பகவத்கீதை – பன்னிரண்டாம் அத்தியாயம் – பக்தி யோகம் – 5


*ஞானத்தேடல் பதிவு எண்: 066 நாள்: 02.11 2022*

*பகவத்கீதை – பன்னிரண்டாம் அத்தியாயம் பக்தி யோகம் – 5*

சுலோகம் 10: இவ்விதமான பயிற்சியில்கூடத் திறமையற்றவனாய் இருந்தால், எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டு இரு. என் பொருட்டாகவே கடமைகளை ஆற்றிக் கொண்டே இருந்தாலும் என்னை அடைவது என்ற லட்சியத்தை அடைவாய்.

மனதை அடக்கப் பயிற்சிச் செய்ய மனது ஒருமைப்படாவிட்டால், நீ செய்யும் செயல்களை (கர்மங்கள்) எல்லாம், எனக்காகச் செய். உனது விருப்பத்திற்காக நீ செய்யும் செயல்கள் அனைத்தையும், உனக்காகச் செய்யாது, ஈசுவரனுக்காகச் செய்ய வேண்டும். இறைவனே அனைத்தையும் செய்கிறான்; நான் வெறும் கருவி மட்டுமே! என மனத்தைப் பக்குவப்படுத்து.

அவ்வாறு பயிற்சிச் செய்து வரும்பொழுது, நாளடைவில், மனம் தூய்மையடைந்து ஞானத்தைப் பெற்று பக்குவமடையும். இறைவனின் கைக்கருவியே நான்! என உறுதியாக நினைத்து வரந்தால், உன் மனம் பக்குவமடையும். ஏனென்றால் கருவிக்குத் தனியாகச் சுதந்திரம் கிடையாது. எனவே இறைவனின் கருவியாகத் தன்னை நினைத்து செயலாற்றுவது, ஞானத்தை வரழைக்கும்! என்கிறார்! அர்ஜுனனிடம், ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 11: என்னை அடைவது என்ற யோகத்தைச் சார்ந்து நின்று அப்யாஸ யோகத்தைக் கூடச் செய்வதற்குத் திறமையற்றவனாய் இருந்தால், அப்போது மனம், புத்தி முதலியவற்றை அடக்கி வெற்றி கண்டு, செய்கின்ற எல்லாக் கர்மங்களின் பயன்களையும் துறந்துவிடு.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்: _ “உன்னால் கர்மம்( செயல்கள்) செய்யாமல் இருக்க முடியாது. ஆகையால் கர்மங்கள் முறையாக நடைபெறட்டும். கர்மத்தைப் பற்றற்று செய்தால், அது பகவானிடம், உன்னைக் கொண்டு சேர்க்கும். விருப்பு, வெறுப்பற்று செய்யப்படும் கர்மம், பற்றுதல் அற்றதாகும். இவ்வித மனோபக்குவத்தில் செய்யப்படும் செயல்கள், இறுதியில் கடவுளிடம் கொண்டு நம்மைக் சேர்க்கும் வழியாக அமையும்”. எனக்கு அடைக்கலமாகி, தன்னடக்கத்தோடு, நீ செய்யும் செயல்களின் பலன்கள் அனைத்தையும், எனக்கு அர்ப்பணம் செய்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

சுலோகம் 12: உட்பொருள் அறியாமல் பகவானை அடையும் பொருட்டுச் செய்யும் சாஸ்திரப் பயிற்சியை விட சாஸ்திரங்கள் மூலம் கிடைக்கும் ஞானம் சிறந்தது; அந்த ஞானத்தைக் காட்டிலும் என் ஸ்வரூபத்தைத் தியானம் செய்வது சிறந்தது; தியானத்தைக் காட்டிலும் கர்மத்தின் பயனைத் துறப்பது சாலச்சிறந்தது. ஏனெனில், தியாகத்தின் மூலம் உடனேயே கால இடைவெளியின்றி மேலான அமைதி உண்டாகிறது.

கோயிலுக்குச் செல்லும் ஒருவன் எல்லா திசையையும் நோக்கி வணங்குகிறான். அதன் காரணத்தை அவன் அறியாமலேயே பிறர் செய்வதைப் பார்த்துச் செய்கிறான்; கடவுள் எங்கும் நிறைந்தவர்! என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவே பலரும் இவ்வாறு செய்கின்றனர். அதன் காரணத்தை அறியாது பழக்கப்படுத்திக் கொள்ளும் அவனது செயலைவிட, கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்! என அறிந்திருக்கும் ஞானம் சிறந்தது.


இவ்வாறான ஞானத்தைவிட அனைத்தையும் கடவுளின் வடிவாகத் தியானிப்பது மேலானது. அவ்வாறு தியானித்து, அதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது. தான் வாழ்ந்திருப்பதே கடவுளுக்காக எனக் கருதி, தனது செயல்களின் பலன் (கர்ம பலன்) அனைத்தையும் கடவுளுக்கே அர்ப்பணமாக்க வேண்டும்.


தான் செய்யும் செயல்கள் தனக்காக அல்ல! இறைவனுக்காக என நினைகும்போது மனதில் சாந்தி உண்டாகிறது. தனக்கென்று செயலாற்றுபவன் நிம்மதியை இழக்கிறான். தான் செய்யும் செயல்களெல்லாம் இறைவனுக்கே; அதன் பலன்களும் இறைவனுக்கே! என நினைப்பவன் மன நிம்மதியோடு, மகிழ்வோடிருப்பான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

சுலோகம் 13&14: எவன் எல்லா உயிரினங்களிலும் வெறுப்பு இல்லாதவனோ, தன்னலம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பு கொண்டவனோ, காரணமின்றி இரக்கம் காட்டுபவனோ, மமகாரமற்றவனோ, அகங்காரமற்றவனோ, இன்ப-துன்பங்கள் நேரும்போது நிலைமாறாது சமமாக இருப்பவனோ, பொறுக்கும் இயல்புடையவனோ அதாவது குற்றம் செய்தவனுக்கும் அபயம் அளிப்பவனோ, யோகியோ, எப்பொழுதும் எல்லாவிதங்களிலும் திருப்தி உள்ளவனோ, மனம் மற்றும் புலன்களோடு கூடிய உடலைத் தன்வசப் படுத்தியவனோ, மேலும் என் மீது திடமான நம்பிக்கை உடையவனோ, என்னிடத்தில் மனம், புத்தி இவற்றை அர்ப்பணம் செய்தவனோ, என்னுடைய அந்த பக்தன் எனக்குப் பிரியமானவன்.

வெறுப்பானது வேற்றுமையை வளர்க்கிறது; உடலெங்கும் விஷம் பரவியதைப் போலாகிறது. எனவே வெறுப்பு, மனிதனின் நல்வாழ்க்கைக்கு உதவாது. வெறுப்பின்றி இருந்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களிடமும் நட்புக் கொள்ளவேண்டும். அன்பின் வழியதே உயிர்நிலை” . எனவே நல்ல நட்பே உயிர்களை இணைக்கிறது.

பிறரை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நட்பு பாராட்டுவது தவறு. நம் வாழ்க்கையைப், பிறருக்குப் பயன்படும்படி செய்யவேண்டும்! அப்பொழுதே அது கருணையாகிறது. பிறரிடத்துக் கருணைக் காட்டுவதால், தன் பொருளுக்கே நஷ்டம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாதிருப்பதே மமகாரம் அற்ற நிலையாகும். உடல் அபிமானமே அகங்காரம் எனப்படுகிறது.


கருணை அதிகமாகும் போது பக்தனுக்கு அகங்காரம் அறவே நீங்கிவிடுகிறது. தன்னைத் தானே மன்னிப்பதைப் போல பிறரையும் மன்னிக்கிறான்! உண்மையான பக்தன். துன்பத்தைச் சகித்தல் என்பது ஒருவித எதிர்மறை நிலையாகும். அதை விடுத்து, ‘ இன்பமே எந்நாளும் துன்பமில்லைஎன எப்பொழுதும் மகிழ்வோடிருக்கிறான்! நல்ல பக்தன்.

வாழ்க்கையில் அடக்கமும்,ஒழுங்குப்பாடும் நன்கு அமையப் பெற்றவன் யோகியாகிறான். பரமாத்மாவைப் பற்றி அவனுக்கு எக்குழப்பமும் இல்லை; அவனுக்கு திடமான நிச்சயபுத்தி இருக்கிறது.

அவ்வாறானவன் யோகத்தால் தான் பெற்ற தெளிந்த மனத்தையும், புத்தியையும் இறைவனுக்கே அர்பணிக்கிறான். இவ்விதத்தில் பகவானைப் பக்திச் செய்பவனே, எனக்குப் பிரியமானப் பக்தனாவான்! என்கிறார் அர்ஜுனனிடம், ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

மேலே கொடுத்துள்ள சுலோக விளக்கங்கள் சுவாமி சித்பவானந்தர் அருளியவை.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ.  
— அருட்பிரகாச வள்ளலாரின் *திருவருட்பா*

வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
— அருட்பிரகாச வள்ளலாரின் *திருவருட்பா*

மழை இன்றி பயிர்கள் வாடும். அப்போது வள்ளல் பெருமானும் வாடிவிடுகிறார்.  பசித்து இளைத்தவர் வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டும் உணவு கிடைக்காது திண்டாடுவது குறித்து இவர் மனம் பதைக்கிறது. நோய் வந்து உழல்வோரைக் கண்டும் கலங்கி விடுகிறார் பெருமான். பிச்சை கேட்பது இழுக்கு என்றெண்ணும் மானமுடையோர் உணவின்றி இளைப்பது கண்டு வள்ளலாரும் இளைக்கிறார்.

எவ்வளவு அன்பு பாருங்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் — திருக்குறள்: 972

பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை என்பதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஓர் அடிப்படை உயிரியல் உண்மை. இவ்வுண்மையைத் திருவள்ளுவர் வாழ்வியல் விழுமியமாக முன்வைக்கின்றார். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படும் இந்தியச் சமூகச் சூழலில் திருவள்ளுவர் முன்வைக்கும் பிறப்பொக்கும் என்ற கருத்து ஒரு பாரிய புரட்சிக் கருத்தாகும். இந்தப் பரந்த உலகத்தையும் உலகத்து மக்களையும் இன்னும் கேட்டால் புல், பூண்டு, மரம், செடி., கொடி, பறவை, விலங்கு முதலான உலகத்து உயிர்கள் அனைத்தையுமே ஒரே தரத்தில் வைத்து எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்று உரத்து குரல் கொடுக்கின்றார் அவர். திருவள்ளுவரின் பொதுமைக் கரங்களில் அடங்காத சாதியில்லை, மதமில்லை, மொழியில்லை, வீடில்லை, நாடில்லை, நிறங்கள் இல்லை எல்லோரும் ஒன்று. ஒன்றே ஒன்றன்றி மேல் கீழ் என்ற பேதமில்லை, உயர்வு தாழ்வென்ற தரமில்லை, நான் நீ என்ற பிரிவில்லை, நாம், நாம், நாம்தான். (முனைவர் நா. இளங்கோ)

இரமணர் ஒரு முறை யாரோ என் கையை வெட்டறாப் போல இருக்கேஎன்று சொன்னாராம். அப்போது தோட்டத்தில் எங்கோ ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனாராம். 

இப்படிப்பட்ட எல்லையற்ற அன்புக்காக ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி இருக்கும் திருவள்ளுவர், அன்பில்லாதவர் வெறும் எலும்பு தோல் போர்த்தியவர் என்று இகழ்கிறார். அன்பில்லாதவரை அறம் தாக்கும் என்று எச்சரிக்கிறார். அப்படிப்பட்டவரைப் பாலைவனத்தில் தளிர்த்த பட்டமரம் என்று சாடுகிறார்.

ஒருவர் அன்பானவராக இருந்தால் அவரால் இரக்கத்தை மறைக்க முடியாமல் கண்களில் கண்ணிர் வழியும். தனக்கு என்று மறைக்காமல் தன் உயிரையும் அடுத்தவற்கு தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள்.

பராபரக்கண்ணி

அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே!- தாயுமானவர்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

Leave a comment