ராமநவமி

முகநூல் சகோதரர் திரு PR நாகராஜன் எழுதியது :

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய ராமநவமி வாழ்த்துகள்🙏

இராமன் என்ற ஒரு மனிதர் இந்த பூமியில் உண்மையில் வாழ்ந்தாரா என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவருடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளையும், அதை அவர் எதிர்கொண்ட விதத்தையும் ஆராய்ந்து தெளிவது, தனி ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு பெரும் வழிகாட்டுதலாக அமைகிறது.

மிகப்பெரிய அரச குடும்பத்தில் மூத்த இளவரசனாக பிறந்திருந்தாலும் ராமன் சந்தித்த நிகழ்வுகள் பெரும்பாலும் துன்பமயமானவை. அழகிலும் குணத்திலும் ஒப்பற்றவளாக விளங்கிய சீதையை மணம் செய்த ராமன், மணமுடித்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இராமன் நினைத்திருந்தால் தனது சிற்றன்னையின் பேராசையை நிராசையாக மாற்றி அமைத்திருக்க முடியும், அரசனாக முடிசூட்டிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் தனது தந்தையின் வாக்குறுதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தனது இளம் மனைவியுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்வதற்கு சிறிதளவும் மனம் தடுமாறாமல் தீர்க்கமான முடிவை எடுக்கின்றான்.

ஒருவர் மீது ஒருவர் உயிரினும் மேலான அன்பினை வைத்திருந்த ராமனும் சீதையும் கானகத்தில் சுகமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட கடினமான சூழலில் தனது அன்பு மனைவி இராவணனால் கடத்தப்பட்ட போது பெரும் குற்ற உணர்வுடன் கூடிய துன்பத்தினை இராமன் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மிகக் கடுமையான சூழலிலும் மனம் சிறிதும் தடுமாறாமல் தன் மனைவியை எப்படி கண்டுபிடிப்பது, காப்பாற்றுவது என்பதைப்பற்றி தெளிவுடன் திட்டமிட்டு செயல்படுகிறான்.

இப்படி தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எல்லாம் சந்தித்து தன் மனைவியை மீட்ட பிறகு பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து அரசமகுடம் சூடிக் கொண்ட பிறகும் கூட அவனுடைய வாழ்க்கையில் துன்பம் சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தனது கர்ப்பிணி மனைவியை காட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழல் வரும் போதும் இந்த உலகிற்கு வழிகாட்ட வேண்டிய தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற தாம் தன்னுடைய குடிமக்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டுமே ஒழிய தனது குடிமக்களின் பழிச்சொல்லுக்கு ஆளாகும் நிலையில் இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சிறிதும் மனம் தடுமாறாமல் தன் உயிரினும் மேலான அன்பு மனைவியை, அதுவும் கர்ப்பிணியான மனைவியை காட்டுக்கு அனுப்ப தீர்மானம் செய்கின்றான்.

இப்படி இராமனுடைய வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருந்த போதும் சற்றும் நிலை குலையாமல் தெளிந்த மனதுடன் அந்த துன்பங்களை எதிர்கொண்டு ஒரு அரசனாக தன் குடி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் ஒரு சிறிதளவும் பங்கம் ஏற்படாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய ராமன் இந்த உலகம் உள்ளளவும் மற்றவர்களுக்கு வழிகாட்டும் விதமாக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டான்.

இராமனின் வாழ்க்கையில் இருந்து தனி ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் யாவை என்றால் எந்த ஒரு சூழ்நிலையிலும் தர்மத்தின் பாதையிலிருந்து ஒரு மனிதன் விலக கூடாது, எவ்வளவு துன்பம் நேரினும் மனம் சமநிலையில் இருந்து தவறாமல் அதை சகஜமாக தெளிந்த மனதுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், ஒரு அரசனாக இருக்கும் பொழுது சாதாரண குடிமகனுக்கு என்ன நீதியை அவன் வழங்குகிறானோ அதே நீதியை தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் வழங்கிட சிறிதளவும் தயக்கமின்றி முடிவெடுக்க வேண்டும், தனது ஆளுகையின் கீழ் வாழ்கின்ற குடிமக்கள் அனைவரையும் சமமானவர்களாக பாவிக்க வேண்டும், எந்த ஒரு சூழ்நிலையிலும் எவரையும் வெறுக்கின்ற மனோபாவம் சிறிதும் இருக்கக்கூடாது இப்படி வாழ்க்கையின் ஆழ்ந்த தத்துவங்களை விளக்குவதுதான் ராமனின் வாழ்க்கை.

புற வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கின்ற மனிதனும் இல்லை தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து கொண்டிருக்கின்ற மனிதனும் இல்லை அதே போல்தான் இன்பமும், துன்பமும். இப்படி காலச் சக்கரம் போல சுழன்று கொண்டிருக்கின்ற இந்த வாழ்க்கையில் கீழ் நிலையில் இருந்தாலும் நடுநிலையில் இருந்தாலும் மேல் நிலையில் இருந்தாலும் மனதை மட்டும் எப்பொழுதும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதே ராமனின் வாழ்க்கை.

Leave a comment