பகவத்கீதை 13ஆம் அத்தியாயம் என்னதான் சொல்கிறது

*ஞானத்தேடல் பதிவு எண்: 074 நாள்: 05.11 2022*

*13ஆம் அத்தியாயத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சி*

கடந்த நான்கு மாதங்களாக ஸ்ரீமத்பகவத்கீதை என்னும் உலகம் போற்றும் நூலை வாசித்து வருகிறேன். இதுவரை 13 அத்தியாயங்களைத் தொட்டிருக்கிறேன்.

ஆரம்ப அத்தியாயங்களில் ஆத்மா, நாம், இறைவன் பற்றிய வர்ணனை மிகவும் சிந்திக்க வைத்த பகுதி. பின்னர் பல அத்தியாயங்களில் ஆழ்ந்து சிந்தித்துப் பொருள் கொள்வது தேவைப்பட்டது. எனினும் இந்த 13ஆம் அத்தியாகம் எனக்கு மிகவும் மலைப்பாகி விட்டது.

தொடக்கம் முதல் ஒரு படிப்படியான பாடத் திட்டம் போல் இருக்கும் இந்த நூல், பிற்பகுதிகள் வரும்போது பலமுறை படிக்கவும், ஆழ்ந்து சிந்திக்கவும் உள்ள தேவையை அபரிமிதமாக ஆக்குகின்றன. அந்த அளவுக்கு உயர் உண்மைகள் கூறப்படுகின்றன. நிறைய புதியவையும் முற்றிலும் புதிய பார்வையும் தேவைப்படும் பகுதிகள் பின்னால்தான் வருகின்றன.

இதுகாறும் புரிந்து கொண்டு இருப்பதாகக் கருதும் பல விஷயங்கள் குறித்த நம் கருத்துக்கள் இந்த அத்தியாயத்தில் பெறும் மாற்றங்கள் இன்னும் இன்னும் ஆழ்ந்த சிந்தனையைத் தேடுகின்றன.

ஒவ்வொரு சுலோகமாகப் படித்து விட்டுக் செல்லும்போது மிகத் தெளிவாகவே உள்ளது. ஆனால் இந்த அத்தியாயத்தில் உள்ள 34 சுலோகங்களையும் இப்படித் தெளிவாகக் கடந்து முடித்தவுடன் ஏதோ ஒரு விஷயம் அல்லது ஒரு கண்ணோட்டம் விட்டுப்போனதென்று உணர்கிறேன்.  Missing the woods for the trees. ஆம் இதுபோன்ற ஒரு உணர்ச்சி.

நம் கர்ம பலன்களைப் பெற்று, பாடம் கற்றுக் கொண்டு, கர்ம வினையின் தாக்கத்தைக் குறைத்து, நம் ஆத்மாவின் மும்மலங்களை நீக்கி, நமக்குள் உள்ள ஆத்மாவின் இயல்பை உணர்ந்து அதை இன்னும் பல மேன்மை தாங்கிய பணிகளுக்காகத் தயார் செய்வதற்காக பூமியில் வந்து பிறக்கிறோம். நம் ஆத்மாவுக்கு இந்த உடலே க்ஷேத்ரம். (NGS)

நாம் ஆத்மா, உடல் நமக்கு ஒரு கருவிதான் என்று உணர்ந்து உடல் செய்பவைகளை உணர்வதாலும், அதைக் கட்டுப்படுத்தி இயக்கும் சக்தி நமக்கு இருப்பதாலும், நாம் அதாவது ஆத்மாதான் க்ஷேத்ரக்ஞன். (NGS)

நம் ஆத்மாவும் அவர்தான் என்று சொல்கிறார். நாம் ஜீவாத்மா, அவர் பரமாத்மா.

ஜீவாத்மாவுக்கு எப்படி ஜீவனின் உடல் களமோ, அப்படியே பிரபஞ்சம் முழுவதும் சேர்ந்து இறைவனின் களம். அதாவது உடல்.

இயற்கை என்னும் பிரகிருதியை இங்கு சொல்கிறார். இது மாயை என்றும் அத்வைதவாதிகளால் சொல்லப்படும்.

இந்த பிரகிருதியின் தொடர்பால் இயற்கையில் இருக்கும் வேறுபாடுகளைத் தன்னுடையதாக ஒருவன் காணும்போது அவன் ஜீவாத்மாவாக ஆகிவிடுகிறான்.


உலகின் தொடர்புடையது க்ஷேத்ரம், அதாவது, உடல்.

இறைவனான பரமாத்மாவுடன் தொடர்பு உடையது ஜீவாத்மா.

உடலின் மாறுபாடுகளான 24 விஷயங்கள் சொல்கிறார். இவை அனைத்தும் உடலைச் சார்ந்தவை.

*பஞ்சபூதங்கள் -5*  நிலம், நீர், நெருப்பு, வளி, காற்று
*அகங்காரம்-1*       தான் என்பது
*புத்தி-1*                    அறிவு
*ஆதி இயற்கை-1*  உலகையும் நம்மையும் உருவாக்கும் மூலப்பொருள்

*புலன்-10*  வாய், கை, கால், ஜனன இந்திரியம், ஆசனவாய், காது, தோல், நாக்கு, மூக்கு, கண்           

*மனம்-1*  சிந்திப்பது
*புலனின் நாட்டம்-5* சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம்

இன்னும் சிலவற்றைச் சொல்கிறார்.

இச்சை, வெறுப்பு, இன்பம், துக்கம், நம் உடலமைப்பு, உணர்வு, உறுதி, இவற்றையும் க்ஷேத்திரத்தின் பால் ஒதுக்கிகிறார். அதாவது இவையும் உடல் எனப்படும் க்ஷேத்ரத்தின் கூறுகளே என்று சொல்கிறார்.

இவை அனைத்துமே உடல் என்கிறார். மனமும், புத்தியும், அகங்காரமும், இவற்றில் சேர்ப்பது நமக்குப் புதிது. இவை ஆத்மாவுடையது என்று நாம் (நான்) நினைத்து வந்தது இங்கு மிகப்பெரிய மாறுதல் அடைகிறது.

அப்படியெனில் இந்த ஆத்மாவே இவை அனைத்தையும் நிர்வகிக்கும் க்ஷேத்ரக்ஞன் என்றாகிறது. தாமே ஜீவாத்மாவாக இருக்கிறேன் என்று வேறு சொல்லி இருக்கிறார், அப்படி என்றால் நம் ஆத்மாவே பரமாத்மா என்று ஆகிறது.

*தத் த்வம் அஸி* – அதுவாகவே நீ இருக்கிறாய், அதாவது ஜீவாத்மான நீயே பரமாத்மாக ஆகிறாய். இதுவே ஆதிசங்கரர் சொன்ன அத்வைதம், இரண்டு இல்லை, ஒன்றுதான் என்பது.

இதை இப்படி அறிவதே ஞானம் என்றும் சொல்கிறார்.

இது மிகப் பெரிய உண்மை எனில், மனிதர்களாகிய நாம் நம் கைக்கு இந்த உண்மை கைகூடவில்லை என்பதும் உண்மைதானே.

ஏன் அப்படி இருக்கிறது, மாயையின் மீது பழியைப் போட்டு விடலாமா ?

*தத் த்வம் அஸி* என்னும் உண்மை நம் கைகூட நாம் இருக்க வேண்டிய முறைகளையும் பொறுமையாகக் கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இவற்றை நாம் கடைப் பிடித்தால் ஞானம் வந்து விடும். இல்லை என்றால் அந்த ஒளி நிலை அறியாது அஞ்ஞானம் என்ற இருள் விலகாது:

*ஞானத்தை அடைய இருபது சாதனைகள் செய்ய வேண்டும் என பகவான் அருள்கிறார்*:

1 தற்பெருமையின்மை

2 தன்னிடமில்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை

3 எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்

4 சுக-சுக்கங்களை பொறுத்துக் கொள்ளுதல்

5 மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை

6 நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பெரியோர்களுக்குப் சேவை செய்தல்

7 உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்

8 உள்ளத்தின் உறுதி

9 மனம் மற்றும் ஐம்புலன்களோடு கூடிய உடலை கட்டுப்படுத்துதல்

10 இவ்வுலக இன்பங்களில் பற்று அற்ற தன்மை

11 அகங்காரம் இல்லாமை

12 பிறப்பு – இறப்பு, மூப்பு, நோய் இவைகளை சிந்தித்தல்

13 மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை)

14 வேண்டியன – வேண்டாதனவாற்றை அடையும் போதும் எப்போதும் சமபாவனையுடன் இருத்தல்

15 யோகத்தின் மூலம் பிறழாத பக்தி

16 தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு

17 உலகியலில் ஈடுபாடு கொண்டவர்களிடம் விலகி இருத்தல்

18 அத்யாத்ம ஞானத்தில் என்றும் நிலைத்து நிற்றல்

19 தத்துவஞானப் பொருளான பரமாத்மாவையே தியானம் செய்தலே ஞானம் என்றும்

20 எது அதனில் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் எனும் அறியாமை என்று தெரிந்து கொள்வதே ஞானத்தை அடையும் வழிகளாகும்.

மேலேசொல்லி இருப்பது என் சிந்தனைக்குத் தோன்றுவது. இப்பதிவை வாசிப்பவர்கள் அவர்களது கருத்தைத் தெரிவித்தால் இன்னும் தெளிவாகும். அந்த வேண்டுகோளுடன்,


ந. கணபதி சுப்ரமணியன். 05.11.2022

Leave a comment