காந்தியின் உடை

“ஆள் பாதி ஆடை பாதி” என்னும் கருத்து இந்த மகான் விஷயத்தில் பொருந்தாது.
††††††††††††

கதரைப் பரப்புவதில் காந்திஜி மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்தார்.

நாட்டின் வட கோடியிலிருந்து தென்கோடி வரை அநேக பெரிய நகரங்களுக்கும் ஒதுக்குப் புறங்களில் இருக்கும் எண்ணற்ற குக்கிராமங்களுக்கும் விஜயம் செய்தார்.

சென்னைக்கு வந்து செப்டம்பர் 17-ஆம் தேதி ராமேசுவரம் எக்ஸ்பிரஸில் புறப்பட்டுத் தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தைத் தொடங்கினார்.

தரங்கம்பாடி, கடலூர், கும்பகோணம் முதலிய நகரங்களுக்கு விஜயம் செய்துவிட்டுத் திருச்சிக்குச் சென்றார்.

திருச்சியில் செப்டம்பர் 19-ஆம் தேதி காந்திஜி பேசும்போது, அந்நியத் துணி பகிஷ்காரத்தை வற்புறுத்திவிட்டு மேலும் கூறியதாவது:

“தங்களிடமுள்ள அந்நியத் துணிகளையெல்லாம் உடனடியாகத் தூர எறிந்துவிடுவது அநேகருக்குக் கஷ்டமாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.

தூர எறியப்பட்ட துணிகளுக்குப் பதிலாகப் போதிய கதர் வாங்குவதற்கு இயலாதவாறு கோடிக்கணக்கானவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

அவர்கள் அரையில் மட்டும் ஒரு துணியைச் சுற்றிக் கொள்ளட்டும்.

நம்முடைய சீதோஷ்ண நிலையில், வெப்பமான மாதங்களில் நம் உடம்பை நாம் மூடிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

உடை விஷயத்தில் சங்கோஜம் வேண்டாம்.

ஆண்கள் உடம்பு முழுவதையும் மூடிக்கொள்ளுவது பண்பாட்டின் சின்னம் என்று இந்தியா ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.

அதனால், மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலாவது என்னுடைய தொப்பியையும், அரைக் கோட்டையும் களைந்துவிட்டு இடுப்பில் ஒரு துணியை மட்டும் சுற்றிக்கொள்ளுவேன்.

உடம்பைப் போர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் சமயத்தில், மேலுக்கு ஒரு நீளத்துண்டை மட்டும் போட்டுக்கொள்ளப்போகிறேன்.

இந்த மாறுதலை நான் கைக்கொள்ளுவதற்குக் காரணம், நான் பின்பற்றத் தயாராக இல்லாத ஒன்றை மற்றவர்களுக்கு உபதேசிக்க நான் எப்போதும் தயங்கி வந்திருப்பதுதான்.

மேலும், நான் வழி காட்டுவதன் மூலம், அந்நிய ஆடைகளைத் தூர எறிந்துவிட்டு மாற்றுத் துணிகள் வாங்கச் சக்தியில்லாதவர்களின் நிலையைச் சுலபமாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன்.

இந்தத் துறவு எனக்கு ஒரு துக்க அடையாளம் என்ற முறையிலும் தேவைப்படுகிறது.

வெறுந்தலையும், வெற்றுடம்பும் என்னுடைய ஊர்ப் பகுதியில் துக்கச் சின்னங்களாக இருந்து வருகின்றன.

நாம் மேலும் மேலும் துயர நிலையில் இருந்துவருகிறோம் என்பது எனக்குப் புலனாகி வருகிறது.

வருட முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அப்படி இருந்தும் நாம் இன்னும் சுயராஜ்யம் இல்லாமல் இருக்கிறோம்.

என் சக ஊழியர்களும், அரைக் கோட்டையம், தொப்பியையும் தூர எறிந்துவிட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

தங்களுடைய சொந்தப் பணிக்கு அவசியம் என்று கருதினாலொழிய, அவர்கள் அவற்றை எறியவேண்டியதில்லை.

ஒவ்வொரு மாகாணமும், ஒவ்வொரு ஜில்லாவும், அங்கே போதிய உழைப்பாளிகள் இருந்தால், தனக்குத் தேவையானவற்றை ஒரு மாதத்தில் போதிய அளவு உற்பத்தி செய்துவிடலாம் என்பது என் உறுதியா ன நம்பிக்கை.

சுதேசியைத் தவிர, பிற நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவைக்கும்படி நான் ஆலோசனை கூறுகிறேன்.”


செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று காந்திஜி மதுரையில் இருந்தார்.

காலை 10 மணிக்கு அவருக்கு க்ஷவரம் செய்ய ஒரு க்ஷவரத் தொழிலாளி அழைத்துவரப்பட்டார்.

மறுநாள் காலையில் 60 மைல் தூரத்திலுள்ள காரைக்குடிக்குக் காந்திஜி காரில் பிரயாணம் செய்ய வேண்டும்.

அதன்படி மறுநாள் அதிகாலையில் எழுந்திருந்தார்.

தம் உடைகளை மாற்றிக்கொள்ளப் போனார்.

தம்முடைய தொப்பியையும், அரைக் கோட்டையும் ஒதுக்கித் தள்ளினார்.

ஒரு சிறு கதர்ப் பையைத் தயாரித்தார்.

தம்முடைய கோட்டுப் பையில் வைத்துக்கொள்ளும் சாமான்களைக் கதர்ப் பைக்குள் வைத்தார்.

அப்புறம் ஒரு முழ அகலமுள்ள ஒரு கதர்த் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டார்.

காந்திஜி இப்படிப்பட்ட உடையணிவதை நண்பர்கள் தடுக்க முயன்றார்கள்.

சந்நியாசியாகிவிடும் உத்தேசம் தமக்கு இல்லை என்று அவர்களுக்குக் காந்திஜி உறுதி கூறினார்.

தாம் உடுக்கும் புதிய முறை உடையானது தென் இந்திய மக்களுக்குப் புதிதல்ல என்று கூறி, ஒரே உறுதியுடன் அந்தத் துணியைக் கட்டிக்கொண்டார்.

அதன் பின் காந்திஜி தமது வாழ்நாள் முழுவதிலும் இதே உடையிலேயே காட்சியளித்தார்.

***
நன்றி: ” காந்தி: சத்திய சோதனைக்குப் பின்”
(1920-ஆம் ஆண்டிலிருந்து காந்திஜியின் வாழ்க்கைக் குறிப்புகள்)
இந்நூல் ‘மகாத்மா காந்தி நூல்கள்’ வரிசையில் மூன்றாவது தொகுதியில் பின்னிணைப்பாக இடம்பெற்றது. அத்தொகுதியின் ஆசிரியர் ரா. வேங்கடராஜுலு. துணை ஆசிரியர் கு. அழகிரிசாமி.

Leave a comment