பகவத்கீதை – எட்டாம் அத்தியாயம் – அக்ஷர ப்ரஹ்ம யோகம் – 4


ஞானத்தேடல் பதிவு எண்: 051 நாள்: 06.09.2022

பகவத்கீதை – எட்டாம் அத்தியாயம் – அக்ஷர ப்ரஹ்ம யோகம் – 4

*சுலோகம் 8-17*: _பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ அது ஓராயிரம் சதுர்யுகங்களைக் காலவரையறை ஆகக் கொண்டது என்றும், அவ்வாறே இரவும் ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது என்றும் எந்த மனிதர்கள் தத்துவரீதியாக அறிகிறார்களோ, அந்த யோகியர் பகலிரவு என்ற காலத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள்.

பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. இதை யறிந்தோரே இராப்பகலின் இயல்பறிவார். (பா.உ.)

பௌதிக பிரபஞ்சத்தின் காலம் எல்லைக்கு உட்பட்டதாகும். இது கல்பங்களின் சுழற்சியாகத் தோற்றமளிக்கிறது. கல்பம் என்பது பிரம்மாவின் ஒரு பகல். ஸத்ய, திரேதா, துவாபர, கலி எனும் நான்கு யுகங்கள், ஆயிரம் முறை சுழலும் போது அது பிரம்மாவின் ஒரு பகலாகும்.

புண்ணியம், விவேகம் மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸத்ய யுகத்தில் அறியாமையும் பாவமும் கிடையாது, அது 17,28,000 வருடங்கள் நீடிக்கக் கூடியது. திரேதா யுகத்தில் பாவங்கள் ஆரம்பமாயின அது 12,96,000 வருடங்கள் நீடிக்கின்றது. துவாபர யுகத்தில் புண்ணியமும் தர்மமும் மேலும் சீர்குலைய, பாவங்கள் மேலோங்குகின்றன, அந்த யுகம் 8,64,000 வருடங்கள் நீடித்தது. இறுதியாக கலி யுகத்தில் (கடந்த 5000 வருடங்களாக நாம் அனுபவித்து வரும் யுகத்தில்) போர் அறியாமை, அதர்மம் மற்றும் பாவங்கள் அதிகரித்து, உண்மையான புண்ணியம் என்பது ஏறக்குறைய அழிந்துவிடுகிறது, இந்த யுகம் 4,32,000 வருடங்கள் நீடிக்கின்றது. பாவங்கள் அதிகரித்து எல்லை மீறிப்போகும் போது, கலி யுகத்தின் இறுதியில் கல்கியாக அவதாரம் எடுக்கும் முழுமுதற் கடவுள், அசுரர்களை அழித்து, பக்தரைக் காத்து, மீண்டும் ஸத்ய யுகத்தைத் தொடக்குகிறார்.

பின்னர், மீண்டும் அதே சுழற்சி தொடர்ந்து நடைபெறும். இந்த நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சூழலும் போது, அது பிரம்மாவின் ஒரு பகலாகும், அவரது இரவும் அது போன்றதே. இவ்வாறு நூறு வருடங்கள் வாழும் பிரம்மா அதன்பின் இறக்கின்றார். இந்த “நூறு வருடங்கள்” பூலோகக் கணக்கின்படி 3,11,04,000 கோடி வருடங்களாகும். இவ்வாறு பிரம்மாவின் வாழ்நாள் வினோதமாக, முடிவில்லாதது போலத் தோன்றினாலும், நித்திய வாழ்வுடன் ஒப்பிடும்போது இது மின்னலைப் போன்ற குறுகிய காலமே.

அட்லாண்டிக் கடலின் நீர்க் குமிழிகளைப் போல, காரணக் கடலில் எண்ணற்ற பிரம்மாக்கள் தோன்றி மறைகின்றனர். பிரம்மாவும் அவரது படைப்பும், பௌதிக பிரபஞ்சத்தின் பகுதிகள் என்பதால், அவை எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவை. பிரம்மா உட்பட ஜடவுலகைச் சார்ந்த அனைவரும், பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதிக்கு உட்பட்டவர்களே. இருப்பினும், இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பதன் மூலம், பரம புருஷருடைய நேரடித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் பிரம்மா, அதனால் உடனடியாக முக்தியடைகிறார்.

உயர்ந்த சந்நியாசிகள், பிரம்ம லோகம் என்றழைக்கப்படும் பிரம்மாவின் குறிப்பிட்ட உலகினை அடைகின்றனர். ஜடவுலகின் மிகவுயர்ந்த கிரகமான அந்த பிரம்ம லோகம், உயர் கிரகங்களான ஸ்வர்க லோகங்கள் அழிந்த பிறகும் நிலைத்திருப்பதாகும். ஆனால், காலப்போக்கில் பிரம்மாவும் பிரம்மலோகவாசிகளும், ஜட இயற்கையின் சட்டப்படி, மரணத்திற்கு உட்பட்டவர்களே. (ஸ்ரீ.பி.)

*சுலோகம் 8-18*: _பிரம்மாவின் பகல் தொடங்கும்போது எல்லாவிதமான சராசரமான உயிர்த்தொகுதிகளும் அவ்யக்தத்திலிருந்து – பிரம்மாவின் சூட்சும சரீரத்தில் இருந்து – வெளிப்படுகின்றன. மேலும், பிரம்மதேவனின் இரவு தொடங்கும்போது, அந்த வயக்தம் என்ற பெயருள்ள பிரம்மாவின் சூட்சும சரீரத்திலேயே மறைகின்றன.

. ‘அவ்யக்தம்’, அதாவது மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. *இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்து விடுகின்றன. (பா.உ.)

*சுலோகம் 8-19*: _அர்ஜுனா! அதே இந்த உயிரினங்களின் கூட்டம் மீண்டும் மீண்டும் பிறந்து தன்வசமின்றிப் பிரகிருதியின் வசப்பட்டு, இரவின் தொடக்கக் காலத்தில் மறைகிறது. பகலின் தொடக்கத்தில் மறுபடியும் உண்டாகிறது.

அர்ஜுனா! அதே இந்த உயிர்த் தொகையானது, பிறந்து பிறந்து இரவு வரும் பொழுது, தன் வசம் இந்திய ஒடுங்குகிறது; பகல் வரும்பொழுது வெளிப்படுகிறது.

கர்ம வசப்பட்டிருக்கும் உயிர் வகைகளுக்கு தன்வசம் என்பது இல்லை. கர்ம வசத்தால் அவைகள் யுக முடிவில் மறையவும், யுகம் ஆரம்பத்தில் தோன்றவும் செய்கின்றன. பல கற்பங்களுக்குப் பிறகும் அவரவர் கர்மமே அவரவரைத் தொடர்ந்து வருகிறது. அதாவது இந்த உயிர்களின் தொகையானது பிரம்மாவின் இரவு வரும் பொழுது தன்வசமின்றி அழிந்து போகின்றன. பிரம்மாவின் பகற்பொழுது வரும் பொழுது மீண்டும். தோன்றுகின்றன. யுகங்கள் மாறினாலும் அவரவர் கர்மமே அவரவரை தொடர்ந்து வருகின்றன. (சு.சி.)

*சுலோகம் 8-20*: _ஆனால், அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த, வேறான தனித்தன்மை கொண்ட எந்த சாசுவதமான, வெளிப்படாத பரம்பொருளான பரமாத்மா உள்ளாரோ, அந்த மேலான திவ்விய புருஷன் எல்லா பூதங்களும் (உயிரினங்களும்) அழிந்தபோதிலும் அழிவதில்லை.

அவ்யக்தத்தினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது. (பா.உ.)

பிரம்மா உட்பட தோன்றியுள்ள அனைத்தும், தோன்ற நிலைக்குப் போகும் பொழுது, அது “அவ்யக்தம்” என்று பெயர் பெறுகிறது நீரானது ஆவியாகும் போது நம் கண்களுக்குத் தெரிவதில்லை அவ்வாறே பிரம்மாவின் சிருஷ்டித் மறையும் பொழுது புலன்களுக்கு தென்படுவதில்லை அது மாயா நிலையில் மறைந்து கிடக்கின்றது மற்றொரு அவ்யக்தம் இதற்கு மாறாகப் பரம்பொருளாகச் சநாதனமாக (சநாதனம்= என்றென்றும் நிலைத்திருக்கும்) இருக்கிறது. அது புலன்களுக்கு எப்பொழுதுமே எட்டுவதில்லை வந்துள்ள உயிர்களுக்கு மறைவு இருக்கிறது. ஆனால் அதீத அவ்யக்தமோ தோற்றமும், மறைவும் இல்லாதது; அது என்றென்றும் தன்மயமாக இருக்கிறது. (சு.சி.)

*சுலோகம் 8-21*: _அவ்யக்தம் (தோன்றாநிலை), அக்ஷரம் (அழிவில்லாதது), என்று பெயருள்ள அவ்யக்தத் தன்மையை மிக உயர்ந்த கதி என்று கூறுவர். அவ்வாறே எந்த சநாதனமான அவ்யக்த நிலையை அடைந்த பிறகு மனிதர்கள் திரும்புவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.

அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தியபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம். (பா.உ.)

*அவ்யக்தம் என்பது புலன்களுக்கு எட்டாத அக்ஷரம் என்றால் பழுதுபடாதது. பரப்பிரம்மம் எப்பொழுதுமே புலன்களுக்கு எட்டாததாகவும், பழுதுபடாததாகவும் இருக்கிறது. பரப்பிரமமும் “அவ்யக்தம்” என்று சொல்லப்படுகிறது. அதாவது புலன்களுக்கு எட்டாததே *பரப்பிரம்மம். ஆனால் இரண்டுக்கும் உள்ள பொருள் வேற்றுமையை நாம் கவனிக்க வேண்டும்.  பிரகிருதி, (படைப்பு, இயற்கை)  அழியும் தன்மை (க்ஷரம்) உடையது. பிரம்மமோ *அக்ஷரம் (அழியாதது).

பிரகிருதியில் (இயற்கைப் படைப்பு) ஒடுங்குபவைகள் திரும்பவும் தோன்றுகின்றன.
பிரம்மத்தில் ஒடுங்குபவைகள் தோற்றத்திற்குத் திரும்பி வருவதில்லை. அதாவது  பிரம்மத்தோடு இணைந்த உயிர்கள் மீண்டும் பிறப்பதில்லை; பிரம்மத்திற்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லை! என்பதால் அது #பரமபதம் எனப்படுகிறது. அதாவது பரமாத்மாவின் இருப்பிடமான பரமபதத்தை அடையும் உயிர்கள் பரமாத்மாவோடு இணைகின்றன. எனவே அவை மீண்டும் பிறப்பதில்லை. (சு.சி.)

*சுலோகம் 8-22*: _அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் எந்த பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ, எந்த சத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவினால் இந்த அகில உலகமும் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறதோ, அந்த சநாதன அவ்யக்தனான பரம புருஷனோ, அனன்ய பக்தி (வேறு எதிலும் நாட்டமில்லாத பக்தி) யினாலேயே அடையத் தக்கவர்.

வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா! அந்தப் பரமபுருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான். (பா.உ.)

*சுலோகம் 8-23*: _அர்ஜுனா! எந்தக் காலத்தில் (வழியில்) உடலை நீத்துவிட்டுச் செல்கின்ற யோகியர் திரும்பிவராத பெருநிலையையும், மேலும் எந்த வழியில் செல்கின்ற யோகிகள் திரும்பி வரும் நிலையையும் (மறுபிறப்பு என்னும் நிலையையும்) அடைகிறார்களோ, அந்தக் காலத்தை (இரண்டு வழிகளையும்) சொல்கிறேன்.

யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன். (பா.உ.)

*சுலோகம் 8-24*: _எந்தவழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை இருக்கிறாரோ, சுக்லபக்ஷ அபிமான தேவதை இருக்கிறாரோ, உத்தராயணத்தின் ஆறுமாதங்களின் அபிமான தேவதை இருக்கிறாரோ, அந்த மார்க்கத்தில் இறந்தபிறகு செல்கின்ற பிரம்மத்தை அறிந்த யோகிகளான ஜனங்கள், மேலே கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுப் பிரம்மத்தை அடைகிறார்கள்.

தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தையடைகிறார்கள். (பா.உ.)

*சுலோகம் 8-25*: _எந்த மார்க்கத்தில் புகைக்குரிய தேவதை இருக்கிறாரோ, ராத்திரிக்குரிய தேவதை இருக்கிறாரோ, அப்படியே கிருஷ்ணபக்ஷத்துக்குரிய தேவதை இருக்கிறாரோ, தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்களுக்குரிய தேவதை இருக்கிறாரோ, அந்த மார்க்கத்தில் பற்றுடன் கர்மங்களைச் செய்கின்ற யோகி இறந்தபின், மேற்கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுச் சந்திரனுடைய ஒளியை அடைந்து சுவர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்துவிட்டுத் திரும்பி வருகிறார்.

புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான். (பா.உ.)

*சுலோகம் 8-26*: _ஏனென்றால், உலகிற்கு இந்த இரண்டு விதமான சுக்ல, கிருஷ்ண – அதாவது, தேவயானம், பித்ருயானம் எனப்படும் வழிகள் என்றும் உள்ளனவாகக் கருதப் படுகின்றன. இவற்றுள் ஒன்றின் வழியாகச் செல்கின்றவன் (அர்ச்சிர் மார்க்கத்தின் மூலம் செல்கிற யோகி) எதிலிருந்து திரும்பிவர வேண்டியதில்லையோ, அந்த பரமகதியை அடைகிறான். மற்றொரு வழியாகச் செல்பவன் (தூம மார்க்கத்தில் செல்கின்ற பற்றுடன் கர்மம் செய்கின்ற யோகி) மறுபடியும் திரும்பி வருகிறான். அதாவது பிறப்பையும் இறப்பையும் அடைகிறான்.

உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந்தருவது. (பா.உ.)

 24, 25, 26 _ இம்மூன்று சுலோகங்களின் உட் கருத்து சிந்தனைக்குரியன. மரணத்தின் வாயிலாக மறு பிறப்புக்கு போகும் ஜீவன்கள், தேவயானம், பித்ருயானம் _ என்னும் இரு மார்க்கங்களில் செல்கின்றனர். அவைகள் முறையே ஜோதிர் மார்க்கம்(ஒளி) என்றும், தூம மார்க்கம்(இருள்) என்றும் கூறுவதுண்டு. முந்தையது ஒளி நிறைந்தது; பிந்தியது இருள் சூழ்ந்தது. ஒன்று படிப்படியாக ஜீவனை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவல்லது; மற்றது மனிதனை நெடுங்காலம் இடை நிலையிலும், கடை நிலையிலும் வைத்துவிடுகிறது.


இனி இவ்விரண்டு வழிகளுக்கும் இந்த சுலோகங்களில் வந்துள்ள சொற்களுக்கு அப்படியே பொருள் (literal meaning) எடுத்துக்கொண்டால் அது குறைபாடானது! அது எப்படி என்றால்_ அக்னி, ஜோதி நிறைந்த சூழ்நிலையில் மரணம் அடைபவன் மேன்மை அடைகிறான்; புகையால் மூடப்பட்டு மரணமடைபவன் கீழ்மையடைகிறான் என்பது சுலோகம் கூறுவது சுலோகத்தின் பொருளை அப்படியே எடுத்துக் கொண்டால், நாம் இந்தச் சூழ்நிலையை நமக்கு ஏற்றவாறு மிக எளிதாக மாற்றிவிடலாம். ஒருவன் உயிர் துறக்கும் பொழுது வீட்டில் கொழுந்துவிட்டு எரியும் மின்விளக்கும், ஜோதியும் நிறைந்திருக்கும்படி சுலபத்தில் செய்துவிடலாம். ஆனால் அதை முன்னிட்டு மறுப்பிறப்பில் மேன்மை வந்தமைந்து விடுமா? _ என்றால் அது சிறிதும் பொருந்தாது.


அடுத்தபடியாகப் பகலில் மரணமடைபவனுக்கு ஜோதிர் மார்க்கம் என்றும்; இரவில் சென்றவனுக்கு இருள் மார்க்கம் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைக்கு ஆகாய விமானத்தின் துணை கொண்டு என்றென்றும் சூரியன் தென்படும் இடங்களில் சென்று வசிக்கலாம். பின்பு அதனால் மேலான பிறவி வருமா? என்றால் அதுவும் பொருந்தாது.


வளர்பிறையில் வரும் சுக்கிலபட்சம் மேன்மையானது. தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்சம் கீழ்மைக்குரியது. இனி உத்திராயணம் சூரிய வெளிச்சம் நிறைந்தது; தட்சிணாயணம் இருள் நிறைந்து. ஆனால் ஆகாய விமானத்தின் துணை கொண்டு மனிதன், தட்சிணாயன காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்அமெரிக்காவுக்கும் போய்விடுவான் என்றால்; அதே தட்சிணாயனம் அவனுக்கு புண்ணியகாலம் ஆகிவிடும்.


ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொழுது அங்கே அதிகமாக இருக்கிறது. எனவே மனிதன் அடையும் மேன்மையும், கீழ்மையும் மரணத்தின் பொழுது அவனுக்கு அமையும் காலத்தையும், இடத்தையும், சூழலையும் முன்னிட்டே! என்று கிருஷ்ணர் கூறியதாக மேலோட்டமாக பொருள் கொள்ளக்கூடாது! என்பது தெளிவாகிறது.


வெளிச்சத்திற்கு அறிகுறியாகும் காலம், இடம்; இருளுக்கு அறிகுறியாகும் காலம், இடம் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டும் ஆத்மதத்துவத்திற்கு வடிவமாக அமைந்ததாகும்.

படிப்படியாக ஞானத்தில் மேல்நிலைக்குப் போகும் ஜீவன், ஆத்ம பிரகாசமடைகிறது. ஞானநிலையில் முன்னேற்றமடையாது, அப்படியே ஞானநிலையில் முன்னேற்றமின்றி இருக்கும் ஜீவன், படிப்படியாக கீழநிலைக்குச் செல்கிறது. இதையே இருளில் மறையும் உயிர்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

வாழ்நாளில் ஒரு ஜீவன் அடைந்துள்ள மேன்மையை அல்லது கீழ்மையை அவனது மரணம் விளக்குகிறது. அணையப் போகும் தீபம் சுடர் விடுவது உண்டு. நல்லோர்கள் அவ்வாறு தன் உடலை நீத்து போகும்பொழுது, சிந்தனையில் தெளிவு வருவதுண்டு.

அவ்வாறே சிந்தனையின் தெளிவுக்கு ஏற்றவாறு, அதை அக்னி, ஜோதி, பகல், கிருஷ்ணபக்ஷம், உத்தராயணம் என்று யோகிகள் இயற்கையோடு ஒப்பிட்டு வகைப்படுத்தினார்கள். எனவே இது ஒரு உவமையை போன்று சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போக்கில் மனிதனின் சிந்தனையின் மறைவுக்கு, உயிரை விடும் பொழுது அவனது சிந்தனை எந்த அளவு மறைகிறதோ, அந்த சிந்தனையின் மறைவுக்கு ஏற்றபடி_ புகை, இரவு, கிருஷ்ணபட்சம், தட்சிணாயனம் _ என்று அவர்கள் வகைப்படுத்தினார்கள்.

பல ஜென்மங்களில் மேன்மேலும் ஆத்ம ஞானபிரகாசம் அடைபவர்கள் மேலானவர்கள். பல ஜென்மங்கள் எடுத்தாலும் ஆத்மப் பிரகாசம் இல்லாமல் கீழ் நிலையில் இருப்பவர்கள் கீழோர். மனதில் ஆத்மஞானம் இன்றி, கீழான உலகியல் விஷயங்களிலேயே உழலுவோர் கீழானவர்கள்! என்பதே ஸ்ரீகிருஷ்ணர் கூறியது. (சு.சி.)

*சுலோகம் 8-27*: _பார்த்தா! இந்த இரண்டு மார்க்கங்களையும் தத்துவரீதியாக அறிந்த எந்த யோகியும் மோகம் அடைவதில்லை. அவன் பற்றற்ற நிலையிலேயே சாதனையைச் செய்வான். ஆசையில் சிக்கிக் கொள்ளமாட்டான். ஆகையால், அர்ஜுனா! எல்லாக் காலங்களிலும் சமபுத்தி என்னும் யோகத்தோடு கூடியவனாக ஆகிவிடு. எப்பொழுதும் என்னை அடைவதற்காகவே சாதனைகளைச் செய்பவனாக இரு.

இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுனா, எப்போதும் யோகத்தில் கலந்திரு. (பா.உ.)

*சுலோகம் 8-28*: _யோகியானவன் இந்த ரகசியத்தைத் தத்துவரீதியாக அறிந்து, வேதங்களை அத்தியயனம் செய்வதிலும் யாகங்களைச் செய்வதிலும் தவம் செய்வதிலும் தானங்கள் செய்வதிலும் எந்த புண்ணியத்தின் பயன் ஏற்படுமென்று சொல்லப் பட்டிருக்கிறதோ, அந்த எல்லாவற்றையுமே ஐயமின்றிக் கடந்து செல்கிறான். மேலும் என்றுமுள்ள பரமபதத்தை அடைகிறான்.

இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான். (பா.உ.)

இதுவரை ‘அக்ஷர ப்ரஹ்ம யோகம்’ என்ற எட்டாவது அத்தியாயம் தொடர்பான பதிவுகள் நிறைவுற்றன.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

உதவி:

(பா.உ.) மகாகவி பாரதியார் உரை
(சு.சி.) சுவாமி சித்பவானந்தர் உரை
(ஸ்ரீ.பி.) ஸ்ரீல. பிரபுபாதா உரை

Leave a comment