யோகசிம்மபுத்ரன் சரிதை – 093 – தரங்கம்பாடி 8 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 7

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 7

தொடர்ச்சி:

அவர் என்னிடம் சினங்கொள்ளாதது என்னை அடுத்த கேள்வி கேட்கத் தூண்டியது.

நான் தொடர்ந்தேன்.

“சுவாமி, என் தந்தை என் சிறுவயதில் கூறியது இது. இது உண்மையா எனக் கூறுங்கள்.

“அச்சமயம் என் தந்தைக்குப் பரிச்சயமான ஒருவர் இறைநம்பிக்கை தவறானது என்ற கொள்கையுடைய கட்சிக்காரர். ஒருசமயம் அவருக்கு மிகுந்த நோய்வாய்ப்பட்டது, பலமுறை பல வைத்தியர்களிடம் காண்பித்தும் சரியாகவில்லை. உடல் மிகவும் தளர்ந்துகொண்டே வந்தது. அவர் கட்சிக்காகவே மிக உண்மையாய் உழைத்தவர், தன்னலம் கருதாத அவர் தன் கட்சித்தலைவர் தன்னிடம் மிக அன்பாக இருந்ததையும், தன்னை மிகவும்  மரியாதையாக நடத்திவந்ததையும் மீறி, தன் கட்சித்தலைவர் மிகப்பெரிய பதவி அடைந்திருந்த நேரத்தில் கூட அவரிடத்தில் எந்த உதவிக்கும் அணுகியதில்லை.

“ஒருமுறை தஞ்சைக்கு வந்த அந்தத் தலைவர் அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தபோது அவர் உடல்நிலை மிக மோசமாக உள்ளதைக்கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார். தான் இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும், தான் நட்பும் மரியாதையும் கொண்டுள்ள இப்பெரியவர் தன்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லையே என வருந்தி, “ஐயா, என் தந்தையைப்போன்ற தாங்கள் நான் உயிருடன் இருக்கும்போது இவ்வாறு சரியான மருத்துவம் இன்றி உழலலாமா ? என்னோடு வாருங்கள். என்னுடன் காரில் அழைத்துச் செல்கிறேன், அங்கே உங்களை சரியான பெரிய மருத்துவசாலையில் காண்பித்து உங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்க வழி செய்கிறேன். தாங்கள் இன்று மாலையே என்னுடன் கிளம்பி வரவேண்டும்” என்று கூறினார்.

“இந்தப் பெரியவர் அவரிடம், “என்னால் உனக்கு அவப்பெயர் வரக்கூடாது. நீ உன் பதவியில் மக்களுக்குச் செய்ய வேண்டியதை நன்றாகச் செய். என்னிடம் பிரத்தியேகமாகப் பரிவுகொண்டு எனக்கு உதவி செய்வது உனக்கு அவப்பெயரை உண்டாக்கும். எனக்கு நீ கூறிய பண உதவியும் வேண்டாம். எவ்வளவு நாள் நான் உயிருடன் இருப்பேனே அதுவே போதும். நீ என் தலைவன். நீ அங்கீகாரம் பெற்று மக்கள் தேர்ந்தெடுத்து மிகப்பெரியவர்கள் வகித்த இப்பதவியைப் பெற்றிருக்கிறாய். அவர்கள் பெற்ற பெயரைவிட அதிக நற்பெயர் நீ சம்பாதிக்க நான் வாழ்த்துகிறேன். நீ சென்றுவா. மிகச் சாதாரணமான இத்தொண்டனின் மீது அன்புகொண்டு, எனக்கு உடல்நிலை சரியில்லாதது கேட்டு, என்னை என் வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசியுள்ளதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையும் பரிசுமாகும். நான் உன்னுடன் கிளம்பி வர என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்னை மன்னித்துவிடு” என்று கூறினார்.

“தலைவர் இதைக்கேட்டுக் கண்ணீர் சொரிந்து, உடன் வந்திருந்த அதிகாரிகளில் இருவரை அங்கே இருந்து மாலை இப்பெரியவரை அழைத்துவருமாறு கூறிவிட்டுப் புறப்பட்டார். மாலையில் எவ்வளவோ மன்றாடியும் அப்பெரியவர் அத்தலைவருடன் செல்ல மறுத்துவிட்டார். தன் ஊர் திரும்பிய அத்தலைவர், சிலநாட்களுக்கு ஒருமுறை மாவட்ட அதிகாரிமூலம் இவரைப்பற்றி விசாரித்து, இவரை தஞ்சையில் இருந்த நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வைத்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மேலும் மோசமானது. இருவாரம் கழித்து அத்தலைவர் இவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இவரைத் தான் சொல்லும் ஒரு இடத்துக்குச் செல்லவேண்டும், அந்த இடத்தில் எல்லாநோய்க்கும் மருந்து கிடைப்பதாகத் தெரிகிறது. எனவே எதையும் சிந்திக்காது அங்கே செல்லவேண்டும். ஒரு அரசு அதிகாரி அவருடன் வருவார் என்று கூறினார். எவ்வளவோ மறுத்தும் பெரியவரை இணங்க வைத்துவிட்டார் தலைவர். “நீ என் தலைவன். இப்போது பதவியில் உள்ளதால் அரசு அதிகாரியால் என்னை சிறைபிடித்து நீ சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவு இட்டுள்ளாய். என்மீது நீ அளவுக்கதிகமான அன்பு கொண்டுள்ளதால் உன்னால் சிறைபிடிக்கப்பட நான் இசைகிறேன். நீ உன் கையால் விஷத்தைக் கொடுத்து அருந்தச் சொன்னால்கூட மனதார நன்றியுடன் அருந்துவேன். என் எல்லா நோய்களும் போய்விடும். எனவே நீ சொல்லும் இடம் எதுவாக இருப்பினும் அங்கு செல்ல சம்மதிக்கிறேன்.  ஆனாலும் மறுபடி யோசி. உனக்கு அவப்பெயர் வராதபடி நீ நடந்துகொள்” என்று கூறி சம்மதித்துவிட்டார்.

“ஒருவாரத்துக்குள் அவ்வதிகாரியுடன் இவர் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற இடம் பழனிமலை. இவர் நாத்திகரானதால் மலையேறுவதை விரும்பவில்லை. “ஏன், மலையில் ஏறவேண்டும். இங்கே பழனியில்தான் நல்ல சித்த வைத்தியர் எல்லாம் இருக்கிறார்களே” என்றவரிடம் அந்த அதிகாரி “இல்லை, இல்லை, நான் அரசு உத்தரவை மீறமுடியாது” என்றுகூறி அவரை கட்டாயப்படுத்தி வின்ச்சின் மூலம் மலைமேலே அழைத்துச் சென்றார். அங்கே முருகன் கோவில் அருகில் உள்ள ஓர் அறையில் தங்கவைத்து விட்டுச் சென்றார்.

“இரவு பதினோரு மணிக்கு அங்கே வந்த ஒரு குருக்கள் பெரியவரை காலை நான்கு  மணிக்குத் தயாராய் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்றார். இப்பெரியவருக்கு மனது மிகவும் சங்கடப்பட்டது. நாத்திகனான தன்னை எவ்வாறு இங்கு வருமாறு கூறி தன் தலைவன் தன்னை படுத்திவிட்டானே என்று நொந்து விட்டார். அந்த அறையிலேயே தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட யோசித்தார். ஆனால் அவ்வாறு செய்தால் தன் மீது நம்பிக்கை வைத்து அன்புடன் தன்னை அனுப்பிய தன் தலைவனுக்கு மிகப்பெரிய துரோகமாக ஆகிவிடும் என்றும் தோன்றியதால், எது நடந்தாலும் நடக்கட்டும், எப்படியும் தான் சாகும் கட்டத்தில்தானே இருக்கிறோம், என்று தன் மனத்தை தேற்றிக்கொண்டு உறங்கிவிட்டார்.”

 

தொடரும்….

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.