வெறுக்கும் உரிமை


மனிதம் என்பது வெறுப்பு ஒன்று வந்து விட்டால் சிறுமைப் பட்டுப் போகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்த கருத்தில் நிலையாக நிற்கும் உரிமை இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்த மதத்தில் பற்று கொண்டு வாழ உரிமை இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தனக்குப் பிடித்த துறைகளில் ரசனை கொள்ளவும் சிலாகிக்கவும் உரிமை உள்ளது.

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு நல்லது என்று தோன்றும் கட்சியில் இருப்பதும் அது பற்றி பெருமை கொள்வதும் உரிமை உள்ளதுதான்.

ஒவ்வொருவருக்கும் இலக்கியத்திலோ அல்லது அவருக்குப் பிடிக்கும் மற்ற துறைகளிலோ பற்று கொள்ள உரிமை இருக்கிறது.

இத்தகைய உரிமைகளால் அவரவருக்கு மற்றவர் கொள்கைகளை விமர்சிக்க அல்லது அந்தக் கொள்கைகள் கொண்டு வாழ்பவரை வெறுப்புடன் நோக்கி அமில சொற்களை வீசியும் எள்ளி நகையாடவும் உரிமை இருக்கிறதா என்று இன்னமும் எனக்குத் தெரியவில்லை.

ஆன்மீகத்தில், இலக்கியத்தில், திரைத்துறையில், கதை எழுதுவதில், கவிதை யாப்பதில் திறமை கொண்ட உயர்ந்த மனிதர்கள் தங்கள் பதிவுகளில் பிற மதம் குறித்த, அல்லது பிற கட்சி குறித்த, அல்லது பிற கொள்கைகளைக் குறித்த காழ்ப்பு உணர்ச்சிகளைத் தெரிவிக்கும்போது, அவர்களை ரசித்து வந்தவர் மனத்தில் உள்ள உயரத்தில் இருந்து நிச்சயம் கீழே விழுந்துவிடுகின்றனர்.

அவர்களுக்கு தம் கருத்துக்களைத் தீவிரமாகத் தெரிவிக்கும் உரிமை இல்லையா என்று கேட்கலாம்.

நிச்சயம் அவர்களுக்கு இந்த உரிமையும் இருக்கிறது.

ஆனால் அவர்களை ஆதர்ச மனிதர்களாகக் கண்டு வந்த கண்டு உவந்த நண்பர்கள் அடையும் உணர்ச்சிகளை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விடவும் நிச்சயம் உரிமை இருக்கிறது.

ஆனால் நண்பர்கள் கொண்ட மாயக் கோட்டை கொஞ்சம் ஓரத்திலாவது இடிபட்டுப் போகிறது என்பது உண்மைதான்.

அதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது தாங்கள் மேற்கொண்ட வழியில் தீவிரமாகப் பயணிப்பதும் நிச்சயம் அவர்களின் உரிமையே.

****
காவாது ஒருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாது தன்னைச் சுடுதலால், – ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து. — நாலடியார்.
****

Leave a comment