துக்க பரிகாரம்


நோய் ஏன் வந்த தென்பேன் நாடிப் பிரச்சினை என்றார் சித்தர்
தாது மீறல் என்பார் ஆயுர்வேதர் கிருமிதான் என்பார் இன்னொருவர்
தெய்வக் குற்றம் என்பார் ஒருவர் மனமே காரணம் என்பார் மற்றவர்
கிரகதோஷம் என்பார் ஒருவர் கர்மபலன் என்பார் மற்றவர்

என்ன செய்வது நான், எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய்
சொல்பவர் யாரோ அறியேன், அனைத்தும் உண்மை என்றொரு குரல் எழும்
என்னதான் செய்வது இந்த ஏழை மனம் அறியவில்லை

படைத்தவனை மற என்றொரு குரல்
படைத்தவனின் குறை  என்றொரு குரல்
செய்தவன் நீ இருக்க படைத்தவனை மறப்பதா
அறிவியலும் மௌனம் துயிலதுவும் வரவில்லை

வளர்ந்த குறையோ, இல்லை, அவனது விளையாட்டு
நீ ஒரு பொம்மை, உன் கயிறு அவன் கையில்
கயிறா, இல்லை அது ஆடவே இல்லை பின்
எப்படி நான் மட்டும் ஆடுகிறேன்

காரணமே இல்லையா இன்னொரு குரல் காரணம் இல்லாமல்
எதுவும் இல்லை குழப்பத்தில் கூட குழப்பம் ஏன்
தூங்கக் கூட முடிய வில்லை, அவன் செய்த
பாபம் தான், எவன் அவன். அப்பனே அவன்

எத்தனை சோதனை, எத்தனை வேதனை
பித்தனை நம்பவா, இல்லை, எத்தனா அவன்
வலிக்கிறதா, வலியைப் போக்கு, வலிக்கும்போதே
எவ்விதம் நான் வலியைப் போக்க,

மடையா கேள்
அவனது வலியைப் போக்கு அவளது வலியைப் போக்கு
துவளுது உன்வலி அந்தச் செயலது தருமே மருந்து

(பெரியவரின் தெய்வக்குரல் கருத்தில் இருந்து உதித்தவை)

ந. கணபதிசுப்ரமணியன்
28.02.2023

Leave a comment