பகவத்கீதை – எட்டாம் அத்தியாயம் – அக்ஷர ப்ரஹ்ம யோகம் – 3


ஞானத்தேடல் பதிவு எண்: 050 நாள்: 06.09.2022

பகவத்கீதை – எட்டாம் அத்தியாயம் – அக்ஷர ப்ரஹ்ம யோகம் – 3

*சுலோகம் 8-11*: _வேதமறிந்த வித்துவான்கள் எந்த சத் சித் ஆனந்தமயமான பரமபதத்தை அழிவில்லாதது என்று கூறுகிறார்களோ, பற்று நீங்கிய முயற்சியுள்ள சந்நியாசிகளான மகாபுருஷர்கள் எதில் புகுகிறார்களோ, எந்தப் பரமபதத்தை விரும்புகின்ற பிரம்மசாரிகள் பிரம்மசரிய நெறியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். (பா.உ.)

அழியும் இயல்புடைய இப்பிரபஞ்சத்தினுள்ளே அதற்கு ஆதாரமான நிலையான பொருள் ஒன்று உள்ளது. அது குணம் குறியற்ற நிர்குணப் பிரம்மம். #அக்ஷரம் அல்லது அழிவற்றது எனப்படுவதும் அதுவே. நிராசையில்(ஆசையற்று) நிலைநின்று பிரம்மச்சரிய விரதத்தை முறையாக கடைபிடிப்பவர்கள் சந்நியாசிகள் ஆகின்றனர்.
பாதரசம் பூசிய கண்ணாடியில் பிரதிபிம்பம் நன்றாக தெரிவதைப் போன்று, பிரம்மச்சரியத்தை நன்றாக கடைப்பிடிக்கின்றவர்களின் உள்ளத்தில் அந்த பிரம்மத்தைப் பற்றிய ஞானம் உண்டாகிறது. நைஷ்டிகப் பிரம்மசாசாரிகளிடத்தில் (தீவிர பிரம்மச்சாரிகள்) “மேதா” என்னும் நாடி உண்டாகிறது. அது பேரறிவையும் பிரம்ம ஞானத்தையும் வளர்க்க வல்லது. (சு.சி.)

*சுலோகம் 8-12&13*: _புலன்களின் எல்லா வாயில்களையும் அடைத்துவைத்து (அதாவது, வெளிவிஷயங்கள் புகாமல் தடுத்து நிறுத்தி), மனத்தையும் இதயத்தில் நிலையாக நிறுத்தி, (பின் அவ்வாறு வசப்படுத்தப்பட்ட மனத்தால்) பிராணனை உச்சந்தலையில் நிலைபெறச் செய்து, பரமாத்மா சம்பந்தமான யோகதாரணையில் நிலைத்து நின்று, எவன் ‘ஓம்’ என்னும் ஒரே எழுத்தான பிரம்மத்தை உச்சரித்துக் கொண்டு, அந்த ‘ஓம்’ என்ற ஏகாக்ஷரத்தின் பொருளான நிர்குணப் பிரம்மமான என்னைச் சிந்தனை செய்து கொண்டு, இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ, அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான்.

எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதிபெற்று, “ஓம்” என்ற பிரம்ம எழுத்தை ஒன்றையே ஜபித்துக் கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகின்றான். (பா.உ.)

யோகி ஒருவனுக்கு உடல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது நிலை இதுவேயாகும்.
நதியானது கடலைச் சேருவதைப் போன்று, யோகியின் உடைய வாழ்வு, பரமாத்மாவை பற்றிய ஞானமாக மாறி அமைகிறது. அதாவது உடல் வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. அப்பொழுது ஐம்பொறிகளை பற்றிய உணர்ச்சிகளும் யோகிக்கு உண்டாவதில்லை. உடல் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருந்த போதும், உணர்ச்சிகள் முரட்டுத்தனமாக வெளி உலகில் உலவுவதில்லை.

தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் ஐம்புலன்களும் எவ்வாறு அமைதியுறுகின்றனவோ, அவ்வாறே யோகியின் உணர்ச்சிகளும் ஒடுங்கி விடுகின்றன. அந்தி சாயும் வேளை வரும் பொழுது, தன் கூட்டைத் தேடி பறவை வருவதை போன்று, யோகியின் மனதும் மரண காலத்தில் இதயத்தில் அடங்குகிறது. (யோகியர் அல்லாத அவர்களுடைய உள்ளம் உலகப் பொருள்களில் பற்றுவைத்து அலைகிறது). அப்பொழுது உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு உறுப்பையும் விட்டு விலகுகிறது. பிரயாணி ஒருவன், தனது பயணத்தைத் தொடங்க ஏதாவது ஒரு வாகன நிலையத்துக்கு வந்து சேருவதைப் போன்று, பிராணன் யோகியின் உச்சந்தலைக்கு வருகிறது. எனவே யோகியரது உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு மிஞ்சியிருக்கும். (யோகி அல்லாதவர் உடைய பிராணன் வாய் அல்லது மூக்கு வழியே வெளியேறுவது வழக்கம்).

ஈஸ்வர சிந்தனை (பரம்பொருளின்) வலுத்து ஈஸ்வர சொரூபத்தில் மனது  ஒன்றிணைந்திருப்பதே “யோக தாரணை” ( யோகத்தில் நிலைத்து நிற்றல்) ஆகும்.
அப்பொழுது *ஓம் என்ற ஓசை ஒன்றே ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓம்” என்ற ஓசையின் வடிவினனாகிய *பரமாத்மாவின் திவ்ய வடிவம், அளவற்ற ஜோதி, பேரின்பம், “சித் அம்பலம்” என்ற நிலையை யோகி அப்பொழுது அடையப் பெறுகிறார். (யோகிக்கு உயிர் பிரியும் நிலை).
பின்னர் மற்றவர்களது உடலைப் போன்றே யோகியின் உடலும் “சடலம்” என  துக்கப்படுகிறது. ஆனால் யோகியானவன் வீடுபேற்றை அடைந்து என்றென்றும் புகழோடு  லைத்திருக்கிறான். திருவள்ளுவ நாயனாரும் தனது திருக்குறளில், இக்கருத்தைக் கூறியுள்ளார்.

*திருக்குறள்
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”
(கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

__ ஐம்புலன்களின் ஆசையையும் துறந்து, மெய்யான ஒழுக்க நெறியில் நிலைநின்றவர்கள் (யோகியர்கள்) மறுபிறப்பின்றி(முக்தியடைந்து) எக்காலத்திலும் புகழோடு வாழ்வார் என்கிறார்! *திருவள்ளுவர்.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்_ ” ஜீவனானது இவ்வுலகத்தை விட்டு போகும் தருணத்தில், கடைசியாக எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்குமோ, அதற்குரிய உடலில் மறுபடியும் வந்து பிறக்கின்றது. ஆனால் பக்தி சாதனை மிகவும் அவசியம் எனத் தோன்றுகிறது. இடையறாது யோகத்தைக் கடைப்பிடிப்பதால், உலகப் பொருட்களை பற்றிய எண்ணம் மனதில் உண்டாவதில்லை; ஈஸ்வரனைப் பற்றிய சிந்தனையே ஆத்மாவிடம் குடிகொள்ளும். சாகும்தறுவாயிலும் கூட அந்த சிந்தனை நீங்குவதில்லை”. _ பரமஹம்சர். (சு.சி.)

*சுலோகம் 8-14*: _அர்ஜுனா! எவன் வேறு சிந்தனையற்று எப்பொழுதும் இடைவிடாமல் புருஷோத்தமனான என்னை நினைக்கிறானோ, எப்போதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட அந்த யோகி என்னை எளிதில் அடையமுடியும்.

நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா, (பா.உ.)

மகாபாரதத்தில் சகாதேவனின் பக்திக்கு கட்டுப்பட்டு ஸ்ரீகிருஷ்ணர் அவனிடம் கட்டுண்டார். அதைப்போல பரம்பொருளை உண்மையான பக்தியோடு இடையறாது பரம்பொருளின் நினைவே சுவாசமாக, எந்நேரமும் உள்ளத்தில் பரந்தாமனையே துதித்துக் கொண்டிருக்கும் அந்த மனம் ஒருநிலைப்பட்ட யோகியால் எளிதில் பரம்பொருளின் அருளைப் பெற முடிகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்_ ” பகவானை நோக்கி நாம் ஓர் அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கிப் பத்தடி வருகிறான்”. பரமஹம்சர். (சு.சி.)

*சுலோகம் 8-15*: _மிக உயர்ந்த ஸித்தியை அடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்துவிட்ட பிறகு, துன்பங்களுக்கு உறைவிடமானதும் நிலையற்றதுமான மறுபிறவியை அடைவதில்லை.

என்னை யடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறுபிறப்பை யடையமாட்டார். (பா.உ.)

மனம் பக்குவப்பட்ட மஹாத்மாக்கள் அதாவது ஐம்புலன்களையும் வென்று, பரமாத்மாவின் நினைவிலேயே எப்பொழுதும் வாழ்ந்திருக்கும் புனிதமான ஆத்மாக்கள்,
பரம்பொருளை அடைந்து, துன்பத்திற்கு இருப்பிடமும், நிலையற்றதுமாகிய பிறவி என்ற துன்பத்தில் மீண்டும் உழலுவதில்லை. அதாவது மனம் பக்குவப்பட்ட புனித ஆத்மாக்கள் என்னை அடைந்த பின் மீண்டும் மறுபிறவி எடுப்பதில்லை! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. (சு.சி.)

*சுலோகம் 8-16*: _அர்ஜுனா! பிரம்மலோகம் வரை உள்ள எல்லா உலகங்களும் அழிந்து உண்டாகும் தன்மை உடையன. அதாவது, அந்த லோகங்களை அடைந்தாலும் திரும்பவும் உலகில் பிறக்க வேண்டும். ஆனால், குந்தியின் புதல்வனே! என்னை அடைந்த பின்னர் மறுபிறவி கிடையாது. ஏனென்றால் நானோ காலத்தைக் கடந்தவன். இந்தப் பிரம்மலோகம் முதலியன எல்லாம் காலவரைக்கு உட்பட்டு அழிவன.

அர்ஜுனா! பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை. (பா.உ.)

கர்ம யோகி, ஞான யோகி, ஹட யோகி போன்ற எல்லாவித யோகிகளும், காலப் போக்கில் பக்தி யோகம் எனப்படும் கிருஷ்ண உணர்வின் பக்குவ நிலையை அடைந்தாக வேண்டும். அதன் பின்னரே, அவர்கள் கிருஷ்ணரது தெய்வீக இருப்பிடத்தை அடையவும் திரும்பி வராமல் இருக்கவும் முடியும். ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகங்களான தேவலோகங்களை அடைபவரும், மீண்டும் பிறப்பு இறப்பிற்கு உட்படுகின்றனர். எவ்வாறு பூவுலகில் உள்ளோர் உயர் உலகங்களுக்கு ஏற்றம் பெறுகின்றனரோ, அதுபோலவே, பிரம்மலோகம், சந்திரலோகம் மற்றும் இந்திரலோகத்தைச் சேர்ந்தவர்களும் பூவுலகிற்கு வீழ்ச்சியடைகின்றனர். சான்தோக்ய உபநிஷத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பஞ்சாக்னி-வித்யா எனும் யாகம், பிரம்ம லோகத்தை அடைவதற்கு உதவும். ஆனாலும் பிரம்ம லோகத்தில் அவன் கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ளாவிடில், மீண்டும் அவன் பூவுலகிற்கு திரும்ப வேண்டியதுதான். மேலுலகங்களில், கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்து முன்னேற்றம் அடைபவர்கள், படிப்படியாக மேன்மேலும் உயர்ந்த லோகங்களை அடைந்து, இறுதியில் பிரபஞ்சத்தின் பிரளயத்தின் போது நித்தியமான ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுகின்றனர். (ஸ்ரீ.பி.)

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

உதவி:

(பா.உ.) மகாகவி பாரதியார் உரை
(சு.சி.) சுவாமி சித்பவானந்தர் உரை
(ஸ்ரீ.பி.) ஸ்ரீல. பிரபுபாதா உரை

Leave a comment