இசைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு

*இசைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு*

இசைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நான் ஒரு ரசிகன் என்பது மட்டும்தான்.

இசை கற்றவனோ அல்லது கேள்வி ஞானத்தால் பாடத் தெரிந்தவனோ அல்ல.

நான் பிறந்த இடம் வீடுதான். 

என் கிராமத்தில் சுற்றிலும் இசைக் கலைஞர் குடும்பங்கள் தெருத்தெருவாக வாழ்ந்தனர்.

காலை ஐந்து மணிக்கே நாதஸ்வரம் தவில் வாத்தியங்கள் மங்கல இசை ஒலித்து ஊரெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ச்சிடும். (அப்போதெல்லாம் அதை அனைவரும் ரசித்த காலங்கள்).

பிறகு அகில இந்திய வானொலியின் திருச்சி நிலையத்தின் மங்கல இசை ஒலிக்கும்.

ஆறு கிலோமீட்டர் அருகில் இருக்கும் நகரத்திற்குச் சென்றால் காலை 5 மணிக்கே வீணை இசையும், பரதநாட்டியம் பயிலும், பயில்விக்கும், நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்க்கும், கலைஞர்களின் பாடலும் சலங்கை ஒலியும் காதில் இனித்து உள்ளத்தில் வளர்ந்து அந்த நாளையே மகிழ்ச்சி மயமாக்கும்.

என் தந்தையும் தாயும் நன்றாகப் பாடுவார்கள். என் சகோதரிகள் இசையைப் பாடமாகவே எடுத்துப் படித்தார்கள். நன்றாகவும் பாடுவார்கள்.

இளவயதில் இருந்தே எனக்கு இசை பிடிக்கும்.

எல்லோருக்கும் பிடிக்கும் என்றுதான் 35 வயது வரை நினைத்திருந்தேன் ஒருவரைக் கண்டு அவரைப் பற்றி அறியும் வரை.

அவர் பற்றி எழுதினால் அது விசனத்தைக் கொடுக்கும்.

அவர் இயல்புகளின் பாங்கு அவ்வாறானது.

அந்த மனிதர் சிரிப்பதும் மிக அரிது. நகைச்சுவை அவருக்கு எப்பொழுதும் சுவையில்லை.

இப்படிப்பட்ட மனிதர் இன்னும் பலர் இருக்கின்றனர்.

இசைக்கு மயங்காதவர் யாருமில்லை என்று ஒரு வழக்கு இருக்கிறது.

பாம்புக்கு காது இல்லை என்று அறிவியல் சொல்கிறது.

ஆனாலும் மகுடி இசைக்கு மயங்குகிறது.

பிறந்த குழந்தை சில மாதங்களில் இசைக்கு ஏற்ப அசையக் கற்கிறது.

தூளியில் துயிலும் என் பெண் வானொலியில் ஒரு குறிப்பிட்ட பாடல் ஒலித்தால் அழாமல் தூங்குவாள்.

இதற்காகவே என் மாமனார் ஒரு டேப் ரிகார்டர் வாங்கிவந்து அந்த பாடல் கேசட்டும் வாங்கி வந்து பயன்படுத்துவார்.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தாயின் உடலின் அதிர்வும் ஒலியுமே இசையாகும். 

கைக் குழந்தை தன் தாயின் அதிர்வையும் ஒலியையும் மற்றவரிடமிருந்து வேறுபட்டது என்பதை உணர்ந்திருக்கும்.

உலகைப் படைத்த சிவனே இசைவடிவானவன் என்றும் அவனது நாட்டியமே உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் வல்லமை பெற்றது என்றும் கலையுலகின் ஆதிகர்த்தாக்கள் இயம்புவர்.

என் அப்பாவும் அம்மாவும் கர்னாடக மரபில் உள்ள கீர்த்தனைகளைப் பாடுவதும் கேட்பதும் செய்வர்.

சில சமயங்களில் சினிமாப் பாடல்களையும் விரும்புவர்.

நல்ல தமிழ் சொல், இலக்கணமான சொற்கட்டு, அனேகமாக பாரம்பரிய கர்னாடக அல்லது இந்துஸ்தானி ராகங்களில் அமைந்த சினிமாப் பாடல்கள் விரும்பிக் கேட்பார்கள்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் ஒரு புது பிலிப்ஸ் வால்வு ரேடியோ வாங்கினர்.

நான் தினமும் அமர்ந்து படிக்கும் இடத்துக்கு மேலே அது இருக்கும். நான் அதைத் திருப்பி விவித்பாரதி நிலைய நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பேன்.

நான் ஒரு இசைக்கலைஞன் இல்லை.

இசையைப் பற்றியும் கற்றதில்லை.

ஆனால் இசை நான் பிறந்த நாளில் இருந்தே இருக்கிறது என்னுடன்.

N Ganapathy Subramanian
02.10.2014

Leave a comment