யோகசிம்மபுத்ரன் சரிதை – 090 – தரங்கம்பாடி 5 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 4

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 4

தொடர்ச்சி:

அலுவலக வேலைகளில் அடுத்த இரண்டு மாதங்கள் சென்றுவிட்டன. ரீஜினல் ஆபீஸ் மீட்டிங், ப்ரான்ச் இன்ஸ்பெக்ஷன், ஆடிட் என்று நிறைய அதிகப்படி வேலைப்பளு. ஒரு ஞாயிறு மாலை தரங்கம்பாடி (தரங்கம்பாடிக்கு மினி டென்மார்க் என்று 1947 வரை ஒரு பெயருண்டு) கடற்கரையில் முக்கால்வாசி கடலில் மூழ்கிவிட்டும்கூட பூஜைகள் நடந்து கொண்டிருந்த மாசிலாமணிநாதர் கோவிலுக்குச் சென்று, சுவரைப்பிடித்தபடியே கடலுக்குள் இறங்கி நடந்து கோயில் உள்ளே சென்று சிவனை வணங்கிவிட்டு வரும்போது ஒரு ஜெர்மனிக்காரர் ஜீகன்பால்க் சர்ச்சிலிருந்து வெளியே வந்தவர் என்னைக் கண்டதும் அருகில் வந்து ஆங்கிலத்தில் பேசி, அங்கே உள்ள TELC (Tamil Evangelical Lutheran Church) Bishop of Tranquebar அலுவலகம் செல்ல வழி கேட்டார்.

நான் அவருடன் பேசிக்கொண்டே பிஷப் ஆஃபீஸ் வரை சென்று உள்ளே அழைத்துச் சென்றபோது கணேசன் தென்பட்டார். “என்ன சார், இன்னைக்கு சாமியைப்போய் பாக்கலாமா” என்றார். அவரைக் கொஞ்சநேரம் இருக்கச்சொல்லிவிட்டு, ஜெர்மானியருடன் உள்ளே சென்றேன். அப்போது வெளியே வந்த பிஷப்பின் மனைவி (அவரும் ஜெர்மானியர்,பிஷப் நம் தமிழ்நாடுதான்) என்னைக் கண்டதும் வரவேற்று, அந்த ஜெர்மானியரிடம் இந்தியன் பாங்க் கிளையில் நான் மேனேஜர் என்பதையும், நன்றாக கஸ்டமர் சர்வீஸ் செய்கிறோம் என்றும், நானும் சில வாக்கியங்கள் ஜெர்மன் மொழியில் பேசுவதையும் தெரிவித்தார். அவரிடம் நன்றிகூறிவிட்டு வெளியே வந்தால் அங்கே கணேசனின் வண்டி இல்லை.

ஐந்து நிமிடம் காத்திருந்துவிட்டுக் கிளம்பினேன். ஒரு கார் மெதுவாக வந்து அருகில் நின்றது. உள்ளேயிருந்து மாணிக்கப்பங்கு கிராம ப்ரெசிடெண்டு காரில் அமருமாறு கூறினார். எனக்காகக் காத்திருந்த கணேசன் அவருடன் கூட வந்திருந்த உறவினர் வற்புறுத்தியதால் கிளம்பிவிட்டதாகவும், தானும் சிங்கானோடை பக்கம் செல்வதாக இருந்தது தெரிந்த கணேசன் அவரிடம் என்னை சிங்கானோடை ரெங்கனாதன் வீட்டில் விட்டுவிட கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

வண்டியில் என்னிடம் அவர் ரெங்கனாதன் (சாமி) பற்றி பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னது நினைவில் இப்போது இருப்பது தருகிறேன். “சார். எனக்கு முதலில் அந்த ஆளைப் பிடிக்காது. உங்களுக்குத் தெரியும். நான் இரண்டு MA படித்தவன். இரண்டிலும் டிஸ்டிங்க்ஷன் எடுத்தவன். எனக்கு இந்த சாமி வந்து பேசறது, குறிசொல்றது இதில் எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லை. என் கிராமத்தில் சதா குடித்து நோயுற்ற ஐந்து பேர் ஆஸ்பத்திரியில் காட்டியும் சரிவராமல் இருந்தவர் இங்கே வந்து இவரைப் பார்த்து, ஒரேநாளில் குணம் தெரிய ஆரம்பித்து சிலநாட்களில் குணம் அடைந்துவிட்டார்கள். அதில் ஒருவன் என் சொந்தக்காரன். நான் அவனிடம் விசாரித்தேன். “அண்ணே, அவரு ஏதோ ஒரு தட்டில் விபூதி பரப்பி, ஒரு பால்பாயின்ட் பேனாவால் தட்டில் கன்னபின்னான்னு கோடு போடறாரு, அப்பறம் வங்கிட்டுப் போன எலுமிச்சம்பழத்தின் மீதும் அப்படியே எதோ கிறுக்குறாரு. அப்பறம் வேற கொரல்ல பேசறாரு. ஊம்.. ஆங்.. அப்படின்றாரு. அப்புறம் துண்ணூறை நெத்தியிலும் வயத்திலும் தடவுறாரு, போய்ட்டுவான்றாரு, என்னாங்க ஒண்ணும் மருந்து தரல்லயான்னு கேட்டா, துண்ணூறுதாண்டா மருந்துன்றாரு. ஒண்ணும் காசு வாங்கல்ல, திரும்பி வந்து, 15 நாள்ள எனக்கு உடம்பு சரியாயிடுச்சு” என்று சொன்னான். சார் நீங்க பாங்க் சம்பந்தமா அவரைப் பாக்க வர்ரீங்களா” என்றார். நான் பாங்க் சம்பந்தமாக இல்லை என்று சொன்னேன்.

அவர் தொடர்ந்தார். “சார், நான் ஒருநாள் நேர்ல வந்து என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணுன்னு நினச்சிக்கிட்டிருந்தேன். என் பக்கத்துத் தெருவுல இருக்கும் ஒரு பொண்ணுக்கு அம்மை போட்டிருந்தது. அந்தப் பொண்ணோட அம்மா இங்கே வந்து காமிச்சு சீக்கிரமே அம்மை புண்ணெல்லாம் ஆறி சரியாப் போயிடுச்சாம். அவங்க பாட்டி கூட இந்த ரங்கனாதனோட அப்பாகிட்ட காமிச்சு இதுமாதிரியே சீக்கிரம் சரியாயிடுமாம். எனக்கு ஆச்சரியமா இருந்தது. எனக்கு ஒரு MA படிப்புல சைக்காலஜியும் இருந்துது, நாம தீர்மானமா நம்பிக்கையோட ஒரு விஷயத்தை நெனச்சிக்கிட்டா ஒரு நோய்க்கு ஒருமருந்து அல்லது ஒரு ஆள்ட்ட போனா சரியாவும்னு நம்பிப்போனா அது சரியாப்போயிடும் இதுக்கு placebo effectன்னு சொல்வாங்க. அதுபோலத்தான் இருக்கும் அப்படித்தான் நான் நெனச்சேன்.

இப்படித்தான் மாயவரத்துல ஒரு கோயிலுக்குப் போயிருந்தபோது அங்கே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரும் வந்தார். அப்போ அவர் சொன்னது. ஒருதடவை சென்னையில ஒரு வீட்ல ஒரு பொண்ணுக்கு அம்மை போட்டதாம். டாக்டர்லாம் பாத்தும் குறையல. அப்போ அந்த அம்மாவுக்கு ராத்திரி ஒரு கனவுல, அவங்களை மறுநாள் கிளம்பி ஒரு இடத்துக்குப் போகச் சொன்னமாதிரி இருந்ததாம். சொன்ன ஆள்ட்ட கனவுல எந்த இடம் எப்படிப் போறதுன்னு கேட்க, மஞ்சச்சேலை கட்டின ஒரு அம்மாவும் ஒரு பொண்ணும் வழிகாட்டுவாங்கன்னு பதில் வந்ததாம். அந்தம்மா அடுத்தநா காலைல மவளை வீட்ல இருந்த அம்மாட்ட பாத்துக்கச் சொல்லிட்டு, பஸ்ஸ்டாண்ட் போய் எங்க போறதுன்னு குழம்ப, அப்ப யாரோ ஒரு அம்மா (மஞ்சச்சேலலதான்) இந்த பஸ்ஸிலதான் நீ ஏறணும்னு சொல்லிட்டுப் போனாங்களாம். அது காரைக்கால் போற பஸ். ஆக்கூர் தாண்டி பஸ் போவும்போது, ஒரு ஸ்டாப்ல ஒரு சின்னப்பொண்ணு மஞ்சகவுன் போட்டது, இந்தம்மாவப் பாத்து இறங்கச் சொல்லிக் கத்தினதும் இந்தம்மா இறங்கிட்டதாம். அந்தப் பொண்ணு ஒன்றரை கிலோமீட்டர் நடத்தி அழைச்சிட்டுவந்து ரங்கனாதன் வீட்ல நிப்பாட்டி உள்ள போன்னு சொன்னதாம். இந்த அம்மா சென்னைல கனவு கண்டதிலேந்தே சரியான சுயநினைவு இல்லாததால, டக்குன்னு உள்ளே போயிடுச்சாம். உள்ளே யாரும் இல்லாததனாலே, வெளிய வந்தா அந்தப் பொண்ணையும் காணுமாம். அப்பறம் இந்த ஆள்ட்ட அந்த அம்மா பூரா கதையும் சொல்லி, இந்த ஆள் எலுமிச்சம்பழம் குடுத்து விபூதியும் கொடுத்தாராம். சென்னைக்குப் போய் தன் மகளுக்குச் சரியானதும் அந்தப்பொண்ணைக் கூட்டிட்டு வந்து வணங்கிட்டு மறுபடி போனாங்களாம். இது என் ஃப்ரண்டு வீட்டுக்குப் பக்கத்துவீட்டம்மா சொன்னதாம். திரும்பிவரும்போது அந்த அம்மாவ மாயவரத்திலிருந்து சென்னைக்கு ரயிலேத்தி விட்டதாம் அந்தப் பக்கத்து வீட்டம்மா.”

அவர் இன்னமும் சொல்லி இருப்பாரோ தெரியவில்லை. ஆனால் சாமியின் வீடு வந்ததாலே நான் அவரிடம் நன்றி சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன். வாசலில் கணேசன் ஸ்டாண்ட் போட்டிருந்த தன் டூவீலரில் உட்கார்ந்து வாங்க சார் என்றார்.

தொடரும்….

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.