“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 6

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 6

தொடச்சி:

கேள்விகள் பல மனத்தில் எழுந்தன. முதலில் என் வீட்டில் நான் படித்து விளங்கிக் கொள்ள இயலாத ஒரு விஷயம் பற்றிக் கேட்க அப்போது எனக்குத் தோன்றியது.

நான் தொடர்ந்தேன். “முருகன் என்னும் உருவத்தில் இப்போது இவர்மூலம் பேசும் இறைவனே, என்னை மன்னித்து விடும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நான் இறைசக்தியை நம்புகிறேன். ஒரே ஒரு கடவுள் உண்டு என்பதை மனதார நம்புபவன். கடவுளுக்கு எல்லையற்ற சக்தி இருப்பதால் எல்லாமே அவருக்கு சாத்தியமே. இருப்பினும் நான் இளவயதில் வளர்ந்த சூழ்நிலையில் சிறிது நாத்திகமும் எனக்கு வந்துவிட்டது. நான் இங்கே இறையருள் வருவதைப் பற்றி சந்தேகப் படுகிறேனா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் என்னை கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதித்து விட்டதாலும் இங்கே பேசும் சக்தி தெய்வமாகவே இருப்பின் எல்லையில்லாத அன்புக்கு இலக்கணமான அத்தெய்வம் என்னைக் கோபித்து விடாது என்று நம்புவதாலும், நான் கேட்கும் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும், சிறிதும் இவ்விஷயங்களில் முழு அறிவும் இல்லாத என் அதிகப் பிரசங்கித்தனத்துக்கும் என்னை மன்னித்து என் தாயின் அன்பைப் போன்ற அன்பை என்மீது காட்டவும் வேண்டுகிறேன்.”

.”என் வீட்டில் தங்களது தோத்திரங்களைப் படிக்கும்போது ஒரு சமஸ்கிருத ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவும் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியும் ஒன்றுதான் என்ற வரியைப் படித்தேன். நெடுநாட்களாகவே எனக்கு அந்த இடத்தில் படிக்கும்போது மனது நெருடும். தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த நூலில் உள்ள சமஸ்கிருத வார்த்தைகளை தவறாக நான் பொருள் கொள்கிறேனோ அல்லது தப்பாக அச்சடிக்கப்பட்டுள்ள வரிகளோ அவை என்றே எப்போதும் தோன்றும். அதனால் சிலநாட்கள் அந்த சுலோகத்தைப் படிக்காமல் இருக்கிறேன். தாங்கள் தெளிவு படுத்த வேண்டும்.”

(குறிப்பு: இந்த பதிவை நான் மடிக்கணினியில் அடிக்கும்போது அது எந்தச் சுலோகம் என்று நினைவுக்கு வரவில்லை. 35 வருடங்களில் என்னிடம் இருந்த அந்த முருகன் தோத்திரப் புத்தகம் தற்போது இல்லை. அந்தச் சுலோகமும் எனக்கு எந்த சுலோகம் என்று நினைவுக்கு வரவில்லை. கடந்த மூன்று நாட்களாய் நான் என்னிடம் தற்போதுள்ள பல புத்தகங்களில் தேடியும், இணையத்தில் பலமுறை தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. எனினும் எழுத ஆரம்பித்த இத்தொடரை நிறுத்திவிடக் கூடாது என்பதால் இப்போது தொடர்கிறேன்.)

சாமியிடம் இருந்து, இல்லையில்லை, முருகனிடம் இருந்து ஒரு புன்னகையுடன் பேச்சு வந்தது.

“ &&&(குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தின் பெயரைச் சொல்லி)… இந்தப் புத்தகத்தில் …… இந்தப் பக்கத்தில், ….இந்தச் சுலோகத்தில் உள்ள “…. ” இந்த வரிகளைத்தானே நீ கேட்கிறாய் ? நீ சரியாகத்தான் பொருள் கொண்டிருக்கிறாய். நீ தெரிந்து வைத்துள்ள புராணக் கதைகளின்மூலம் அறிந்த தகவல்களுக்கும் இந்த வரிகளுக்கும் முரண்பாடு உள்ளது என்று கருதுகிறாய். என் பக்தனான …..ரிஷி எழுதிய அந்த வரிகள் உண்மையைத்தான் கூறுகின்றன. இறைசக்தி என்பது என்ன, இறைவன் என்பவன் யார், ஒரே ஒரு இறைவன் தானா அல்லது பற்பல உருவங்களில் உள்ளதும் இறைவன் தானா, மனிதனால் முழுமையாகச் சரியாகப் புரிந்து கொள்ள இயலாத உருவங்களின் உண்மைகளை யாராலும் எளிதில் அறிந்துகொள்ள இயலாது. அறிவின் எல்லாப் பரிமாணங்களும் மனிதனின் சிந்திக்கும் மனத்துக்கு வாய்க்காது. நீ படித்துள்ள சில நூல்களில் இதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் உருவத்தில் பேசுவதாக எழுதப்பட்டுள்ள பகவத்கீதையில் ஸ்ரீவிஷ்ணு படைவீரர்களில் தான் கார்த்திகேயனாய் இருப்பதாய்க் கூறியுள்ளதாய் படித்திருக்கிறாய். முருகனே சிவனுமாய், சக்தியுமாய், பெருமாளாயும் உள்ளதை பல தமிழ் தோத்திரங்களில் படித்திருக்கிறாய். இறைசக்தி உருவங்களில் எழுந்தருள்வது குறித்த எல்லா உண்மைகளும் மனிதனால் எளிதில் அறிய வொண்ணாதது. எனவே நீ எந்த ஐயமும் கொள்ளாது இரு. நீ கற்று வந்துள்ள கொள்கைகளை விட்டுவிடாதே. இறைவன் ஒருவனே என்று நீ கொண்டுள்ள கருத்தும் உண்மையே. பலபிறவிகளில் கற்றுள்ள சில கருத்துக்கள் அவ்வப்போது மனதின் சிந்தனை மூலம் வெளிவருவது இயற்கையே. எல்லாவற்றையும் தர்க்கத்தின் மூலம் அறிந்துகொள்ள இயலாது. இறைசக்தியை ஒருபோதும் அறிவின்மூலம் அறிந்துகொள்ள இயலாது. மனத்தின்மூலம், ஆழமான உள்மனத்தின்மூலம் மட்டுமே அந்த சக்தியை உணர்ந்துகொள்ள முடியும். அப்படியே தெளிவுற உணர்ந்துவிட்டாலும் கூட தான் உணர்ந்ததை மற்றவருக்கு சொற்கள் மூலம் சொல்லி உணர்த்தமுடியாது. அறிவுக்குத்தான் மொழி பயன்படும். ஐம்புலன்களில் ஒன்றான பேசும், எழுதும் சக்தியால் பகரப்படும் மொழி உள்ளத்தில் ஒருவன் உணர்ந்ததை பிறருக்கு உணர்த்த சக்தியற்றது. எனவே அம்முயற்சியில் இறங்கவேண்டாம். வேறு என்ன கேட்க வேண்டும் ?”

&&& (குறிப்பு: அவர் சொன்ன புத்தகத்தின் பெயர், சுலோகத்தின் பெயர், இயற்றிய ரிஷியின் பெயர், அவர் குறிப்பிட்ட அந்த வரிகள்,  அந்த வரிகள் அச்சாயிருந்த பக்கத்தின் எண் எல்லாமே மிகச்சரியாக இருந்ததை அன்று நான் வீடுதிரும்பியதும் தேடிப்பார்த்துத் தெரிந்துகொண்டேன்.)

தொடரும்….

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.