வாசிப்பும் சிந்தனையும் 6 – மனமும் புத்தியும்

பதிவு எண்: 6 நாள்: பிப்ரவரி 12, 2023

மனமும் புத்தியும்

உள்ளம் என்னும் சொல் ஆழமானது.  நமக்கு உள்ளே இருப்பது. இதனால் உள்ளத்துக்கு அகக்கருவி என்று பெயர். அக்கருவிக்குள் சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பன இருக்கின்றன.

மனம் புத்தி இரண்டையும் பார்ப்போம் இப்போது.

புலன்களுடன் கைகோர்த்துக் கொண்டு புற உலகை மனம் அறிகிறது. பார்க்கும் அனைத்துக்கும் மனம் உணர்வுச் சாயத்தை பூசிவிடும். இது பிடிக்கும், இது வேண்டும், இது பிடிக்காது, இது வேண்டாம் போன்ற உணர்வு எப்போதும் உள்ளது மனம்.

ஆனால் புத்தி என்பது நிச்சயமானது. இது போதும், இதுதான் நிம்மதி என்று முடிவு செய்யும். மனமானது புத்தியை வற்புறுத்திப் பணியவைக்கும். அப்போது புத்தி அறிவு மயங்கி சரியைத் தப்பென்றும், தப்பைச் சரியென்றும் மனத்தின் பின் நின்று நியாயப் படுத்தும்.

மனத்தைப் பிணைப்பது ராகம் எனும் ஆசை. இதற்கு ராகம், காமம், ஆசை, பற்று, பாசம், பிரியம் எனப் பல பெயர்களுள்ளன. ராகத்துக்கு ஒட்டிக் கொள்ள ஒன்று அல்லது ஒருவர் தேவை.

ராகம் ஏன் தோன்றுகிறது ? பூர்வ ஜென்ம வாசனையால்.

ராகத்துக்குத் தடை போட்டால் அது பயமாகவோ, கோபமாகவோ மாறும்.

ராகம் வந்து விட்டால் இன்னொன்றும் கூட வரும். அது சோகம். துயரம். இந்த சோகம் நம்மை இறைவனை நோக்கி இழுக்கிறது.

சோகம், பயம், கோபம் மூன்றும் மனத்தின் நோய்கள்.

சோக நிவர்த்திக்கு நாலு படிகள்.

முதல் படி எனக்குள்ள துயரம் என்னிடம் உள்ள கோபம், காமம், பயம் இவற்றால் ஏற்படுகிறது என்று அறிவது.

இரண்டாம் படி உலகமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்று நாம் நமக்குச் சொல்லி நம்மைச் சமாதானப் படுத்தும் முயற்சியை விட்டு விடுவது.

மூன்றாவது படி சுயபுத்தியால் துயரத்தை நீக்கிக் கொள்ள முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்து தன் இயலாமையை உணர்வது.

நான்காவது படி சாஸ்திரம், குரு இரண்டிலும் உண்மையான சிரத்தையை ஏற்படுத்திக் கொண்டு வாழ்தல்.

சில அரிய நிகழ்வுகள் நமக்கு திருப்புமுனையைக் கொடுக்கும். இதற்குப் பூர்வ ஜென்ம புண்ணியமும் இறைவனது கருணையும் காரணம். புத்தர், பட்டினத்தார், அருணகிரி நாதர் இவர்கள் வாழ்க்கையில் இப்படித் திருப்புமுனையான சம்பவங்கள் நிகழ்ந்தன.

(பேரா.க. மணி அவர்களின் நூலில் இருந்தவற்றைப் படித்த விளைவு).

மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
     புனலு டன்புவி கூடிய தோருடல்
          வடிவு கொண்டதி லேபதி மூணெழு …… வகையாலே

வருசு கந்துய ராசையி லேயுழல்
     மதியை வென்றுப ராபர ஞானநல்
          வழிபெ றும்படி நாயடி யேனைநி …… னருள்சேராய்

(திருப்புகழ் 872)

மனம் என்ற ஒரு பொருளுடன் ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களும் ஒரு தேகம் என்ற உருவத்தைக் கொண்டு அதில்  (13ஐ 7ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற என் புத்தியை நான் ஜெயித்து, மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாய் போன்ற இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக.

***
இப்போதைக்கு இவ்வளவுதான். இறைவன் அருள் கைகூடும்போது தொடரும்.

***

யோகசிம்மபுத்ரன் என்னும் ந. கணபதி சுப்ரமணியன்.

Leave a comment