அரசியலுக்கும் எனக்கும் காத தூரம்

Photo by Hans-Peter Gauster on Unsplash

நாட்டில் ஓட்டுப் போடுவது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது போல என் அரசியல் சிந்தனையையும் நான் வைத்துள்ளேன்.

  • அறிவார்ந்த சிந்தனை,
  • தன்னலம் கருதாத சேவை,
  • பகட்டில்லாத வாழ்க்கை,
  • மக்களை இனம் பிரிக்காத கொள்கை,
  • நேர்மையான ஊழலற்ற செயல்பாடு,
  • தன் சுற்றத்தார் தன் பதவிக் காலத்தில் தன்னால் பெரிய பொருள்வசதி பெறாமல் பாதுகாக்கும் கட்டுப்பாடு,
  • பொருளாதார வசதி இல்லாதவர்களிடம் உண்மையான அக்கறை,
  • நாட்டின் வளங்களைக் காக்கும் சீலம்,
  • தன் சொந்த வாழ்வில் நல்ல உதாரணமாக வாழ்வது,
  • எந்த நிர்ப்பந்தத்திலும் நாட்டுக்கு நல்லதை மட்டும் உண்மையாகப் பேசுவது, இந்திய வரலாற்றை நன்கு அறிந்திருப்பது,
  • இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களையும் எல்லா பிரச்சினைகளையும் அறிந்திருப்பது,
  • மத வேறுபாட்டையும் மீறிய இந்திய கலாசாரத்தின் மீது உண்மையான நம்பிக்கை,
  • சாதியும் மதமும் மத நம்பிக்கையும் மத நம்பிக்கையின்மையும் மனித நேயத்துக்குத் தடையாக வரும்போது தன் சொந்த நம்பிக்கையை நாட்டுக்காக விட்டுக் கொடுத்து நாட்டு நலன் குறித்த சரியான நடவடிக்கை எடுக்கும் மன உறுதி,
  • இப்பெரிய நாட்டின் சமுதாய, பொருளாதார, அறிவியல், கலை, விளையாட்டு, தொழில்துறை வளர்ச்சி இவற்றை அறிந்திருப்பது,
  • அறியும் நாட்டத்தை எப்போதும் வைத்திருப்பது,
  • குடிசைத் தொழில், சிறு தொழில், பெருந்தொழில் இவற்றின் அவசியத்தை உணர்ந்து செயல்படுதல்,
  • பதவிக்கு வரும் ஒவ்வொரு வேட்பாளரும் எடுக்கும் முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து நல்ல பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ளுதல்,
  • ஆட்சிக்கு வந்ததும் தன் கட்சி உறுப்பினர்கள் சமுதாயத்தில் கட்சியின் தலைவர்களின் கொள்கையை நாட்டின் கொள்கையாக மக்களிடம் பரப்புரை செய்யாமல் காத்தல்,
  • சுதந்திர எண்ணத்தையும், பேச்சையும், எழுத்தையும் வெறுக்காத மனப்பான்மை,
  • ஆட்சி மாறியதும் பழைய ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல திட்டங்களைக் கைவிட்டு மக்கள் பணத்தை வீணாக்கி விடாமல் இருக்கும் நேர்மை,
  • கட்டுமானம் தொடர்பான திட்டங்கள் உயர்ந்த தரத்துடன் ஒரு நூறு ஆண்டு காலம் தாங்கும் அளவுக்கு செயல்படுத்தும் தீர்மானம்,
  • அரசியல் நிர்ணய சட்டத்தின் மீது முழு நம்பிக்கை,
  • நன்றாக சிந்தித்து தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து அவற்றை தன் பதவிக் காலத்தில் நிறைவேற்ற முழு முயற்சி,
  • மக்களின் பணத்தை அரசு இயந்திர கரையான்கள் அரித்து விடாமல் பார்க்கும் முழுநேர முயற்சி,
  • மக்களிடையே பெருகிவரும் தீய வழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், அதை தன் ஆட்சியில் எப்படி செயல்படுத்தலாம் என்ற முயற்சி,
  • 130 கோடி மக்களில் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று நினைக்கும் பண்பு, …. ……. ……   ….

இப்படி இருக்கும் அரசியல் வாதியைத் தான் எனக்குப் பிடிக்கும்.

இப்படி இருப்பவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். இப்படிப் பட்ட சிந்தனையுடன் உருவாகி வரும் தலைவரல்லாத இளைஞரையும் பிடிக்கும்.

ஒரே கட்சியில் உள்ள தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவருமே இப்படி ஆகிவிட்டால் அந்தக் கட்சியையும் எனக்குப் பிடிக்கும்.

இந்தப் பார்வை கொண்டதனால் தற்போதைக்கு எந்தக் கட்சியும் என் கட்சியல்ல.

என் அரசியல் சிந்தனையை, தலைவர்கள் பற்றிய கருத்துக்களை நான் விவாதிப்பதில்லை. என் பதிவுகளில் அரசியல் வாசனை இருக்காது. தனி மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு நலன்கள் குறித்த கருத்துக்கள் அரசியல் கலக்காத கருத்துக்கள் எனக்கு அவ்வப்போது தோன்றும். ஆனால் அதுகூட எப்போதாவதுதான்.

இந்தக் கட்சி சரி, அந்தக் கட்சி தவறு என்று தினமும் எப்போதும் சிந்திப்பதோ எழுதுவதோ கிடையாது.

ஆழந்த சிந்தனை, எழுத்துத் திறன், கவிதை எழுதுவது, ஆன்மீகத்தில் நல்ல சிந்தனையை வளர்ப்பது, நான் பணியாற்றிய வங்கியில் பணிபுரிந்தவர், என் சொந்த வாழ்வில் அறிமுகமானவர், முக நூலில் தன்னைப் பற்றிய முழு விவரம் அளிப்பவர், வாழ்க்கை என்பது கேளிக்கை மட்டும் என்று நினைக்காதவர், எல்லா மதங்களிலும் நட்பு உள்ளவர், கலைத் திறமை உள்ளவர் என்று இப்படித்தான் என் முக நூல் நட்பையும் நான் சேகரிக்கிறேன். இப்படி நிறைய திறமை உள்ளவர்கள், திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்றவர் என்று பலரும் இப்போது எனக்கு நண்பர் ஆகியிருப்பது என்னை திக்குமுக்காட வைக்கிறது.

நட்பு என்னும் சொல் மிகவும் பரவலாக சமூக ஊடகத்தில் புழங்கி, நட்பின் உண்மையான பொருளையே இழந்துவிட்டிருக்கிறது. என் நண்பர்கள், அவர்களது நண்பர்கள், அவர்களது நண்பர்கள் என்று தொடங்கி ஒருவருக்கொருவர் சரியாக அறிந்து கொள்ளாமலேயே 500, 1000, 2000, 5000 என்று நட்புக் கூட்டம் மிக விரிந்து விட்டிருக்கிறது. அத்தனை பேரையும் நீங்கள் சொந்தமாக அறிந்திருப்பினும், அதில் எல்லோருக்கும் உங்களால் சரியான நட்பைக் காட்டி விட முடியாது. நட்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருவர் எவ்வளவு புகழ் பெற்றவர் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொள்கிறார்.

ஒரு பெரிய எழுத்தாளர், பெரிய கலைஞர், வணிகம் செய்பவர், நடிகர், நூல் எழுதுபவர் என்று பிரபலம் ஆனவர்கள் வேண்டுமானால் அறியாத பலரையும் தன் ரசிகர் கூட்டமாக கருதி நட்பாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் நான் ஒரு சாதாரண சாமானியன். நான் ஒரு பெரிய ஆள் இல்லை என்னும் என்னுடைய முந்தைய பதிவைப் படித்திருப்பீர்கள்.

நான் முகநூலில் பத்து வருடத்துக்கு மேலாகவே இருக்கிறேன், (இடைப்பட்ட 15 மாதம் தவிர்த்து). ஆனால் இப்போது வருவது போல எனக்கு தீவிர அரசியல் சிந்தனை கொண்ட நண்பர்களின் விழைவு வந்ததில்லை. கடந்த 15 நாட்களில் ஒரு 400 பேருக்கும் மேல் அனுப்பிய நட்பு விழைவுகளைத் தவிர்த்திருக்கிறேன். தினமும் 10, 15 விழைவுகள் வருகின்றன. வரப்போகும் தேர்தலுக்கு நட்பு வட்டாரம் ஏற்படுத்துவது போலவே எனக்குப் படுகிறது. ஒரு கட்சியில் இருப்பவர் நண்பராகி விட்டால் அவரது நண்பர்கள் என்னை அறியாமலேயே எனக்கு நட்பு விழைவு அனுப்புகின்றனர்.

முழுநேர அரசியல் சிந்தனைப் பதிவுகள் எழுதுபவர்களும், தான் சார்ந்த கட்சியியைத் தன் பதிவுகள் மூலம் வெளிப்படுத்துபவரும் கூட இப்படி நண்பர் ஆகியிருக்கிறார்கள்.

அரசியல் என்பதைத் தவிர்த்து வரும் எனக்கு, எப்போதும் அரசியல் நெடியுள்ள பதிவுகள் பார்க்கும்போது எனக்கு மனது மிகவும் நெருடுகிறது. அரசியல் பதிவுகள் எழுதும்  மற்றவர்களின் சிந்தனை பற்றிய கருத்தல்ல இது. அவரவரவருக்குப் பிடித்த முறையில் சிந்திப்பது அவரவர் உரிமை.

ஆனால் எனக்கு இது ஒவ்வாததால் நான் ஏற்றுக் கொண்ட சில, பல நட்புகளை நானே மனதார இழக்க முடிவு செய்துள்ளேன்.

இத்தனையும் நான் என்னைப் பற்றி என் சிந்தனையைப் பற்றி மட்டும்தான் எழுதி இருக்கிறேன். இதனால் எனக்குப் பழகிப்போன வழக்கமான கிறுக்கல்கள் செய்வதிலேயே ஈடுபட நான் விழைகிறேன். அரசியல் சிந்தனையை முழுதாக என் முகநூல் பக்கத்தில் இருந்து விலக்கிவிடுவது என் சிந்தனைக்கு வளம் சேர்க்கும்.

இப்பதிவைப் பற்றிய விவாதங்களுக்கு நான் தயாராக இல்லை.

இதைப் படிக்க நேரும் நான் அறிந்த நண்பர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் என் நன்றி.

கணபதி சுப்ரமணியன், ந.
ஜூன் 4, 2020

Leave a comment