பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 3


*ஞானத்தேடல் பதிவு எண்: 070 நாள்: 03.11 2022*

*பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 3*

சுலோகம் 7: தற்பெருமையின்மை; தன்னிடம் இல்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை; எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்; பொறுத்துக் கொள்ளுதல்; மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை;  சிரத்தையுடனும் பக்தியுடனும் பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்; உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்; உள்ளத்தின் உறுதி; மனம்-புலன்களோடு கூடிய உடலைக் கட்டுப்படுத்துதல் –

சுலோகம் 8: இவ்வுலக பரலோக போகங்கள் அனைத்திலும் பற்றற்ற தன்மை; மேலும், அகங்காரம் இல்லாமை; பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் – இவற்றில் உள்ள துக்கத்தையும் குறைபாடுகளையும் திரும்பத் திரும்பச் சிந்தித்துப் பார்த்தல் –

சுலோகம் 9: மனைவி,மக்கள், வீடு, செல்வம் – இவற்றில் பற்றின்மை; தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை); அவ்வாறே வேண்டியன – வேண்டாதனவற்றை அடையும்போதும் எப்போதுமே உள்ளம் ஒரே மாதிரியாக இருத்தல், அதாவது சமபாவனையில் இருத்தல் –

சுலோகம் 10: பரமேசுவரனான என்னிடத்தில் வேறு எதையும் எண்ணாத யோகத்தின் மூலம் பிறழாத பக்தி; தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு; உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதர்களுடைய கூட்டத்தில் விருப்பம் கொள்ளாதிருத்தல் –

சுலோகம் 11: அத்யாத்ம ஞானத்தில் எப்பொழுதும் நிலைத்து நிற்றல்; தத்துவ ஞானத்தின் பொருளான பரமாத்மாவையே தரிசனம் செய்தல் – இவையெல்லாம் ஞானம் என்றும், எது அதனிலும் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் என்றும் சொல்லப்பட்டது.

“தற்பெருமையின்மை, தருக்கின்மை, அகிம்சை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம்;

புலனின்ப போகங்களில் விருப்பமின்மை, அகங்காரமின்மை ; பிறப்பு ,இறப்பு, மூப்பு, பிணி, துயரம் ஆகியவைகளின் கேடுகளை நினைவில் கொள்ளுதல்;

“பற்றின்மை; மகன், மனைவி வீட்டைத் தனதென்று பற்று வைக்காதிருத்தல்; வேண்டுவன, வேண்டாதவை நடைபெறும் போதும் மனம் எப்பொழுதும் நடுநிலையில் நிற்பது;

” வேறு எதையும் நினைக்காத யோகத்தால் என்னிடம் மாறாதப் பக்திப் பண்ணுதல், தனியிடத்தை நாடுதல்;

” ஆத்ம ஞானத்தில் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி__ இவை யாவும் ஞானமாகும்; இவற்றிற்கு மாறுபட்டவை அக்ஞானம்”. __ ஶ்ரீகிருஷ்ணர் கூறிய இந்த ஐந்து சுலோகங்களும் ஒன்றோடொன்று தொடர்புடைய கருத்தாக வருகின்றன. 

*இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்கு. காரணமாக இருப்பதால், இம் மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகிறது.*


இவைகளுக்கு எதிரான மனநிலைகளான தற்பெருமை, செருக்கு, பிற உயிரைத் துன்புறுத்துதல், பொறாமை, மனவேறுபாடு, குருவை மதிக்காதிருத்தல், மாசு, தளர்ச்சி, அடங்காமை, ஆசை, அகங்காரம், கேட்டினை அறியாதிருத்தல், பற்று, உற்றவரைச் சார்தல், ஓரவஞ்சனை, காரணத்திற்காக வரும் பக்தி, கேடான சகவாசம், ஆத்மஞானத்தைப் பற்றி அக்கறையற்று இருத்தல்__ ஆகிய இவையாவும் அக்ஞானத்தை வளர்க்கின்றன! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

புலவர் சீனி. கிருஷ்ணஸ்வாமி அவர்கள் உரை: விளக்கம் 7 முதல் 11 சுலோகங்கள் வரையில்

1. *அமாநித்வம்* – தன்னைத்தானே சிறந்தவன் என்றெண்ணுதல்; பிறர் தன்னைப் புகழ வேண்டும் என நினைத்தல், இவை இல்லாதிருத்தல் அமாநித்வமாகும்.

2. *அதம்பித்வம்* – புகழ், பொறுமை, கௌரவம், பிறர் தன்னைப் போற்றுதல், பொருளின் மீது ஆசை ஆகியவை பகவத் பக்தனுக்குத் தேவையற்றவை.

3. *அஹிம்சா* – எவ்வுயிருக்கும் மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ எப்பொழுதும் துன்பம் தராமல் இருப்பது. ‘அஹிம்ஸா பரமோதர்ம:’ இது தர்மங்களுள் உயர்ந்தது. ஒரு ஸாதகன் அஹிம்சையை முழுமையாகக் கடைப்பிடித்தால் அவர் உள்ளத்தில் வெறுப்போ, பகைமையோ இருக்காது. இத்தகைய உயர் குணம் உடையோர் பகவானுக்குப் ப்ரீதிகரமானவராய் இருப்பர்.

4. *க்ஷாந்தி* – பிறர் துயர்தரினும் பொறுத்துக் கொள்ளல், அவனுக்கு தண்டனை அளிக்க விரும்பாமை, பழி தீர்க்கும் எண்ணம் இல்லாமை.

5. *ஆர்ஜவம்* – மனம், சொல், மெய்களில் நேரிய நடத்தை என்பது பொருள். இவரிடம் கபடம் இருக்காது; சூழ்ச்சி, சுயநலம் இருக்காது. தூயவர்.

6. *ஆசார்யோபாஸநம்* – நல்லறிவையும், நல்லுபதேசங்களையும் அளிக்கவல்ல ஆசாரியன். ஆசார்ய பக்தி ஒருவனை உயர்த்தும். குருபக்தி உள்ளோன் கடவுளைக் காண்பான்.

7. *ஆத்மநிக்ரஹ*: – ஆத்மா, மனம், புலன்களுடன் கூடியது. இப்புலன்களை ஸாதகன் வயப்படுத்தினால், விருப்பப்படி பக்தியில் ஈடுபட முடியும்.

8. *இந்த்ரியார்தேஷு* – இவ்வுலகிலும், அவ்வுலகிலும் புலன்கள் வழியே அனுபவிக்கக் கூடியவை உள்ளன. மனிதன் அஞ்ஞானத்தினால் அவற்றை ஸுகம் என்று நினைக்கிறான். ஆனால் முடிவில் அவை துக்கமே தரும். அவற்றில் பற்றற்று இருப்பதே வைராக்யம். அதுவே நலமளிக்கும்.

9. *அநஹங்கார*: – மனம், புத்தி, புலன்கள், உடல் இவற்றில் ‘நான்’ என்ற எண்ணம் வரக்கூடாது. தேகப் பற்றற்றிருப்பதே அநஹங்காரம் ஆகும்.

10.* உலகியலில்* – பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் ஆகிய இவை துக்கோத்பத்திகள். மீண்டும் மீண்டும் இவற்றைப் பற்றி சிந்தித்துணர வேண்டும். யோனியின் வழியே பிறக்கும்போது தாங்கொணாத வேதனையே. மரணகாலத்திலும் துயரமே. புலன்கள் தளர்ந்து, சக்தி இழந்து உடல் தளரும் போது அனுபவிக்கும் துயரம் சகிக்கவொண்ணா. இதிலிருந்து தப்புவதற்கு வழியே இல்லை. எனவே நினைந்து நினைந்து மனந்தெளிந்து, சாந்தியுடன் பகவானையே நினைக்க வேண்டும். (8)

11. *அநபிஷ்வங்க*: – மமகாரமின்மை என்பது பொருள். என்னுடையது என்று நினைத்தல். இவை வாழ்க்கைக்கு உதவா. எப்போதும் விகாரங்கள் இன்றி ஸமசித்தத்துடன் விருப்பு-வெறுப்பின்றி இருக்க அப்யசிக்க வேண்டும். (9)

12. *அநந்யயோகம்* – அனைத்திலும் பகவானே சிறந்தவர் என்றெண்ணுதல். அவரே பரமகதி. உற்றார், பெற்றார், உறவினரை விட, மேலான உதவி புரிபவர், ஆபத்பாந்தவர், அனாத ரக்ஷகர் பகவானே என்றெண்ணி வேறு எவரிடமும் பக்தி கொள்ளாமல், பரம்பொருளினிடத்திலேயே பக்தி பூணுவது அநந்ய பக்தி. இதுவே கபார் சாலச் சிறந்தது. (10)

13. *அத்தியாத்மக்ஞானம்* – ஆத்மாநித்யன் என்றுமுள்ளவன்; சேதனன்; அறிவுமயமானவன்; விகாரமற்றவன்; என்றும் அழியாதவன்; பிற்றால் அழிக்க இடவொண்ணாதவன்; ஜடங்கள் அனைத்தும் அநாத்மா; ஆத்மாவிற்கும் அவற்றிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. சாஸ்த்ரமும் ஆசார்யரும் கூறும் உபதேசத்தினால், ஆத்ம தத்வத்தை நன்கறிந்து கொள்வதே ‘அத்தியாத்ம க்ஞானம்’. இதில் என்றும் உறுதியுடன் நிற்றல் வேண்டும்.

14. *தத்வக்ஞானம்* – ஸச்சிதாநந்த மயமான, பூரணமான, பரப்பிரம்ம பரமாத்மாதான் பரம். இதுதான் தத்வ க்ஞானத்தினால் அடையப் பெறுவது. ஆனந்தமான, குணங்களுக்கு அப்பாற்பட்ட பரமாத்மாவை, எங்கும் சமமாக, என்றும் இடைவிடாமல், த்யானிப்பதே, தத்வ க்ஞானத்தின் பொருளான பரமாத்மாவை தரிசனம் செய்வதாகும். (11)

அமாநித்வம் என்று தொடங்கி, தத்துவ க்ஞான தரிசனம் வரை கூறப்பட்டவை அனைத்தும் ‘ஞானம்’ பெறுவதற்கான ஸாதனங்கள். ஆகவே பகவான் இவற்றை ஞானம் என்று கூறினார்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் நன்கறிந்து, க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞன் ஆகவேண்டும், உண்மை ஸ்வரூபத்தை அறிந்தால்தான் ஞானம் ஆகும். இது அவரவர் ஸாதனை முறை வேறுபாட்டினால் சிறிது மாறலாம். (SK)

சுலோகம் 12: எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ, அதை விளக்கிக் கூறுவேன். அந்த ஆதியில்லாத பரப்பிரம்மம் ‘ஸத்’ என்றும் கூறப்படுவதில்லை; ‘அஸத்’ என்றும் கூறப்படுவதில்லை.

ஒன்பதாவது அத்தியாயமான இராஜ வித்யா இராஜகுஹ்ய யோகத்தில் 19 வது சுலோகத்தில், ‘சாகாமையும், சாவும்; நானே! என்றும், தம்மை உளது ( ஸத்) என்றும், இலதென்றும் (அஸத்) என்றும் பகவான் கூறினார்.

சகுணபிரம்மம் பிரபஞ்ச வடிவமாக இருங்கும்போது எல்லா முரண்பாடுகளும் அவரிடத்தில் ஏற்படுகின்றன.


குணத்தோடு தொடர்புடன் தோன்றியுள்ள காரியப்பிரம்மம் ஸத் எனப்படுகிறது. அதனுடைய தோன்றா நிலை அஸத் எனப்படுகிறது. இத்தகைய விவகாரங்கள் யாவும் நிர்குண பிரம்மத்திடம் கிடையாது ; அது தோன்றியுள்ளது என்றும், தோன்றாதது என்றும் சொல்ல முடியாதது. அது தோற்றம், மறைவு அற்றது. அதனாலேயே அதைப் பரப்பிரம்மம் என்கிறோம். அது தொடக்கமும், முடிவும் அற்றது. மாறுபாடே அதனிடம் இல்லை. அமிர்தம் என்பது அதற்கே முற்றிலும் பொருந்தும்.


பிரம்மத்தை அறிபவனும் பிரம்மமாகிறான். ஆகையால் சாகாத்தன்மை பிரம்மஞானியுடையதாகிறது.


“பிரம்மநிர்வாணம்” என்ற “முக்தி” நிலையும் அதுவே; அது மனம், வாழ்க்கை என்பதை எல்லாம் கடந்த நிலை! எனப் பிரம்மத்தைப் பற்றியும் பிரம்மஞானியைப் பற்றியும் கூறுகிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 13: அது எங்கும் கைகால்களை உடையது. எங்கும் கண்-தலை-முகங்களோடு கூடியது. எங்கும் காதுகளை உடையது. ஏனெனில், அது உலகில் அனைத்தையும் வியாபித்து நிற்கிறது.

நிர்குண பிரம்மம் என்றால், புழு, பூச்சியிலிருந்து மனிதன் வரை அனைத்து உயிர்களையும் பிரம்மமாகவே காணுதல். இந்நிலை மகா ஞானிகளுக்கே அமையும். இதை நன்கு மனதில் நிறுத்திக் கொண்டு இச்சுலோகத்தைப் படித்தால் தான், அதன் பொருள் நமக்குப் புரியும்.


இங்கே நிர்குண பிரம்மத்தைப் பற்றி கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.


கடலைச் சேரும் நதியானது கடலின் தன்மையைப் பெறுகிறது. அதைப் போல நிர்குண பிரம்மத்தில் ஈடுபடுவதற்கு (லயித்தல்) முன்பு ஞானி, இப்பிரபஞ்சத்திலுள்ள வடிவங்களை எல்லாம் ஈசுவர சொரூபமாகவே பார்க்கிறான். பரம்பொருளே பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளார்! என்பதையே இச்சுலோகம் கூறுகிறது.

இக்கருத்தை வெளிப்படுத்தும் பாரதியாரின் பாடலொன்று:

“காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”.
__மகாகவி பாரதியார்.

மகாகவி   பாரதியாருக்குக் காக்கையின் சிறகுகளின் கரிய நிறம் கிருஷ்ணரின் கரியநிறமாகத் தெரிகிறதாம்.  பார்க்கும் மரங்களெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் பசை நிறமே  தெரிகிறதாம்.  கேட்கும் ஒலிகளெல்லாம்(கொடூர ஒலியோ, இனிய ஒலியோ_அனைத்துமே) ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையாககவே கேட்கிறதாம்.


தீக்குள் விரலை வைத்தால் கூட ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தீண்டும் இன்பமாகவே தோன்றுகிறதாம். அதாவது தீயைத் தொடும்போது ஏற்படும் செந்தழலின் உஷ்ணமும் இறைவனாகவே தெரிகிறதாம் நம் மகாகவி பாரதியாருக்கு.


மகிழ்ச்சியைத் தருவது இறைவன். என்றால், துயரத்தைத் தருவதும் இறைவனே. எங்கும் நிறைந்திருப்பவன் இறைவனே. நம் கண்முன் காணும் அனைத்தும் நாமும் இறைவனே! என்ற உயரிய தத்துவத்தை பாரதியார் இப் பாடலில் கூறியுள்ளார்.

 ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் கீதையின் தத்துவத்தை இப்பாடலில் அருமையாக அமைத்துள்ளார் நம் மகாகவி பாரதியார். (கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.)

சுலோகம் 14: எல்லாப் புலன்நுகர்ப் பொருட்களையும் அறிவது. ஆனால், உண்மையில் எல்லாப் புலன்களும் அற்றது. அப்படியே ஒன்றிலும் பற்றற்றது. ஆனாலும், எல்லாவற்றையும் தாங்குவது, காப்பது. மேலும் குணமற்றதாக இருந்தாலும் குணங்களை அனுபவிப்பது.

12 வது சுலோகத்தின் தொடர்ச்சியாகவே பரப்பிரம்மத்தைப் பற்றி கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு விளக்கிக் கூறி வருகிறார். இதிலும் பரப்பிரம்மத்தைப் பற்றியே கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பல வடிவங்களைக் காண்பதற்குப் பகல் வேளை நமக்கு உதவுகிறது. ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருள்களை தெளிவாகப் புலப்படுத்துகிறது. பல பொருள்களின் விளக்கமாகச் சூரிய பிரகாசம் ஒளிர்கிறது! எனலாம்.


மேலும் சூரிய வெளிச்சம் இவ் வடிவங்களை. உடையதல்ல; அவ்வடிவங்களில் அது பற்றற்று இருக்கிறது.


ஆத்மாவானது புலன்களில் அத்தகைய தொடர்போடு உள்ளது. அதாவது ஆத்மாவிற்கு புலன்களிலோ, புலனின்பங்களிலோ பற்றுதல் இல்லை ; ஆனாலும். அது புலன்களோடுதொடர்புடையதாக இருக்கிறது வெண்திரையானது, அதில் அதில் காட்டப்படும். படங்களைத் தாங்குவதைப்போல, பிரம்மமானது பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும். தாங்குகிறது.


திரைப்படங்களில் வருகின்ற நிறங்களும் உண்மையில் திரையிலுள்ள நிறங்களல்ல. ஆனாலும் அத்தனை நிறங்களையும், திரையானது தாங்கி, உள்ளபடி விளக்குகிறது.

அவ்வாறே குணங்களை எல்லாம் விளக்கவும், இரசிக்கவும் செய்கிறது! அறிவு வடிவமான பிரம்மம்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பகவான்.

குணங்களின் வடிவான இறைவனைத் தவிர்த்து, நிர்குண( குணமற்ற) வடிவான பிரம்மத்தை சிந்திக்க இயலாது. எனவே பரப்பிரம்மத்திற்கு எக்குணமும், எத்தன்மையும் இல்லை; ஆனால் பரப்பிரம்மானது புலன்கள் இல்லாத, ஆனால் புலன்களின் வழியாக அனைத்தையும் தாங்குவது; குணங்கள் இல்லாதது, ஆனால் குணங்களை அனுபவிப்பது! அர்ஜுனா! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**
உதவி: சுவாமி சித்பவானந்தர் உரை; கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன் பாரதியார் பாடல் குறிப்புகள்
; புலவர் சீனி. கிருஷ்ணஸ்வாமி அவர்களின் உரை.

Leave a comment