பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 1


ஞானத்தேடல் பதிவு எண்: 052 நாள்: 11.09.2022

பகவத்கீதை – ஒன்பதாம் அத்தியாயம் – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் – 1

Swami Paramahamsa Yogananda has titled this chapter as THE ROYAL KNOWLEDGE, THE ROYAL MYSTERY.

34 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தில் இரண்டு முக்கிய கருத்துக்களை பகவான் விளக்குகிறார். 1 ஈஸ்வரத் தத்துவம். 2 பக்தி. இந்த தத்துவம் அனைத்து அறிவைக் காட்டிலும் மேலான அறிவு என்றும், அனைத்து இரகசியங்களில் மேலான இரகசியம் என்றும் பகவான் கூறுகிறார். (W)

ஈஸ்வரத் தத்துவம்

அபரா பிரகிருதி எனும் பிரபஞ்சம் (மாயை), பரா பிரகிருதி எனும் ஈஸ்வரனை சார்ந்து உள்ளது. ஆனால் பரா பிரகிருதியான ஈஸ்வரன் மாயையை (அபரா பிரகிருதி) சார்ந்து இல்லாதவன். அபரா பிரகிருதி எனும் இந்த பிரபஞ்சம் பொய்த் தோற்றம் கொண்டது. இந்த பிரபஞ்சம் மற்றும் ஜீவர்கள் இருப்பது போல் தோற்றமளித்தாலும், அழியும் தன்மை கொண்டதுவே. இந்த மாயையான பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரனே காரணம். ஈசுவரன் எதனுடனும் தொடர்பு அற்ற தன்மையுடயவன். ஈஸ்வரன் எந்த செயலையும் செய்வதில்லை, செயலின் விளைவுகளையும் அனுபவிப்பது இல்லை. (ஈஸ்வரன் அகர்த்தா / அபோக்தா). எனவே ஈசுவரன் உதாசீனன் ஆக உள்ளார். (W)

பக்தி

எவ்வித பலனை எதிர்பாராது பகவானிடம் முழு மனதுடன் பக்தி செலுத்துவது “ அநன்ய பக்தி “ ஆகும். இவ்வாறு பக்தி செலுத்தி பகவானையே சரணாகதி அடைந்த பக்தர்களை காப்பது எனது கடமை என பகவான் உறுதிமொழி தருகிறார். மேலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துவது பக்குப்படாத பக்தி என்று இடித்துரைக்கிறார் பகவான்.

எவரெவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ, அவரவர் கோரிக்கைகயை பகவான் நிறைவேற்றுகிறார். பகவானுக்கு எந்த பக்தர்களிடம் விருப்பு – வெறுப்பு இல்லை. பகவானை அறிந்து கொள்வது அரிது. பகவான் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் ஜீவர்கள் பகவானை அறிய இயலாது.

இயற்கையாக ஜீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்பு உணர்வுகளுடன் இருப்பதால், அச்சீவர்கள் பகவானை அறிது கடினம். பிறகு எவர்கள் அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞம் என்ற தத்துவங்களை அறிகிறார்களோ அவர்களே இருமைகளிருந்து விடுபட்டு பகவானிடம் பக்தி செலுத்தி வீடுபேறு எனும் விதேக முக்தி அடைகிறார்கள்.

எனவே ஜீவர்கள் பகவானையே மனதில் கொண்டு வழிபட்டு, பகவானுக்காவே அனைத்து நற்செயல்களையும் செய்ய வேண்டும். (W)

முதல் பத்து சுலோகங்கள் சகுண பிரம்மத்திற்கும், பிரகிருதி க்கும் உள்ள தொடர்பு  பற்றிக் கூறுகின்றன.

*சுலோகம் 9-1*:ஸ்ரீபகவான் கூறுகிறார்அர்ஜுனா! எதை அறிந்து கொண்டதாலேயே துக்க வடிவான உலகியலில் இருந்து விடுதலை பெறுவாயோ, மிகவும் மறைத்துப் போற்ற வேண்டிய விஞ்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தைக் குற்றங்குறை காணாத இயல்புடைய பக்தனான உனக்கு, மறுபடியும் விளக்கிக் கூறப்போகிறேன்.

எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ அனுபவத்தோடு கூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்து உரைக்கிறேன்.

அசுபம் என்பது பிரபஞ்ச வாழ்க்கையிலிருந்து வருகிற கேடு. அக்ஞானமே அசுபம் அனைத்துக்கும் காரணமாகும். வெறும் ஞானம் மட்டுமின்றி அனுபவத்தோடு கூடிய ஞானமே கேடுகளை எல்லாம் நீக்க வல்லது.

பொறாமை என்பது மற்றவர்கள் அடையும் மேன்மையை கண்டு சகிக்க முடியாது இருப்பது. ஆனால் மற்றவர்களை மகிழ்ச்சியோடு மேன்மைப்படுத்துகிற அளவு, மற்றவர் முன்னேற்றத்தில் முயற்சி கொள்ளுமளவு, ஒருவன் மேன்மை அடைகிறான். பொறாமையானது மனத்திலே பெரும் நோயைப் போல அமைந்து, மனிதனது சிறப்புகளை எல்லாம் அழித்து விடுகிறது.

இம்மையிலும், மறுமையிலும் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பது இந்த பொறாமையே ஆகும். பொறாமை உள்ள மனதில் இறைவன் குடியியிருக்க மாட்டான்.

பொறாமை என்ற நோய்க்கு இடம் தராத நல்ல மனம் உடையவன் அர்ஜுனன் என்பதால் அவனே ஞான விஞ்ஞானத்தை இறைவனிடமிருந்து அறியும் தகுதி உடையவன் ஆகிறான்.

எனவே அர்ஜுனா! பொறாமையற்ற உள்ளத்தோடு உள்ள உன்னிடம் நான் இந்த அனுபவத்தோடு கூடிய ஆழ்ந்த ஞானத்தை எடுத்துரைக்கிறேன்! என்கிறார்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

பொறாமையற்ற உள்ளமே இறைவன் குடியிருக்கும் ஆலயமாகும். ஞானத்தை அடைய பொறாமையற்ற உள்ளம் அவசியமாகிறது.

*சுலோகம் 9-2*:இந்த விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் அனைத்து வித்யைகளுக்கும் அரசு; மறைத்துப் போற்றப்பட வேண்டியவற்றுள் சிறந்தது; மிகப்புனிதமானது; மிகச்சிறந்தது; கண்கூடாக உணர்தற்குரியது; தர்மநெறிக்குட்பட்டது; கடைப் பிடிப்பதற்கு மிகவும் எளிதானது; மேலும் அழிவற்றது.

இந்த ஞானம் வித்தைகளுள் ராஜவித்தை; மறைபொருளுள் மேலானது; தூய்மையை தருதலில் தலைசிறந்தது; கண்கூடாக உணர்தற்குரியது; தர்மத்தோடு கூடியது; செய்தற்கு மிக எளியது; அழிவற்றது.

வித்தைகளுள் பிரம்ம வித்தை “ராஜவித்தை” என்று பெயர் பெறுகிறது. பிரம்ம ஞானத்தையடைய ஜீவன்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் பொறாமை முதலிய தோஷங்களோடு, மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு இது ராஜகுஹ்யம்; அதாவது “ராஜ ரகசியம்” அல்லது “மிகவும் மறைபொருள்” ஆகிவிடுகிறது.


அதாவது பொறாமையற்ற உள்ளத்தோடு, மனப்பக்குவம் அடைந்தவர்களே இந்த வித்தையை அறிகின்ற தகுதி உடையவர்கள் ஆகின்றனர். ஏனையவர்களுக்கு இது ஒரு ராஜ ரகசியமாக மறை பொருளாக விளங்குகிறது(ராஜகுஹ்யம்) என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

*சுலோகம் 9-3*:எதிரிகளை வாட்டுபவனே! மேலே கூறப்பட்ட தர்மத்தினுடைய சிறப்பில் நம்பிக்கையற்ற மனிதர்கள் என்னை அடையாமல் மரண வடிவான சம்சாரச் சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

எதிரிகளை எரிப்பவனே, இந்தத் தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது, மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.

மனிதனுக்கு, இறைவனைப் பற்றிய ஞானம் உண்டாக விட்டால், அவனது துன்பத்திற்கும் முடிவு என்பதே இல்லை. மனிதனை அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுவிப்பது பரஞானம். (பரப்பிரமத்தைப் பற்றிய ஞானம்). அதற்கு ஏதுவான நெறியை சிரத்தையுடன் (அக்கறையுடன்) பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றாதவர்கள் பிறவிப் பிணியில் வருந்துவர். எனவே பொறாமையற்ற உள்ளத்தோடு கூடியவர்கள், இந்த ஞானத்தை சிரத்தையோடு கடைபிடித்தால், மேலாம் பரம்பொருளை அடையலாம். அத்தகையவர்களுக்கு இந்த ஞானம் எளிதாக கிடைக்கிறது. இந்தத் தர்மத்தை கடைப்பிடிக்காதவர்கள், என்னை அடைய மாட்டார்கள்! என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

LORD KRISHNA HERE PROCLAIMS Self-realization, true wisdom, as the highest branch of all human knowledge—the king of all sciences, the very essence of dharma (“religion”)—for it alone permanently uproots the cause of man’s threefold suffering and reveals to him his true nature of Bliss. Selfrealization is yoga or “oneness” with truth—the direct perception or experience of truth by the all-knowing intuitive faculty of the soul. This intuitive realization is the basis of all valid religious experience, the very essence of dharma (religion or righteousness), as here stated in the Gita.

Many philosophers, particularly in the West, take the defeatist attitude that God is unknowable. The opposite view is expounded in the Gita—and nowhere more clearly than in these verses: The highest Truth is knowable by direct experience.

*சுலோகம் 9-4*:உருவமற்ற பரமாத்மாவான என்னால் இந்த அனைத்துலகமும் பனிக்கட்டியில் நீர் போல நிறைந்துள்ளது. எல்லா உயிரினங்களும் என்னுடைய சங்கல்பத்தின் பலத்தினால் நிலை பெற்றுள்ளன. ஆனால், உண்மையில் நான் அவற்றுள் நிலைபெற்றிருக்கவில்லை.

அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது. உயிர்களைனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றன; ஆனால் நான் அவைகளிடத்தில் இல்லை.

கடலில் அலைகள் எல்லாம் அடங்கப் பெற்றிருப்பதை போன்று பிரம்மா முதல் புல் வரை அனைத்தும் உள்ள உயிர்களும்(பூதங்கள்) பரமாத்மாவிடம் அடங்கியிருக்கின்றன.
பாத்திரத்தில் நீர் இருப்பதைப் போன்று பரமாத்மா உயிர்களிடத்தில் அடங்காதவர்; ஆகாசம் போன்று அனைத்திடத்தும் ஊடுருவி, அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்.

*சுலோகம் 9-5*:அந்தச் சராசரங்கள் அனைத்தும் என்னுள் இருப்பவையல்ல. என்னுடைய ஈசுவரத்தன்மை உடைய யோகசக்தியைப் பார். அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், உண்டாக்குகின்றவனுமாக இருந்தபோதிலும், என்னுடைய ஆத்மா உண்மையில் உயிரினங்களில் நிலைபெற்று இருப்பதில்லை.

பூதங்கள் (உண்மையில்) என்னிடத்து நிற்பவைகளல்ல. என்னுடைய ஈஸ்வர யோக மகிமையை பார்! பூதகணங்களை ஆக்கவும், காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தில் இல்லை.

ஏழாவது அத்தியாயமான “ஞானவிக்ஞான யோகம்” பன்னிரண்டாவது சுலோகத்தில் ஶ்ரீகிருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்__“சத்வ, ரஜஸ், தமோ குணங்களில் உண்டான பொருட்களெல்லாம் என்னிடத்து தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச் சாரவில்லை; அவைகள் என்னைச் சார்ந்திருக்கின்றன”.

*சுலோகம் 9-6*:எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எவ்வாறு ஆகாயத்தில் எப்பொழுதும் உள்ளதோ, அவ்வாறே எல்லா உயிரினங்களும் என் சங்கல்பத்தில் உண்டானதால், என்னிடம் உள்ளன என்று தெரிந்துகொள்.

எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கிற பெரும் காற்று வானத்தில் நிலைபெற்றிருப்பதைப் போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றன என்று தெரிந்துகொள்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்: ” காற்று நல்ல வாசனையையும், கெட்ட வாசனையையும் கொண்டு வீசினாலும் அவைகளால் அது மாற்றமடைவதில்லை; பரம்பொருளும் அந்த காற்றை போன்றதே”.

*சுலோகம் 9-7*:குந்தியின் மைந்தனே! அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் கல்பங்களின் முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. (பிரகிருதியில் தன்மயமாகி விடுகின்றன.) அவற்றைக் கல்பத்தின் ஆரம்பத்தில் நான் திரும்பவும் தோன்றச் செய்கிறேன்.

கௌந்தேய, பூதங்கள் எல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்பத் துவக்கத்தில் அவைகளை நான் தோற்றுவிக்கிறேன்.

பிரம்மாவுக்கு இரவு வரும்பொழுது பிரளயம் அல்லது கற்பத்தின் முடிவு ஏற்படுகிறது. அவருக்கு பகல் ஆரம்பிக்கும் பொழுது சிருஷ்டி அல்லது கற்பத்தின் துவக்கம் ஏற்படுகிறது. பிரகிருதி என்பது முக்குண மயமான இறைவனின் படைப்பாகும்.

*சுலோகம் 9-8*:இயல்பின் ஆற்றலினால் தன்வசமிழந்த இந்த அனைத்து உயிர்த்தொகுதிகளையும் திரும்பத்திரும்ப என்னுடைய பிரகிருதியை ஏற்றுக் கொண்டு, அவரவர் வினைக்கேற்றவாறு படைக்கிறேன்.

என் பிரகிருதியை அருளுடையதாக செய்து சுதந்திரம் இல்லாத பிரகிருதியின் வசமாயிருக்கும் உயிர்த்திரள் யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன்.

*சுலோகம் 9-9*:அர்ஜுனா! அந்தக் கர்மங்களில் பற்றில்லாமலும், ஒதுங்கியவனைப் போன்றும் இருக்கின்ற பரமாத்மாவான என்னை, அந்தச் செயல்கள் பந்தப் படுவதில்லை.

தனஞ்ஜயா! கர்மங்களில் பற்றற்றவனும் உதாசீனனனைப் போன்று உட்கார்ந்திருப்பவனாகிய என்னை அவைகள் பந்தப்படுத்துவதில்லை.

“நான் என்ற எண்ணம் இறந்தால், துன்பமெல்லாம் தொலையும். ‘ஈசுவர கிருபையால் அனைத்தும் நடக்கிறது! இதில் என் செயல் என்று யாதொன்றும் இல்லை’ என்ற கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால் மனிதனுக்கு இந்த ஜென்மத்திலேயே முக்தி உண்டாகும்”. – _ராமகிருஷ்ண பரமஹம்சர்.

*சுலோகம் 9-10*:குந்தியின் மைந்தனே! தலைவனான என் கண்காணிப்பில் பிரகிருதியானது அசைவன, அசையாதனஇவற்றோடு கூடிய உலகமனைத்தையும் தோற்றுவிக்கிறது. இக் காரணத்தினால் இந்தச் சம்சாரச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.

கௌந்தேய! என்னால் கண்காணிக்கப் பெற்று பிரகிருதியானது ஸ்தாவர, ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது. இதன் காரணத்தால். ஜகத்தானது சுழல்கிறது.

ஏழாவது ஸ்லோகத்தில் நான் சிருஷ்டிக்கிறேன் என்கிறார் பகவான். எட்டாவது ஸ்லோகத்தில் பிரகிருதியை கொண்டு அக்காரியத்தை செய்வதாக சொல்கிறார். ஒன்பதாவது சுலோகத்தில் நடுநிலை வகிக்கின்ற தம்மைப் பிரகிருதியின் அச்செயல் பிணைப்பதில்லை! என்கிறார் பகவான். பத்தாவது சுலோகத்தில் தாம் சாட்சியாக வீறாறிருந்து, கண்காணிக்க, தனது சந்நிதான விசேஷத்தால் பிரகிருதிக்குப் பிரபஞ்ச(ஜகத்) காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைகிறது! என்கிறார் பகவான்.


சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரகணங்களால் பொருட்கள், பரிணமிப்பது போன்று ஈஸ்வரனுடைய முன்னிலையில், அவனுடைய மாயா சக்தியால் பிரபஞ்சம் உருவாகிறது.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

உதவி:

மகாகவி பாரதியார் உரை
சுவாமி சித்பவானந்தர் உரை
பரமஹம்ச யோகானந்தர் உரை

Leave a comment