சுயமும் சுயங்களும்

மூடநம்பிக்கைகளுக்கு பிறப்பிடமும் உறைவிடமும் நம் மனம்தான். இன்னொருவர் சொல்வதல்ல.

பொதுவான சில பல மூடநம்பிக்கைகள் நம்மிடம் இருக்கவே செய்கின்றன. இல்லையென்று சொல்லிவிட முடியாது.

இது நாம் சார்ந்த நாடு, மதம், இனம், சாதி, கட்சி குறித்து மாறிவிடாது. மற்றவர்களின் கருத்துக்கள் நம் மனத்துக்கு ஒளி கொடுக்கும், அவ்வளவே.

ஆனால் ஒளிகூட சிலருக்கு அதிகம் பிடிக்காது.

நோய்வாய்ப்பட்டு நீண்டநாள் கண்மூடிப் படுத்திருப்பவருக்கு திடீரென்று பாயும் ஒளியே வலிகொடுக்கும்.

ஒரு படிப்பு படிக்கிறோம். ஒரு தொழில் செய்கிறோம். மிகவும் முனைப்பாக, கருமமே காண்ணாயிரனாக, வேறொன்றும் மனவெளியில் வந்து வேலையைத் தடுக்காமல், செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்தி நீண்ட நேரம் தினமும், இப்படிப் பல மாதம், ஆண்டுகள் செய்யும்போது வரும் நிலையும் இது போன்றதுதான்.

சில எச்சரிக்கை உணர்வுகள், சில துடிப்பான உடனே செய்யவேண்டிய செயல்கள் நம் படிப்பிலும், நம் தொழிலும், நம் வேலையிலும் இருந்து நம்மிடம் வந்து நம்மையே ஆட்கொண்டு விடுகின்றன. இப்படிச் செய்து நம்மையே அவற்றுக்கு அடிமையாக்கி விடுகின்றன.

நம் கருத்துக்கு மாறுபடுபவரின் கூற்றும் செயலும் நமக்கு எதிராகத்தான் பேசியிருக்க வேண்டும், செய்திருக்கவேண்டும் என்ற மனமயக்கம் ஏற்பட்டு விடும் அபாயம் இருக்கிறது.

இப்படி ஏற்படும்போது நாம் அனைவரும் போக வேண்டிய திசை நீக்கி மற்ற திசையைப் பார்த்து விடக் கூடாத படிக்கு, குதிரைக்குப் போடுவது போல முத்திசை மறைப்பான்களை நாம் அணிந்து கொள்கிறோம்.

திறந்த மனம் என்று சொல்வோம். அது அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்துவோம்.

இப்போதும் சொல்கிறோம். ஆனால் நம் கருத்தில் இருந்து வேறுபடுபவருக்கு (மட்டும்) நிச்சயம் இது இருக்கவேண்டும் என்று சொல்வோம்.

ஆனால் சுயம் என்று வரும்போது அதாவது நமக்கு அப்படி ஒரு தன்மை வேண்டும் உணர்வது மிக சிலரே, ஆனால் அவர்கள் உணர்வதும் நீண்ட காலம் சென்றுதான். இத் தாமதம் ஒவ்வொருவருக்கும் தீங்கு தரும்.

இப்படி நம் எண்ணத்தில், நம் ஆழ்மனதில், நம் பேச்சில், நம் செயல்புரியும் தீரத்தில், நம் செயல்களில், நாம் பழகுவதில் இருக்கும் மூடநம்பிக்கைகளை எல்லாம் கண்டு, சிந்தித்துக் களைந்து வெற்றி பெறுவது நம் வசத்தில் உள்ள ஒன்று.

ஒரு நூலே இதைப் பற்றி எழுதி விடலாம். ஆனால் அது நோக்கமல்ல.

அனைவரும் இப்படிச் சிந்திக்கப் பழகினால் அவரவருக்கு உள்ள தடைகளும், குறைகளும், நிறைகளும் தெரியவரும்.

ஆனால் இதை மற்றவர் சொல்வது, அதாவது நமக்குச் சொல்லித் தருவது பயனற்றது.

மாறாக, நம் மனச் சிந்தனை இந்த வழியில் செல்லத் துவங்காத வரையில் அப்படிப் பிறர் நமக்குச் சொல்லித் தருவது, ஏன் சுட்டிக் காட்டுவதும் கூட வெறுப்பையே தரும். அதுவும் நிச்சயம்.

இந்தப் பதிவும் அதுபோன்ற மறுவினைகளைத் தோற்றுவிக்கும் அபாயமும் இருக்கிறது.

அதனால் உதாரணங்கள் காட்டி விளக்க விரும்பவில்லை நான். அப்படிச் செய்வதும் ஒரு பண்பான செயலாக இருக்காது.

நான் சொல்வது தமிழகத்தில் புழக்கமாகப் பொருள் கொள்ளப்படும் மூடநம்பிக்கை குறித்ததன்று. அது ஒரு பெரிய விடயம். அதற்கு இடமும் இதுவல்ல. அதைக் குறித்து கருத்துக்களையும் நான் இங்கே சொல்ல வரவில்லை.

பொதுவாகத் தான் சொல்கிறேன்.

நம் தினசரி நடவடிக்கைகளில்,

நாம் பிற மனிதர்களுடன் பழகுவதில்,

அவர்களின் சிந்தனை, சாதனை, வேதனை முதலியவற்றின் மீது நாம் கொள்ளும் கண்ணோட்டம்,

எண்ணம், முயற்சி, தன்னம்பிக்கை, செயல், இவற்றில் நம்மிருந்து வேறுபடும் பிறர் மீது கொள்ளும் பார்வை

இவையே நம் வாழ்நாளில் நாம் நல்ல மனிதராக வாழ்வைத் தொடர்கிறோமா என்று தீர்மானிக்கின்றன.

நாமும் நன்றாக இருக்க உலகில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். இது உலகம் தோன்றியதில் இருந்தே வலுவாக இருக்கும் கருத்து.

இதெல்லாம் ஆன்மிகப் பெரியோர்கள் சொல்வது என்று அவ்வளவு எளிதாக ஒதுங்கிவிட முடியாது. அறிவியல் துறையும் இதையே சொல்கிறது.

“செய்வன திருந்தச் செய்” என்பதை மிகவும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதற்கு அடிப்படை எண்ணமும் சிந்தனையும்தான்.

இவை இரண்டையும் சீர்படுத்துவது நம் பாதையில் கற்கள் இடறிவிடாமல் நம் பயணத்தை சிறக்கவைக்கும்.இது நம் கையில்தான் உள்ளது.

இதை ஒருபோதும் மறக்கலாகாது.

******

திருவள்ளுவர்தாம் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் !!

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து” (596)

******

© கபிலவிசாகன்,

09.02.2023


Leave a comment