சில்லறைச் சிந்தனைகள்

(வாசிப்பும் சிந்தனையும் 7 – மனமும் புத்தியும் 2இப்பதிவு முதல் தொடரின் தலைப்பு சில்லறைச் சிந்தனைகள் என்று மாறுகிறது.)

** சில்லறைச் சிந்தனைகள்*
பதிவு எண்: 7 நாள்: பிப்ரவரி 14, 2023

மனமும் புத்தியும் தொடர்ச்சி

எதன் மீது பக்தி இல்லாதவருக்கும் புகழ் மீது பக்தி சிறு குழந்தைப் பிராயம் முதல் முதிர்வயது வரை, ஏன், நடையும், பேச்சும் தளறாத வரை நம் இறுதி மூச்சு வரையில் புகழ் மீது பக்தி இருக்கவே செய்கிறது.

சிறுவயதில் இருந்து நம்மைப் பாராட்டுவதால் தான் நாம் வளரவே செய்கிறோம்.

இது மன அளவில் ஏற்படுகிறது. இருப்பினும் உடல் வளர்ச்சிக்கும் இந்த மனவளர்ச்சி அவசியம்.

இது கிடைக்காத போது துவண்டு போய் விடும் மனது தான் இருக்கும் உடலைக் கூட சரிவரக் கண்டுகொள்வதில்லை.

செடி, கொடி வளர்ப்பவருக்குத் தெரியும். செடியைக் கூட பாராட்டிக் கொஞ்சி வளர்க்கும்போது அது நன்றாகவே வளர்கிறது.

ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆராய்ச்சிகள் செய்து தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை நிலைநாட்டி இருக்கிறார்.

இசையும் கூட தாவரங்களுக்குப் பிடிக்கும். பல நாடுகளில் தங்கள் தோட்டங்களில் நல்ல இசையைத் தாவரங்கள் கேட்க ஏற்பாடு செய்து இதனால் நல்ல பயனும் பெற்றுள்ளனர்.

பழைய கால இந்தியத் தத்துவவாதிகள் படைக்கப்பட்ட அனைத்துக்கும், கல், மண், உலோகம், நீர், நெருப்பு, காற்று, வெளி, தாவரம், ஒரு செல் உயிரி முதல் பிரம்மாண்ட உயிரினங்கள் வரை அனைத்துக்கும் உணர்ச்சி உள்ளது என்று பகன்றுள்ளனர்.

இன்றைய அறிவியல் உலகம் இவற்றைக் கூட நோக்கி சிலவற்றை உண்மைதான் என்று சொல்லி வருகிறது.

ஆனால் எல்லா அறிவியல் முன்னேற்றமும், (மருத்துவத் துறை உட்பட) தானாகவே நம் மூளையில் வந்து அமர்ந்து விடாது. முயற்சி ஒன்றுதான் உண்மையான அறிவுக்கு உதவும்.

அது இருக்கட்டும். சிந்தனை தடம் மாறுகிறது.

புகழ் மீது இருக்கும் இந்த பக்தி அளவுக்கு மேல் இருந்தால் நஞ்சாகி விடும்.

வாழ்க்கையில், செயலில் செல்லும் திசையைத் திருப்பி விடும்.

முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றான பாராட்டு என்பது முன்னேற்றத்தைத் தடை செய்யும் ஒன்றாக மாறிவிடும்.

நோக்கும் பார்வை, செல்லும் திசையை எப்படி மாற்றும் ?

பாராட்டுத் தேடியே நாம் செயலில் இறங்கத் துவங்கிவிட்டால் இது தெரியவரும்.

பழகிப் போதல் என்ற நிலையில் இருந்து அடிமைப் பட்டுப் போதல் என்ற நிலைக்கு முன்னேறும்.

அந்த நிலை இன்னும் மோசம்.

அந்த நிலைக்கு சென்றவர்கள், கொஞ்சம் பாராட்டு குறைந்தாலும் துவண்டு விடுவர்.

துவளும் மனதில் சினமும் பெருகும். இதுவரை பாராட்டியவர்களையே வெறுப்பர்.

இன்னமும் மோசம் இளம் வயதில் இது வந்துவிட்டால், தற்கொலைக்குக் கூட முயல்வர்.

எனவே நாம் நமக்கு புகழ் மீது இருக்கும் பற்றைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

பாராட்டு நம் முயற்சிக்கும் சாதனைக்கும் கிடைக்கவேண்டும்.

நாம் தேடிப் போய் கிடைப்பது குறுகிய வழி, ஆபத்துக்கள் அதிகமான வழி.

தெளிவான சிந்தனையுடன் தீர்மானிக்கப்பட்ட இலக்குடன் நம் செயலில் இறங்கி நாம் உண்மையாக செயல்புரிந்து முன்னேறுவோம்.

பாராட்டுக்கள் நாம் இருக்கும் இடம் தேடி நம்மிடம் வந்து விடும்.

மிக அதிகமாக வந்துவிடும்போது இப்பதிவை முதலில் இருந்து மறுபடி படிக்கவும்..

ந. கணபதி சுப்ரமணியன்.
14.02.2023

Leave a comment