நறுமணம்



🙏🏻 🌹🙏🏻 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

அன்பு என்பது நறுமணம்

அன்புக்கு எதிரான வெறுப்பு ?
அதுவும் மணம் வீசும்.

ஆனால் அது நறுமணம் அல்ல.

சந்தனம் பூசி வரும் மேனியின் வாசம்
நறுமணம் தான்.

வெள்ளை உள்ளத்தைக் கருப்பாக்கிக்
கொண்டு வெளியில் சந்தனம் பூசினால்
நறுமணம் நிச்சயம் வீசாது.

வெளிப்பூச்சு உதவாது
இந்த கருகும் மணத்தை நீக்கிக் கொள்ள.

எனக்கு நறுமணம்தான் பிடிக்கும்.
அந்த நறுமணம் வெளிப்பூச்சாக இல்லாவிட்டாலும்.

எனக்கு வேண்டியது உள்ளொளியின் வாசம்.

உள்ளொளி என்பது ஆன்றோர்களிடம் அபரிமிதம்.
அதற்கு அருள் என்ற ஒன்று உள்ளுக்குள்
ஊற்றாகப் பெருகும் இடமாக ஒன்று இருக்க வேண்டும்.

அருள் என்பது அன்பின் முதிர் நிலை.
முதிர்நிலை எனில் பூ, காய், கனி, அழிவு அந்த வரிசையில் இல்லை.

அருள் கொண்ட மனத்துக்கு அழிவில்லை.
உயிர் என்ற ஒன்று பறவையாய்ப் பறந்த பின்பும்.

அந்த ஆத்மாவின் அருள் என்னும் வற்றாத அன்பு உடலின் மறைவுக்குப் பிறகும் ஒளிவீசும், நலம் புரியும்.

அன்புதான் அருளின் முதற்படி. சின்ன மணமாய் இருப்பினும் இது நறுமணம்.

ஒரு அடி தூரத்தில் கண்ணுக்கு அருகில்
விரலுக்கு மிக அருகில் இருக்கும் நட்புகளில்
இதைத்தான் தேடுகிறேன்.

அதனால்தான் இத்தகைய என் நட்பு வட்டாரம் சிறிய வட்டம்தான்.
இன்னும் கூட சுருங்கி விடும் போலத்தான் தோன்றுகிறது.

மணமுள்ள மலர்களின் பூங்கொத்து போல.

***

எதையும் கட்டுரை போலத்தான் அல்லது கவிதை போலத்தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் செயற்கையானது.

இயல்பாகவும் சொல்லலாம், இப்படிப்பட்டவைகளை.

என் குழந்தைக்கு மற்றவர் அலங்காரம் செய்ய வேண்டாம்.

இயல்பான அழுகைக்கு அலங்காரத்துக்காகக் காத்திருக்க முடியாது.

இதற்கு மேல் விளக்கமில்லை. விளக்க விருப்பமும் இல்லை. எந்தக் கேள்விக்கும் இப்பதிவில் விடையில்லை.


🙏🏻 🌹🙏🏻 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

அன்பின் உச்சம் இவரிடம் உண்டு. இவரிடம் திரு உண்டு, அருள் உண்டு, பிரகாசம் உண்டு, மிகப்பெரிய வள்ளல் இவர். அவர் பாடல் ஒன்று என் ஆறுதலுக்காக:

அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.


🙏🏻 🌹🙏🏻 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

Leave a comment