பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 4 குறிப்புகள்

*ஞானத்தேடல் பதிவு எண்: 047 நாள்: 02.09.2022*

*_பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 4- குறிப்புகள்_*

பகவத் கீதையில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களை மூன்றாகத் தொகுத்து பார்க்கின்றனர்.

அத்தியாயம் ஒன்று முதல் ஆறு வரை ஜீவதத்துவ விளக்கம். மனிதன், ஆத்மா இவை பற்றிய தெளிவைத் தருகின்றன.

அத்தியாயம் ஏழு முதல் பன்னிரண்டு வரை ஈசுவர தத்துவ விளக்கம். இறைவனின் தன்மைகள் பற்றிய விளக்கமாக இவை அமைகின்றன.

அத்தியாயம் பதின்மூன்று முதல் பதினெட்டு வரை பரமாத்ம ஜீவாத்ம ஒற்றுமையைப் பேசுவன.  

வேத வாக்கியமான தத் த்வம் அஸி என்பதை விளக்கும் விதமாக பகவத்கீதை நூல் விளங்குகிறது.

தத் என்றால் அது, த்வம் என்றால் நீ, அஸி என்றால் இருக்கிறாய் என்று பொருள்.

நீ அதுவாக இருக்கிறாய் என்று சொல்வது மனிதன் முயற்சியால் அது எனப்படும் இறைசக்தியாக மாறுவது என்று பொருள்.

இறைசக்தி ஏன் அது என்று சொல்லப்படுகிறது. ?

இதற்கு விளக்கங்கள் நிறைய இடங்களில் உள்ளன.

உதாரணத்துக்கு திருவாய்மொழி பாசுரம் (2.5.10) கூறுவதைப் பார்ப்போம்.

*ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்*
*காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்*
*பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம*
*கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.*

காணுதற்கு அரியவனை அறிவைப் புறம் தள்ளி மனக்கண்ணால் உற்று நோக்கி அவன் அருகாமை பெற்று அவன் அருள் பெறும் யோக வழியினை கைக்கொண்டு அவனை அறிவது மட்டுமல்ல, அவன் தன்மையும் நாம் பெறலாம் என்பதே இது சொல்லும் கருத்து.

இதையே நம் திருமூலரும் தன்னையறிய தனக்கொரு கேடில்லை என்று தொடங்கிப் பாடுகிறார்:

*தன்னையறியத் தனக்கொரு கேடில்லை*
*தன்னையறியாமல் தானே கெடுகின்றான்*
*தன்னையறியும் அறிவை அறிந்தபின்*
*தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தானே
*

எனவே நம் உடலுக்குள் இதயக் குகையில் உறையும் இறைசக்தியை அறிவது என்னும் முயற்சியின் முதல் படி தன்னை அறிவது. இதுவே பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்கள் சொவது.

ஏழாம் அத்தியாயம் முதல் பன்னிரண்டாம் அத்தியாயம் வரை இறைவனின் தன்மையை விளக்குகிறது.

இன்று ஏழாம் அத்தியாயத்தின் கடைசிப் பதிவு பகிரப்பட்டது.

இறைவன் ஆசியால் இம்முயற்சி தொடரட்டும் வாசிப்பவர் ஆதரவுடன்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன். **

Leave a comment