பகவத்கீதை – எட்டாம் அத்தியாயம் – அக்ஷர ப்ரஹ்ம யோகம் – 2


ஞானத்தேடல் பதிவு எண்: 049 நாள்: 05.09.2022

பகவத்கீதை – எட்டாம் அத்தியாயம்அக்ஷர ப்ரஹ்ம யோகம் – 2

*சுலோகம் 8-7*: _ஆகையினால், அர்ஜுனா! நீ எல்லாக் காலங்களிலும் இடைவிடாது என்னையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிரு! போரும் புரிவாயாக! இவ்வாறு என்னிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட மனம்புத்தியுடன் கூடியவனாக, நீ ஐயமின்றி என்னையே அடைவாய்._

இறைவனைத் துதிப்பவர்கள் பலர் உலக கடமைகளை புறக்கணிக்கின்றனர். உலக விவகாரங்களைச் செய்பவர்கள் பலர் கடவுளை மறக்கவும் செய்கின்றனர். ஈஸ்வர சிந்தனையும், தொழில் புரிதலும் ஒன்றோடொன்று பொருந்தாது! என்பது அவர்களது எண்ணம். ஆனால் உடலால் அவரவர் கடமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நமது சித்தத்தை இறைவனிடம் செலுத்த வேண்டும்! என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் தத்துவம்.

இத்தகைய பயிற்சி இவ்வுலகம், மறுவுலகம் இரண்டிற்கும் நன்மை பயப்பதாகும். அதாவது நாம் இவ்வுலக கடமைகளைச் செய்து கொண்டே இருக்கும் பொழுதும் நமது சிந்தனையை இறைவனிடம் வைக்க வேண்டும். நமது கரங்களால் நாம் ஒரு செயலை செய்துகொண்டிருக்கும் பொழும் நமது நாவால் பகவானின் நாமத்தைத் துதித்துக் கொண்டே இருக்கலாம்.

*சுலோகம் 8-8*: _அர்ஜுனா! பகவானைத் தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு, வேறு விஷயங்கள்பால் செல்லாத மனத்தினால் பகவானையே சிந்தித்திருக்கும் மனிதன் மிகவும் உயர்ந்த ஒளிபொருந்திய தெய்விகமான புருஷனையே, அதாவது, சாட்சாத் பரமேசுவரனையே அடைகிறான். இது நியதி._

நாம் வழிபடும் தெய்வத்தைப் பற்றிய தியானத்தை வாழ்நாள் முழுவதும் விடாது திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பதே “அப்பியாச யோகம்” எனப்படுகிறது. சூரியனைப் போன்று சுயமாகப் பிரகாசம் உடையவன் தேஜோமயமான புருஷன் எனப்படுகிறான். அவன் “புரி” என்னும் தேகத்திலே எழுந்தருளியிருப்பதால் “புருஷன்” (இறைவன்)எனப்படுகிறான்.

அதாவது நம் உடலில் குடியிருக்கும் இறைவனே, *பரம்பொருள். அவரையே இங்கே *புருஷன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். நாள்தோறும் இறைவனை எப்பொழுதும் ஒழுங்காக நினைக்க, நினைக்க மனிதனுக்குத் தன்னுடலைப் பற்றிய ஞாபகம் குறைந்து போகிறது.

ஒரு மனிதனின் மரணத்தின் போது இருக்க வேண்டிய மனநிலையைப் பற்றி 9_13 வது ஸ்லோகங்கள் வரை விளக்கப்படுகிறது.

*சுலோகம் 8-9*: _எந்த மனிதன் எல்லாமறிந்தவரும் அநாதியானவரும் (தொன்மையானவரும்) எல்லாவற்றையும் ஆள்பவரும் நுண்ணியதைக் காட்டிலும் மிகவும் நுண்ணியர் ஆனவரும் எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவரும் சிந்தனைக்கெட்டாத வடிவுடையவரும் சூரியனைப் போன்று எப்பொழுதும் சைதன்யப் பிரகாச வடிவானவரும் அவித்யைக்கு மிகவும் அப்பாற் பட்டவரும் சுத்த ஸத் சித் ஆனந்த மயமானவரும் ஆன பரமேசுவரனை நினைக்கிறானோ

கவிம் புராணமநுஸா²ஸிதாரமணோரணீயாம்ஸமநுஸ்மரேத்³ய: |
ஸர்வஸ்ய தா⁴தாரமசிந்த்யரூபமாதி³த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்

இத்தகைய உயர் நிலையில் மனதையும், பிராணனையும் வைத்து உடலைவிட்டவனுக்கு பரம்பொருளோடு ஒன்றிணைவது அல்லது “பிரம்ம நிர்வாணம் அடைதல்” (முக்தி) சாத்தியமாகிறது. அதற்காக “அப்பியாச யோகம்” உறுதியாகப் அதற்கு நாள்தோறும் சிந்தையில் வைக்கவேண்டிய இஷ்ட தெய்வத்தின் அஷ்ட குணங்கள் (எட்டு குணங்கள்) இங்கே வர்ணிக்கப்படுகின்றன.

  1. *கவி _ சர்வக்ஞன், அனைத்தையும் அறிபவன் எவ்விடத்திலும் எவ்வுயிர்க்கும் அறிவுக்கு அறிவாக, நுண்ணுணர்வாக இருக்கும் இறைவன்.
  2. *புராணன் __ பழையவன், பரமாத்மாவுக்கு முன்னவன் யாரும் இல்லை.(பரமாத்மாவே முதலாவர், அனைத்துமானவர்)
  3. *அனுசாஸிதாரம்__ உலக நடைமுறை என்ன போக்கில் இருக்க வேண்டும் என்று ஆணையிடுபவர்.
  4. *அணோரணீயாம்ஸம் _ சூட்சுமத்தில் மிக சூட்சுமம், நுணுக்கரிய நுண்மையானவன்.
  5. *ஸர்வஸ்யதாதாரம் _ தோன்றிய யாவற்றிற்கும் இருப்பிடமாக இருப்பவன். கானல் நீருக்கு கானல் இருப்பிடமாவதைப் போன்று, அவனிடத்திலிருந்து தோன்றிய உலகிற்கு அவனே இருப்பிடமாகிறான்.
  6. *அசிந்த்யரூபம் __ சித்தியடையாத சித்தத்தால் அவனது வடிவம் கிரகிக்க முடியாதது. ( அதாவது சித்தியடைந்த உள்ளத்தோடு இருப்பவர்களாலேயே பரமாத்மாவின் வடிவத்தை கிரகிக்க முடியும்.)
  7. *ஆதித்யவர்ணம் _ சூரினுடைய நிறம் ஒருபோதும் மாறாதது; சூரியன் உதிப்பதும் இல்லை; அஸ்தமனமாவதில்லை; நமது கண்களுக்கே அவ்வாறு தோன்றுகிறது. அதைப் போன்றே #பரமாத்மா என்றென்றும், எங்கும் நிறைந்திருப்பவர். அவரிடத்தில் மாறுதல் ஒன்றும் ஏற்படுவது இல்லை.
  8. *தமஸபரஸ்தாத் _ மேகம் சூரியனை ஒருநாளும் மறைப்பதும் இல்லை; இங்கிருந்து பார்க்கையிலேயே நமது கண்களுக்கு அவ்வாறு தெரிகிறது. அதை போல அஞ்ஞான இருள் பரமாத்மாவை பாதிப்பது இல்லை.

*சுலோகம் 8-10*: _பக்தியோடு கூடிய அந்த மனிதன் இறக்கும் தறுவாயிலும் யோகத்தின் வலிமையால் புருவங்களின் மத்தியில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, மேலும் அசையாத மனத்தினால் நினைத்துக் கொண்டு, அந்தத் திவ்விய ரூபத்தோடு கூடிய மேலான புருஷனான பரமாத்மாவையே அடைகிறான்.

ப்ரயாணகாலே மநஸாசலேந ப⁴க்த்யா யுக்தோ யோக³ப³லேந சைவ |
ப்⁴ருவோர்மத்⁴யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||

இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.

9+10. ” முற்றும் உணர்ந்தவனை, தொல்லோனை, அனைத்தையும் ஆள்பவனை, அணுவுக்கும் நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாதவனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும், உறுதியான மனத்தோடும், யோகத்தோடும் புருவத்தின் மத்தியில் பிராணன் முழுவதையும் வைத்து மரண காலத்தில் யார் நினைக்கிறானோ, அவன் அத்திவ்விய பரம புருஷனை அடைகிறான்”.

*_புருவங்களுக்கு மத்தியில் *பிராணனைவைத்தல் _*


உலக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அஞ்ஞானி (ஞானமற்ற சாதாரண மனிதன்) ஒருவனுக்கு, தனது இறுதி இறுதிக்காலத்தில் பிராணன் நவதுவாரங்களின் வழியே தேகத்தை விட்டு பிரிகிறது.


ஞானிக்கோ அது புருவ மத்தியில் நின்று உச்சந்தலையில் பிரம்மரந்தரத்தின் வழியாக பிராணன்(உயிர்) வெளியேறுகிறது.

(இத்தொடரின் முன் பதிவு ஒன்றில் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு உச்சந்தலையில் இருக்கும் softspot வழியாக இறைவன் நம் ஆன்மாவாக இறங்குவது குறித்து சொல்லப்பட்டது இங்கு நினைவுகூரத் தக்கது.)

இந்தச் சுலோகத்தில் பரமாத்மாவின் தன்மையை ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
‘பரமாத்மா முற்றும் உணர்ந்தவர்; அவரே அனைவருக்கும் முதலில் தோன்றியவர்(தொல்லோன்= பழமையானவர்) அனைத்துக்கும் முதலானவர், அனைத்தையும் ஆள்பவர், அணுவை விட நுட்பமானவர், அனைத்தையும் தாங்குபவர், சிந்தனைக்கு எட்டாத வடிவையுடையவர், கதிரவனைப் போன்று ஒளி வீசுபவர், அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவர், இப்படிப்பட்ட பரமாத்மாவைப் பக்தியோடும், உறுதியான மனத்தோடும் யோக பலத்தோடும்; புருவத்தின் மத்தியில் பிராணன் முழுவதையும் வைத்து, மரண காலத்தில் யார் உறுதியோடு நினைக்கிறானோ, அத்தகையவன் மரணத்திற்குப் பிறகு அந்தப் பரம்பொருளையே ( பரமாத்மாவையே) அடைகிறான்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

(விளக்கங்கள் சுவாமி சித்பவானந்தரின் பகவத்கீதை நூலில் இருந்து.)

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

Leave a comment