கடமை

கடமை என்பது எல்லோருக்கும் இருக்கிறது.

இறைவன் பிறக்கும்போதே சில கடமைகளைத் தந்து விடுகிறான். இது நமக்கு அனேகமாக 15-20 வயதுக்குள் தெரிந்து விடும்.

பின்னர் மணம் புரிகிறோம், குடும்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறோம்.

பொருள் ஈட்டுவதற்காக தொழில் அல்லது உத்தியோகம் செய்கிறோம்.

இதில் எதிலெல்லாம் கடமை என்பது இல்லை? ஒன்றைக் கூட சொல்லிவிட முடியாது.

நாம் தட்டிக் கழிப்பதாலோ, பிறர் செய்வார்கள், செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடோ இருந்து விட்டால் நாம் செல்லும் திசை சரியில்லை என்று உணரவேண்டும்.

கடமை எங்கிருந்து வருகிறது ?

கைக்குழந்தை பாலருந்தியபின் அம்மாவைப் பார்த்து முகம் மலர்கிறேதே அப்போதே தொடக்கம்.

அம்மா குழந்தையைத் திட்டிக் கொண்டே அரக்கப்பரக்க பள்ளிக்கு தயார் செய்து கையில் உணவையும் கொடுத்து அனுப்புகிறார்களே அப்போது வந்தது.

நாள் முழுக்க உழைத்துக் களைத்து வரும் அப்பா நம் பள்ளிக்கு வந்து பணம் கட்டுகிறாரே அப்போது வந்தது.

நாம் வாழ்வில் குழப்பிக் கொண்டு இருக்கும்போது, பெற்றோரோ, ஆசிரியரோ, நண்பரோ நமக்கு ஐயம் தீர்த்து நல்வழி சொல்கிறார்களோ அப்போது இந்த கடமை வந்துவிட்டது.

கடமை என்பது வெறும் உணர்ச்சியல்ல, நல்லவன் என ஒருவனை அடையாளம் காண்பதற்கு உள்ள அலங்கார எண்ணம் அல்ல.

நம்மிடம் கடமை உணர்ச்சி இருப்பது நம் கண்ணில் இருந்து, பேச்சில் தெரிந்து, செயலாக மாறவேண்டும். இதைத் தவிர கடமை இருப்பவனின் சொந்தக் கடமை வேறு ஒன்றில்லை.

யாருக்குக் கடமைப் பட்டுள்ளோம் ?

நமக்காக உதிரம் கொடுத்த தாய், நமக்காக வாழ்வைக் கொடுத்த தந்தை, நம் வாழ்வைச் சிறப்பிக்க தன் சுதந்திரத்தை விரும்பித் தொலைக்கும் மனைவி/கணவன், வாங்கும் சம்பளத்தையும் மீறி நமக்கு நல்வழி காட்டும், அறிவை ஊட்டும் ஆசிரியர்கள், நம்மை நம்பி வேலை கொடுத்த நிறுவனம் அல்லது முதலாளி, இப்படி எல்லோரிடமும் நம் கடமை இருக்கிறது.

நமக்குப் பிடித்ததை செய்வது, நமக்கு வாங்கித் தருவது என்றில்லாமல் நமக்கு அறிவுரை கூறி பண்படுத்தும் அனைவருக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.

கடமையை எப்படி செய்வது ? கேட்டுச் செய்வதாயிருப்பது சரியென இருந்தால் நாம் இதுவரை உயிரோடிருப்பதே அதிசயம். இதற்கும் மேல் உயிரோடிருப்பது அனைவருக்கும் பாரம்.

நம் ஈடுபாடு தேவைப் படும்போது பிறர் கேட்காமல் நாம் செய்யவேண்டியது.

பெற்றோர், நம் குடும்பம் இவர்கள் கடைசி வரை முன் வரிசை;

ஆசிரியர் அடுத்த வரிசை;

நம் நிறுவனம், அல்லது முதலாளி அடுத்த வரிசை; இதில் நம் வாடிக்கையாளருக்கு இடம் உண்டு;

உறவினர், நண்பர்கள் அடுத்த வரிசை;

ஊர், சமுதாயம், அரசாங்கம்;

ஊனமுற்றோர், நோயுற்றோர், புறக்கணிக்கப் பட்டோர் கடைசி வரிசை;

ஆனால் எல்லா வரிசையிலும் நமக்குத் துணை இறைசக்தி.

நாம் இறைவனுக்குக் கடமைப் பட்டு இருக்கிறோமா? அது மற்ற உயிரினங்கள், மனிதர்கள் வாழத் திண்டாடும்போது உதவவேண்டிய கடமைதான் நம் இறைவனுக்கான கடமை.

ஆயிரம், லட்சம், கோடி என்று இறைவன் இருக்கும் இடம் என்று அறியப்படும் இடங்களில் செலவழிப்பது கடமை செய்ததாக ஆகிவிடாது ஒருபோதும்.

இன்னும் ஒரு முக்கியமான நபரை விட்டு விட்டேன். அதுதான் நாம்.

நமக்கு நம்மிடம் கடமை இருக்கிறதா ?

நாம் ஆரோக்கியமாக வாழத் தேவையான அனைத்து வழக்கங்களையும் மேற்கொள்வது முக்கிய கடமை.

உடல் நலம் மட்டுமன்றி உள்ள நலம், அதாவது மன நலம் நன்றாகக் காக்கப்படவேண்டும்.

கெட்ட எண்ணங்களை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு முதல் முயற்சி சிந்தனை.

அதற்கு விதை நீதி நூல்கள்.

நான் சொன்ன ஆறு வரிசையிலும் உள்ளவர்களுக்கு நம் கடமையை ஆற்ற அடிப்படைக் கடமை ஒன்று உண்டு. அது இதுதான்:

நம்மை  நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன், உடல்-மன வலிமையுடன்,  போராட்டமான இந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆவலும், முயற்சியும், செயலும் புரியக்கூடிய வகையில் நம்மை ஆக்கிக் கொள்வதுதான்.

இந்த அடிப்படைக் கடமையை உணரவில்லை என்றால் நாம் இன்று கூட மற்றவருக்கும், சமுதாயத்துக்கும்,  உலகுக்கும் கூட பாரமாக இருக்கிறோம் என்ற உண்மை நமக்கு உறைக்க வேண்டும்.

***********************************************

இன்றைய (தூண்டப்பட்ட) சிந்தனை — ந. கணபதி சுப்ரமனியன் – 07.01.2023

Leave a comment