பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் – குணத்ரய விபாக யோகம் – 1


*ஞானத்தேடல் பதிவு எண்: 075 நாள்: 17.11 2022*

*பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் குணத்ரய விபாக யோகம் – 1*

*ஸ்ரீல பிரபுபாதா*: “ஸ்ரீ கிருஷ்ணர், ஏழாம் அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயத்தின் இறுதிவரை, பூரண உண்மையான பரம புருஷ பகவானை விரிவாக வெளிப்படுத்தினார். தற்போது, அர்ஜுனனுக்கு மேலும் அறிவொளி கொடுக்கின்றார் பகவான்.

தத்துவக் கற்பனையின் மூலமாக ஒருவன் இந்த அத்தியாயத்தைப் புரிந்து கொண்டால் அவன் பக்தித்தொண்டை புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்தடைவான்.

பதிமூன்றாம் அத்தியாயத்தில், பணிவுடன் ஞானத்தை வளர்ப்பதன் மூலம் பௌதிக பந்தத்திலிருந்து விடுதலை பெறலாம் என்று மிகத் தெளிவாக விளக்கப்பட்டது.

உயிர்வாழி இந்த ஜடவுலகில் பந்தப்பட்டிருப்பதற்கு, இயற்கையின் குணங்களுடன் அவன் கொண்டுள்ள தொடர்பே காரணம் என்பதும் விளக்கப்பட்டது.

இந்த அத்தியாத்தில், இயற்கையின் அத்தகு குணங்கள் யாவை, அவை எவ்வாறு செயல்படுகின்றன, அவை எவ்வாறு பந்தபடுத்துகின்றன, அவை எவ்வாறு முக்தியளிகின்றன என்பனவற்றை முழுமுதற் கடவுள் விளக்குகின்றார்.

இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ள ஞானம், இதற்கு முந்தைய அத்தியாயங்களில் வழங்கப்பட்ட ஞானத்தைவிட உயர்ந்ததாக முழுமுதற் கடவுளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டதால், பற்பல பெரும் முனிவர்களும் பக்குவத்தை அடைந்து ஆன்மீக உலகிற்கு மாற்றமடைந்துள்ளனர். அதே ஞானத்தை மேலும் சிறந்த முறையில் பகவான் இப்போது விளக்குகின்றார்.

இதுவரை விளக்கப்பட்ட இதர ஞான முறைகள் எல்லாவற்றையும்விட இந்த ஞானம் மிகமிக உயர்ந்ததாகும், இதனை அறிந்த பலர் பக்குவநிலையை அடைந்துள்ளனர். இவ்வாறாக இந்த பதினான்காம் அத்தியாயத்தைப் புரிந்து கொள்பவன் பக்குவநிலையை அடைவான் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.”

*இந்த அத்தியாயம் சுருக்கமாக*: (Wikipedia)

27 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தில் புருஷன் மற்றும் பிரகிருதி விளக்கப்பட்டு, பின் மாயையின் சத்துவம், ராஜசம் மற்றும் தாமசம் எனும் முக்குணங்களை விளக்குகிறார். மேலும் முக்குணங்களை கடந்த குணாதீதனின் இலக்கணத்தையும் உரைக்கிறார். முக்குணங்களைப் பற்றிய ஐந்து கருத்துக்களை கீழ்கண்டவாறு பகவான் விளக்குகிறார்.

*முக்குணங்களின் இலக்கணம்*

சத்வகுண இலக்கணம்:- நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

*சத்துவ குணப் பலன்கள்* :- சத்துவ குணத்திலிருந்து தர்மச்செயல்கள்; தன் செயல்களை அனைத்தும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி (முக்தி) மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.

*இராட்சத குண இலக்கணம்*:  ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் இராட்சத குணமாகும்.

*இராட்சத குணப் பலன்கள்*:- இராட்சத குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.

*தாமச குண இலக்கணம்*:- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.


*
தாமச குணப் பலன்கள்*:- தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

*முக்குணங்களால் பந்தப்படுதல்*

சத்துவ, ரஜஸ் மற்றும் தாமச குணங்கள் மனிதர்களை எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார்.

*பலன்கள்*

தாமச குணம் சோம்பல் மற்றும் மயக்கத்தையும், இராட்சத குணம் கோபத்தையும் மற்றும் துக்கத்தையும், சத்துவ குணம் அறிவு மற்றும் ஆனந்தத்தையும் வழங்கும்.

*வழி (கதி)*

இம் முக்குணங்கள் கொண்டவர்கள் இறந்த பின் மறு பிறவியில், தாமச குணம் உடையவர்கள் மூடர்களிடத்திலும், இராட்சத குணம் உடையவர்கள் செயல் திறன் மிக்கவரிடத்திலும், சத்துவ குணம் உடையவர்கள் ஞானம் அறிந்தவர்களிடம் பிறக்கிறார்கள்.

*முக்குணங்களைக் கடந்த குணாதீதனின் இலக்கணம்*

தாமசம், ராஜசம் மற்றும் சத்வம் எனும் முக்குணங்களைக் கடந்தவனே குணாதீதன் {ஞானி}ஆவான். குணாதீதன் அறிவு ஒளியாக, அனைத்துப் பொருட்களில் சமத்துவ நோக்குடன், வெறும் சாட்சியாக மட்டும் விளங்குவான்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**
*உதவி*: ஸ்ரீல பிரபுபாதாவின் “பகவத்கீதை உண்மையுருவில்”
               விக்கிபீடியா

Leave a comment