பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 1


*ஞானத்தேடல் பதிவு எண்: 043 நாள்: 31.08.2022*

*_பகவத்கீதை – ஏழாம் அத்தியாயம் – ஞான விஞ்ஞான யோகம் – 1_*

முப்பது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில் பகவான் 1. ஈஸ்வர தத்துவம் 2. பக்தி/பக்தன் 3. பக்தியின் மேன்மை எனும் மூன்று தலைப்புக்களில் அருச்சுனனுக்கு எடுத்துரைக்கிறார். (W)

*ஈஸ்வர தத்துவம்*

நாம் அனுபவிக்கும் இந்த உலகை *_பராபிரகிருதி_* எனும் இறைத் தத்துவமாகவும், *_அபராபிரகிருதி_* எனும் சடமான தத்துவமாகவும் பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். இந்த உடல், உலகை அறியும் சடப்பொருளாக உள்ளது. இந்த சட தத்துவமும் (அபராபிரகிருதி), இறைத்தத்துவமும் (பராபிரகிருதி) நானே என அறிமுகப்படுத்துகிறார் பகவான். பராபிரகிருதி என்பது மேலான, நிலையான, சத்தியமான இறைத்தத்துவம் ஆகும். அபராபிரகிருதி என்பது கீழான நிலையற்ற சடதத்துவம் ஆகும். சடதத்துவம் மாயையின் வசத்திற்குட்பட்டது. மேலும் இது நிலையற்றதும் அழியக்கூடியதும் ஆகும் (மித்யா). இந்த மாயை பகவானின் வெளிப்பாடே என்று ஈஸ்வர தத்துவத்தை கண்ணன் விளக்குகிறார். (W)

*பக்தி / பக்தன்*

பகவான் தன்னை வழிபடுபவர்கள் மற்றும் வழிபடாதவர்கள் என இரண்டாக பிரிக்கிறார். மேலும் செம்மையான மனம் இல்லாதவர்கள் பகவானை வழிபட மாட்டார்கள் என்று இடித்துரைக்கிறார். பகவானை வழிபடும் பக்தர்களை நான்காக பிரிக்கிறார். (W)

(1). தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.

(2). ஆபத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் மற்றும் துயரங்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.

(3). பகவானையே அடைய வேண்டும் எனும் நோக்கில் பகவானை வழிபடும் பக்தர்கள்.

(4). பகவானை அறிந்து கொள்ள சாதனை செய்யும் ஞானி பக்தன். இந்த ஞானி பக்தனே அனைத்து பக்தர்களில் உயர்வானவன் என்று பகவான் ஞானியை புகழ்கிறார்.

*பக்தியின் மேன்மை* (W)

பகவானின் மாயையை யாராலும் வெல்ல முடியாது. பகவானை சரணாகதி அடைந்து பக்தி செலுத்துபவன் மாயையை (அறியாமையை) கடக்க பகவான் அருள் புரிகிறார்.

எவரெவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ அவரவர்களின் கோரிக்கையை பகவான் நிறைவேற்றுகிறார். பகவானுக்கு எந்த பக்தனிடத்திலும் விருப்பு – வெறுப்பு இல்லை.

மேலும் பகவானை அறிவது எளிதல்ல. பகவான் அனைத்தையும் அறிபவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது. சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்புகளுடன் உள்ளான். இது சீவர்களின் இயற்கை குணமாகும். பிறகு எவர்கள் இந்த விருப்பு – வெறுப்பு எனும் இருமையிலிருந்து விடுபட்டு, அத்யாத்மம், அதிதெய்வம், அதியக்ஞம், அதிபூதம் எனும் தத்துவங்களை அறிந்தவர்கள் என்னிடம் பக்தி செலுத்தி மோட்சம் எனும் (வீடுபேறு) அடைகிறார்கள்.

(W) = Wikipedia

*சுலோகம் 7-1*: _ ஸ்ரீபகவான் சொல்கிறார் – “பார்த்தா! என்னிடம் மிகுந்த அன்பும், முழுமையான ஈடுபாடும் கொண்ட மனத்தினால் என்னையே மேலான கதியாகக் கொண்டு, யோகத்தினாலேயே ஒன்றியவனாக விபூதிகள், பலம், ஐசுவரியம் முதலிய சகல கல்யாண குணங்களுடன் கூடியவனும், எல்லாவற்றிற்கும் ஆத்மாவானவனும் ஆன என்னை எவ்வாறு எவ்வித ஐயமுமின்றி நீ அறிந்து கொள்வாயோ, அவ்வாறு சொல்கிறேன். அதைக் கேள்._

முதலில் இறைவன் மீது நம்பிக்கை வேண்டும். இறைவன் மீது நமக்கு அன்பும் வேண்டும். முழுமையாக இறைவன் ஒருவனே நமக்குக் கதி என்ற ஆழ்ந்த அடிப்படை எண்ணம் ஏற்படவேண்டும். எல்லாம் வல்ல எல்லாமும் ஆன இறைவனை எப்படி அறிந்து கொள்வது என்பதை கிருஷ்ணர் சொல்லத் துவங்குகிறார்.

*சுலோகம் 7-2*: _ எதை அறிந்துகொண்டபின் இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ளவேண்டியது வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ, (அதை, அதாவது) விஞ்ஞானத்துடன் கூடிய தத்துவ ஞானத்தை முழுமையாக நான் உனக்குச் சொல்வேன்._

சாஸ்திர ஆராய்ச்சியால் வரும் அறிவு ஞானம். அது சிந்தனைக்குரிய அறிவு; அது சொந்த அனுபவமாக முதிரும்போது விஞ்ஞானம் ஆகிறது. Theory and practice என்று இக்காலத்தில் நாம் இரண்டும் வேறு வேறு என்று கருதுகிறோம். உண்மையான practice என்பது theory சொல்லும் dos and donts படிதான் நடக்கவேண்டும். வேண்டுமானால் Science and Applied Science என்று பொருள் கொள்ளலாம். கற்றுக் கொள்ளும் அறிவை வாழ்வின் நடைமுறையில் கொண்டு வரும்போது அது விஞ்ஞானம் ஆகிறது. நாமும் இக்காலத்தில் அறிவு, அறிவியல் என்று இரண்டு பற்றி சொல்கிறோம் அல்லவா.

இப்படிப்பட்ட அறிவு விஞ்ஞானத்தை முழுமையாக உனக்குச் சொல்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

*சுலோகம் 7-3*: _ ஆயிரக் கணக்கான மனிதர்களில் யாரோ ஒருவன் என்னை அடைவதற்காக முயல்கிறான். (சாதனை புரிகிறான்). அவ்விதம் முயல்கின்ற யோகிகளிலும் கூட என்னையே மேலான கதியாகக் கொண்ட யாரோ ஒருவன்தான் என்னைத் தத்துவரீதியாக உள்ளபடியே அறிகிறான்._

இப்படிப்பட்ட ஞானத்தை, அதாவது எல்லாம் அறியும் அறிவை, அடைவது மிகவும் கடினமான விஷயம் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

‘மனிதப் பிறவி எடுத்த எல்லோரும் இறைவனை அடைய முடியும்; அனைவருக்கும் முக்தி என்பது உண்டு. ஆனால் ஒரு சிலரே ஓரிரு பிறவியிலேயே பர பிரமத்தை உணர்ந்து, முக்தி அடைகின்றனர். இன்னும் சில மனித பிறவிகளோ, கோடானு கோடி பிறவிகளை எடுத்து, இறுதியிலேயே இறைவனை உணர்ந்து, முக்தி அடைகின்றனர். ஆனால் எல்லோருக்கும் முக்தி என்பது உண்டு’ என்பது
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்.


எனவே ஆயிரக்கணக்கான மனிதர்களில் யாரோ ஒருவனே மன நிறைவின் பொருட்டு, இறைவனை அடைய முயல்கிறான். அவ்வாறு முயலுகின்ற வாய்ப்பும் யாரோ ஒருவருக்கே கிடைக்கிறது. அத்தகையவர்களுள்ளும் யாரோ ஒருவர், என்னை உள்ளபடி அறிகிறான்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

***

Leave a comment