என் வலைத்தளங்கள்

*தற்பெருமைப் பதிவுதான்.*

நான் ஜனவரி 2016ஆம் வருடம் எனது வலைப் பக்கத்தில் (blog) எழுதத் துவங்கினேன்.

NYTANAYA என்ற பெயரில் இது துவங்கப்பட்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 1700 பதிவுகள் இந்த ஆறு வருடங்களில் எழுதினேன்.

தமிழ்ப் பதிவுகளின் மொழிபெயர்ப்பல்ல ஆங்கிலப் பதிவுகள். அது போலவே ஆங்கிலப் பதிவுகளின் மொழி பெயர்ப்பல்ல எனது தமிழ்ப் பதிவுகள்.

தனித்தனியே அந்தந்த மொழிகளில் நான் எழுதியவைதான்.

என் வலைப்பக்கம் வருமானம் ஈட்டுவதற்காகத் தொடங்கப்படவில்லை.

பலரும் விரும்பும் கேளிக்கையும், அரசியலும், நகைச்சுவையும் என் வலைப்பக்கத்தில் இல்லை.

இருப்பினும் என் வலைப்பக்கத்துக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது., ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படிப்பட்ட வலைப்பக்கங்களில் என் பக்கம் அதிக பட்சம் பார்வைகளைப் பெற்று வரும் வரிசையில் இருக்கிறது.

NYTANAYA என்னும் பெயர் நான் வைத்தது இவ்வாறு: என் தந்தையாரின் பெயரில் முதல் எழுத்து N. என் தாயாரின் பெயரில் முதல் எழுத்து Y. Tanaya என்பது தனயன் என்ற சொல்தான். இவை இணைக்கப்பட்டு NYTANAYA என்னும் பெயர் வைத்தேன்.

Google, Yahoo என்பதெல்லாம் தேடல் இயந்திரங்கள் search engines என்று சொல்லப்படும். இவைகளில் NYTANAYA என்று என் வலைப்பக்கத்தை யாரேனும் தேடினால் ஒரு நொடிக்குள் 150க்கும் மேலான என் வலைப்பக்க பதிவுகள் காட்டப்படும். Google search இல் நாம் ஒன்றைத் தேடும்போது அப்படிப்பட்ட தேடல் பலர் அதுவரை செய்து இருக்கவில்லை என்றால், நாம் தேடுவது இல்லை என்றே சொல்லும்.

தன்னால் இதுவரை கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது பலமுறை தேடப்படும்போது Google இந்தத் தேடலை குறித்து வைத்துக் கொண்டு இப்படிப் பலர் தேடும் தலைப்பில் உள்ள பதிவு உலகில் உள்ள எந்த வலைப் பக்கத்திலாவது உள்ளதா என்று ஆராய்ந்து பின்னர் இதே பதிவு யாரேனும் மறுபடி தேடும்போது அந்தப் பதிவின் இணைப்பைக் காட்டும். இப்படித்தான் கூகிளின் தேடலில் ஆயிரக் கணக்காக தேடப் பட்டிருக்கும் பதிவுகளில் பயன்படும் keywords ஏதாவது ஒன்று கொண்டு தேடினால் நமக்கு உடனே லட்சக் கணக்கில் இணப்புகள் காட்டப் படுகின்றன.

இப்படி என் வலைப்பக்க பதிவுகள் தேடும்போது கம்ப்யூட்டர் திரையில் முதல் மூன்று நான்கு பக்கங்கள் வரை இணைப்புகளின் எண்ணிக்கை இருக்கும்.

*மூன்று மாதத்துக்கு முன் என் வலைப்பக்கத்தின் ஒரு ஸ்வீடன் வாசகர் என் வலைப்பக்கத்தின் ஒரு பதிவைத் தேடுகையில், என் பதிவின் இணைப்புகளுடன், மூன்று தாய்லாந்து நாட்டு வலைப்பக்க பதிவு இணைப்புகளும் கண்டு, அந்த மூன்றிலும் நிர்வாணப்படங்களும், வீடியோக்களும் அதிகம் காணப்பட்டதை சுட்டிக் காட்டி என் வலைப் பக்கத்தின் பெயரை மாற்றினால் நல்லது என்று எழுதினார்.*

இதனால் என் வலைப்பக்கத்தின் பெயரையும் விலாசத்தையும் மாற்றினேன். நான் செய்த இந்த மாற்றத்தால் அதுவரை 1.5 லட்ச வாசகர்களால் 4 லட்சம் தடவை படிக்கப்பட்ட கூகிளில் இருக்கும் என் பதிவுகளின் இணைப்புகள் செயலற்றுப் போயின. யாராலும் அவர்களால் தினமும் பலமுறை படிக்கப் பட்ட பதிவுகள் எங்கே மறைந்து போயின என்பது தெரியாமல் ஆகிவிட்டது.

தினமும் 300 முதல் 500 வரை பார்வைகள் பெற்று வந்த என் வலைத்தளம் (வலைப்பக்கம் என்றாலும் சரிதான்) பெறும் பார்வைகள் நின்று போயிற்று.

மறுபடி நான் வலைப்பக்கம் வைத்திருக்கும் WORDPRESS  என்னும் அமெரிக்க நிறுவனத்தின் USER FORUM என்று அதில் என் வலைத்தளத்தை பழைய பெயருக்கே பழைய விலாசத்துக்கே மாற்ற முடியுமா என்று கேட்டதில் முடியவே முடியாது என்று சொல்லப்பட்டது.

பின்னர் இந்த USER FORUM த்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு கம்பெனியின் அதிகாரி சிலர் அடிக்கடி பதில் சொல்வதை அறிந்து அவர்களுக்கு எழுதினேன். அந்த நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் பதில் எழுதினார். என் பழைய வலைப்பக்க விலாசம் மீட்கப்பட்டு விட்டதாகவும் ஆனால் அந்த விலாசத்தில் எந்த வலைப்பக்கமும் காணப்படவில்லை என்றும் கூறினார்.

எனக்குக் கிடைத்த அந்த பழைய விலாசத்தில் நான் *நல்லவை* என்ற பெயரில் வலைப்பக்கம் தொடங்கினேன். நான் மாற்றி இருந்த புது வலைத்தளத்தில் இருந்து தமிழ்ப்பதிவுகளை மட்டும் பழைய விலாசத்தில் இருக்கும் காலி வலைப்பக்கத்துக்கு மாற்றினேன். அடுத்த நாள் முதல் Google ஆறுவருடமாக சேமித்து வைத்த search results மறுபடி செயல்படத் துவங்கின. மறுபடி என் வலைப்பக்கத்துக்கு வாசகர்கள் வர ஆரம்பித்தனர்.

எனவே தற்போது நான் இரண்டு வலைத்தளங்களை இயக்கி அவற்றில் பதிவுகள் எழுதி வருகிறேன்.

இந்த மூன்று மாதத்தில் என் தமிழ் வலைத்தளம் 27000 பார்வைகளைப் பெற்றுள்ளது. மூன்று மாதத்தில் 13864 பேர் படித்து இருக்கிறார்கள்.

புது விலாசத்துக்கு மாற்றப்பட்ட என் பழைய பெரிய வலைத்தளம் இப்போது ஆங்கிலப் பதிவுகள் மட்டும் கொண்டு இயங்குகிறது. இந்த வலைத்தளத்தில் 2016 முதல் இன்று (04.04.2022) வரை 430990 பார்வைகள் பெற்றுள்ளன. 181074 பேர் என் வலைத்தளப் பதிவுகளைப் படித்து இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் அதிகபட்சம் மூன்று மாதம் முன் வரை என் வலைப்பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருந்த பதிவுகளைப் படித்தவர்களின் எண்ணிக்கையும் படிக்கப்பட்ட எண்ணிக்கையும் ஆகும்.

*இன்றைய தேதியில் என் தமிழ் வலைத்தளத்தில் 875 பதிவுகளும் ஆங்கில வலைப்பக்கத்தில் 603 பதிவுகளும் உள்ளன.*

இரண்டு வலைத்தலங்களின் இணைப்பும் இப்பதிவுக்குப் பின் தனியே தருகிறேன்.

(இப்பதிவு நண்பர்கள் தகவலுக்காக பகிர்வு செய்யப்படுகிறது.)

*N Ganapathy Subramanian*
04.04.2022

My blogs:

RAINBOWS: https://flowersofminds.wordpress.com/
நல்லவை: https://nytanaya.wordpress.com/

Leave a comment