பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 3


*ஞானத்தேடல் பதிவு எண்: 045 நாள்: 02.09.2022*

*_பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 3_*


*சுலோகம் 7-12*: _ மேலும், எந்த உணர்வுகள் சத்துவ குணத்தில் இருந்து தோன்றியவையோ, எவை ரஜோ குணத்திலிருந்து தோன்றியவையோ, அவ்வாறே எவை தமோ குணத்திலிருந்து தோன்றியவையோ, அவையனைத்தும் என்னிடமிருந்தே தோன்றியவை என்று அறிந்துகொள். ஆனால், உண்மையில் அவற்றில் நானும், அவை என்னிடமும் இல்லை._

ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றில் எந்த வாழ்க்கை நிலையானாலும், அவை எனது சக்தியால் படைக்கப்படுபவை என்பதை அறிவாயாக. ஒருவிதத்தில் நானே எல்லாம் என்றபோதிலும், நான் சுதந்திரமானவன். நான் ஜட இயற்கையின் குணங்களுக்கு உட்பட்டவனல்ல, மாறாக அவை எனக்குள் அடக்கம்.

பரமாத்மா, முக்குணங்களால் ஆனவரல்ல! ஆனால் அந்த முக்குண மயமான உலகமாக தானே தோற்றமளிக்கிறார். பிரபஞ்சத் தோற்றத்தை விடுத்து, பரமாத்மாவின் தரிசனம் பெறுவதே ஜீவனுடைய இலட்சியம். அதாவது நாம் ஒரு கயிற்றை, பாம்பு என நினைத்துக் கொண்டால், அதன் உண்மையான தோற்றம் என்ன என்று அறிந்து கொள்வது நமது கடமையாக இருக்க வேண்டும். அதைப் போல இந்த பிரபஞ்சம் இறைவனால் ஆனது. அந்தப் பரமாத்மாவின் நிஜ தரிசனம் எதுவென நீ அறிந்து கொள்வதே ஒரு ஜீவனுடைய இலட்சியமாக இருக்க வேண்டும்.

*சுலோகம் 7-13*: _ சாத்விக, ராஜச, தாமச குணங்களின் விளைவுகளான இந்த மூன்று வகையான உணர்வுகளால் இந்த எல்லா உலகமும் (பிராணி சமுதாயமும்) மயக்கம் அடைந்துள்ளன. ஆகையால், இம்முக்குணங்களுக்கு மேற்பட்டவனும் அழிவற்றவனுமான என்னை இந்த உலகம் அறிவதில்லை._

குணங்களின் வேறுபாட்டால் உண்டான விருப்பு, வெறுப்பு ஆகியவைகளின் வசப்பட்டு இருக்கும். மக்கள உலகப் பொருள்களை வெவ்வேறு மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள். உலகப் பொருள்களில் தடைபடாது எங்கும் பரவியிருக்கும் ஆகாயத்தை யாரும் அறிகிறதில்லை.

குணங்களின் வேறுபாட்டால் ஏற்படும் பொருட்களுக்கு இடையில் நிறை பொருளாகப், பேரறிவாக எங்கும் பரவி, அனைத்தையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் சித்சொரூபமான பரம்பொருளை யாரும் அறிகிறதில்லை.

*சுலோகம் 7-14*: _ ஏனென்றால், இந்த உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்விகமான, மிகவும் அற்புதமான, முக்குணமயமான என்னுடைய மாயை கடப்பதற்கு அரிதானது. ஆனால், எவர்கள் என்னையே எப்பொழுதும் புகலாகக் கொள்கிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடந்து விடுகிறார்கள். அதாவது, உலகியலில் இருந்து கரையேறுகின்றனர்._

“தேவ மாயை” என்பது ஈஸ்வரனிடத்திலிருந்து உண்டான மாயாசக்தி. அது அவரது உடலைப் போன்று அமைந்திருக்கிறது. விஷ்ணுவுக்கு “மகாமாயா” என்று ஒரு பெயருண்டு. “மாயையைக் கையாளுதலில் மிகப் பெரியவன்” என்பது அதன் பொருள். அவர் தன் சொரூபத்தை மாயையைக் கொண்டு மறைத்து வைத்திருக்கிறார்.

ஆனால் அவரிடத்தில் அடைக்கலம் புகுகின்றவர்களுக்கு அவர் தன்னைக் காட்டிக் தருகிறார். தன்னுடைய மெய்க்காட்சிக் கிடைக்கும் பொழுது, மாயையின் பொய்க்காட்சி மறைந்துப் போகிறது. கயிற்றின் காட்சியைக் காணும் போது, பாம்பின் பொய்க்காட்சி நமக்கு மறைவதைப் போன்றதே அதுவும். பரமாத்மாவின் மெய்க்காட்சிக் கிடைக்கும் பொழுது, மாயையின் பொய்க்காட்சி அகன்று விடுகிறது.

*சுலோகம் 7-15*: _ மாயையினால் ஞானம் அபகரிக்கப்பட்டவர்களும் (அதாவது அறிவிழந்தவர்களும்), அசுரத் தன்மையைக் கைக்கொண்டவர்களும், மனிதர்களில் தாழ்ந்தவர்களும், இழிவான செயல்களைப் புரிகின்றவர்களுமான அறிவிலிகள் என்னை வழிபடுவதில்லை. அதாவது, அடைய வேண்டிய மேலான கதியாகக் கொள்வதில்லை._

அறியாமல் செயல் செய்வது மூடத்தனம். அந்த அறியாமையினால் நம் அறிவு மூடப்பட்டு இருப்பதால், உணர்ச்சிகளின் அடிமையாக ஆகிவிடுகிறார்கள். உணர்ச்சிமயமாகி விடும்போது அறிவின் துணை மனத்துக்குக் கிடைப்பது இல்லை. காமமும் கோபமும் அவர்களை அசுரத்தனம் கொண்ட வர்களாக ஆக்கிவிடுகிறது. இப்படிப்பட்டவர் இறைவனை வழிபடுவது இல்லை.

*சுலோகம் 7-16*: _பரதகுலச்செம்மலே அர்ஜுனா! உலகியல் பொருட்களைப் பெறவேண்டி வழிபடுபவன், துன்பமடைந்தவன், எனது பேருண்மையை அறிய ஆவலுடையவன், மேலும் மெய்ஞ்ஞானம் பெற்றவன் ஆகிய நான்குவிதமான நற்செயல்கள் செய்கின்றவர்களான பக்தியுடைய மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள்._

உன்னதப்  பேருணர்வாகிய  என்னை  நான்கு  வகையான நன்மக்கள் வணங்குகிறார்கள்: வருத்தப்படுவோர், பொருள்தேடுவோர், ஞானவேட்கையுள்ளோர், ஞானிகள்.

இவர்கள் அனைவரையும் நன்மக்கள் என்று சொல்கிறார் கிருஷ்ணர். ஆனால் நால்வருக்கும் பொதுவாக வேண்டியது பக்தி. நாம் பொதுவாக இறைவனை வேண்டும்போது ஞானத்தைத் தவிர வேறு எதையும் வேண்டக் கூடாது என்ற நமது பெரியோர் சொல்வதைக் கேட்டு வளர்ந்தவர். ஆனால் இந்த நால்வரைப் பிரித்த விதம் கொண்டு நாம் சிந்திக்கலாம்.

வருத்தப் படுவோர் கொள்ளும் வருத்தம் இல்லாமையினாலும் இயலாமையினாலும் ஏற்படக் கூடியது. இந்த நிலையில் பொருளீட்டும் முயற்சியில் கூட இறங்க முடியாது. பொருள்மீது ஆசை கொண்டு உழைப்போரும் ஞான இச்சை கொள்வது அரிது. பொருள் ஆசையைக் குறைப்பவருக்கு ஞான இச்சை வரக் கூடும். அதைப் பின்பற்றி வாழ்பவருக்கு ஞானம் கைக் கூடும். இந்த நான்கு நிலையில் உள்ளவரும் இறைவன் மீது பக்தி என்னும் ஒன்று இருந்தால், அவரவரவருக்கு வேண்டியதை நாடி வழிபட்டால்,  இறைவன் பார்வையில் நல்லவர் என்ற தகுதி பெறுகின்றனர். (NGS)

Bhagavan Sri Krishna says, “They are also beloved. They are devoted to me.”

ஆர்த: — துயருற்றவன்; ஜிக்ஞாஸு: — கேள்வியுடையவன்; அர்த-அர்தீ — ஜட இலாபங்களை விரும்புபவன்; க்ஞானீ — விஷயங்களை உள்ளபடி அறிந்தவன்

*சுலோகம் 7-17*: _அவர்களுள் எப்பொழுதும் என்னிடமே ஒன்றிவிட்ட, வேறொன்றைச் சாராமல் பக்தி செய்கின்ற ஞானியான பக்தன் மிகவும் சிறந்தவன். ஏனெனில், என்னைத் தத்துவரீதியாக அறிகின்ற ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவனும் எனக்கு மிகவும் இனியவன்._

இவர்களில், முழு ஞானத்துடன் எப்போதும் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனே சிறந்தவன்; ஏனெனில், நான் அவனுக்கு மிகவும் பிரியமானவன், அவனும் எனக்கு மிகவும் பிரியமானவன்.

*சுலோகம் 7-18*: _இவர்கள் எல்லோருமே (மேற்கூறப்பட்ட நால்வருமே) சிறந்தவர்களே. ஆனால், ஞானியோவெனில் என்னுடைய ஸ்வரூபமே என்பது என்னுடைய கருத்து. ஏனெனில், என்னிடம் ஒன்றிய மனமும் புத்தியும் கொண்ட ஞானியாகிய பக்தன், மிகவும் உயர்ந்த கதியாகிய என்னையே உறுதியாகப் பற்றி நிற்கிறான்._

இந்த நான்கு தன்மையை உடையவர்களும் எப்பொழுதும் என்னையே துதித்துக் கொண்டே இருப்பதால், இவர்கள் அனைவரும் நல்லவர்களே என்றாலும், ஞானி எனது ஆத்ம சொரூபம்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய ஞானி மிக உத்தம கதியாகிய என்னையே எப்பொழுதும் கடைப்பிடித்து வாழ்கிறான். எனவே அத்தகைய ஞானி அனைவரிலும் மிகவும் சிறந்தவன்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

All these (four kinds of men) are noble, but the sage I consider indeed as My own Self. Unwaveringly is he settled in Me alone as his utmost goal.

*சுலோகம் 7-19*: _பலபிறவிகளுக்குப்பின் கடைசிப்பிறவியில் தத்துவ ஞானம் பெற்ற மனிதன், அனைத்தும் வாசுதேவனே என்று என்னைப் புகலாகக் கொள்கிறான். அத்தகைய மகாத்மா மிகமிக அரிதானவன்._

Krishna says in this stanza, “Even a wise man attains Me only after many births—because a yogi aware of My omnipresence is rare.” These words have a wonderfully cryptic meaning: “Wise men attain Me only after many births, because it is so seldom that even a sage understands that I—as the Indweller in the tiniest atom and in the soul of man—am the Nearest of the near, attainable instantly!” (Paramahamsa Yogananda).

ஞானியாக இருப்பவன் என்றும் நிரந்தரமாக இருப்பது இருப்பது பரமாத்மா மட்டுமே! என்பதை உணர்ந்து, தெளிவடைகிறான். அதை அனுபவபூர்வமாக அவன் உணர்வதற்குப் பல பிறவிகள் அவனுக்குத் தேவைப்படுகின்றன. இறுதியில் பரமாத்மாவே என்றென்றும் நிரந்தரமாக இருப்பவர் என்பதை தெரிந்து ஞானமடைகிறான். காண்கின்ற அனைத்தும் பரமாத்மாவின் வடிவங்களாகவே (சொரூபம்) அவனுக்குத் தெரிகிறது. அப்பொழுதே ஞானம் முழுமையடைகிறது. இத்தகைய பிரம்மஞானி நடமாடும் தேவன் ஆகிறான். இந்த மேலான நிலையை அடைந்த மனிதன் உலகில் அரியவனாவான்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

***

Leave a comment