பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 4


*ஞானத்தேடல் பதிவு எண்: 046 நாள்: 02.09.2022*

*_பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 4_*

*சுலோகம் 7-20*: _ அந்தந்த போகப்பொருட்களில் ஏற்படும் ஆசையினால் அறிவிழந்தவர்கள், தம்முடைய இயல்பினால் தூண்டப்பட்டு, அந்தந்த நியமங்களைக் கைக்கொண்டு மற்ற தேவதைகளைப் புகலாகக் கொள்கிறார்கள் (வழி படுகிறார்கள்)._

பற்பல ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், அவரவர் இயற்கையால் தூண்டப்பட்டு, அதனதற்குரிய ஏற்ற நியமத்தைக் கையாண்டு பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர். பிற தெய்வங்கள் என ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது சிறுதெய்வங்களையே. சர்வேஸ்வரனுக்கு எதுவுமே அந்நியமானவைகள் அல்ல. அவனுடைய சிறு அம்சங்களே “சிறுதெய்வங்கள்” எனப்படுகின்றன. அதாவது பரமாத்மா மட்டுமே எல்லாமும்! என்பதை உணராதவர்கள், சிறுதெய்வங்களை வணங்குகின்றனர். அந்தச் சிறு தெய்வங்களும், பரமாத்மாவின் சிறிய அம்சங்களே.

*சுலோகம் 7-21*: _ எந்தெந்த ஸகாம பக்தன் (பயன்களை அடைய விருப்பம் கொண்ட பக்தன்) எந்தெந்த தேவதையின் ஸ்வரூபத்தைச் சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அந்தந்த பக்தனுக்குச் சிரத்தையை, நான் அந்தந்த தேவதையிடமே அசையாததாகச் செய்கிறேன்_.

எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.

அதாவது நீ எந்த வடிவத்தில் என்னை வணங்கினாலும், உனக்கு அருள் புரிபவன் நானே; நீ எந்த வடிவத்தில் இறைவனே வணங்குகிறாயோ, உனது அந்த பக்தியை நான் அசையாததாக, உறுதியாக்குறேன்! என்கிறார்.

*சுலோகம் 7-22*: _ அந்த மனிதன் அந்தச் சிரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையினுடைய பூஜையைச் செய்கிறான். மேலும், அந்த தேவதையிடமிருந்து என்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, விரும்பிய அந்த போகங்களைச் சந்தேகமின்றி (அவன்) அடைகிறான்._

அர்ஜுனா! உண்மையான உள்ள உறுதியோடு, ஈடுபாட்டுடன் யார் எந்தத் தேவதை ஆராதித்து வழிபட்டாலும், அதன் மூலமாக அவர்கள் ஆசைப்படும் பொருட்களையெல்லாம் அடையப் பெறுகின்றனர். ஆனாலும் அவர்கள் ஆசைப்படும் பொருள்களை, உண்மையில் வகுத்து அவர்களுக்கு வழங்குபவன், பரம்பொருளாகிய நானே! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

*சுலோகம் 7-23*: _ ஆனால், சிற்றறிவு படைத்தவர்களாகிய அவர்களுடைய அந்தப் பயன் அழிவுடையதாக ஆகிறது. அவ்வாறே வேறு தேவதைகளைப் பூஜிப்பவர்கள் அந்த தேவதைகளை அடைகிறார்கள். மேலும், என்னுடைய பக்தர்கள் எவ்விதம் வழிபட்டாலும் முடிவில் என்னையே அடைகிறார்கள்._

தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள்,  தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர், ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்.

நிலைத்த இன்பம்,  நிலையற்ற  இன்பம் _ இவ்விரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களே  “அற்ப அறிவாளர்கள்” ஆகும்.  எனவேதான் ஸ்ரீகிருஷ்ணர் நிலையற்ற இன்பம் எது? நிலைத்த இன்பம் எது?    என்று  அறியாமல், சிறு தெய்வங்களை வழிபடுபவர்கள்  அடையும் பலனும் அற்பமானதே!  என்கிறார் பகவான். 

கடலுக்கு செல்பவன்  அதிலிருந்து  வெறும் மீன்களை மட்டுமே பிடித்து வருபவதும் உண்டு;  ஆனால் கடலில் முக்குளித்து,  முத்துக்களை அள்ளி வருபவர்களும் உண்டு.  எனவே நமது செயல் எதுவோ அதற்கேற்ற பலனே கிடைக்கிறது.  சிறு தெய்வங்களை வழிபடுபவர்கள் அடையும் பலனும் அற்பமானதே. ஆனால் பரம்பொருளாகிய ஆதியந்தம் இல்லாத என்னை வழிபடுபவர்களோ,  என்னையே அடைகின்றனர்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

*சுலோகம் 7-24*: _ அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும் அழிவற்றதும் மேலானதுமான தன்மையை அறிந்து கொள்ளாமல், மனம்புலன்களுக்கு அப்பாற்பட்டவனான ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான என்னை, மனிதனைப்போல பிறப்புள்ளவனாகக் கண்களால் காணக்கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று எண்ணுகிறார்கள்._

என்னுடைய அழிவற்ற, ஒப்பற்ற பர சொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னைப் புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந்தவனாக. நினைக்கின்றனர்.

*சுலோகம் 7-25*: _ என்னுடைய யோகமாயையால் மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் புலப்படுவதில்லை. இந்த அறிவற்ற மனித சமுதாயம் என்னைப் பிறப்பற்றவன் என்றும், அழிவற்ற பரம்பொருள் என்றும் அறிவதில்லை. நான் பிறப்புஇறப்பு உள்ளவன் என்றே எண்ணுகின்றது._

முக்குண மயமான(சத்வ, ரஜோ,தமஸ்) இவ்வுலக படைப்புகள் அனைத்தும் சர்வேஸ்வனின் யோகமாயை ஆகும். சர்வேஸ்வரனை விட்டு மாயை பிரிந்திருக்க முடியாது! என்பதால் அதற்கு யோகம் என்ற அடைமொழி கொடுக்கப்படுகிறது. மேகம் சூரியனை மறைப்பது போன்று பரமாத்மாவினுடைய யோக மாயை அவருடைய அகண்ட சச்சிதானந்த வடிவத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது.

எனவே அறிவற்ற மூடர்களுக்கு பரமாத்மா ஒரு சாதாரண ஜீவன் போன்றே காணப்படுகிறான். ஈஸ்வரனுடைய படைப்பின் விசித்திரம் அந்த பரமேஸ்வரனுக்கும் அவனுடைய பக்தர்களுக்கும் நன்கு விளங்குகிறது.

ஆனால் பரமாத்மாவை அறியாத அறிவிலிகளோ, தனது மதி மயக்கத்தால் பரம்பொருளையே பிறவி எடுக்கும் மனிதர்களைப் போன்றே நினைத்துக் கொள்கின்றனர். இதைத்தான் யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள என்னை எல்லோரும் அறிவதில்லை! பிறவாத அறியாத என்னை இந்த மூட உலகம் அறிவதில்லை! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

*சுலோகம் 7-26*: _ அர்ஜுனா! முன்பே உயிர்வாழ்ந்து காலமாகிவிட்டவையும், இப்பொழுது இருக்கின்றவையும், அவ்வாறே இனித் தோன்றப் போகின்றவையுமான எல்லா உயிரினங்களையும் நான் அறிவேன். ஆனால், சிரத்தையும் பக்தியும் இல்லாத எந்த மனிதனும் என்னை அறிவதில்லை._

அர்ஜுனா! நான் சென்றுவிட்ட உயிர்களையும், இப்போது வாழ்ந்திருக்கும் உயிர்களையும், இனி பிறக்கப் போகிற உயிர்களையும் எல்லாம் அறிவேன்; ஆனால் என்னை யாரும் முழுமையாக அறிந்ததில்லை! என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

*சுலோகம் 7-27*: _ பரதகுலத்தோன்றலே! அர்ஜுனா! உலகில் விருப்புவெறுப்புகளால் உண்டான சுகம், துக்கம் முதலிய இரட்டைகள் வடிவான மயக்கத்தினால் எல்லா உயிரினங்களும் மிகுந்த அறியாமையை அடைகின்றன._

விருப்பு வெறுப்பிலிருந்த உண்டாகும் துவந்துவ மோகத்தால் பிறக்கும் போதே எல்லா உயிர்களும் குழப்பம் அடைகின்றன. (துவந்துவ மோகம் = இருமை மயக்கம்).

விருப்பு, வெறுப்பு என்னும் இரண்டு இயல்புகளும் மனிதனுக்கு நலம் செய்பவர்களைப் போன்று தோன்றி கேட்டையே செய்து வருகின்றன. எனவே அவைகளை “ஹிதச் சத்துருக்கள்” (இதமான எதிரிகள்) என்பது பொருந்தும்.

விருப்பு, வெறுப்பு என்னும் குழப்பத்துக்கு உட்பட்டவர்கள; இம்மை, மறுமை; நன்மை, தீமை என்னும் குழப்பத்திற்கு உட்பட்டவர்கள் உலக இயல்போடு கூடிய அறிவையே உள்ளபடி பெறுவதில்லை.

*சுலோகம் 7-28*: _ ஆனால், பயன் கருதாது சிறந்த செயல்களைப் புரிகின்ற எந்த மனிதர்களுடைய பாவம் நசித்துவிட்டதோ, அந்த விருப்புவெறுப்புகளாலுண்டாகிற இரட்டைகள் வடிவான மயக்கத்திலிருந்து விடுபட்ட உறுதியான நிச்சயத்துடன் கூடிய பக்தர்கள் என்னை எல்லா வகைகளிலும் வழிபடுகிறார்கள்._

பல பிறவிகளில் சுயநலத்தை அகற்றி, புண்ணிய செயல்களெல்லாம் செய்து, விருப்பு வெறுப்பற்ற மன நிலையில், தனது கடமையை சரிவர செய்து, மனதை தூய்மையாக்கி, உறுதியான உள்ளத்தோடு இறைவனை வழிபடுகின்றனர். அவர்கள் இருமை மயக்கத்திலிருந்து விடுதலையடைந்தவர்களாக  ஆகின்றனர்.

.*சுலோகம் 7-29*: _ எவர்கள் என்னைச் சரணமடைந்து மூப்பு, மரணம்இவற்றிலிருந்து விடுபடுவதற்காக முயல்கிறார்களோ, அவர்கள் அந்தப் பிரம்மத்தையும் அத்யாத்மம் முழுவதையும் (ஜீவசமுதாயத்தையும்), அவ்வாறே சம்பூர்ண கர்மத்தையும் அறிந்து கொள்கின்றனர்._

மனிதனின் வாழ்வில் வரும் மூப்பு, மரணம் இதிலிருந்து விடுபடுவதற்குப் பகவானை வழிபட்டு முயற்சி செய்யும் யோகிகள், அதன் பலனாக பிரம்மத்தையும் வாழ்வின் இறுதியைப் பற்றியும், தன் வாழ்வின் செயல்கள் அனைத்தையும் அறிகின்றனர்.

*சுலோகம் 7-30*: _ எவர்கள் அதிபூதம், அதிதைவம், அதியக்ஞத்துடன் கூடியவனாகவும், எல்லாவற்றிற்கும் ஆத்மஸ்வரூபனாகவும் உள்ள என்னை மரணத் தறுவாயிலும் கூட அறிகிறார்களோ, அத்தகைய ஒன்றிய மனத்தோடு கூடிய அவர்கள் என்னையே அறிகிறார்கள்அடைகிறார்கள்_.

பௌதிகத் தோற்றம், தேவர்கள் மற்றும எல்லாவித யாகங்களை ஆள்பவனாகவும், பரம புருஷனாகவும், என்னை அறிந்து, என்னைப் பற்றிய உணர்வுடன் இருப்பவர்கள், மரண நேரத்திலும்கூட பரம புருஷ பகவானான என்னைஅறிய முடியும்.

இந்தப் பதிவுடன் *ஞான விஞ்ஞான யோகம்* என்ற ஏழாவது அத்தியாயம் தொடர்பான பதிவுகள் நிறைவுறுகின்றன.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

***

Leave a comment