யோகசிம்மபுத்ரன் சரிதை – 096 – தரங்கம்பாடி 11 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 10

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 10

தொடர்ச்சி:

“நீ நினைப்பது சரிதான். நீ எழுப்பிய வினாவும் சரிதான். நீ இன்னும் பலநூல்களைக் கற்றுப் படித்து உணரவேண்டும். இறைவன் உலகைப் படைத்து அந்த உலகமாகவே விளங்குகிறார். தன்னால் படைக்கப்பட்ட உயிருள்ள உயிரற்ற அசைவுள்ள அசைவற்ற அனைத்திலும் இறைசக்தி உள்ளது. மனிதர்களில் அவர்கள் மனத்துக்குள் இறைசக்தி இருக்கிறது. நீ படித்த நாராயண சூக்தத்தில் இறைவன் நடுநெஞ்சில் கவிழ்ந்த தாமரை மொக்கில் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறான் என்று சொல்லி இருக்கிறது. இதேபோல் ஆதி கிறிஸ்தவர்கள் இறைவன் நடுநெஞ்சில் ஒரு இடத்தில் மூன்று சுவாலைகளாய் ஒளிவிடுவதாய்ப் பகர்ந்துள்ளனர். இதயக்குகை எனப்படும் இடத்தில் இறைவன் இருப்பதால் என்னை வழிபடுகிறவர்கள் என்னை குஹன் என்று அழைக்கின்றனர். இதயக்குகை என்பது சிறிய குகையன்று, அது இவ்வுலகை விடப்பெரியது. சிதாகாசம் என்று கூறப்படும்.

“மனிதனுக்குள்ளேயே நான் இருக்கும்போது ஏன் என்னை வெளியில் தேடவேண்டும். மனிதனுக்குள்ளே உள்ள உடல் உட்பாகங்களைப் பற்றி பல நூல்களைக் கற்கும் மனிதர்கள் ஏன் உள்ளுறையும் இறைசக்தியைப் பற்றிக் கற்பதில் நாட்டம் கொள்வதில்லை. ஆன்மீக நாட்டம் என்பதும் உண்மைகளை, மனிதன் தன் ஐம்புலன்களால் அறியவொண்ணாத உண்மைகளை நோக்கிச் செல்லும் ஒரு பயணமாகும். இன்றும் கூட கண்ணுக்குத் தெரியாத அணுவுக்குள்ளே உள்ள சக்தித்துகள்களைப் பற்றிய ஆராய்ச்சி நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆயினும் ஆன்மீகப் பயணம் மனிதன் தனியே செய்ய வேண்டிய ஒரு வேள்வி. இந்த வேள்வியில் செய்ய வேண்டிய முறைகள் எல்லாமே மனிதன் தனக்குப் பிரத்தியேகமாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டியவை. சிலர் இயல்பான பாதையையும் சிலர் செயற்கையான பாதையையும் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளீர்கள். சிலர் கடினமான முறைகளை மேற்கொள்ளுகிறீர்கள்.

“இறைசக்தியுடன் நெருங்கித் தொடர்புகொண்ட சில மனிதர்கள், அவர்களின் அனுபவங்களை, மற்ற மனிதர் மேல் கொண்ட பேரன்பினால், மொழியால் சரியாக விவரிக்க இயலாத உள் அனுபவங்களை, விவரித்து, அவற்றை சொன்னவர்மேல் முழு நம்பிக்கை வைத்து மற்றவர்கள் அவர் கூறியவற்றை மேற்கொண்டு இறைவனை அறிய, முற்பட்டு, மதங்கள் உருவாகின. விவரிக்க இயலாத உள் அனுபவங்களை, ஆன்மீக அனுபவங்களை, சொல்லால் விவரித்து விளக்கினாலும், அதே அனுபவங்களை அப்படியே எல்லோராலும் உணர்ந்து கொள்ள இயலாது. அதற்கு முதல் அடிப்படை அனுபவமே. உள் அனுபவங்கள் பெற ஐம்புலனால் பெறப்பட்ட அறிவை அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. மனம், ஆழ்ந்த சிந்தனை, தியானம் இவற்றால் ஆன்மீகப் பயணம் செய்யவேண்டும். மனத்தில் அன்பு சூழப் பட்டிருக்க வேண்டும்.

“ நீ சிறுகுழவியாய் இருக்கும்போது எவ்வாறு நீ உன் தாயை நேசித்தாய். தாயிடம் நீ அருந்திய பாலுக்காக மட்டும் நீ தாயை அருகியிருக்கவில்லை. எல்லாவற்றிற்குமே, உன் மனமகிழ்ச்சிக்காக உன் தாய் தந்தையையே நீ சார்ந்திருந்தாய். உன் தாயை நீ நம்பலாம், நீ கேட்கும் உனக்குத் தேவையானவற்றை  உன் தாய் கொடுப்பாள் என்ற பெரிய உண்மையை யார் உனக்குக் கற்பித்தார்கள்? எப்படி இயற்கையாகவே உனக்கு அந்த அன்பும், பிடிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டது, அது ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது.

“ “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!என்று என் பக்தன் இதை உணர்ந்து பாடி இருக்கிறானே. சிந்திக்கும் மனிதர்கள் அன்பே நிறைந்த இறைசக்தியின் தன்மைகளை விருப்பப்பட்டே மறந்து விட்டீர்கள். அதிகமான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் விதித்து  இயல்பான அந்த அன்பின் இலக்கணத்தை மறைத்துவிட்டீர்கள்.

“நான் படைத்த பல உலகங்களில்  பல பரிமாணங்கள் உள்ளன. நுண்மையான ஒலி, ஒளி பரிமாணங்கள் முதல் வண்மையான கடினப்பொருள் வரை பல மாறுபட்ட பரிமாணங்களின் சேர்க்கை கொண்ட பல உலகங்கள் உள்ளன. இவற்றில் இந்தப் பூமியில் உயிர்களுக்கு ஐந்து ஆதிப் பொருள்களால் ஆன உடல் கொடுக்கப்பட்டுள்ளது.

“உடலுடன் வாழக்கூடிய இந்தப் பூமியில்தான் எல்லாவற்றையும் படைத்த இறைவனுக்கும் அவனால் படைக்கப்பட்டவர்களே இலக்கணம் எழுதி, அவனுக்கு எல்லைகள் வகுத்து, மனிதனில் பேதங்கள் ஏற்படுத்தியுள்ளனர். பரிமாணங்கள் வேறுபட்டுள்ள மற்ற உலகங்களில் இறைவன் இருக்கிறான், ஆனால் அவற்றில் மதங்கள் என்னும் வேறுபாடில்லை.

“இப்பூமியில் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டு பல சோதனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு, இறைசக்தியை நெருங்கி அறிய சிலர் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கூறிய போதனைகளைத் திரித்து, பல மாறுதல்களையும் பல முறைகளையும், பல கட்டுப்பாடுகளையும் விதித்து, அருகே உள்ள இறைவனை அந்நியம் ஆக்கிவிட்டீர்கள். இதயக் குகையில் வாழும் இறைசக்தி எப்படி அந்நியப்படுத்தப் படலாம்.

“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே” என்னும் பாடலில் உள்ள உண்மைகளை அறியாமல் இப்பாடலை வேடிக்கை செய்கிறீர்கள். நீங்கள் எந்த உருவத்தில் வணங்கினாலும், எந்த மதத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து வணங்கினாலும், எல்லா வடிவங்களிலும் உணரப்படக் கூடிய இறைசக்தி மனிதரில் மதத்தினாலோ, கல்வியாலோ, அறிவினாலோ, ஞானத்தினாலோ, அழகினாலோ, பொருளினாலோ மனிதரில் பேதம் பார்க்காது எல்லா மனிதரிடத்திலும் இறைசக்தி அன்பாகவே உள்ளது. எந்த மதத்தில் பிறந்திருந்து எந்த உருவத்தில் வேண்டினாலும், அந்த உருவத்தில் இருக்கும் இறைசக்தி மனிதன் படைத்த மத எல்லைகளைத் தாண்டியும் அருள்பாலிக்கும்.

“உன் வாழ்வில் கிறிஸ்து உருவத்தில் இறைசக்தி செயல்பட்டு உன்னை ஆசீர்வதித்தது உண்மையே.”

 

தொடரும்….

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.