பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் – குணத்ரய விபாக யோகம் – 2


*ஞானத்தேடல் பதிவு எண்: 076 நாள்: 16.11 2022*

*பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் குணத்ரய விபாக யோகம் – 2*

சுலோகம் 1: ஸ்ரீபகவான் கூறினார் – “எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் எல்லா முனிவர்களும், இந்த சம்சாரத்தில் இருந்து விடுபட்டு மிக மேலான ஸித்தியாகிய பரமாத்மாவை அடைந்திருக்கிறார்களோ, ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும் மிகச் சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன்.

சுலோகம் 2: இந்த ஞானத்தையறிந்து பின்பற்றி, என்னுடைய ஸ்வரூபத்தை அடைந்துள்ளவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதில்லை; பிரளய காலத்தில்கூட துன்புறுவதுமில்லை.

Paramahamsa Yogananda says: THE FIRE OF COSMIC CONSCIOUSNESS consumes all binding, stored-up karma.

Therefore, unlike ordinary persons, a Self-realized sage—a muni who has dissolved from his mind all restless agitations of delusion—does not have to reincarnate. He has destroyed desires and their outcome of good and evil actions performed with attachment.

Perfected beings who have attained salvation are one with Spirit in the vibrationless realm beyond creation. Such emancipated ones are freed not only from an individual cycle of births and deaths, but are also no longer involved in the macrocosmic cycles of the phenomenal, vibratory worlds.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார்: வேக வைத்த நெல்லைப் பூமியில் விதைத்தால் அது மீண்டும் முளைக்காது. வேகாத நெல்லே முளைக்கும். அதைப்போல சித்தனான பிறகு ஒருவன் இறந்தால், அவன் மறு பிறவி எடுப்பதில்லை. சித்தியடையாதவனோ, தான் சித்தனாகும் வரை மீண்டும், மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்.

சுலோகம் 3: அர்ஜுனா! என்னுடைய மஹத் பிரம்மம் என்ற மூலப்பிரகிருதி அகில சராசரங்களுக்கும் பிறப்பிடம். நான் அந்த பிறப்பிடத்தில் சேதன சமுதாயமான உயிரினங்களின் கருவை வைக்கிறேன். அந்த ஜடசேதன சேர்க்கையிலிருந்து சகல சராசரங்களுடைய உற்பத்தி ஏற்படுகிறது.

பிரகிருதிக்குப் பிரம்மா என்பது மற்றொரு பெயர். நான்முகப் பிரம்மா என்பதும் அதுவே. முக்குணமாக உள்ளதும், சராசரம் அனைத்திற்கும் காரணமானதும், இன்னும் தோன்றா நிலையிலும் அது இருக்கிறது. ஆதலால் அது மஹத்பிரம்மா எனப்படுகிறது; எங்கும் வியாபிக்கும் தன்மையும் அதற்குண்டு.


பிரகிருதியில் பிரகாசிக்கும் புருஷன் “ஹிரண்யகர்ப்பன்” எனப்படுகிறான். அவனுடைய எண்ணற்ற கிரணங்களே உயிர்கள் அனைத்துமாக இருக்கின்றன. ஜீவர்களும், க்ஷேத்திரக்ஞன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அழியும் தன்மை அவர்களுக்கு உண்டு. என்னிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றுகின்றன! என்கிறார் கிருஷ்ணர்.

சுலோகம் 4: அர்ஜுனா! பலவிதமான அனைத்துப் பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ, அவை எல்லாவற்றிற்கும் பிரகிருதியே பிறப்பிடம் கருத்தரிக்கும் தாய். நான் விதையளிக்கும் தந்தை.

அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பிடமாக இருப்பவள் மூல பிரகிருதி.
அவள் பெரிய நாயகி என்று அழைக்கப்படுகிறாள்; தந்தையாக இருப்பவன் பரமாத்மா.
தேவர்களாக, மனிதர்களாக, விலங்குகளாக, பறவைகளாக, பூச்சிகளாக, புழுக்களாக, தாவரங்களாக அவைகளுக்கேற்ற விதத்தில் உயிர்கள், தோன்றுகின்றன. அவைகள் அனைத்திற்கும் தாயாக இருப்பவள் மூலபிரகிருதி; தந்தையாக இருப்பவன் பரமாத்மாவாகிய நான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர். அதாவது அனைத்து ஜீவராசிகளுக்கும் தந்தை நானே! என்னிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

நாம் தமிழில் அம்மையப்பன், தாயுமானவன் என்று சொல்கிறோம். “மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகி ” என்று தேவாரத்தில் திருநின்ற தாண்டகத்தில் திருநாவுக்கரசர் சொல்வது இங்கு நினைவுகூரத் தக்கது. – NGS

சுலோகம் 5: அர்ஜுனா! சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற பிரகிருதியில் இருந்து உண்டான மூன்று குணங்களும் அழிவற்றதான ஜீவாத்மாவை இவ்வுடலில் கட்டுகின்றன.

பிரகிருதி முக்குணமயமாக இருக்கிறது. அக்னியும் அதன் வெப்பமும் வேறானவையல்ல. அவ்வாறே பிரகிருதியும், குணமும் ஒன்றேயாகும். பிரகிருதி (இயற்கையின் படைப்பு) முழுவதும் முக்குணங்களில் அடங்கியிருக்கிறது. முக்குணங்கள் என்பதும் பிரகிருதி என்பதும் சொரூபத்தில் ஒன்றே. முக்குணங்களை “முப்பாழ்” என்றும் கூறுவர்.
பிரகிருதி அல்லது க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞனைச் சார்ந்திருக்கிறது. குணசொரூபம் இல்லாத அவனை (ஆத்மா) குணம் எவ்வாறு பிணைக்க முடியும்?. பந்தப்படாத ஆத்மா, அறியாமையால் பிணைக்கப்பட்டதைப் போன்று தோன்றுகிறது.

சுலோகம் 6: பாவமற்றவனே! அந்த முக்குணங்களில் சத்துவ குணம் தூய்மையானதால் ஒளி கொடுக்கக் கூடியது; மேலும் விகாரமற்றது. ஆயினும், அது இன்பத்தில் கொண்ட தொடர்பினாலும், ஞானத்தில் கொண்ட தொடர்பினாலும் அதாவது அபிமானத்தினாலும் கட்டுகிறது.

சத்வ குணம் (சாத்வீகமான குணம்) ஓங்கப் பெற்றுள்ள ஒருவன் மனதைப் புற விஷயங்களில் திரும்புவான் என்றால், அவனுக்கு அதனால் சுகமும், இறைவனின் படைப்பைப் (பிரகிருதி) பற்றிய ஞான பற்றும் ஏராளமாக கிடைக்கின்றன.
மற்ற உறவுகளை எல்லாம் விட சத்துவகுணம் உண்டுபண்ணுகிற உறவு மிகவும் வலிமை வாய்ந்தது. அந்த பந்தத்தை உடைப்பது மிகவும் சிரமமானது. ஏனென்றால் ஆத்மா ஞானத்திற்கு ஒப்பான சுகத்தைச் சத்துவகுணம் கொடுக்கிறது; நுண்ணறிவையும் அது வளர்கிறது.


சுகத்துக்கும், அறிவுக்கும் அப்பால் செல்ல மனிதனுக்கு விருப்பம் வருவதில்லை. பாவம் அற்றவனே! அர்ஜுனா! எல்லாவற்றையும்விட சத்வகுணம் தூய்மையானது; ஒளி பொருந்தியது; அது தொல்லை கொடுக்காதது. அதனால் சத்துவ குணம் உள்ளவனால் பிறருக்கும் நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கிறது. அவனுக்கும் சத்துவ குணத்தால் நிம்மதியும் சுகமும் கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ஞானமும் அதில் பற்றும் கிடைக்கிறது. எனவே சத்துவ குணம் மிகவும் சிறந்தது என்று அர்ஜுனனுக்குப் போதிக்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 7: அர்ஜுனா! விருப்பு வடிவாகிற ரஜோ குணம், ஆசை, பற்று இவற்றில் உண்டானதாக அறிந்து கொள். அது ஜீவாத்மாவைக் கர்மங்களின், கர்மங்களிலும் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது.

ரஜோகுணம் ஆசையை உண்டாக்குகிறது. ஆசை மிக்கவர்களுக்கு இக்குணம் பிரதானமாக இருக்கும்.  கர்ம பலனில் நம்மை எது கட்டுகிறது என்று கேட்பவருக்குப் பதிலாக இந்த சுலோகம் அமைகிறது. நம்மைக் கர்மப் பலனில் நம்மை கட்டிப்போடுவது நம் ஆசையும் பற்றுமே ஆகும். இதையே கௌதம புத்தர் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று சொன்னார்.

சுலோகம் 8: அர்ஜுனா! உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ அஞ்ஞானத்தில் இருந்து உண்டானதாக அறிந்துகொள். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது, சோம்பல், தூக்கம் இவற்றால் கட்டுகிறது.

அறியாமை தமோ குணத்தை உருவாக்குகிறது. வீண் செயல் புரிவது, எதையும் தள்ளிப் போடுவது, சோம்பல், உறக்கம், தன்னம்பிக்கை இன்மை தமோ குணத்தால் விளைவன.

சுலோகம் 9: அர்ஜுனா! சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுத்துகிறது. ரஜோகுணம் செயலில் ஈடுபடுத்துகிறது. தமோ குணமோ ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுத்துகிறது.

சத்துவ குணம் சுகம் தரும், ரஜோகுணம் செயல் புரிய வைக்கும், தமோ குணம் அறிவை மறக்கடிக்கும்.

சுலோகம் 10: அர்ஜுனா! ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி, சத்துவகுணம் மேலோங்குகிறது. சத்துவ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி, ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவ குணத்தையும் ரஜோகுணத்தையும் அடக்கி, தமோகுணம் மேலோங்குகிறது.

இந்த குணங்கள் ஒவ்வொன்றும் மற்ற இரண்டையும் அடக்கி ஒரு குணம் மேலோங்குகிறது. அதாவது ஒரு குணத்தின் படி செயல்கள் செய்கிறோம்.

மனிதர்களுக்கு நாள்தோறும் மூன்று குணங்களும் மாறி மாறி முன்னணிக்கு வருகின்றன. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது! என்று இந்த முக்குணங்களின் வேறுபாடுகளைப் பற்றி அர்ஜுனனுக்குப் போதிக்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 11: எப்பொழுது இந்த உடலிலும் உள்ளத்திலும் புலன்களிலும் சைதன்ய சக்தியான ஒளியும் விவேக ஞானமும் உண்டாகிறதோ, அப்போது சத்துவகுணம் மேலோங்கியுள்ளது என்று அறிந்து கொள்ளவேண்டும்.

கண்கள், காதுகள், வாய், மூக்கு, மெய் (உடல்) ஆகிய ஐம்புலன்களே, பொறிவாயில் எனப்படுகிறது. குண வேறுபாட்டுக்கு ஏற்ப, ஆத்மப் பிரகாசம், புலன்களின் வழியாக ஒளிர்கின்ன்றது. சத்துவ குணம்( சாத்வீகம்) ஓங்கும் பொழுது, ஆத்மப் பிரகாசம் நன்கு மிளிர்கிறது. சாத்வீகம் மேலோங்கினால் பார்ப்பதில், கேட்பதில் என ஒவ்வொரு புலனையும் கையாளுவதிலும் அழகும், தெளிவும், புலப்படுகிறது. எனவே அர்ஜுனா! சாத்வீகம் மேலோங்கினால், ஆத்மாவின் ஒளி நன்கு வெளிப்படும்; ஞானத் தெளிவு ஏற்படும்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 12: அர்ஜுனா! ரஜோகுணம் அதிகமாகும்போது பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடங்குதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் –இவை யாவும் உண்டாகின்றன.

பிறர் பொருள்களை எல்லாம் தன்னுடையவையாக்கிக் கொள்ள விரும்புதல், பேராசையாகிறது. புலன்களின் வாயிலாக வெளியுலக விவகாரங்களில் முனைப்புக் காட்டுதல், “பிரவிருத்தி” எனப்படுகிறது. அப்படிச் செய்வதால் புதிய, புதிய செயல்களைத் (கர்மங்களை) தொடங்குவதில் ஊக்கம் உண்டாகிறது.


அவ்வாறு தொடங்கிய செயல்கள் வெற்றியடையும் பொழுது, மகிழ்வும்; தோல்வியடையும் பொழுது மனச்சோர்வும் உண்டாகி, அமைதியின்மையை வருவித்து விடுகிறது. நம் செயல்களை சீர்படுத்த விருப்பம் ஏற்படுவதால், வினை வேட்கை அல்லது தொழில் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவையாவுமே ரஜோ குணத்தின் அறிகுறிகளாகும்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**
*உதவி*:
பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA”;
சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை;


Leave a comment