பகவத்கீதை – பன்னிரண்டாம் அத்தியாயம் – பக்தி யோகம் – 6


*ஞானத்தேடல் பதிவு எண்: 067 நாள்: 02.11 2022*

*பகவத்கீதை – பன்னிரண்டாம் அத்தியாயம் பக்தி யோகம் – 6*

சுலோகம் 15: எவனிடமிருந்து எந்த ஜீவனும் பாதிப்பு அடைவதில்லையோ, எவன் எந்த ஜீவன் மூலமும் பாதிப்படைய மாட்டானோ, மேலும் எவனொருவன் மகிழ்ச்சி, பொறாமை, பயம், பாதிப்பு முதலியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அந்த பக்தன் எனக்குப் பிரியமானவன்.

THAT MAN IS PLEASING TO GOD who, trusting in Him, is tranquil, unaffected by outer events, and able to manifest his attainment of divine unity by feeling affection for all as individual expressions of the Lord. Such a lovable yogi, perceiving God as Bliss, never indulges in sense excitements, frivolous pleasures, selfish jealousies, mundane fears, or material worries.

A worldly man, constantly agitating himself and others by inharmonious vibrations, cannot feel in the temple of creation the presence of blessed Spirit.

Virtue is often subtle and unassuming, a quiet influence and support that gives life stability and a sense of pleasant well-being whose source goes unnoticed, and as such is taken for granted. In startling contrast, evil is usually so brash and its consequences so obnoxious or painful that it defies any attempt to ignore it. Thus did Shakespeare wryly note: “The evil that men do lives after them; the good is oft interred with their bones.”

If we envisage a world filled with the virtues and devoid of the demonic qualities enumerated in the Gita, we have the creation the loving God intended for His incarnate children.

சுவாமி பரமஹம்ச யோகானந்தர் மேலே சொல்வதுபோல உலகம் அன்பினால் நிறைக்கப்பட்டதாக ஆகவேண்டும். அப்போதுதான் அது இறைவனின் மனத்துக்கு உகந்த உலகு ஆகும்.

அன்பு என்னும் எண்ணமே ஒரு மஹாசக்தி. அளவற்ற இன்பம் இறைவனே. அப்படி அன்பு நிரம்பி வழியும் மனத்துள் இறைவன் உகந்து வீற்றிருக்கிறான். அன்பு காட்டுவது என்பதே இறைத் தன்மை காட்டுவதாக ஆகி விடுகிறது.

சுலோகம் 16: எந்த மனிதன், எதையும் எதிர்பார்க்காதவனோ, அகத்தூய்மையும் புறத்தூய்மையும் உள்ளவனோ, பிறவிப்பயனை அறிந்தவனோ, பட்சபாதமற்றவனோ, துக்கங்களிலிருந்து விடுதலை பெற்றவனோ, செயல்கள் அனைத்திலும் நான் செய்கிறேன்என்னும் அபிமானத்தை நீக்கியவனோ, அந்த என் பக்தன் எனக்குப் பிரியமானவன்.

இறைவனிடமிருந்தே எதையும் எதிர்பார்க்காதவனாக தூய்மையான மனமுடையவனாக நடுநிலையாளனாக, துயரமற்றவனாக(இறைவனிடம் தனது வாழ்வை ஒப்படைத்துவிட்டு, இறைவன் நம்மை வழிநடத்துவான்! என மனநிம்மதியோடு இருத்தல்), தனக்கென செயல்படாதவனாக, என்னையே இறுகப் பற்றி பக்திச் செய்பவனே! எனக்கு மிகவும் பிரியமான பக்தன் என்கிறார்! ஶ்ரீகிருஷ்ணா பரமாத்மா.

சுலோகம் 17: எவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, வெறுப்பதில்லையோ, துயரப் படுவதில்லையோ, எதற்கும் ஆசைப்படுவதில்லையோ, எவனொருவன் நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவனோ, அந்த என்னிடம் பக்தியுள்ளவன் எனக்குப் பிரியமானவன்.

சுலோகம் 18: எவன் பகைவனிடமும் நண்பனிடமும், மதிப்பிலும் அவமதிப்பிலும் சமபுத்தி உடையவனோ, அவ்விதமே தட்ப-வெப்பம், சுக-துக்கங்களாகிற இரட்டைகளில் சமபுத்தி உடையவனோ

சுலோகம் 19: இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாக மதிப்பவனோ, பகவானை எப்பொழுதும் சிந்தித்திருப்பவனோ, மேலும் எந்தவிதத்தில் உடலைப் பேணுதல் நடைபெற்றாலும் மகிழ்ச்சி கொள்பவனோ, வசிக்கும் இடத்தில் தனது என்ற பற்றற்றவனோ, நிலைத்த புத்தியுடையவனோ, பக்தியுள்ள அந்த மனிதன் எனக்குப் பிரியமானவன்.

சுலோகம் 20: ஆனால், எவர்கள் என்னிடம் நம்பிக்கையோடு என்னையே மேலான கதியாகக் கொண்டு, மேலே கூறப்பட்ட இந்த தர்மமே உருவான அமுதத்தைப் பயனைக் கருதாது அன்புடன் அனுஷ்டிக்கிறார்களோ, அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

*இந்த இடத்தில் பக்தியோகம் பற்றி ஸ்ரீ அரவிந்தர் விளக்கியுள்ளது நம் மனத்துக்கு இன்னும் தெளிவு கொடுக்கிறது.*

எல்லா யோகமும் மனிதனுடைய மனமும் ஆன்மாவும் இறைவனை நோக்கித் திரும்புவதேயாகும்.

இந்தத் திருப்பம் கொள்ளும் முதல் உணர்ச்சி வடிவம் இறைவனைப் போற்றுதல். சாதாரண மதத்தில் இந்தப் போற்றுதல் புறவழிபாட்டு உருவத்திலிருக்கும்.

அநேகர் விஷயத்தில் இந்தப் புறவழிபாடுதானும் நாளடைவில் இயந்திரத்தன்மை கொண்டதாக, ஓர் இறுகிய சம்பிரதாயமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் தூல மனத்திலேயே வாழ்கிறார்கள், தூல வடிவமில்லாமல் அவர்களால் எதையும் அறிந்து உட்கொள்ள முடியாது.

உடலால் செயல்படாவிடில் வாழ்வதாகவே தெரியாது அவர்களுக்கு தாந்திர சாஸ்திரத்தில் முற்றிலும் அல்லது பிரதான சம்பிரதாயமாக உள்ள வழிபாட்டு முறையை பசுவழி அதாவது விலங்கு வழி அல்லது தூல ஜீவனின் வழி என்று குறிப்பிடுகிறது. இதைப் பக்தி மார்க்கத்தின் முதற்படி என்று கூறுகிறது.

உள்ளத்தில் இறைவனைப் பற்றி ஓர் எண்ணம், அவனைப் பணிய வேண்டுமென்ற விருப்பம், ஓர் ஆன்மீக ஆர்வம் ஏற்பட்டு, அதன் புற அடையாளமாக, அதற்கு உதவியாக, சாதாரண வாழ்வில் சதா உழன்று கொண்டிருக்கும் மனத்தை உள்ளத்திலுள்ள ஆர்வத்திற்கு இழுத்துக் கொண்டு வர ஒரு சாதனமாக புற வழிபாடு அமையும்போதுதான் உண்மையான மதம் தொடங்குகிறது.

*யோகத்தின் நோக்கம்!*

யோகம் என்பது மதத்தை விடவும் பெரியது.

நமது வழிபாடு கடவுளைப் பற்றிய கருத்துக்கு வணக்கம் செலுத்துவதாக மட்டும் இருக்கும்வரை நாம் இன்னும் யோக பாதையில் அடியெடுத்து வைத்தவர்கள் ஆக மாட்டோம்.

யோகத்தின் நோக்கம் இறைவனுடன் ஐக்கியமடைவது. ஆகவே இறைவனுடன் தொடர்பு ஏற்பட வேண்டும், அவனை நெருங்க வேண்டும், அவனை உடைமைப்படுத்த வேண்டும், அவன் உடைமையாக வேண்டும் என்ற தாகம் ஏற்படும்போதே யோகம் தொடங்க முடியும்.

இந்த நிலை உண்டாகும்போது, இறைவனைப் போற்றுதல் என்பது பிரதானமாக அக வழிபாடாகவே இருக்கும்.

அப்பொழுது நாம் நம்மை இறைவனது ஆலயமாக்கவும் நமது சிந்தனைகளையெல்லாம், உணர்ச்சிகளையெல்லாம் ஆர்வங்கொண்ட பிரார்த்தனையாகவும் இறைநாட்டமாகவும், நமது வாழ்வு முழுவதையும் இறைவனுக்குச் செய்யும் புறத் தொண்டாகவும் வழிபாடாகவும் ஆக்கத் தொடங்குவோம்.

இந்த மாற்றம், இந்த ஆன்மப்பான்மை வளரும் போதே பக்தனுடைய மதம் யோகம் ஆகிறது. இறைவனுடன் தொடர்பு அதிகரிக்கிறது, ஐக்கியம் ஏற்படுகிறது.

அப்படியென்றால் அவன் புறவழிபாட்டை விட்டுவிடுவான், விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. புறவழிபாடு இப்பொழுது உள்ளத்திலுள்ள பக்தியின் வெளி அடையாளமாகவே, அது வெளியே பொங்கி வருவதாகவே, ஆன்மாவின் அலை பேச்சாகவும், பொருள் பொதிந்த செய்கையாகவும் புறத்தே வீசுவதாகவே இருக்கும்.

வழிபாடு ஆழ்ந்த பக்தியோகத்தில் ஓர் அம்சமாக வேண்டுமானால் வழிபாட்டுடன் ஜீவனை மென்மேலும் இறைவனுக்கு நிவேதித்தலும் சேர வேண்டும்.

இந்த நிவேதத்தின் ஓரம்சம் தன்னைத் தூய்மை செய்தலாகும். அப்பொழுதுதான் இறைவனுடைய தொடர்பு ஏற்படுவதற்கு, இறைவன் நமது அகக் கோவிலுள் புகுவதற்கு அல்லது இதய ஆலயத்தில் அவன் தன்னை நமக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் தகுதி பெறுவோம்.

இந்தத் தூய்மை செய்தலானது சன்மார்க்க ரீதியாகவோ அல்லது சமயங்களில் கடவுளின் கட்டளைகளாகக் கூறப்படும் விதிகளுக்குக் கீழ்படிந்து நடப்பதாகவோ மட்டும் இருந்தால் பயனில்லை.

கடவுளைப் பற்றிய நமது கருத்துக்கு முரண்பாடாக உள்ள அனைத்தையும் நம்மிடமிருந்து களைந்தெறிவதாக அது இருக்க வேண்டும்.

இந்த முறையினால் நாம் நமது இயற்கைப் பகுதியில் படிப்படியாக இறைவனைப் போலாவோம்.

இறுதியில் சாதர்ஸ்ய முக்தி – சாதர்ம்ய முக்தி என்றும் கூறுவர் – அடைவோம். அதாவது நமது கீழியற்கையினின்றும் விடுதலையடைந்து தெய்வீக இயற்கையைப் பெறுவோம்.

நமது ஜீவன் முழுவதையும் இறைவனுக்குக் கொடுக்கும்போது நிவேதனம் நிறைவு பெறுகிறது. ஜீவன் முழுவதையும் என்னும்போது நமது சிந்தனைகளும் செயல்களும் அதில் அடங்கும்.

இங்கு பக்தியோகம் ஞான, கர்ம யோகங்களின் சாரமான அம்சங்களைத் தனதாக்கிக் கொள்கிறது – தனது போக்கில், தனது பாவனையில் அவற்றை ஏற்றுக் கொள்கிறது.

பக்தன் தனது வாழ்வையும் தனது செயல்களையும் இறைவனுக்கு வேள்வியாக்குகிறான், பக்தி யோகத்தில் அது அன்பு வேள்வியாக ஆகிறது.

அதைத் தூண்டுவது அன்பு. கர்ம வழியில் தனது சங்கற்பத்தை இறைவனுடைய சங்கற்பத்துடன் இணைக்கும் முயற்சியாக அது நடைபெறுகிறது.

பக்தன் தன்னையும், தனது வாழ்வையும், தனக்குள்ளவை அனைத்தையும் தனது செயல்களனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.

இந்தச் சரணாகதி துறவு வடிவம் கொள்ளலாம்.

பக்தன் சாதாரண வாழ்வை விட்டுவிட்டு வாழ்வு முழுவதையும் இறைவனை வழிபடுவதிலும், அவனைத் துதிப்பதிலும், ஆனந்தமாக அவனைத் தியானிப்பதிலும் செலவிடலாம்.

இறைவன் ஒருவனையே தனக்குத் தேவையான ஒரே உடைமையாகக் கருதி தனது செல்வத்தையெல்லாம் தானம் பண்ணிவிட்டுப் பண்டாரமாகலாம்.

இறைவழிபாட்டிற்கான காரியங்கள், இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவும் செயல்கள் இவற்றைத் தவிர வாழ்க்கை சம்பந்தமான பிற எல்லா வேலைகளையும் அவன் விட்டுவிடலாம்.

அதிக பட்சமாக, துறவு வாழ்க்கை என்கிற பத்திரமான கோட்டையினுள்ளிருந்து கொண்டு, சிறப்பாக தெய்வீக இயல்பின் செயல்களாகத் தோன்றும், அன்பின், கருணையின் செயல்களாகத் தோன்றும் மனித சேவைகளை மட்டும் செய்யலாம்.

*ஆனால், பூரண பக்தியோகத்திற்கே உரிய விரிவான சுய நிவேதனமும் உள்ளது. அது முழு வாழ்வையும், உலகம் முழுவதையும் இறைவனுடைய லீலையாகக் கருதி, ஜீவன் முழுவதையும் அவன் கைகளில் ஒப்படைத்துவிடுகிறது. அது தன்னையும், தன் உடைமைகளையும் சக்திகளையும் தனக்குச் சொந்தமெனக் கருதாமல் அவை அவனுடைமையே எனக் கருதி எல்லாச் செயல்களையும், அவனுக்கு அர்ப்பணமாகவே செய்கிறது. இதிலிருந்து அகவாழ்வையும் புற வாழ்வையும் பூரணமாக, செயல்நிலையில் நிவேதித்தல் ஏற்படுகிறது. இதுவே குறைவற்ற ஆத்மார்ப்பணம்.*

இனி சிந்தனைகளை இறைவனுக்கு நிவேதித்தல். தொடக்கத்தில் இது மனத்தை இறைவன் மீது ஊன்றச் செய்யும் முயற்சியாகும். ஏனென்றால் அமைதியற்ற மனித மனம் பலவற்றை எண்ணும், அவற்றில் ஈடுபடும். மேல்நோக்கித் திரும்பினாலும், அடிக்கடி உலக எண்ணங்கள் அதை இழுத்துக் கொண்டு ஓடிவிடும். இந்த நிவேதனத்தின் பயனாக மனம் இறைவனைப் பற்றியே சிந்திக்கும்.

மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமாகவும் இறைவன் தொடர்பாகவுமே சிந்தனைக்கு வரும்.

இந்த நிவேதனத்திற்குப் பெரும்பாலும் ஒரு தூல வடிவத்தின் உதவியைப் பயன்படுத்துவதுண்டு.

அதைவிட நெருக்கமாக இறையனுபவம் தரக்கூடிய ஏதாவது ஒரு மந்திரம் அல்லது திவ்ய நாமத்தைப் பயன்படுத்துவர்.

பக்தி சாஸ்திரம் வகுத்தவர்கள் மனத்தின் மூலம் இறைவனை நாடுவதில் மூன்று கட்டங்களைப்பற்றிப் பேசுகிறார்கள்.

முதலாவது இறைவனது நாமத்தை, அவனுடைய கல்யாண குணங்களை, அவனது லீலைகளைக் கேட்டல். (இதைச் சிரவணம் என்று கூறுவார்கள்).

இரண்டாவது இவ்வாறு கேட்டவைகளைப்பற்றி அல்லது அவனது மூர்த்தத்தைப்பற்றி இடைவிடாது சிந்தித்தல். (இதை மனனம் என்பார்கள்).

மூன்றாவது மனம் இலட்சியத்தின்மீது படிந்து நிற்றல். (இதைப் பிரத்தியாகரம் என்பார்கள்).

மூன்றாவது நிலையின் மூலம் முழு சித்தி ஏற்படும். உணர்ச்சியும் ஒரு முனைப்பும் மிகத் தீவிரமாக இருந்தால் இவற்றின் மூலம் சமாதியும் கைகூடும்.

*ஆனால், இவையெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல. மனத்தின் சிந்தனையில் தீவிரமான பக்தி இருக்க வேண்டும் என்பதொன்றே முக்கியமானது.*

இது ஞான யோகத்தில் கூறப்படும் தியாகத்தைப்போலவே தோன்றினாலும் அதன் ஆழ்ந்த தன்மையில் வேறுபடுகிறது.

அதன் உண்மைத்தன்மையில் இது – ஞானயோக தியாகத்தைப் போல் – அசைவற்ற சாந்தி தியானம் அல்ல.

*ஆனந்தத் தியாகம்.* இதன் நோக்கம் இறைவனில் கலந்துவிடுவதில்ல. இறைவனை நம்முள் கொண்டு வந்து அவனது சாந்நித்யத்தில் அல்லது அவனால் பற்றுண்பதில் உள்ள ஆழ்ந்த பரவசத்தில் தன்னை இழத்தலே.

இதில் உண்டாகும் ஆனந்தம் இறைவனுடன் கலந்துவிடுவதால் வரும் சாந்தி அல்ல,

இறைவனுடன் இணைவதால் வரும் பரவசம். மற்ற யோகங்களிற் போலவே இந்த யோகத்திலும் ஒருவன் இறைவனை எங்கும் எல்லாவற்றிலும் காண்பான்.

இந்த இறையனுபவம் அவனது அகச் செயல்களிலும் புறச்செய்கைகளிலும் வெளிப்படும்.

ஆனால், பக்தியோகத்தில் இந்த அனுபவங்களுக்கெல்லாம் ஆதாரமாகவுள்ள சக்தி இறைவனுடன் உணர்வு கலப்பதால் வரும் சக்தி.

பக்தி யோகத்தில் மனிதன் தன்னை முற்றிலும் இறைவனுக்கு நிவேதிப்பதும், இறைவன் சாதகனை முற்றிலும் உடைமைப்படுத்திக் கொள்வதும் அன்பின் செயலாக நடைபெறுகிறது.

நன்றி: *வைகறை* ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் காலாண்டு வெளியீடு, மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம். (ஸ்ரீ அரவிந்தரின் Synthesis of Yoga : The way of Devotion-இல் எழுதியதைத் தழுவியது)

இப்பதிவுடன் பக்தியோகம் எனப்படும் ஸ்ரீமத் பகவத்கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயம் தொடர்பான பதிவுகள் நிறைகின்றன.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

Leave a comment