பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் – குணத்ரய விபாக யோகம் – 3


*ஞானத்தேடல் பதிவு எண்: 077 நாள்: 16.11 2022*

*பகவத்கீதை – பதினான்காம் அத்தியாயம் குணத்ரய விபாக யோகம் – 3*

சுலோகம் 13: அர்ஜுனா! தமோ குணம் அதிகமாகும்போது அந்தக்கரணங்களிலும் புலன்களிலும் ஒளியின்மையும், செய்யவேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மையும், அசட்டைத்தனம் அதாவது வீண்செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்கரணங்களின் மயக்கமும் ஆகிய இவை அனைத்தும் உண்டாகின்றன.

தமோ குணத்தின் ஆதிக்கத்தால் மனத்தில் இருள் சூழ்கிறது; அதனால் விவேகம் மறந்துபட்டுப் போகிறது. ஒரு செயலையும் செய்யாது, சோம்பித் திரியும், தன்மை தலையெடுக்கிறது. கவனமின்மையே வடிவாக மனிதன் மாறிவிடுவதால், அவன் தவறு செய்வதற்கும் இடம் ஏற்படுகிறது. இதனால் மதிமயக்கம் அல்லது குழப்பமான அறிவும், முயற்சியின்மையும், இவ்வாறான தமோகுணத்தால்( சோம்பலான, மந்தமான மனநிலை) உண்டாகின்றன! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 14: எப்பொழுது இந்த மனிதன் சத்துவகுணம் பெருகி உள்ளபொழுது இறப்பை அடைகிறானோ, அப்பொழுதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலகங்களை அடைகிறான்.

ஒரு மனிதன் உடலை விடும்பொழுது உள்ளத்தில் என்ன எண்ணம் நிலைத்திருக்கிறதோ, அதற்கேற்ப மறுபிறப்பு அமைகிறது. சத்துவகுணம் (சாத்வீகம்) ஓங்கியிருக்கும் பொழுது தெய்வீகச் சிந்தனையில் இருப்பது உறுதி. பிரம்மலோகம் முதலிய இடங்களில் சத்துவ குணமே நிறைந்திருப்பதால், சாத்வீக மனநிலையில் உயிரை விடும் மனிதன், பிரம்மலோகத்தை அடைகிறான். உத்தமர்கள், உத்தமமான மனநிலையில் உயிர்நீத்தால், ஞானவான்களின் நல்லுலகங்களை அடைவார்கள்! என்கிறார் கிருஷ்ணர். அப்படிப்பட்ட உத்தமர்கள் யாரென்றால் அவர்கள், பிரம்மாவையும், பிரபஞ்ச மூர்த்திகளையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அவர்களது ஞானம் இன்னும் பரப்பிரம்மத்தை அறியும்படியாக இல்லை.

சுலோகம் 15: ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து, கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான். அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும்போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான.

முன்பு கூறிய சத்துவ குணத்தில் மரணம் அடைபவன், முழு அறிவோடு, அமைதியாகச் சாகிறான்; ரஜோ குணத்தில் மரணம் அடைபவன், பதைபதைப்போடும், பேராவலோடும், துன்பத்தோடும் உயிரை விடுகிறான்; அப்படிப்பட்டவன், இடைவிடாது கர்மம்(வினை) செய்யும மனநிலையுடையவனாகப் பிறக்கிறான்.


தமோ குணத்தில்(சோம்பலான, மந்தமான மனநிலையில்) உயிரை விடுபவன், ஜடநிலையில் மரணமடைகிறான். அப்படிப்பட்டவன், மிருகக் குணத்துடனோ, அறிவிலியாகவோ அல்லது மிருகமாகவோ பிறக்கிறான். *தமோ குணத்தில் இருப்பவன், ரஜோ குணத்திற்கு வர முயல வேண்டும்; ரஜோ குணத்தில் இருப்பவன், சத்துவ குணத்திற்கு முன்னேற முயல வேண்டும்.*

ஏனென்றால் சாத்வீக குணமே(சத்துவ) நற்செயல்களைச் செய்யவல்ல, தூய்மையான மனத்தைத் தரும். இதைப்பற்றி விரிவாக அடுத்தச் சுலோகத்தில் ஶ்ரீகிருஷ்ணர் மேலும் விளக்குகிறார்.

சுலோகம் 16: சிறந்த செயலின் பயனோ சாத்விகமானது (அதாவது, சுகம், ஞானம், வைராக்கியம் முதலியன கொண்டது); தூய்மையானது என்று சொல்கிறார்கள். ராஜஸமான செயலின் பயன் துயரமானது. தாமஸச் செயலின் பயன் அறியாமை என்று சொல்கிறார்கள்.

சோம்பலான மனநிலையுடைய மனிதனால் கேடுகளே விளைகின்றன. தமோ குணத்திலிருந்து தொழிலின்மையும், தீவினையும் தோன்றுகின்றன. அதனால் மனிதனுக்கு முன்னேற்றமில்லை. ஆழ்ந்து செயலில் ஈடுபடும்பொழுது (ரஜோ குணத்தால்) அது, துன்பத்தையே விளைவிக்கும். ஆனால் அத்துன்பமும் தேவையானதே. ஏனென்றால் துன்பப்படுபவனே, தன்னைத் திருத்தியமைத்துக் கொள்கிறான். மனிதனுடைய முன்னேற்றத்திற்குத் துன்பம் பயன்படுவதைப் போல, வேறு எதுவும் பயன்படுவதில்லை.
துயரத்தால் தன்னைத் தூயவனாக்குகின்றவன் நற்செயலைச் செய்ய முனைகின்றான். அப்பொழுது தர்மம் அவன் மூலம் நிலைபெறுகிறது. அதனால் அவன் சத்துவ குணம்(சாத்விகம்) அடையப் பெற்று, தூயவனாகிறான்.


எனவே நற்செயல்களைச் செய்ய ஆரம்பித்தால் நமக்குச் சாத்விகமான குணம் தானே வந்தமைகிறது; இதனால் மனநிறைவும், நிம்மதியான வாழ்க்கையும் அமைகிறது. ஆனால் ரஜோ குணமோ துன்பத்தையும், தமோ குணமோ(மந்தமான மனநிலை) அறிவின்மையையும், தீங்கையும் தருகிறது! என்கிறார் பகவான் ஶ்ரீகிருஷ்ணர்.

சுலோகம் 17: சத்துவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோ குணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோ குணத்தில் இருந்து கவனமின்மையும் மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது.

சாத்விகமான இயல்பே ஞானத்திற்கு வழிவகுக்கிறது; ரஜஸ் பேராசையை உண்டாக்குகிறது. தமோ குணமோ, அறிவின்மையையும், கவனமின்மையையும், அறிவின் குழப்பத்தையும் உண்டாக்குகின்றன.

சுலோகம் 18: சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சுவர்க்கம் முதலிய உயர்ந்த லோகங்களுக்குச் செல்கின்றனர். ரஜோ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றார்கள். தூக்கம், சோம்பல், வீண்செயலில் விருப்பம் முதலிய தாழ்ந்த குணங்களில் நிலைபெற்ற தாமஸ குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவியையும் நரகத்தையும் அடைகிறார்கள்.

உயிர்கள் மேலான அல்லது கீழான பிறப்பெடுப்பதற்கும், குணவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சாத்விகம் ஓங்கப்பெற்ற ஒருவன் தெய்வப்பிறப்பும், விவேகமும், வைராக்கியமும் வாய்க்கப் பெற்ற மானிடப் பிறப்பும் எடுக்கிறான். அவைகளின் வாயிலாக அவன் படிப்படியாக பிரம்மத்தை நோக்கி நகருகிறான்.


ஆனால் ரஜோ குணம் நிறைந்துள்ளவன் கர்மங்கள்(செயல்கள்) பல செய்கிறான்! என்றாலும், விவேகமின்மையால். முன்னேறுவதில்லை ; கீழிறங்குவதும் இல்லை. தனக்கு விவேகம் வரும்வரையில் அவன் நெடுங்காலம், வினையாற்றுவதிலேயே கருத்துடையவனாக இருக்கிறான்.


ஆனால் தமோ குணத்தில். ஆழ்ந்தவனோ, படிப்படியாகக் கீழ்மையையே அடைகிறான். எனவே தமோ குணம் மிகவும் கீழான குணம்! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ணர் .

சுலோகம் 19: எப்பொழுது பார்ப்பவன் (சமஷ்டி சேதனனான பரமாத்மாவில் ஒன்றி நிற்கும் சாட்சியான மனிதன்) முக்குணங்களைத் தவிர வேறு ஒருவனைக் கர்த்தா என்று பார்ப்பதில்லையோ, முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான என்னைத் தத்துவரீதியாக அறிகிறானோ, அப்பொழுது அவன் என் ஸ்வரூபத்தை அடைகிறான்.

சத்துவம், ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபம் என்பதால், இக்குணங்களுக்குப் புறம்பாகக் கர்மத்துக்குக் கர்த்தா யாருமில்லை; முக்குணங்களே கர்த்தாக்களாகின்றன. புலன்கள், புலன் விஷயங்கள் எல்லாம் குணத்திலிருந்து உண்டானவைகள்.


கீழான குணத்தைக் கடந்து மேலான குணத்திற்கு வருவதே வாழ்வின் இலட்சியமாகும். பின்பு சத்த சாத்விகக் குணத்தை அடைந்தால் போதுமா? அதற்கு மேல் ஒன்றுமில்லையா என்றால் உண்டு! என்பதே பதில்.


முக்குணங்களையும் கடந்து அப்பால் செல்லுவதே வாழ்வின் குறிக்கோளாகும். முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறது, பரமாத்மா ஆகும். பரமாத்மா எச்செயலுக்கும் கர்த்தா(காரணமானவன்) இல்லை; அது வெறும் சாட்சி மட்டுமே. அப்பரமாத்மாவை அறிகிறவன், பரமாத்மாவிற்கு உரியவன் ஆகிறான்; பரமாத்மாவின் சொரூபமும் அவனுக்குரியது ஆகிறது.


அதாவது முக்குணங்களுக்கு அப்பால் இருப்பது பரமாத்மா. பரமாத்மா என்பது மனிதன் செய்யும் எச்செயலுக்கும் கர்த்தா இல்லை; பரமாத்மா நமது செயல்களுக்கு வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கிறார்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

இராம கிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்: ” மனிதனுடைய இதயத்தில் ஈஸ்வரன் தோற்றமடைவதின் அடையாளங்கள் யாவை? அருணோதயத்தின் போது தோன்றும் பிரகாசம், சூரியனுடைய உதயத்தைத் தெரிவிக்கின்றது. அதைப்போல, ஈஸ்வரனின் உள்ளத்தில் உதயமாவதற்கு முன்னால் சுயநலம் கருதாதத் தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம். ஆகிய குணங்கள் உண்டாகின்றன” .

முக்குணங்களையும் கடந்தவன் இறைவன், நமது செயல்களுக்குக் காரணம் இறைவன் இல்லை, இறைவன் நமது செயல்களுக்கு, வெறும் சாட்சி மட்டுமே! என்பதை அறிபவனும் பிரம்மதோடே இணைந்துவிடுகிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 20: புருஷன், உடல் தோன்றுவதற்குக் காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு, மூப்பு இவற்றிலிருந்தும் , பிற எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டுப் பரமானந்தத்தை அடைகிறான்.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம் : ” சரீரம் தோன்றியிருக்கிறது; அது மறுபடியும். நசிந்துப் போகும் ஆனால் ஆத்மாவிற்கு மட்டும் நாசமே இல்லை. கொட்டைப் பாக்கைப் போல ஆத்மாவும், உடலும் இருக்கின்றன. பாக்கு முற்றி முற்றினால் கொட்டை வேறு, மேல் தோல் வேறாகிவிடும். அதே பாக்கு முற்றாமல் காயாக இருக்கும் பொழுது, அப்படிப் பிரித்தெடுப்பது கடினம். ஈசுவர தரிசனம் உண்டான பிறகு, ஆத்மா வேறு, சரீரம் வேறு என்ற ஞானம் உதிக்கும்”.

முக்குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு, மூப்பு என்ற துயரங்களை எல்லாம் கடந்தவன், ஜீவன் முக்தனாகி, பிரம்மத்தோடு இணைந்து பேரானந்தமாக வாழ்கிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**
*உதவி*:
சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை;

Leave a comment