான்.

அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்ம ஞானத்தை அடைவதில் முற்றுப் பெறுகின்றன. பரம்பொருளை அறிந்து கொள்ளுவதற்கு நிகரான குறிக்கோள் வேறேதுமில்லை. பிரம்மத்தை அறிவதை விட மேலானது எதுவுமில்லை. பிரம்மத்தை அறிபவன் ஞானியாகிறான்; அவனே முக்தனுமாகிறான்.

அதாவது பிரம்மத்தை அறிந்தவன் ஞானியாகி, பிரம்மத்தோடு இணைந்து, முக்தி அடைந்துவிடுகிறான்.

மனிதனாகப் பிறந்தவர்கள் ஞானம் பெற்று, பிறப்பற்ற நிலையை அடைய இந்த அத்தியாயத்தை நன்கு உணர்ந்து, பின்பற்றுவது அவசியம். கீதையின் 18 அத்தியாயங்களிலும் இந்தப் புருஷோத்தம யோகம் மிகவும் சிறப்பானதாகும்.

குற்றமற்ற அர்ஜுனனே! இதுவரை மிகச் சிறப்பானதான சாஸ்திரத்தை நான், உனக்குக் கூறினேன்; இதை அறிபவன் ஞானியாகி, முக்தியடைவான்! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

இதுவரை ‘புருஷோத்தம யோகம்’ என்ற பதினைந்தாவது அத்தியாயம்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment