பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 6


*ஞானத்தேடல் பதிவு எண்: 073 நாள்: 03.11 2022*

*பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 6*

சுலோகம் 25: ஆனால், வேறு சிலர் (அதாவது, மந்த புத்தியுள்ளவர்கள்) இவ்வாறு அறியாமல், தத்துவத்தை அறிந்த பெரியோர்களிடமிருந்து கேட்டு, அதற்கேற்ப உபாசனையும் செய்கிறார்கள். அவ்வாறு கேட்டறிந்த உபதேசத்தையே மேலான கதியாகக் கொண்டவர்களும் மரணரூபமான சம்சாரக் கடலைச் சந்தேகமின்றிக் கடக்கிறார்கள்.

பக்தியோகம் மற்ற மூன்று யோகங்களைவிட மிக எளியது. சாஸ்திர ஞானமும், விவேகமும் இதற்கு ஏராளமாகத் தேவையில்லை. தூய பக்தியும், வைராக்கியமும், அறிவும் இருந்தால் மிக எளிதாகப் பரமாத்மாவை அடையலாம்.

இதற்கு உதாரணம் கல்லியறிவின்றி, எவ்வித நூல் ஆராய்ச்சி அறிவும் இன்றி, தூய பக்தியால் மட்டுமே மிக எளிதாக கோபிகைகள், கிருஷ்ணரை அடைந்தார்கள்! என்பதேயாகும்.

எனவே விவேகமும், வைராக்கியமும் உடைய மேலோர்க்கு இறைவனை அடைவது! இன்னும் எளிதானதே! உறுதியான, தூய்மையான பக்தி மட்டுமே அதற்குத் தேவை! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 26: அர்ஜுனா! எத்தனை எத்தனை அசைவன, அசையாதன ஆகிய பிராணி வர்க்கம் உண்டாகின்றனவோ, அவையனைத்தும் நீ, க்ஷேத்திரம் (அபராப்பிரகிருதி), க்ஷேத்திரக்ஞன் (பராப்பிரகிருதி) – – இவர்களுடைய சேர்க்கையால் உண்டானதென அறிந்துகொள்.

(க்ஷேத்திரம்= மனித உடல், க்ஷேத்திரக்ஞன்= புருஷன், இறைவன், பரமாத்மா)


சித் ஆகாசம் என்கிற திரையின் மீது முக்குண மயமான க்ஷேத்திரம் ஏற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு க்ஷேத்திர, க்ஷேத்ரக்ஞனுடைய சேர்க்கையால் ஜடமாகிய க்ஷேத்திரம், அறிவுடையதைப் போல தோற்றமளிக்கிறது.

(ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைந்து ஜடமான உடல், அறிவுடையதைப் போல தோன்றுகிறது.)

உண்மையில் அறியும் தன்மை ஆத்மாவினுடையது. பிறவாத, இறவாத ஆத்மாவானது, பிறந்து இறப்பதைப் போல தோற்றமளிக்கிறது. அதாவது ஆத்மா பிறப்பதும் இல்லை; அழிவதும் இல்லை.

க்ஷேத்திரமே (உடல்) தோன்றவும், மறையவும் செய்கிறது.

ஆனால் ஞானமற்ற சாதாரண மனிதனோ, பிறப்பும், இறப்பும் ஆத்மாவுடையது! என நினைக்கிறான். ஆனால் ஆத்மா அழியாதது; அதற்கு பிறப்புமில்லை, அழிவுமில்லை.
உலகம் உண்டாவது, நிலைபெறுவது, மறைவது என்பதெல்லாம் இப்படிப்பட்டதே! என ஞானி அறிகிறான். எனவே பிறப்பு, இறப்பு என்பதைப் பற்றிய குழப்பமோ, வருத்தமோ அவனுகில்லை.

இவ்வாறு க்ஷேத்திர, க்ஷேத்திரக்ஞனைப் பாகுபடுத்தி உள்ளபடி அறிவதே ஞானம்! எனப்படுகிறது அர்ஜுனா! என்கிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

அதாவது பரமாத்மா, ஜீவாத்மா பற்றிய அறிவு ஞானிக்கு இருப்பதால், மரணத்தை நினைத்து அவன் கலங்கமாட்டான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 27: எந்த மனிதன் அழியக்கூடிய சராசரங்களான அனைத்திலும் பரமேசுவரனான பகவானை அழியாதவராகவும் , (மேலும்) எங்கும் சமமாக இருப்பவராகவும் பார்க்கிறானோ, அவனே உண்மையில் பார்க்கிறவன் ஆவான்.

சித் ஆகாசம் என்னும் திரையின் மீது பிரபஞ்சம் என்னும் படம் உண்டாகி, அழிந்துக்கொண்டிருக்கிறது.

*ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்*: “சூரியன் உலகம் முழுவதிலும் சமமாகப பிரகாசித்து, வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்களுக்குத் தெரியாதவாறு மறைத்து வைக்கிறது. அவ்வாறு மாயையாகிய திரையும் எங்கும் நிறைபொருளை_ கடவுளை, நம் கண்களுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு, எல்லாம் சச்சிதானந்த வடிவாகத் தோன்றும்”. _இராமகிருஷ்ண பரம ஹம்சர்.

எல்லா  உயிர்களிலும்,  உயிரற்றவைகளிலும்  நீக்கமற  நிறைந்திருப்பவரே  பரமாத்மா, அவரே  பரமேசுவரன்  ஆகிறார். இவ்வாறு அனைத்திலும்  யார்   இறைவனைக்  காண்கிறானோ,  அவனே  பரமேசுவரரை,   உள்ளபடியே  காண்கிறான்.  அதாவது  எல்லாவற்றிலும்  நீக்கமற  நானே  நிறைந்திருக்கிறேன்!  என்கிறார்  ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 28: ஏனெனில், எந்த ஒருவன் அனைத்திலும் சமமாக நிலைபெற்றிருக்கும் பகவானைச் சமமாகவே பார்த்துக் கொண்டு, தன்னைத் தன்னாலேயே அழித்துக் கொள்வதில்லையோ, அதனால் அவன் பரமகதியை அடைகிறான்.

மனிதன் செய்கிற எல்லா கேடுகளுக்கும் காரணமாக இருப்பது அறிவீனமே. கேடுகளில் எல்லாம் பெரிய கேடு தானே எல்லாமும், என நினைத்துக் கொள்வது. சரீரத்தைத் தான் என நினைப்பவன், பல பிறவிகளை எடுக்கிறான். ஒவ்வொரு தடவையும் தன் உடற்கூற்றை அழித்துக் கொண்டு புதிய பிறவியெடுக்கிறான்.

அழியாத ஆத்மா அறிவீனத்தால் பல தடவை அழிக்கப்பட்டது போன்று ஆகிறது. மற்ற உயிர்களை மனிதன், தனக்கு வேறானவைகளாக நினைப்பதால் அவைகளுக்குத் தீங்குச் செய்கிறான்; இது அறிவின் மயக்கத்தாலே ஆகும்.

பிரம்ம ஞானி பிரம்மத்திற்கு மாறுபட்டு எதையும் காண்பதில்லை. அவனுக்கு உலகமெல்லாம் ஒரே பிரம்ம சொரூபமாக காட்சிக் கொடுக்கிறது. அனைத்துயிரிலும் இறைவனையே காணும் ஞானி அந்தப் பிரமத்தோடே இணைகிறான். அதுவே அவன் அடைகிற பரகதியாகும்! என ஶ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்குப் போதித்தார்.

சுலோகம் 29: மேலும், எந்த மனிதன் எல்லாக் கர்மங்களும் எல்லாவிதங்களிலும் பிரகிருதியினாலேயே செய்யப் படுவனவென்றும், மேலும் ஆத்மாவைக் கர்த்தா அல்லன் என்றும் பார்க்கிறானோ, அவனே உண்மையைப் பார்க்கிறவன் ஆவான்.

பிரம்மத்தின் சந்நிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் செயல்கள் வேண்டியவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிரகிருதியான உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் பூரண நிலை சிறிதும் கலைந்துவிடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான். கர்மங்கள் எல்லாம் பிரகிருதியினாலே (உடல்) செய்யப்படுகின்றன. ஆத்மாவிற்கு அதில் எப்பங்கும் இல்லை! என்பதைச் சரிவரத் தெரிந்துக் கொள்பவனே, அனைத்தையும் அறிந்த ஞானியாவான்.

க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞனுக்கு இடையேயுள்ள தொடர்பு அடுத்தச் சுலோகத்தில் இன்னும் நன்கு விளக்கிக் கூறுகிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

சுலோகம் 30: எப்பொழுது இந்த மனிதன் சராசரங்கள் அனைத்தினுடைய தனித்தன்மையும் பரமாத்மா ஒருவரிடமே நிலைபெற்றிருப்பதாகவும், அந்த பரமாத்மாவிடம் இருந்தே சகல சராசரங்களும் விரிவடைந்தவனவாகவும் காண்கிறானோ, அப்பொழுதே ஸத் சித் ஆனந்தமயனான பரமாத்மாவை அடைகிறான்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்: இயங்காப் பரப்பிரம்மமும், இயங்கும் சக்தியும் உண்மையில். ஒன்றேயாகும். அகண்ட சச்சிதானந்த சொரூபி எவனோ, அவனே சர்வசக்தி, சர்வ ஞானம், சர்வானந்தம் இவைகளையுடைய ஜகன்மாதாவாகவும் ஆகிறான். நெருப்பும், வெப்பமும் ஒன்றானவை. அக்னியின்றி உஷ்ணத்தையும், உஷ்ணமின்றி அக்னியையும் சிந்திக்க இயலாது.

 எல்லாம் பரப்பிரமத்திலிருந்து உண்டானவையே!  என அறிகிறவன்,  ஞானியாகிறான். அவ்வாறானவன்,  பரப்பிரமத்தைச்   சேர்ந்து அவனும்  பிரம்மமாகிறான்!  என  அர்ஜுனனுக்குக்  கூறுகிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 31: அர்ஜுனா! அனாதியானபடியாலும் நிர்குணமானபடியினாலும் இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்த போதிலும், உண்மையில் ஒன்றும் செய்வதில்லை; எதிலும் ஒட்டுவதுமில்லை.

மாயா காரியங்கள் தோற்றுவிக்கப்பட்டவை என்பதால் அவைகளுக்குத் தொடக்கமுண்டு. பரப்பிரம்மம் தோற்றுவிக்கப்பட்டதல்ல; எனவே அது ஆதியில்லாதது (தொடக்கமில்லாதது).

மாயா செயல்கள் குணம் தொடர்பானவை. எதற்குக் குணம் மாறுபாடு அடைகிறதோ, அது அழிவடைகிறது. நிறை பொருளோ அசையாதது, ஆகையால். அதனிடத்தில் செயல்கள்(கடமைகள்) கிடையாது. அசையாத ஒன்று, வினையாற்றாத ஒன்று(கர்மம் செய்யாத) எதையும் போய் பற்றுவதில்லை.

பிரம்மம் உடலில் இருந்தாலும், உடலுக்கு ஏற்படும் அழிவு பிரம்மத்திற்கு உரியதல்ல. உடல் செய்கிற வேலை பிரம்மத்திற்கு உரியதன்று. கடலின் மேற்பரப்பு அலை மோதி அசைந்தாலும், உட்புறமானது சலனமற்று இருக்கிறது. பிரம்மத்தின் நிலையும் அத்தன்மையதே.

பிரம்மமானது தொடக்கமும், இறுதியும் இல்லாதது, அதற்குக் குணங்களும் இல்லை! கர்மங்களும் இல்லை! என அர்ஜுனனுக்கு உணர்த்துகிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 32: எவ்வாறு எங்கும் நிறைந்த ஆகாயம் நுண்ணியதாக இருப்பதால் எங்கும் ஒட்டுவதில்லையோ, அவ்வாறே இவ்வுடலில் எங்கும் நிலைபெற்றிருக்கும் ஆத்மா நிர்குணமாக இருப்பதால் உடலின் குணங்களில் ஒட்டுவதில்லை.

ஜலமானது உறைந்தப் பனிக்கட்டியாக, இளகிய நீராக, நுண்ணிய ஆவியாக மூன்று நிலைகளில் இருக்கிறது. நுண்ணிய நிலையில் அதை அழகுபடுத்த முடியாது பஞ்சபூதங்களில் ஆகாயம் மிகவும் நுண்ணியது . ஆகையால் அதை மற்றவைகள் அழுக்காக்குவதில்லை.

இனி ஆத்மாவை விட நுண்ணியது ஒன்றும் இல்லை. ஆதலால் அது எதனாலும் தோய்வுறாது இருக்கிறது. ஆகாயம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பூமி முதலியவைகளில் உள்ள வடிவங்கள் ஆகாயத்தை பிளவுபடுத்துவதில்லை. எண்ணிறந்த உடலில் பிளவுபடாது நிறைந்துள்ள பரமாத்மா எதிலும் பிளவுபடாது, தோய்வுறாது இருக்கிறது.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்:
“ஞானம், அஞ்ஞானம், நன்மை, தீமை, தர்மம், அதர்மம் இப்படிப்பட்ட இருமைகளுக்கு அப்பாலும், மேற்பட்டும் பிரம்மம் இருக்கிறது.”

எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் நுட்பமாக இருப்பதால் எப்படி களங்கம் அடைவதில்லையோ, அப்படியே தேகம் எங்கும் நிறைந்துள்ள ஆத்மா களங்கம் அடைவதில்லை என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 33: அர்ஜுனா! சூரியன் ஒருவனே, இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் எப்படிப் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே க்ஷேத்திரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறான்.

சுலோகம் 34: இவ்விதம் க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்—இவற்றின் வேறுபாட்டையும், பிரகிருதி, பிரகிருதியினுடைய செயல்கள் – இவற்றில் இருந்து விடுபடுவதையும், எவர்கள் ஞானக் கண்களால் தத்துவரீதியாக அறிகிறார்களோ, அந்த மகாத்மாக்கள் பரப்பிரம்ம பரமாத்மாவை அடைகிறார்கள்.”

நோயையும் நோயாளியை நன்கு அறிகின்ற அளவு. மருத்துவனால் நோயாளியை குணப்படுத்த வல்லவனாகிறான். அவ்வாறே புருஷன், பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடியே அறிதல் வேண்டும். எது புருஷன், எது பிரகிருதி என்று பாகுப்படுத்துவதும் அவசியமானது.

இதற்கெல்லாம் மேலாக ஞான வாழ்க்கையின் வாயிலாக ஞானக்கண்ணை பெறுதல் மிக முக்கியமானது. வெறும் சாஸ்திர ஞானம் போதாது! ஞானக்கண் திறக்கப் படும்போது ஜீவன்கள், பிரகிருதியில் கட்டுண்டு கிடைப்பதெல்லாம் வெறும் அஞ்ஞானத்தால் அறியாமையினால்) என்பது தெரியவரும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்:
“உலகம் மாயை என்று சொல்வது எளிது. ஆனால் அதன் பொருள் இன்னதென்று உனக்கு தெரியுமா? அது மிகுதி ஒன்றையும் வைக்காத கற்பூரத்தை எரிப்பதைப் போலாகும். அது சாம்பலை மிகுதியாகும் விறகுக் கட்டைகளை கொளுத்துவது போன்றது அல்ல. ஞானவிசாரணை முடியும் நிலையில் உயர்ந்த சமாதி நிலை கிட்டும். அப்பொழுது நான், நீ, உலகம் என்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இராது”.

இவ்வாறு க்ஷேத்திர  க்ஷேத்ரக்ஞனுக்கு இடையிலுள்ள வேற்றுமையையும்,  உயிர்கள் பிரகிருதியிலிருந்து விடுதலையடைவதையும் ஞானக்கண்ணால் காண்போர் பிரம்மத்தை அடைகின்றனர்!  என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஞானத்தை அர்ஜுனனுக்குப் போதித்தார்.

***

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**
*உதவி*: சுவாமி சித்பவானந்தர் உரை*


இப்பதிவுடன் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் அத்தியாயம் நிறைவுறுகிறது.

Leave a comment