சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஒன்பது

எட்டாம் நூற்பா உரை

நூற்பா :

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
     
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
     
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே   (சிவஞான போதம்8)

உரை :

உயிர் முன்பிறப்புக்களில் செய்த புண்ணியத்தால் இதுவரை உள்ளே நின்று உணர்த்தி வந்த இறைவன் – இப்பொழுது ஞானநெறியை அருளுவதற்காகக் குருவாக வடிவங்கொண்டு எழுந்தருளி வருகின்றான்.

உயிர்க்குச் சிவதீக்கை செய்து உபதேசம் செய்வான். பக்குவம் அடைந்த உயிரை நோக்கி, “அரச குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடரிடத்தில் அகப்பட்டு அங்கேயே வளர்ந்து வந்ததனால் உன்னுடைய பெருமைகளை அறியாமல் மயங்கித் துன்பத்திற்கு ஆளானாய். உன்னுடைய பெருமைகள் இத்தகையன” என்று குரு வடிவில் உபதேசிப்பான்.

உயிர், உடனே உண்மையைக் குருவின் உபதேசத்தால் உணரும். உணர்ந்ததும் ஐம்பொறிகளாகிய வேடர்களைவிட்டு நீங்கும். இறைவனாகிய அரசனுடன் நீக்கமின்றித் திருவடிகளை அடையும்.

இவ்வாறு பக்குவப்பட்ட உயிர், ஐம்பொறிகளை விட்டு நீங்கிய உயிர் இறைவனுடைய திருவடியை அடையும் என்றால் பிரிந்து நின்று, பின்னர் அடைந்தது என்பது பொருளாகாது.

உயிர் என்றும் இறைவன் திருவடியுடன் சேர்ந்திருந்தாலும் ஐம்பொறிகளின் கூட்டுறவால் உயிர் உணராமல் இருந்தது, இப்போது உணர்ந்து இன்பத்தை அனுபவிக்கும் என்பது கருத்து.

இறைவனை அரசனாகவும், உயிரை அரசனுடைய மகனாகவும், ஐம்பொறிகளை வேடர்களாகவும் உருவகம் செய்து கூறப்பெற்றன. உயிர்களின் பாசங்களை அரித்தலால் அரன் என்ற பெயருடைய இறைவனை அரசனாகக் கூறினார்.

அரசன் செல்வம் முழுவதையும் தன்னுடையதாக அனுபவிக்கும் சுதந்திரமும் அரசகுலச் சிறப்பும் அரசனுடைய மகனுக்கு உரிமை உடையது போல, உயிர்க்கு இறைவனுடைய பேரானந்தப் பெருஞ்செல்வம் முழுவதையும் தன்னுடையதாக அனுபவிக்கும் சுதந்திரமும் உண்டு.

இறைவனுக்கு இயல்பாகவே முற்றறிவு உண்டு. உயிர் உணர்த்த உணரும் சிற்றறிவு உடையது. இத்தகைய ஒற்றுமை இருப்பதால் உயிர் அரச குமாரனாகக் கூறப் பெற்றது.

இறைவன் திருவடி இன்பத்தை நுகர வேண்டிய உயிர் – உடல், கருவி, உலகம், நுகர் பொருள் ஆகியவற்றில் செல்கின்றது. ஐம்பொறிகள் உயிர் அடைவதற்குரிய ஞானநெறியைத் தடைசெய்து கொண்டு உயிரைத் துன்புறுத்துகின்றன, ஆதலால் ஐம்பொறிகளை வேடர்களாகக் கூறிப் போந்தார்.

அரசகுமாரன் அரசனுக்குரிய செல்வங்களை அனுபவிக்கும் சுதந்திரமும், அரச குலமும் உடையனாயினும் அரசன் ஏவல் வழியே அனுபவிப்பான். அதுபோல உயிரும் இறைவன் திருவருள் வழியே சிவானந்தத்தை அனுபவிப்பான்.

உயிர்க்கு ஒரு பிறவியில் செய்த தவத்தினாலே நன்மைகள் வந்து சேரா. முற்பிறவிகளில் ஒன்றன்பின் ஒன்றாகப் படிமுறையில் செய்து வந்த தவமாகிய சரியை, கிரியை, யோகம் ஆகியவற்றால் குருநாதன் உணர்த்திய முறையில் சிவஞானம் வந்தடையும்.

சரியை

சரீரத்தால் செய்வது என்பது பொருள். திருக்கோயில் கூட்டுதல், மெழுக்கு இடுதல், நந்தவனம் அமைத்தல், பூப்பறித்து மாலைகட்டிக் கொடுத்தல் முதலியனவாகும். திருவுருவங்களில் ஒன்றை முறையாக வழிபடுதல், அடியாரை வழிபடுதல் முதலியனவும் சரியையே ஆகும்.

சரியையின் பயன் சாலோக முத்தியாகும். ஒரு வீட்டில் பணிபுரிவோர் தடையில்லாமல் வீடு முழுவதும் செல்வர். அதுபோலச் சிவலோகத்தில் தடையின்றி இயங்கி இன்பம் அனுபவிப்பர். அடிமைநெறி (தாச மார்க்கம்) என்று வழங்கப் பெறும்.

கிரியை

செயல்முறை என்பது பொருள். சிவதீக்கை பெற்றுச் சிவலிங்கத்தை உடையவராக வைத்துப் பூசை செய்தல், பூசைக்குரிய பொருள்களைச் சேகரித்துக் கொண்டு உரிய முறையில் அகத்தும், புறத்தும் வழிபடுதலாகும்.

கிரியையின் பயன் சாமீப முத்தியாகும். ஒரு வீட்டில் மக்கள் எல்லா உரிமையும் பெற்றுச் செயல்படுவார்கள். அது மகன்மைநெறி (சற்புத்திர மார்க்கம்) என்று வழங்கப் பெறும். அது போலச் சிவலோகத்தில் இறைவனின் அருகே இருக்கும் உரிமை பெற்றுச் செயல்பட்டுச் சிவ இன்பத்தை அனுபவிப்பார்கள்.

யோகம்

ஒன்றுவது என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு வகை யோகங்களை முறையாக மேற்கொள்ளுதல், சிவபெருமானின் அருவநிலையை ஞானத்தால் நினைந்து வழிபாடு செய்தல் யோக நெறியாகும்.

இதன் பயன் சாரூப முத்தியாகும். வீட்டில் மக்களைக் காட்டிலும் நண்பர்கள் அதிக உரிமை உடையவராய் எல்லாச் செயல்களிலும் பங்கு கொள்வர். அது தோழமை நெறி (சக மார்க்கம்) என வழங்கப் பெறும். அதுபோலச் சிவலோகத்தில் உள்ள கணங்களுடன் ஒத்த நெறி உடையவராகச் செயல்படுவர்.

சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களை முறையாகச் செய்தவர் சரியையின் பயனை அனுபவிப்பதற்குச் சாலோகபத முத்தியையும், கிரியையின் பயனை அனுபவிப்பதற்குச் சாமீப பதமுத்தியையும், யோகத்தின் பயனை அனுபவிப்பதற்குச் சாரூப முத்தியையும் அடைந்து பயன் நுகர்வர்.

அதற்குரிய காலம் தீர்ந்தபின் அப்பதமுத்தியை விட்டு நீங்கி மீண்டும் நிலவுலகத்தில் பிறப்பர். முன்பு நிலவுலகில் வாழ்ந்தபோது மனத்தில் உண்டான ஆசைகளை அனுபவித்துத் தீர்ப்பதற்காக மீண்டும் பிறந்து முந்தைய பிறப்பின் தவக்குறையை நீக்குதற்பொருட்டு நல்ல செயல்களில் திருவருள் துணைக் கொண்டு முயற்சி மேற்கொள்வர்.

ஒரு நல்வினையைச் செய்யத் தொடங்கி அதற்காக அறநூல்களை ஆராய்ந்து பார்ப்பது உண்டு. ஆராயும்போது அறநூலில் வேள்வி முதலிய செயல்பாடுகள் சிறந்த அறம் என்று கூறுவதுபோல் தோன்றும்.

அவ்வாறு வேள்வி முதலியவற்றைக் கூறி வரும்போது அவற்றால் உண்டாகும் சுவர்க்கம் முதலிய காமியப் பயன்களை உடன் கூறிக் கொண்டே வருவது தெரியும். வேள்வி முதலியவற்றால் உண்டாகும் பயன் உண்மைப் பயன் ஆகாது.

முன்பசி வந்தபோது உணவு உட்கொண்டு அவ்வுணவு சீரணமானதும் மீண்டும் பசி உண்டாகும். பசி உடையவனுக்குப் பசியை நீக்கும் உணவு உண்டபோது உண்டாகும் இன்பத்தைப் போன்றது வேள்வியால் உண்டாகும் பயனாகும்.

பசியை நீக்கும் உணவினால் உண்டாகிய இன்பம் மீண்டும் பசி உண்டாகும்போது நிலைத்தலின்றிக் கெடும். அதுபோல வேள்வி முதலியவற்றால் உண்டாகும் சுவர்க்க இன்பம் மீண்டும் பிறக்கும் போது நிலைத்தலின்றிக் கெடும்.

சரியை முதலிய தவங்கள் பயன்களைக் கொடுத்துக் கெடாமல் நின்று ஞானத்தைப் பெறுவதற்கு வழியாக அமைந்து வீடுபேற்றைத் தரும்.

சரியை முதலிய தவங்களைச் செய்யும்போது இரு வினை ஒப்பு நேர்ந்தால் ஞான குருவைத் தேடியடைந்து ஞானத்தைப் பெற வழிவகுக்கும்.

இருவினையொப்பு

நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் இரண்டையும் ஒன்று போலக் கருதி அவற்றில் பற்றுக் கொள்ளாமல் இருத்தல் ஆகும்.

சரியை முதலான தவத்தை ஈட்டி மெய்ஞ்ஞானத்தை அடையப் பக்குவம் அடைந்த உயிர்க்கு இந்நாள் வரையிலும் உள்ளே நின்று உணர்த்தி வந்த இறைவனே மானுட வடிவில் குருவாய் எழுந்தருளி வந்து உபதேசிப்பான்.

பாலில் நெய் விளங்கித் தோன்றாது. ஆனால் தயிரில் நெய் விளங்கித் தோன்றும். அதுபோல எல்லா உயிர்கள் இடத்தில் கலந்து நின்றாலும் இறைவன் விளங்கித் தோன்றுவதில்லை. ஞான குருவிடத்தில் இறைவன் வெளிப்பட்டு விளங்கித் தோன்றுவான். இதுவரை உள்நின்று உணர்த்திய இறைவனே குருவடிவாய் எழுந்தருளி வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான்.

உயிரின் பக்குவத்தை உயிர்க்குயிராகிய இறைவன் அறிந்து உணத்துவாரே அல்லாமல் ஏனையோர் உணர்த்தார்.

திருவருட் பயன் என்ற நூலில் அகத்தின்கண் பொருந்திய நோயை அகத்தில் உள்ளாரன்றி ஏனையோர் அறியமாட்டார் என்பதனை,

     “அகத்துறு நோய்க்கு உள்ளினரன்றி யதனைச்
     
சகத்தவரும் காண்பரோ தான்

என்று உமாபதிசிவம் குறிப்பிட்டுள்ளார். இறைவன் குருவாக வந்து உணர்த்தும்போது ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞானகலர்க்கு அறிவுக்கு அறிவாம் தன்மையில் நின்றவாறே உணர்த்துவான். ஆணவம், கன்மம் ஆகிய இருமலமுடைய பிரளயாகலர்க்கு நான்கு தோளும், மூன்று கண்ணும், நீல கண்டமும் உடையவராய் முன்னிலையில் நின்று உணர்த்துவான். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம் உடைய சகலர்க்கு மானுடவடிவில் குருவாக எழுந்து அருளி உணர்த்துவான்.

உயிர்கள் தமக்குரிய பக்குவமுறையில் இறைவன் அறிவிக்க அறியும் தன்மை உடையன. இறைவன் எல்லா உயிர்க்கும் ஒரே விதமாக அறிவித்தால் அறியும் தன்மை உடையன அல்ல. ஆகையால், அறிவித்தால் அறியக் கூடிய தன்மையுடைய விஞ்ஞானகலர்க்கு இறைவன் அறிவு வடிவில் தன்மையிடத்தில் உணர்த்துவான். குருவின் உபதேசத்தை உள்ளவாறு உணர முடியாத பிரளயாகலர்க்கு முன்னிலையிலும், சகலர்க்கு மானுட வடிவில் படர்க்கையிலும் உணர்த்துவான்.

ஆபரணங்களை அணிந்துள்ள பெண் ஒருத்திக்குத் தன் குழந்தையிடத்துக் கொண்டுள்ள அன்பு வெளிப்படையாகத் தெரியாது. என்றாலும் அந்த அன்பின் காரணமாக அவளிடத்தில் உண்டாகும் முலைப்பாலும், கண்ணீரும் வெளிக்காட்டும்.

அவ்வாறு வெளிக்காட்டும் முலைப்பாலும், கண்ணீரும் குழந்தையைக் காண்பதற்கு முன் இல்லாமல், கண்டதும் உண்டாவதும் இயல்பே ஆகும்.

நீரின் கண்ணே உள்ள நிழல் வெளிப்பட்டு வேறு நில்லாமல் அந்த நீருடனே கலந்து நிற்பது போல, உயிர்களிடத்தில் தனியாக வெளிப்பட்டு நில்லாமல் அருவாக நின்ற இறைவன் உயிர்களின் பக்குவத்திற்கேற்ப வெளிப்பட்டுக் குருவாய்த் தோன்றுவான், பக்குவம் இல்லாதபோது தோன்றமாட்டான்.

பாலும் கண்ணீரும் உரிய காலத்தில் தோன்றுவதைப் போலப் பக்குவ காலத்தில் தோன்றுவான். இறைவனே குரு வடிவாய் வந்து உணர்த்தாவிட்டால் இறைவன் இயல்பை யார் அறிவார்?

பளிங்குக் கல்லினிடத்தில் பொருந்திய பல நிறங்களின் தன்மையை அந்தப் பளிங்குக்கல் தன்னிடத்தில் பிரதிபலித்துக் காட்டும். பல்வேறு நிறங்களின் இயல்பு பளிங்கினிடத்தில் விளங்கித் தோன்றுவது பளிங்குக்குப் பொது இயல்பு.

இத்தகைய பொதுவியல்புடைய பளிங்கு போல உயிர்களிடத்தில் பொருந்திய இந்திரியங்களின் தன்மையே உயிர்களிடத்தில் விளங்கி நிற்கும். தன்மை சார்ந்த இந்திரியங்களின் வண்ணமாய் நிற்றல் உயிர்களின் பொது இயல்பாகும்.

பளிங்கினிடத்தில் தோன்றிய நிறங்கள் பளிங்குக்கு வேறானவை என்று அறிந்து கொள்ளுதல் போல, இந்திரியங்கள் வேறானவை என்று தெரிந்து, இந்திரியங்களால் உண்டான பல்வேறு தன்மைகளை நீக்கி, உண்மையை உயிர்கள் உணருமாறு ஞானகுருவே உபதேசிக்க முடியும். அந்தக் குருவாகிய சிவத்துக்கு உயிர்கள் என்றும் அடிமையாக இருக்கும்.

உயிர்கள் அறிவாயும் வியாபகமாயும் உள்ள சிறப்பியல்பை இந்திரியங்களுக்கு வேறு என்று உணர்ந்தால் அவ்விந்திரியங்களால் ஆவது ஒன்றும் இல்லை. உடனே இறைவன் திருவடியை அடையும்.

ஒருவன் ஏறியிருந்து ஆடுவதற்கு ஆதாரமான ஊசல் கயிறு அறுந்தபோது துன்பம் உற்றக்காலத்துத் தாங்கும் தாய்போல் அறுந்த ஊசலில் இருந்தவனைத் தாங்கிக்கொள்வது. தரையே ஆகும். வேறு ஒன்று தாங்காது, அதுபோல இந்திரியங்களின் வேறாக உயிர்கள் தம்மைக் காண முற்பட்டபோது தாங்கிக் கொள்வது இறைவன் திருவடியேயன்றி, வேறு இல்லை.

ஆற்றின் குறுக்கே அணையை உயர்த்திக் கட்டி நீரைத் தடைசெய்ய, தடைப்பட்டுத் தேங்கிநின்ற அந்த நீர் அணையுடைந்து தடை நீங்கினால், உடனே கடலை நோக்கி விரைவாகச் சென்று கடல் நீரில் கலந்து கடல் நீராகவே மாறித் திரும்பி வாராமல் இருக்கும். அதுபோலப் பாசஞானத்தால் தடைப்பட்டு நிற்கும் உயிர்கள் பாசஞானம் நீங்கியதும் இறைவன் திருவடியை அடையும்.

அணையுடைந்து கடலில் சென்று கலக்கும் நீர் ஆற்றின் வழியாக ஒருக்கால் எதிர்த்து மீண்டு வந்தால் உப்புநீரான கடல் நீராக வருமே அல்லாமல், ஆற்றுநீராக வாராது. அதுபோலச் சிவபெருமான் திருவடியை அடைந்த உயிர் சில சமயம் மீண்டால் சிவத்தன்மையுடன் மீளுமே அல்லாமல் உயிர்நிலையில் மீளாது. மீண்டாலும் திரும்பவும் திருவடியே அடையும்.

இறைவன் உயிர்களிடத்திலும், கருவிகளிடத்திலும் ஒரே தன்மையாகக் கலந்து நிற்பான். கண் காணும்போது காணும் உருவத்தைச் சென்று பற்றும். ஏனைய நான்கு பொறிகள் தம்மிடத்து வந்தவற்றையே பொருந்தி அறியும்.

உயிர்களிடத்திலும், கருவிகளிடத்திலும் இறைவன் ஒப்பக்கலந்து நின்றாலும் உயிர் விரிந்து நின்று பேரின்பத்தை நுகரும். கருவிகள் அவ்வாறு நுகரமாட்டா. கண் போல உயிர். ஏனைய பொறிகள் போலக் கருவிகள்.

பாசி படர்ந்திருக்கும் நீர்நிலையில் கல்லை எறிந்தால் பாசி நீங்கும். கல் எறிதல் நின்றால் பாசி பரவும். அதுபோல இறைவன் திருவடியை மறந்தால், வாசனாமலம் வந்து தாக்கும். அவ்வாசனாமலம் வந்து உயிரைத் தாக்கியபோதும் இறைவன் உயிரை விட்டு நீங்காது இருப்பான். அந்நிலையிலும் இறைவன் திருவடி ஞானத்தைச் சிந்தித்தால், மலத்தால் உண்டாகும் வேதனை நீங்கும்.

     “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
     
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
     
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே   (சிவஞான போதம்8)

  • To be continued.

 

Leave a comment