பகவத்கீதை – பதினாறாம் அத்தியாயம் – தைவாஸுர ஸம்பத் விபாக யோகம் யோகம் – 1

*ஞானத்தேடல் பதிவு எண்: 082 நாள்: 25.11 2022*

*பகவத்கீதை – பதினாறாம் அத்தியாயம் தைவாஸுர ஸம்பத் விபாக யோகம் – 1*

இருபத்தி நாலு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில், 1 தெய்வீக சம்பத் (நற்பண்புகள்). 2 அசுர சம்பத் (தீய குணங்கள்) இரண்டும் விளக்கப் படுகின்றன.

முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.

மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.

சுலோகம் 1: ஸ்ரீபகவான் கூறுகிறார் – “முற்றிலும் அச்சம் நீங்கியவனாக இருத்தல்; அந்தக்கரணம் முற்றிலும் தூய்மை பெற்றிருத்தல்; தத்துவஞானம் பெறுவதற்காகத் தியான யோகத்தில் இடையறாது உறுதியாக நிலை பெற்றிருத்தல்; சாத்விகமான தானம்; புலனடக்கம்; பகவான், தேவதைகள், பெரியோர்கள் ஆகியோருக்குரிய பூஜை; அக்னிஹோத்ரம் முதலிய நற்கர்மங்களைக் கடைப்பிடித்தல்; வேதங்களைக் கற்றல்-கற்பித்தல்; பகவானுடைய நாம ஸங்கீர்த்தனம் செய்தல்; ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளல்; உடல்-புலன்களுடன் கூடிய அந்தக்கரணங்களின் நேர்மை—

சுலோகம் 2: மனம், மொழி, மெய் – இவற்றால் எவர்க்கும் எவ்வித தீங்கும் இழைக்காமை; உள்ளம் அறிந்த உண்மையை இனிமையாக எடுத்துரைத்தல்; தனக்குத் தீங்கிழைத்தவரிடமும் கூடக் கோபமின்மை; கர்மங்களைச் செய்வதில் ‘நான் கர்த்தா’ என்ற அபிமானமின்மை; அந்தக்கரணங்கங்களின் ஓய்வு அதாவது அவை அலையாமல் அமைதியாக இருத்தல்; ஒருவரையும் குறை, பழி முதலியன கூறாமை; உயிரினங்களிடத்தில் இயல்பாகத் தோன்றும் பரிவு; புலன்களில் நுகர்பொருள் வந்து சேர்ந்தாலும் அவற்றில் பற்றின்றி இருத்தல்; மென்மை; உலகியல், அறநெறி ஆகியவற்றிற்குப் புறம்பான செயல்களில் வெட்கம்; வீணான செயல்களைப் புரியாதிருத்தல்—

சுலோகம் 3: பொலிவு, பொறுமை, உறுதி (தாரணா சக்தி), புறத்தூய்மை, எவரிடமும் பகைமை பாராட்டாமை, தான் மதிக்கத்தக்கவன் என்று செருக்குக் கொள்ளாமை – இவையெல்லாம் அர்ஜுனா! தெய்விக சம்பத்துடன் (மனப்பாங்குடன்) பிறந்தவர்களின் இலக்கணங்களாகும்.

சுலோகம் 4: அர்ஜுனா! டாம்பீகமும் (பகட்டு, ஆடம்பரம்), இறுமாப்பும், தற்பெருமையும், கோபமும், கடுமையும், அஞ்ஞானமுமே அசுரப் பண்புடன் பிறந்தவர்களுடைய இலக்கணங்கள் ஆகும்.

சுலோகம் 5: தெய்விகப் பண்பு மோட்சத்திற்கும், அசுரப்பண்பு பந்தத்திற்கும் காரணமாகும் என்று கருதப் படுகிறது. அர்ஜுனா! நீ தெய்வப் பண்புடன் பிறந்திருக்கிறாய். ஆகவே வருந்தாதே!

சுலோகம் 6: அர்ஜுனா! இவ்வுலகில் தெய்வப்பண்பு உடையது என்றும், அசுரப்பண்புடையது என்றும் உயிரினங்களின் படைப்பு அதாவது மனித சமுதாயங்கள் இருவகையாகவே உள்ளன. தெய்வப் பண்புடையவர்களைப்பற்றி இதுவரை விரிவாக விளக்கப்பட்டு விட்டது. அசுர இயல்புடையவர்களைப் பற்றியும் விரிவாக என்னிடம் கேட்டுக் கொள்.

சுலோகம் 7: அசுர இயல்புடைய மக்கள் செய்யத்தக்கதில் ஈடுபடுவது பற்றியும், செய்யத்தகாததில் இருந்து விலகுவது பற்றியும் அறியார்கள். ஆகவே, அவர்களிடம் புறத்தூய்மை, அகத்தூய்மை இரண்டும் இல்லை; நன்னடத்தையும் இல்லை; உண்மை பேசுவதும் கூட இல்லை.

சுலோகம் 8: உலகம் ஆதாரமற்றது; முற்றிலும் பொய்யானது; ஈசுவரன் அற்றது; தானாகவே, வெறும் ஆண்-பெண் உறவினாலேயே உண்டானது; ஆகவே, காமத்தையே அடிப்படையாகக் கொண்டதுதான். இதுதவிர வேறு என்ன – என்று அசுர குணம் படைத்தவர்கள் கூறுகிறார்கள்.

சுலோகம் 9: இந்தத் தவறான கருத்துக்களைப் பற்றிக்கொண்டு எவர்களுடைய இயல்பு சீரழிந்து விட்டதோ, எவர்களது புத்தி மந்தமாகி விட்டதோ, எவர்கள் அனைவருக்கும் தீமையையே நினைப்பவர்களோ, கொடுமையான செயல்கள் புரிகின்றவர்களோ, அவர்கள் உலக நாசத்திற்காகவே முனைகிறார்கள்.

சுலோகம் 10: ஆடம்பரம், தற்பெருமை, மதம் (திமிர்) – அவற்றுடன் கூடியவர்களாக, எவ்வகையிலும் பூர்த்தி செய்யமுடியாத நிறைவேறாத ஆசையைப் பற்றிக்கொண்டு, அஞ்ஞானத்தினால் பொய்யான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, தூய்மையற்ற செயல்களையே மேற்கொண்டு உலகியலில் நடந்து கொள்கிறார்கள்.

சுலோகம் 11: மரண காலம் வரை தொடர்கின்ற எண்ணற்ற கவலைகளைப் பற்றிக்கொண்டு, போகங்களை அனுபவிப்பதையே நாட்டமாகக் கொண்டவர்களாகவும், சுகமெல்லாம் இவ்வளவுதான் என்ற தீர்மானம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

சுலோகம் 12: ஆசைகளாகிற நூற்றுக்கணக்கான கயிறுகளால் பிணைக்கப் பட்டவர்களாக ஆசையையும் சினத்தையுமே பற்றுக்கோடாகக் கொண்டு, சிற்றின்ப போகங்களை அனுபவிப்பதற்காக நீதிக்குப் புறம்பான முறைகளில் செல்வம் முதலியவற்றைத் திரட்டுவதிலேயே முயற்சி செய்கிறார்கள்.

சுலோகம் 13: என்னால் இன்று இது அடையப்பட்டது. மேலும், இந்த விருப்பத்தையும் பூர்த்தி செய்து கொள்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் உள்ளது. மேலும், இவ்வளவு கிடைக்கப் போகிறது –என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுலோகம் 14: இந்தப் பகைவன் என்னால் கொல்லப்பட்டான். மேலும், மற்றவர்களையும் நான் கொல்வேன். நானே ஈசுவரன்; செல்வத்தை அனுபவிப்பவன். நான் எல்லா ஸித்திகளையும் பெற்றவன்; வலிமை மிக்கவன்; சுகமுடையவன்.

சுலோகம் 15-16: நான் செல்வந்தன்; நற்குடிப் பிறப்புடையவன். எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்? யாகம் செய்யப் போகிறேன்; தானம் அளிக்கப் போகிறேன்; இன்பத்தில் திளைக்கப் போகிறேன் என்று இவ்விதம் அஞ்ஞானத்தினால் மயக்கமுற்றுப் பலவிதமாகத் திரிகின்ற மனமுடையவர்களாக, விஷய போகங்களில் ஈடுபட்டவர்களான அசுர குணமுடையவர்கள் தூய்மையற்ற பாழ்நரகத்தில் வீழ்கிறார்கள்.

சுலோகம் 17: தன்னைத் தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்பவர்களும் கர்வமுடையவர்களும் செல்வம், தற்பெருமை, செருக்கு – இவையுடையவர்களுமான அவர்கள் பெயரளவில் யாகம் என்ற செயல்களால் ஆடம்பரமாக சாஸ்திர விதிகளை மீறி யாகம் செய்கிறார்கள்.

சுலோகம் 18: அகங்காரத்தையும் உடல்வலிமையையும் கர்வத்தையும் ஆசையையும் கோபத்தையும் கைக்கொண்டு, பிறரை இகழ்கின்றவர்களாகத் தம் உடலிலும், பிற உடல்களிலும் உள்ள அந்தர்யாமியான என்னை வெறுப்பவர்களாகவும் உள்ளனர்.

சுலோகம் 19: என்னை வெறுப்பவர்களும் பாவம் செய்பவர்களும் மனிதர்களில் கடையவர்களுமான அவர்களை நான் உலகியல் சுழல்களில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அசுரப்பிறவிகளிலேயே தள்ளிவிடுகிறேன்.

சுலோகம் 20: அர்ஜுனா! அந்த அறிவிலிகள் என்னை அடையாமலேயே ஒவ்வொரு பிறவியிலும் அசுர இயல்புள்ள பிறவியை அடைகிறார்கள். அதைக் காட்டிலும் மிகத் தாழ்ந்த நிலையை எய்துகிறார்கள். அதாவது, கோரமான நரகங்களை அடைகிறார்கள்.

சுலோகம் 21: காமம், கோபம், பேராசை ஆகிய இந்த மூன்று வகையான நரகத்தின் நுழைவாயில்கள் ஆத்மாவை நாசம் செய்யக் கூடியவை. அதாவது, இழிந்த நிலையில் தள்ளக் கூடியவை. ஆகவே, இம்மூன்றையும் விட்டுவிட வேண்டும்.

சுலோகம் 22: அர்ஜுனா! இந்த மூன்று நரகவாயில்களில் இருந்தும் விடுபட்ட மனிதன் தன்னுடைய மேன்மைக்குரிய செயலைப் புரிகிறான். அதன் மூலமாகப் பெரும்பேற்றை அடைகிறான் – அதாவது என்னை அடைகிறான்.

சுலோகம் 23: எவன் சாஸ்திர முறையைத் துறந்து, தன் மனம் போனபடி நடந்து கொள்கிறானோ, அவன் வெற்றியை அடைவதில்லை. பெரும்பேற்றை – மேலான நிலையை அடைவதில்லை; சுகத்தையும் அடைவதில்லை.

சுலோகம் 24: ஆகவே, உனக்கு இவ்வுலகில் செய்யத்தக்கது, செய்யத்தகாதது எது என்று நிர்ணயிப்பதில் சாஸ்திரம்தான் சான்றாகும். இவ்வாறு தெரிந்துகொண்டு சாஸ்திர முறைகளில் சொல்லப்பட்டிருக்கும் கர்மங்களை ஆற்றக்கடவாய்.”

*சுப்ரமண்ய பாரதியார் உரையில் சுருக்கமாக சொல்லப்படுகின்றன.*

  1. அஞ்சாமை,
    1. உள்ளத் தூய்மை,
    1. ஞான யோகத்தில் உறுதி,
    1. ஈகை,
    1. தன்னடக்கம்,
    1. வேள்வி,
    1. வேதங் கற்றல்,
    1. தவம்,
    1. நேர்மை,
    1. கொல்லாமை,
    1. வாய்மை,
    1. சினவாமை,
    1. துறவு,
    1. ஆறுதல்,
    1. வண்மை,
    1. ஜீவதயை,
    1. அவாவின்மை,
    1. மென்மை,
    1. நாணுடைமை,
    1. சலியாமை,
    1. ஒளி,
    1. பொறை,
    1. உறுதி,
    1. சுத்தம்,
    1. துரோகமின்மை –

இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரதா!

  1. டம்பம், 
    1. இறுமாப்பு,
    1. கர்வம்,
    1. சினம்,
    1. கடுமை,
    1. அஞ்ஞானம் –

இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன.

Swami Paramahamsa Yogananda has beautifully explained the 26 qualities that are divine in 15 pages in his book GOD TALKS WITH ARJUNA, an explanation to Bhagavad Gita. The next post in this series gives an extract in 6 pages.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை.

Leave a comment