பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 2


*ஞானத்தேடல் பதிவு எண்: 069 நாள்: 03.11 2022*

*பகவத்கீதை – பதின்மூன்றாம் அத்தியாயம் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் – 2*

இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது.(SK)

இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.(SK)

ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும்.(SK)

அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன. (SK)

*_குறிப்பு: சுலோகம் 1க்கு முன் அர்ஜுனன் பகவான் இத்தகைய கேள்விகளைக் கேட்பதாக அமைந்த சுலோகம் பல பதிப்புக்களில் இல்லை. அப்படி இல்லாத்தால், சில உரைகளில் ஸ்ரீகிருஷ்ணன் தாமாகவே சொல்கிறார் என்று எழுதி இருக்கிறார்கள். எல்லாவற்றையும் தன் நண்பனும் இபோது குருவும் ஆன ஸ்ரீகிருஷ்ணனிடன் தயக்கம் இல்லாமல், திரும்பத் திரும்பக் கூறுவதை நாம் இத்தொடரின் பல இடங்களில் பார்த்தோம். அதனால் அர்ஜுனன் கேள்வி கேட்டு ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதாக கருதுவதே சரியானது._* – *NGS*

*சுலோகம் 1: ஸ்ரீபகவான் கூறினார் – “அர்ஜுனா! இந்த உடல் க்ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. இதை எவன் அறிகிறானோ, அவனை க்ஷேத்திரக்ஞன் என்று தத்துவமறிந்த ஞானிகள் கூறுகிறார்கள்.*

நமது உடலே க்ஷேத்திரம் எனப்படுகிறது; இதில் அவரவரது கர்மபலன்களை அனுபவிக்கின்றனர். எனவே மனிதனுக்குத் தர்ம க்ஷேத்திரமாக அவனது உடல் விளங்குகிறது. அவனள்ளே இருந்து உடலை அறிகிற பொருள் எதுவோ, அதுவே “க்ஷேத்திரக்ஞன்”.

*நாம் க்ஷேத்ரம் என்னும் சொல்லுக்கு உடல் என்றும் க்ஷேத்ரக்ஞன் என்னும் சொல்லுக்கு நம் ஆத்மா என்றும் பொருள் கொள்வோம்.*

நம் கர்ம பலன்களைப் பெற்று, பாடம் கற்றுக் கொண்டு, கர்ம வினையின் தாக்கத்தைக் குறைத்து, நம் ஆத்மாவின் மும்மலங்களை நீக்கி, நமக்குள் உள்ள ஆத்மாவின் இயல்பை உணர்ந்து அதை இன்னும் பல மேன்மை தாங்கிய பணிகளுக்காகத் தயார் செய்வதற்காக பூமியில் வந்து பிறக்கிறோம். நம் ஆத்மாவுக்கு இந்த உடலே க்ஷேத்ரம். (NGS)

நாம் ஆத்மா, உடல் நமக்கு ஒரு கருவிதான் என்று உணர்ந்து உடல் செய்பவைகளை உணர்வதாலும், அதைக் கட்டுப்படுத்தி இயக்கும் சக்தி நமக்கு இருப்பதாலும், நாம் அதாவது ஆத்மாதான் க்ஷேத்ரக்ஞன். (NGS)

*சுலோகம் 2: அர்ஜுனா! நீ , எல்லா க்ஷேத்திரங்களிலும் உள்ள க்ஷேத்திரக்ஞன், அதாவது ஜீவாத்மாவும் நானே என்று தெரிந்துகொள். மேலும் க்ஷேத்திரத்தைப் பற்றியும், க்ஷேத்திரக்ஞனைப் பற்றியும், அதாவது விகாரத்தோடு கூடிய பிரகிருதியையும் புருஷனையும் பற்றிய எது தத்துவரீதியாக அறியக்கூடிய ஞானமோ, அதுதான் ஞானம் என்பது என் கருத்து.*

க்ஷேத்திரம் என்பது பிரகிருதி; (உடல்). க்ஷேத்திரக்ஞன் என்பது புருஷன்( மனிதன்) . பிரகிருதியின் சேர்க்கையால் அதன் கூறுபாடுகளைப் புருஷன் தன்னுடையது, என்று நினைக்கிறபொழுது அவன் ஜீவாத்மாவாகிறான். ஸ்படிகத்தின் பக்கத்தில் வைத்த பூவின் நிறத்தை ஸ்படிகத்தினுடையது! என நாம் நினைப்பதைப் போன்றது அது.

பிரகிருதியின் பேதங்கள் எண்ணற்றவை. எனவே ஜீவாத்மாக்களும் எண்ணற்றவை.
பிரகிருதியை உடையதாக இருந்தும் அதில் கட்டுப்படாது இருக்கும் ஆத்மாவே, ஈசுவரன்.

அவர் ஒருவரே இத்தனை ஜீவன்களிலும், இருக்கிறார்( கண்ணுக்குத் தெரியாதவாறு மறைந்திருக்கிறார்).

அவருக்கு அன்னியமாக இந்த ஜீவன்களும் இல்லை; இவ்வுலகமும் இல்லை. ஆகையால் அவர் எல்லா க்ஷேத்திரங்களுக்கு உள்ளேயும் க்ஷேத்திரக்ஞனாக இருக்கிறார்.

க்ஷேத்திரம் வேறு, க்ஷேத்ரக்ஞன் வேறு என்று அறிவதே  ஞானம் ஆகும். க்ஷேத்ரன் உலகத்துடன் இணந்தது.  க்ஷேத்திரக்ஞன் என்னோடு இணைந்தவன், இதைச் சரியாக உணர்ந்து கொள்வதுதான் ஞானம்.

சுலோகம் 3: அந்த க்ஷேத்திரம் எது? மேலும் எத்தகையது? எந்த விகாரங்களோடு கூடியது ? எதிலிருந்து எது உண்டாயிற்று ? மேலும், அந்த க்ஷேத்திரக்ஞன் யார்? எத்தகைய பெருமை கொண்டவன்? என்ற இவையனைத்தையும் சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.

வேத வேதாந்தங்கள் கூறுவதெல்லாம். இவ்விரண்டு தத்துவங்களையே ஆகும். இவ்விரண்டின் தத்துவங்களை விளக்குவதெல்லாம் கலைகளாகின்றன.

ஈசுவரனார், தன் பிள்ளைகளுக்கு. ஞானப்பழத்தைத் தருவதற்குப் போட்டி வைத்த புராணக் கதை அனைவரும் அறிந்ததே. முருகப்பெருமான் உலகம் யாவையும் அளந்தறிய. விரைந்தோட , விநாயகரோ பரமனையும், அன்னையையுமே சுற்றி வந்து ஞானக்கனியைப் பெற்றுக்கொண்டார்.

இதில் முக்கிய விவரம் என்னவென்றால், கணபதி அறிந்தது க்ஷேத்திரக்ஞன் ஆகிய இறைவனை. முருகன் அறிந்ததோ க்ஷேத்திரம் ஆகிய “பிரபஞ்சம்” முழுவதையும். இவ்விருவரின் ஆராய்ச்சி முழுவதும் இணைந்ததே முழு ஞானமாகிறது. பரமன் அருளிய ஞானம்(ஞானப்பழம்) இதுவே.

கடவுளிடமிருந்து வேறுபட்டதல்ல உலகம். கடவுளோடு இணைந்தே உலகத்தை அறிந்துக் கொள்ளும் போது, அதுவே மெய்ஞானமாகிறது.

அடுத்த சுலோகத்தில் மேலும் இதைப் பற்றி விளக்குகிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 4: இந்த க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுடைய தத்துவம் ரிஷிகளால் பலவாறு கூறப்பட்டு இருக்கிறது. மேலும், பலவிதமான வேதமந்திரங்கள் மூலமாகவும், தனியாகப் பிரித்தும் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே நன்கு தீர்மானிக்கப்பட்ட யுக்திகளோடு கூடிய பிரம்மசூத்திரத்தின் பதங்களாலும் கூறப்பட்டிருக்கிறது.

மெய்ப்பொருளை விளக்குவதற்கு ரிஷிகள் வேதமந்திரங்கள் மூலமாகவும், மற்ற படைப்புகள் மூலமாகவும், பிரம்மசூத்ரம் போன்ற நூல்கள் மூலமாகவும் இவற்றை விரிவாக்க் கூறிச்சென்றுள்ளனர்.

ஞானத்தோடும், கனிவோடும் கூடிய பக்தியே ஒவ்வொருவருக்கும் தேவை. இவ்வாறு க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன் போன்றவற்றை விளக்கும் மெய்ப்பொருளைப் பாமர மக்களுக்கும் புரிய வைப்பதற்காக ரிஷிகள் இயல், இசை போன்றவற்றை பயன்படுத்தி, அனைவருக்கும் விளக்கியிருக்கிறார்கள்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 5: நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும் அகங்காரமும் புத்தியும் மூலப்பிரகிருதியும் பத்துப் புலன்களும் மனமும் புலன்களுடைய நுகர்பொருட்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் –

சுலோகம் 6: அப்படியே விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடற்கட்டு, சைதன்யசக்தி மேலும் உறுதி ஆகிய மாறுபாடுகளுடைய இந்த க்ஷேத்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டது.

இருபத்து நான்கு தன்மைகளைக் கொண்டது க்ஷேத்ரம்.

மேலே கூறிய அனைத்தும் க்ஷேத்திரம் எனப்படுகிறது. அது எவ்வாறு என்பதைக் காண்போம்:


(1) ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண் ஆகிய ஐந்து பூதங்களும். சூட்சுமமாக (கண்களுக்குப் புலப்படாதவாறு) எங்கும் நிறைந்திருக்கிறபடியால், அவைகள் மகாபூதங்கள் எனப்படுகின்றன.

(2) அகங்காரம்: இது மகாபூதங்களுக்குக் காரணமாகிறது. பூதங்கள் மூலமாக எழுகின்ற “இருக்கிறேன்” என்ற உணர்ச்சி அகங்காரம் எனப்படுகிறது.

(3) புத்தி: இது நிச்சய வடிவு அல்லது தீர்மானம் செய்யும் தன்மையது. இது அகங்காரத்திற்குக் காரணமாக உள்ளது.

(4)மூலபிரகிருதி: மூலபிரகிருதி (அவ்யக்தம்). தோன்றா நிலையில் இருப்பதால் இதனிடம் வேறுபாட்டைக் காணமுடியாது. இது புத்திக்குக் காரணமாகும். இவை யாவும் ஈசுவர சக்தி.


“தெய்வீகம் பொருந்திய என் மாயை கடத்தற்கு அரிது” என்று ஏழாவது அத்தியாயம், பதினான்காம் சுலோகத்தில் ஶ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இவைகளைத் தம்முடைய. எட்டுவிதப் பிரகிருதி என்றும் அதே அத்தியாயத்தில். நான்காவது சுலோகத்தில் கூறுகிறார்.

*பத்து_இந்திரியங்கள்(புலன்கள்): கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்த்து பத்தாகின்றன.

*மனம்: மனம் மாறுபடக்கூடியது. எண்ணமும், சந்தேகமும் இதைச் சேர்ந்தவை. மனமானது. பத்து புலன்களுக்கும் பொதுவானது.
_*பத்து புலன்களை உடைய மனத்தின் புறத்தோற்றமாக வந்தவனே இராவணன்.*

*புலன்விஷயங்கள்: சப்தம், ஸ்பரிசம்(தொடு உணர்வு), ரூபம்(வடிவம்),ரச, கந்த_ வடிவங்களாக உள்ள ஐந்து புலன்களின் விஷயங்களாகும்.

இவைகளைத் தொகுத்து 24 தத்துவங்கள் என்பர்.


விருப்பு, வெறுப்பு ஆகியவை ஆத்மாவின் குணங்கள் என்பர். ஆனால் இவைகளை அறிந்து, அதன்மூலமாக க்ஷேத்திரத்தைப் பற்றிய அறிவே வளர்க்கப்படுகிறது. எனவே இவைகளைப் பகவான் *க்ஷேத்திரம் என்கிறார்:

1.இச்சை( விருப்பு): விருப்பம் கொடுக்கும் ஒரு பொருளைத் திரும்பவும் பெற நினைப்பதே இச்சை.

2.துவேஷம் (வெறுப்பு): துன்பம் கொடுக்கும் ஒரு பொருளை அல்லது அதைச் சேரந்த ஒன்றை காணும்போது, அதை விலக்க நினைப்பதே வெறுப்பு.

3.இன்பம்: சுகமானது இன்பமெனப்படுகிறது. இதயத்திற்கு இதமாகத் தோன்றி, அமைதியைத் தந்து சாந்தமான குணத்தை (ஸத்வ குணம்) வளர்ப்பது எதுவோ, அதுவே இன்பம். இது நமக்கு வெளிப்படையாக தெரியுமாதலால், இது க்ஷேத்திரம் எனப்படுகிறது.

4.துக்கம்: அல்லது துன்பம் எதிர்மறையாகத் தோன்றி, நமக்கு அமைதியின்மையை வளர்க்கிறது.

5. உடலமைப்பு: உடலமைப்பு( ஸங்காதம்). உடலையும்,புலன்களையும். ஒன்றாகப் பொருத்தி வைப்மதற்கு ஸங்காதம் என்று பெயர். பல பாகங்கள் ஒன்றாகப் பொருந்திய பிறகு ஒரு யந்திரம் உருவாகிறது. அவ்வாறே வெவ்வேறு அங்கங்கள், அவயங்கள்,புலன்கள் முறையாக அமையப்பெற்று உடல் அல்லது “க்ஷேத்திரம்” உருவாகிறது

6.உணர்வு( சேதனம்): தீயிலிட்ட இரும்பு, தீயின் தன்மையை விளக்குவதைப் போல புலன்கள், ஆத்மாவை உணர்வாக விளக்குகின்றன. புலன்களின் மூலமாக உணர்வு அறியப்படுகிறது. அது உடலைப் பற்றிய புத்தியை வளர்கிறது. ஆகவே அது க்ஷேத்திரம் எனப்படுகிறது.

7.உறுதி (திருதி) : உடலும், புலன்களும் சோர்வடையும் தன்மையுடையவை. அவைகளைத் தளரவிடாமல், பொருத்தமாகத் தாங்கிப் பிடிப்பது எதுவோ, அதுவே உறுதி. இதன் வலிமையால் உடல் வாழ்க்கை நீண்ட காலங்கள் நிலைபெறுகிறது. இதுவும் காணக்கூடிய பொருள் என்பதால் இதுவும் க்ஷேத்திரத்தோடு சேர்க்கப்படுகிறது.

8.விருப்பம் (இச்சை) முதல் உறுதி (திருதி) வரையுள்ள இவையாவும்

*மனதின்_மாறுபாடுகளாகும்.

நமது உடலை “க்ஷேத்திரம்” என முதல் சுலோகத்தில் ஶ்ரீகிருஷ்ணர் கூறியதன் முழு விளக்கமும் இந்த இரண்டு சுலோகக்களில்(4 +5) வந்துள்ளன.

எல்லாமே இறைமயமே ! என அர்ஜுனனுக்கு விளக்க ஆரம்பித்து, “மனித உடலை ஏன் க்ஷேத்திரம் என்கிறேன்” , என்பதன் விளக்கத்தை இதுவரையுள்ள ஆறு சுலோகங்கள் மூலமாக விளக்கியிருக்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.**

உதவி: சுவாமி சித்பவானந்தர் உரை; புலவர் சீனி கிருஷ்ணஸ்வாமி உரை
(SK)

Leave a comment