யோகசிம்மபுத்ரன் சரிதை – 098 – தரங்கம்பாடி 13 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 12 (இறுதிப்பகுதி)

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 12 (இறுதிப்பகுதி)

தொடர்ச்சி:

மறுநாள் காலையில் குளித்து பூஜை செய்ய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அன்று கந்தசஷ்டிக் கவசம் அமர்ந்து சொல்லவில்லை. பாண்ட் ஷர்ட் போட்டு ஆஃபீஸ் கிளம்பியபோது சொல்லிக்கொண்டே கிளம்பினேன், சொல்லிக்கொண்டே என் அபார்ட்மென்ட் வெளியே வராந்தாவில்  செல்கையில் என் அருகில் இருந்த அபார்ட்மெண்டுகளில் இருந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் பார்த்தனர்.

சொல்லிக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்றேன். அங்கிருந்த ஆட்டோவில் அமர்ந்ததும் ஆட்டோக்காரர் கிளப்பியதும் வண்டியில் கந்தசஷ்டிக்கவசம் ஒலிக்க ஆரம்பித்தது. நான் அப்போது எந்த வரியை சொல்லிக்கொண்டிருந்தேனோ அந்த வரியில்தான் வண்டியிலும் ஒலிக்க ஆரம்பித்தது. இது முதல் ஆச்சரியம்.

வண்டி திரும்பி மெயின்ரோட்டில் செல்லும்போது முதலில் தென்பட்ட வாகனம் கந்தவிலாஸ் ட்ரான்ஸ்போர்ட் பஸ். இது இரண்டாவது ஆச்சரியம்.

ஆபீஸ் சென்றதும் முதலில் தென்பட்ட கஸ்டமர் சரவணன். அடுத்து தன் கடைக்காகக் கடன் கேட்டு வந்தவர் பெயர் சுப்பிரமணியன். அன்று ஒரு ஜாயிண்ட் சேவிங்க்ஸ் கணக்குத் திறக்க வந்தவர்கள் பெயர்கள் வேலுச்சாமி மற்றும் குமரன். அன்று ஒரு புது கரண்ட் அக்கவுண்ட் முருகா அண்ட் கோ என்ற பெயரில் திறப்பு.

டீ சாப்பிடுவதற்காக வெளியே சென்றபோது சிவக்குமார் என்ற புது நண்பர் தென்பட்டார். அன்று டீக்கடையில் டீ ஆற்றித்தந்தவர் பெயர் சரவணபவன். எங்களை ஒரு மினிட்ரக் கடந்து சென்றது. அதன் பின்னால் “நம்முடன் இருக்கும் பழனி முருகனே நமக்குத் துணை” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. எனக்கு ஒருமாதிரி இருந்தது. பலநாட்களில் இவ்வாறு பெயர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இன்று கவனித்ததில் எல்லாமே முருகன் பெயரைத் தாங்கி இருந்தது கண்டு வியந்தேன்.

என்ன இது வெறும் விளையாட்டுத்தனமாக இருக்கிறதே, மறுபடி மறுபடி முருகன் பெயர் வந்தால் முருகன் என்னுடன் இருப்பதாக முடிவுகட்டி விடலாமா? என்று திரும்பிவந்து சீட்டில் அமர்ந்தேன்.

பாலசுப்ரமணியம் வக்கீல் வந்தார். “சார் நீங்கள் James Redfield  எழுதிய The Celestine Vision, The Celestine Prophecy, Twelfth Insight புஸ்தகங்கள் படித்திருக்கிறீர்களா ? Unplanned coincidences என்ற கான்செப்டில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா சார் ?” என்று கேட்டார். “முதல் புத்தகமும் மூன்றாம் புத்தகமும் என்னிடம் இருக்கின்றன, நான் வாசித்திருக்கிறேன்” என்றேன்.

அவர் “என்ன சார் புது செண்ட் போட்டிருக்கீங்களா, ரொம்ப ரம்யமான வாசனை சார். எங்க வாங்கினீங்க சார், இம்போர்ட்ட் ப்ராடக்ட்தானே சார், என்ன சார் இன்று உங்கள் கண்களில் நல்ல ஒளி வீசுகிறது, நெற்றியில் இட்ட விபூதி உதிர்ந்துவிட்டது, ஆயினும் உங்களிடம் நல்ல பழனி சித்தனாதன் கடை விபூதி வாசனை அடிக்கிறதே’” என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டார்.

உள்ளே இருந்து வந்த முதுநிலை ஊழியர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் அசோகன் அவர்கள், “சார், நீங்கள் காலையில் உள்ளே வரும்போதே இந்த வாசனையை உணர்ந்தேன். காலையில் உங்கள் ரூமுக்கு வந்து கேட்க முடியாதபடி மாற்றி மாற்றி யாராவது உங்கள் ரூமில் இருந்தனர். சரி வரலாம் என்று தோன்றியபோது நீங்கள் டீ சாப்பிடச் சென்றுவிட்டீர்கள். இன்று உங்களிடம் தெய்வீகத்தன்மை அதிகம் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இத்தனைக்கும் உங்கள் நெற்றியில் விபூதிகூட நீங்கள் வழக்கமாக வைத்துக் கொள்வதைவிடக் குறைவாக இருந்தது. அதனால் நீங்கள் ஏதோ ஒரு சென்ட் போட்டிருப்பீர்கள், அந்த மணம் மிக உயர்வாக இருப்பதால், நேற்று வந்த சிடிபாங்க் சிங்கப்பூர் அப்துல் பாய் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தேன்.

“அவரிடம் நான் ஃபோன் செய்து கேட்டேன். அவர் “உங்கள் மேனேஜர் எந்த கிஃப்டையும் வாங்க மாட்டாரே, நான் ஒன்றும் தரவில்லை” என்று சொல்லிவிட்டார். சார் நீங்க வாங்கின அந்த சென்ட்ட எங்க வாங்கினீங்கன்னு சொல்லுங்க. மிகவும் தெய்வீக மணம் வீசுகிறது” என்று கேட்டார்.

நான் “என் வீட்டுக்கு ஒரு வெளிநாட்டவர் வந்தார் அவர் தன் சென்ட் ஸ்ப்ரேயை பயன்படுத்தும்போது என்மேலும் விழுந்திருக்கும், ஆனால் எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை” என்றவுடன், அசோகன் “சாருக்கு சளி பிடிச்சிருக்கும், அதனாலதான் தெரியல்ல” என்று சொல்லி உள்ளே சென்றார்.

இது என்ன மாஜிக் செய்கிறார் இந்த முருகன் என்று தோன்றியது. ஆனாலும் மனம் மிக நிம்மதியாக இருந்தது. எந்த வேலையும் செய்யத் தோன்றவில்லை.

மாலையில் அமர்ந்து விடுபட்ட வேலைகளைச் செய்ய அமர்ந்தால், கணேசன் வந்தார், “ வர்ரீங்களா சார், ஒரு ஒரு மணிநேரம் சாமியைப் பாத்துட்டு வரலாம், என்ன சார் இது நேத்து சாமிக்கிட்ட அடிச்ச அதே வாசனை ஒங்ககிட்டயும் இன்னிக்கு அடிக்குது.   ஒங்க ஒடம்புலயும் முருகன் பூந்துட்டாரா சார்? ஒங்க கண்ணும் ரொம்ப ஒளியாயிருக்கு. வாங்க சார், இப்படியே போய் சாமியப் பாப்போம். அவரும் இந்த வாசனையைப் பாக்கட்டும். அவர்ட்ட இந்தமாதிரி வாசனை வர்ரதைச் சொன்னா அவுரு அந்த வாசனை தனக்குத் தெரில்லேங்கிறார். இப்ப போனா அந்த வாசனை எப்படி இருக்கும்னு காம்ச்சுடலாம் சார், போலாம்ல சார் இப்ப” என்று மூச்சுவிடாமல் பேசினார். சரி என்று கிளம்பிவிட்டேன்.

அரைமணி நேரத்தில் சாமிவீடு சென்றோம். சாமி வீட்டில் இல்லை. சாமியின் மனைவி இருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் “என்ன சார் ஒங்க கிட்டயும் அவர்ட்ட வீசற வாசனை வருதே சார், இருங்க சார் அவரு வர்ர நேரந்தான், ஒக்காருங்க, காபி போட்டுத் தரேன்” என்றார்.

காபி சாப்பிட்டுவிட்டு காத்திருந்தேன். அரை மணி நேரத்தில் சாமி வந்தார். அவரைப் பார்த்ததும் அவர் மனைவி அவரிடம் “என்னங்க, ஒங்ககிட்ட முருகசாமி வரும்போது வீசற வாசனை இப்போ சார் கிட்டயும் வருதே எப்படிங்க?” என்று கேட்டார். என்னைப் பார்த்த சாமி என்னைக் கட்டிக்கொண்டார். “கணேசா, இந்த வாசனைதானா எங்கிட்டயும் அவன் வரும்போது அடிக்குது, நீகேப்பியே, எனக்கு இந்த வாசனை ஒருநாளும் தெரியல்லடா, இன்னிக்கு சார்ட்ட இருந்து வாசனை வீசும்போதுதான் தெரியுதுடா” என்று மிகக்கனிவாகச் சொன்னார்.

பிறகு அவரும் காபி சாப்பிடும்வரை காத்திருந்தேன். அவரிடம், “சார், முருகன் தானாய்த்தான் வருவானா இல்லை நீங்கள் கூப்பிட்டாலும் வருவானா சொல்லுங்க சார்” என்று கேட்டேன். “எதுக்கு சார் கேக்கறிங்க” என்றார் சாமி.

நான் சொன்னேன் காலையில் இருந்து நடந்தது எல்லாவற்றையும் சொன்னேன். “எனக்கு மிக உன்னதமான மனநிலை இருந்தது. ஆனால் எனக்கு நிலைகொள்ளவில்லை. என்னால் என் வேலைகளில் கவனம் செலுத்த இயலவில்லை. இப்படி இருந்தால் நான் ஆஃபீஸ் வேலையில் தவறு செய்துவிடுவேன். நீங்க முருகனைக் கூப்பிட்டு என் பிரச்னையைத் தீக்கச் சொல்லுங்க” என்றேன்.

அவர் அமர்ந்துவிட்டார். சாமி என்னைப் பார்த்து “என்ன சார், வாசனை இப்ப போயிடுச்சு” என்றார். கண்ணை முடிக்கொண்டார், கணேசன் சொன்னார், “இல்லண்ணே, இப்பவும் அதே வாசம் வீசுது” என்றார். நானும் எனக்கு வாசனை தெரிவதாகச் சொன்னேன்.

திடீரென்று ஒரு உறுமல். சாமியிடமிருந்துதான். “என்ன பக்தா, என் அருகாமையை ஒரு அரைநாள் கூட உன்னால் தாங்க இயலவில்லை பார்த்தாயா, உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. நீ இன்னும் பழுக்கவேண்டும். காத்திரு நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். அப்புறம் உன்னிடம் நீ விரும்பினால் வருகிறேன். ஆனால் கவலை கொள்ளாதே, நீ கேட்டபடி, என்னிடம் நீ கிறிஸ்தவர் பேசுவதைப் போல அச்சமின்றி உரையாடலாம், நான் கேட்பேன். உனக்கு என் ஆசிகள்” என்று கூறி முடித்தார் அந்தப் பழனி முருகன்.

அதற்கடுத்த சில மாதங்களில் நான் சென்னைக்கு இந்த்பாங்க் ஹவுஸிங் கம்பெனிக்கு மாற்றப் பட்டதால், எனக்கு சாமியிடம் இருந்த தொடர்பு நின்றுபோனது. கணேசனின் தொலைபேசி எண்ணும் மாறியிருக்கலாம். என்னால் அவரையும் தொடர்பு கொள்ள இயலாமல் போயிற்று.

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.