“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 1

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 1

கணேசன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். நான் வெளியில் நின்றிருந்தேன். ஒரு நிமிடத்தில் வெளியே வந்த கணேசன், “ஏன் சார், உள்ளே வந்திருக்கலாமே. சாமி உள்ளேதான் இருக்கிறார். வாங்க,” என்றார்.

ஒரு மரப்பெஞ்சில் அவர் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கைகூப்பி என்னை வணங்கி “வாங்க சார், உட்காருங்க” என்றார்.

“கணேசா, சாரு காப்பி சாப்புடுவாரா?”

“குடுங்கண்ணே, சாப்புடுவாரு” என்ற கணேசன் என்னைப் பார்த்தார். “கொடுங்க சார்” என்றேன்.

எனக்கு எப்படி அவரிடம் பேசுவது என்று தெரியவில்லை. கணேசன் சொன்னபடி பார்த்தால் அவர் சாமியார் போலவோ, மந்திரவாதி போலவோ தோற்றமில்லை. ஒரு லுங்கிதான் அணிந்திருந்தார். மேல்துண்டு மடியில் கிடந்தது. விபூதியைக் குழைக்காமல் நெற்றியில் முக்கால்பாகம் வைத்திருந்தார். எனக்கு அவர் ஒரு சாதாரண மனிதர் போலவே தோன்றினார். அவர் அருகில் ஒரு சிறிய பித்தளைத் தாம்பாளம் (தட்டு) இருந்தது. தட்டில் சிறிது விபூதியும் ஒரு பழைய பால்பாயிண்ட் பேனாவும் இருந்தது.

நான் கணேசனைப் பார்த்துக் கொண்டே கொண்டுபோன பையிலிருந்து ஏழு எலுமிச்சம் பழங்களை எடுத்தேன். அவர் பார்த்தார். இந்தத் தட்டில வைங்க என்றார். என்ன பேசுவது எப்படி பேசுவது என்று சரியாகத் தோன்றாததால் கிளம்பிவிடலாமோ என்றுகூட தோன்றியது.

காப்பி எடுத்துக்கொண்டு சாமியின் பெண் வந்தாள். எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். மூவரும் காப்பி எடுத்துக் கொண்டோம். சிறுவயதில் என் கிராமத்தில் என் பள்ளிநண்பனின் வீட்டில் குடித்த வில்லைகாப்பியின் நினைவு வந்துபோயிற்று. “கறந்த பசும்பாலில் போட்ட காப்பி சார்” என்ரார் கணேசன்.

“அருமையாக இருக்கு. ரொம்ப நன்றி சார்” என்றேன் சாமியிடம். சிரித்தார்.

“சார் எந்த ஊரு? எவ்வளவு புள்ளங்க?”

“எனக்கு ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள மாரியம்மன்கோவில்” என்றேன்.

“புன்னைநல்லூர்தானே”

“ஆமாம். ஊர் பெயர் மாரியம்மன் கோவில்தான். போஸ்ட் ஆஃபீசுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் கூட பெயர் மாரியம்மன் கோவில்தான். எனக்கு ஒரு பெண் குழந்தை. நான் தரங்கப்பாடி கிளைக்கு வந்து ஆறுமாதம் ஆகிறது. நான் பொறையாரில் குடியிருக்கிறேன். கணேசன் உங்களைப் பற்றி சொல்லியிருந்தார். எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதுதான் வந்திருக்கிறேன். உங்களிடம் முன் கூட்டியே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்க வேண்டும். மணிகூட இப்போது எட்டு மணி ஆகிவிட்டது.” என்றேன்.

“சார், இங்கே எப்போ வேணும்னாலும் வருவாங்க சார். நீங்க ஆபீஸ் முடிச்சுட்டே வரலாம்.”

“ஆனால் எனக்கு ஆபீஸ் விட்டுக் கிளம்பரதற்கே எட்டு மணி ஆகிடும் சார். நான் ஒரு சனிக்கிழமையில் வந்திருக்கலாம் இல்லையா கணேசன்.”

“நாமதாம் வந்துட்டமே சாமியையும் பாத்தாச்சு. கேட்டுட்டுப் போயிடலாமே” என்றார் கணேசன்.

சாமி சொன்னார்: “கணேசா, சார் என்னை வேறமாதிரி தோற்றத்திலே இருப்பேன்னு நெனச்சு வந்திருப்பாரு போல தெரியுது. சார் நான் சாதாரண விவசாயிதான். இந்த வீடும் சில ஏக்கர் நிலமும் தான் என் சொத்து. எங்க வீட்டில எங்க அப்பாவுக்கு மேல காளியாத்தா வந்து பேசும். எங்க தாத்தாவுக்கும் வருமாம். ஆனால் அதனாலே எங்க தாத்தாவுக்கும் எங்க அப்பாவுக்கும் உடம்பு ரொம்ப முடியாம போயிடுமாம். எனக்கு சின்ன வயசுல ஒரு நா காளியாத்தா வந்துட்டதாம். அதனால எங்க அம்மா காளியாத்தா கிட்ட வெரதம் இருந்து வேண்டிக்கிட்டாங்களாம் என் மேல காளியாத்தா வரவேணாமுன்னு. அடுத்த நாள் எங்கப்பா மேல காளியாத்தா வந்தபோது “ஒம் பையனுக்கும் சாமி மேலே வந்து பேசும் யோகம் இருக்குது, அதனாலே வீட்டுவாசல்லே ஒரு காளிகோவில் கட்டு, நான் அதிலே தங்கிக்கறேன். கோவில்ல இருந்து ஒன் குடும்பத்தைக் காப்பாத்தறேன். ஆனால் ஒம் பையன் மேல எனக்குப் பதிலா முருகன் வந்து பேசுவான். ஆனா அதனால அவனுக்கு ஒடம்பு பிரச்னை ஏதும் வராது.” என்று சொல்லிவிட்டதாம். அதுக்கப்புறம் பலவருசம் கழிச்சிதான் என் மேல முருகன் வர ஆரம்பிச்சான்.”

மேலும் சொன்னார்: “சார் இங்கே நீங்க நம்பிக்கையுடன் வரலாம். நம்பிக்கை இல்லேன்னாலும் வாங்க நாம நல்லபடியாக நட்பாக இருக்கலாம். எனக்கு கெட்ட வழக்கம் ஏதும் கிடையாது. நீங்க பாங்க் மேனேஜர். என்னோடு பழகினா நான் ஒங்க கிட்ட ஏதாவது லோன் கேட்டுவிடுவேனோ என்று அஞ்சாதீங்க.”

நான் சொன்னேன்: “நிச்சயம் வர்ரேன் சார். நீங்க லோன் கேட்டாலும் என்னால தரமுடியாது. ஒங்க இடம் எங்க பாங்க் ஏரியாவில வராது.”

தட்டில் இருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். நெற்றியில் வைத்துக் கொண்டேன்.

கணேசன் ஒருமாதிரி என்னைப் பார்த்தார். நாங்கள் உடனே சாமியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

நான் ஏதாவது பிரச்னையைப் பற்றிக் கேட்டு சாமியிடம் இருந்து அதற்கான பதிலைப் பெற்றிருக்கலாமே என்று நாங்கள் வண்டியில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது கணேசன் பலமுறை கேட்டார். “நம்பிக்கை இல்லையா சார், சாதாரண மனுஷனா இருக்காரே, நாம நல்லாப் படிச்சவங்க நாம போய் இவருகிட்ட கேட்பதான்னு தோணிடுச்சா சார்.”

“இல்ல கணேசன். இந்த இடத்திற்கு வந்தவுடனேயே எனக்கு ஒரு வைப்ரேஷன் தெரிஞ்சுது. ஆனா நீங்க சொல்றமாதிரி அவர் தோற்றம் வேறமாதிரி ஆன்மீகமா இருக்கும்னு நெனச்சேன். எனக்கு நம்பிக்கை இருக்குது. இந்த மாதிரி உண்மையான சக்தி இருக்கிற இடத்திலதான் எனக்கு அந்த வைப்ரேஷன் கெடைக்கும். ஆனா எனக்கு இன்னைக்கு ஒண்ணுமே கேட்கத் தோணல்ல. இன்னொரு தடவை நிச்சயம் வருவோம். என்ன இங்க அழச்சிக்கிட்டு வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் கணேசன். இன்னக்கு என்ன இங்க அழச்சிட்டு வந்து ஒங்க நேரம் வீணாயிடிச்சா கணேசன் ?”

“ரொம்ப சந்தோஷம் சார். எனக்கு இன்னிக்கு ஒண்ணும் வேலயில்ல. மறுபடி என்னைக்குப் போகலாம் சார். சொல்லுங்க. போகலாம். நன்றி சார். நான் எங்க ஊருக்குப் போயிட்டுவரேன் சார்.”

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

தொடரும்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.