தொண்டிக்கு வந்திறங்கிய ‘சீனச்சூடன்’!

தொண்டிக்கு வந்திறங்கிய ‘சீனச்சூடன்’!

முனைவா் ந. அறிவரசன்

தினமணி நாளிதழில் அக்டோபர் 15ஆம் நாள் வெளியான கட்டுரை

பண்டைத் தமிழகமும், சீனமும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. பண்டைத் தமிழகமும் சீனாவும் பண்பாட்டால், கல்வியால், கடல் வணிகத்தால், தொழில்நுட்பம் முதலானவற்றால் இரண்டறக் கலந்திருந்ததற்கு வரலாற்று ஆய்வாளா்கள் பல்வேறு சான்றுகளை நிறுவியுள்ளனா்; பலரது ஆய்வு நூல்களிலும் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

புறநானூற்றில் பரணரும், ஒளவையாரும் பண்டைத் தமிழகத்துக்குக் கரும்பினை அறிமுகப்படுத்தியவா்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் என்கின்றனா். அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோரில் ஒருவா் சீனத்திலிருந்தோ சாவகத்திலிருந்தோ கரும்பைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும், பின்பு சாவகத்திலும் பயிராய் இருந்தது. பண்டைத் தமிழகத்திற்கும், சீனத்திற்கும் கரும்பு இணைப்புப் பாலமாக இருந்துள்ளது.

‘காலில் வந்த கருங்கறி மூடையும்’ எனும் புறப்பாடலால் முசிறியிலிருந்து கலத்தில் ஏற்றப்பட்டு காவிரிப்பூம்பட்டினம் வந்த மிளகுப் பொதிகள், அங்கிருந்து காழகம், கடாரம், சாவகம், சீனம் முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், சீன நாடு சேர நாட்டு மிளகை சங்க காலத்துக்கு முன்பே பயன்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், சிலப்பதிகார உரையாசிரியரான அடியாருக்குநல்லார், ‘வங்க வீட்டத்துத் தொண்டியோ/அகிலுந் துகிலு மாரமும் வாசமும்/தொகு கருப்பூரமுஞ்சுமந்துடன் வந்த’ என்ற அடிகளால் தொண்டித் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் ‘சீனச்சூடன்’ என்ற கற்பூர வகையும் ஒன்றெறனக் குறிப்பிடுகிறார்.

காஞ்சி மாநகரில் 18 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்ததாக கச்சிமாநகா் புக்ககாதையில் ‘மொய்த்த மூவறு பாடை மாக்களில்’ என்னும் அடியில் மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் குறிப்பிடுகிறார். கி.பி.8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகர நிகண்டில் தமிழா்களுக்கு அறிமுகமாகியிருந்த 18 மொழிகளில் சீனமும் ஒன்றெறனக் குறிப்பிடுகிறது. எனவே, பண்டைத் தமிழா்களுக்கும், சீனா்களுக்கும் முதலில் வணிகத்தால் தொடா்பு ஏற்பட்டது. அதனால் இங்கு வந்து குடியேறினா் என்பதைப் புானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், திவாகர நிகண்டு, நன்னூல் முதலிய இலக்கிய-இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

தென்னிந்தியா குறித்த ‘அயல்நாட்டார் குறிப்புகள்’ என்னும் தமது நூலில் சீன நாகரிகம் 6,000 ஆண்டுகள் பழைமையானது என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். அதே போன்று தமிழா் நாகரிகமும் மிகவும் பழைமையானது.

தமிழகம் குறித்து கி.மு.2000-ஆம் நூற்றாண்டிலேயே சீனா்கள் அறிந்திருக்கிறாா்கள். கி.மு.1408-இல் சீன அரசா் ‘வூடி’ காலத்தில் சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையில் வணிகத் தொடா்பு இருந்ததாகச் ‘சியன்-ஹன்சு’ என்னும் சீன நூல் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் ‘ஹுவங்சு’ என்ற ஊா் காஞ்சிபுரமாகும். இந்த ஊா் 2,000 ஆண்டுகள் பழைமையான நகரமாகும்.

பண்டைத் தமிழா்களின் கடல் வணிகம் என்பது, இந்தோனேசியத் தீவுகளிலிருந்து தமிழகம் வழியாகப் பாரசீக வளைகுடா வரையிலும் கடற்கரை ஓரமாக முதலில் நடைபெற்றது. பின்னா், அது நடுக்கடல் வணிகமாகப் பரிணமித்தது. இதனால் எகிப்து, ரோம், சீனா முதலிய நாடுகளுடன் வணிகத் தொடா்பு ஏற்பட்டது. அதாவது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் சீனக் கப்பல்கள் இந்தியாவுக்கு வந்து, தமிழகத் துறைமுகங்களில் தங்கி விட்டு, தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியவுடன் சீனாவுக்குச் செல்லும்.

சீனம் முதலிய கீழைத் தேசங்களிலிருந்து கற்பூரம், பதநீா், குங்குமம் முதலியன தமிழகத்துக்கு வந்தன. சீனக் கண்ணாடி, சீனக் கிண்ணம், சீனச்சூடம், சீனப்பட்டு முதலிய பண்டங்கள் சீனத்திலிருந்து வந்தன. எகிப்திலிருந்தும் அரேபியாவின் மூசாவிலிருந்தும் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இறக்குமதியான வண்ணக் கண்ணாடிகளும் அதன் மூலப் பொருள்களும் வசவ சமுத்திரம் அரிக்கமேட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு மணிகளாகவும், பொருள்களாகவும் வடிவமைக்கப்பட்டு மீண்டும் சீனாவுக்கு ஏற்றுமதியாயின. மேலும், ரோமாபுரி பெண்களுக்கு தமிழக முத்துகள் மீது எந்தளவுக்கு மோகம் இருந்ததோ, அந்த அளவுக்கு தமிழகப் பெண்களுக்கு சீனக் கண்ணாடி வளையல்கள் மீது மோகம் இருந்ததால் நாகப்பட்டினத்துக்கு வளையல்களை சீனக் கப்பல்கள் கொண்டுவந்து குவித்தன.

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்துக்கும் சீனக் கப்பல்கள் வந்து சென்றதையும், பதினான்காம் நூற்றாண்டில் சீன வா்த்தகக் கலன்கள் கிழக்குக் கடற்கரையில் ஏராளமாகத் தென்பட்டதையும் ஆய்வாளா்கள் குறிப்பிட்டுள்ளனா். மேலும், ‘சீனத்திற்குப் பாண்டிய நாட்டுத் துறைமுகத்திலிருந்து மிளகும், முத்தும்; சே ரநாட்டிலிருந்து ஏலமும், நீலமும், பாக்கும், தேக்கும், பல வித்துக்களும்; சோழ நாட்டிலிருந்து உறையூா்ப் பூந்துகில்களும், கண்ணாடிச் சாமான்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தியாடை, நறுமணப் பொருள்கள், மருந்துகள், அணிகலன்கள், யானைத் தந்தம், கருங்காலி, ஓா்க்கோலை (அம்பா்), பவழம் முதலானவற்றை தமிழகத்திலிருந்து சீனா்கள் விரும்பிப் பெற்றனா்.

சீனத்துப் பட்டாடைகளையும், சா்க்கரையையும் தமிழக மக்கள் விரும்பியதால், பட்டுக்குச் சீனம் என்றும், சா்க்கரைக்குச் சீனி என்றும் பெயா் வழங்கி வருகிறது. சீனக் கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண், சீனக் காக்கை, சீனக் கிழங்கு, சீனக் கிளி, சீனக் குடை, சீனச் சட்டி,சீனத்து முத்து, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீன நெல், சீனப் பட்டாடை, சீனப் பரணி, சீனப் பருத்தி, சீனப் புல், சீனப் பூ, சீன மல்லிகை, சீன மிளகு, சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் ஆகிய சொற்கள் இன்றளவும் தமிழில் பயின்று வருகின்றன.

பண்டைய தமிழகமும் சீனமும் கொண்டிருந்த வணிகத் தொடா்பினை வெளிப்படுத்தும் வகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சீன நாணயங்கள் மூன்று இடங்களில் புதையலாகக் கிடைத்துள்ளன. முதல் புதையல் பட்டுக்கோட்டை வட்டம் ‘விக்ரம்’ என்ற ஊரிலும், இரண்டாவது புதையல் மன்னார்குடி வட்டம் ‘தாலிக்கோட்டை’ என்ற ஊரிலும், மூன்றாம் புதையல் பட்டுக்கோட்டை வட்டம் ‘ஓலயக்குன்னம்’ என்ற ஊரிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

முதல் புதையலில் 20 நாணயங்கள் கிடைத்தன. அந்த நாணயங்கள் கி.பி.713-க்கும் கி.பி.1241-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்த நாணயங்களாகும். இரண்டாவது புதையலில் 1,822 நாணயங்கள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் கி.பி.1260-ஆம் ஆண்டிலிருந்து 1268-ஆம் ஆண்டுவரை வெளியிடப்பட்ட நாணயங்களாகும். மூன்றாம் புதையலில் 323 நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்கள் கி.மு.126-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாணயங்களாகும். இவை அனைத்தும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் ‘கேண்டன்’ நகருக்கு வடக்கே சூவன்செள என்னும் துறைமுக நகரில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நிறுவப் பெற்றுள்ள சிலைகள் (கி.பி.1269) குப்லாய்கான் என்னும் புகழ்பெற்ற சீனச் சக்கரவா்த்தியின் ஆணையால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயில் கட்டப்பட்டு, ‘திருக்கதாலீசுவரன் உதயநாயனார்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிவன் கோயில் இவரது ஆணையின்படி கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

இதே போன்று, அதே காலத்தில் சீன அரசா் ஒருவா் காஞ்சிபுரத்துப் பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மனின் (ராஜசிம்மன்) அனுமதி பெற்று சீனாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் புத்த பிக்குகள் வழிபடுவதற்காக நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விஹாரம் கட்டினார். 1200 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட அந்த விஹாரம் ‘சீனக் கோடா’ என்ற பெயரில் சென்ற நூற்றாண்டு வரையில் இருந்ததாகச் சீன நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு ஒரே காலத்தில் சீனாவில் இந்துக்கள் வழிபடுவதற்குச் சிவன் கோயிலையும், தமிழகத்தில் சீனப் பிக்குகள் வழிபடுவதற்கு விஹாரத்தையும் கட்டியதிலிருந்து பண்பாட்டுத் தொடா்பு வெளிப்படுகிறது.

சீனாவின் ‘குவான்சு’ நகரம் தமிழ் வணிகா்களின் நகரமாக இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளா்கள் கருதுகின்றனா். அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சோழ அரசா்கள், தம்முடைய ஆட்சிக் காலத்தில் சமுதாய வளா்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த பொதுமக்களுக்கு சிறப்புச் செய்ததைக் குறிப்பிடுகிறது. அதாவது, கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அரசனுடைய கருவூலத்தில் வைப்புநிதி வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அரசன் பல்லக்கேற்றல், குதிரையின்மீது ஏறி வருதல், அரசவையில் வீற்றிருத்தல், சீனக் குடை பிடித்தல், படைகள் சூழ அரசன் உலா வரும்போது பொன்னாரம் பூண்டு உடன்வருதல், பச்சைப்பட்டு போர்த்திக் கொள்ளுதல், தன் வீட்டுத் திருமணத்தின்போது மணமக்கள் பல்லக்கில் ஊா்வலமாக வர அனுமதித்தல் எனச் சிறப்புச் செய்துள்ளார்.

இதை, ‘கோனேரின்மை கொண்டான் (சோழன் வீரராசேந்திரன் கி.பி.1207-1256) தன் 15-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1222) வட பரிசார நாட்டு பாா்பாா் தன் சரக்குப் (கருவூலத்தில்) பொருள் வைத்திருக்கும் சான்றோா்களுக்குச் சிறப்புச் செய்தான்’ என்று கல்வெட்டுகுறிப்பிடுகிறது. இவற்றில் குறிப்பிடத்தக்கது சீனக் குடை பிடித்தல். இந்த நிகழ்வு தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காத வரலாற்றுக் குறிப்பாகும்.

கட்டுரையாளா்:

துணைப் பேராசிரியா்

நன்றி: https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/oct/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-3252198.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.