சைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)

சைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)

சுவாமி அவிநாசானந்தர்

(ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை 1998 வெளியீடான “தேவார, திருவாசகத் திரட்டு – பதவுரை, பொழிப்புரையுடன்” நூலின் அறிமுகக் கட்டுரையின் முழுப்படிவம்)

(தொடச்சி)

தனு கரண புவனங்களைப் படைத்தளிக்கப்பெறும் ஆன்மாக்கள் சனன மரணங்கட்கு உட்படும்போது, அவர்களைச் சிவபெருமான் சிறிது சிறிதாகப் பக்குவப்படுத்தி உயர்த்தியருளுகிறான். அவர்கட்கு அகங்கார மமகாரங்கள் குறைந்து வரும்பொருட்டு முதன்முதலாக அவர்களது இன்ப துன்பங்களைப் பெருக்கி, அவ்விரண்டினுள்ளும் மாறி மாறி உழலும்படிச் செய்கிறான்.

இதனால் ஆன்மாக்கள் நாளடைவில் சலிப்படைந்து, சுகம் வரும்போது பெரிதும் மகிழ்ச்சியடையாமலும், துக்கம் வரும்போது மனம் துடியாமலும் வாழ்ந்து வருகிறார்கள். சுகத்தில் விருப்பும் துக்கத்தில் வெறுப்பும் வரவரக்குறைய, முடிவில் சுகதுக்கங்களைச் சமமாகப் பாவித்தலாகிய நிலை அவர்கட்கு வருகின்றது; இது இருவினை யொழிப்பு என்னும் நிலையாகும். இதன்பின் இவ்வின்ப துன்பங்கள் வந்த வழியை நாடும்படி ஆன்மாக்களைச் செய்து, அவ்வாறு நாடும்போது, உள்ளம் முதலியவைகள் நல்வினை தீவினைகளாகிய கன்ம வசப்பட்டு உழன்றமையே காரணம் என்ற உணர்ச்சியைப் பெருமான் உண்டாக்குகின்றனன்.

அவ்வுணர்ச்சி வந்தபின், கன்மமலத்தின் வழியே மனம் முதலியவைகளைச் செல்லவிடாது, இன்ப துன்பங்களை மாற்றும் நல்ல கன்மங்கள் எவைகளோ அவைகளைச் செய்யவேண்டும் என்ற அவாவை உண்டாக்குவான். இது உண்டாதலே மலபரிபாகம் என்னும் நிலையாகும். அதன்பின் சிவபெருமான் தானே அவர்கட்குக் குருவாய் வந்து தீக்ஷையருளி சிவஞானம் உணர்த்துவான். அப்போது பக்குவமடைந்த ஆன்மாவிலே திருவருள் பதிகின்றது. இது சத்திநிபாதம் எனப்படும்.

இவ்வாறு திருவருள் பதியப் பெற்றார்க்கு எடுத்துரைக்கப்படும் உண்மைகள் ஐந்தாகும்:

  1. சித்வடிவமாகிய சிவத்தை அடைதற்குரிய சாதனைகள். இவை சரியை கிரியை யோகங்களாகும்.
  2. இச்சாதனங்களால் ஞானத்தினை உணரும் முறை. ஞானமாவது, இந்திரியங்கள் வேறு ஆன்மா வேறு என்று அறியப்பெற்று, அவ்விந்திரியங்களின் பற்றற்று அவ்வுண்மையை உணர்தல்.
  3. ஞானம் உணர்ந்ததன் பயனாக ஆன்ம சுத்தி பண்ணல். அதாவது, சிவபெருமான் நமது உள்ளம் முதலிய பாச அறிவானும் அறியப்பட்டவனல்லன், அப்பாச அறிவுக்கு உட்பட்ட பசுவாகிய நமது அறிவானும் அறியப்பட்டவனுமல்லன். அவன் வாக்கு மனாதீத கோசரமாய் நிற்பவன் என்று உணர்தல்; பின் அந்த ஞானத்தினால் பாச அறிவோடும் சாராது, பசு அறிவாகிய தன்னறிவிலும் நில்லாது, பதியறிவை நாடி நிற்றல். அப்போது ஆசிரியன் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உபதேசிக்க, அதன் பொருளைச் சிந்தித்து அதன் பயனாகத் தன்னைச் சுத்தமாக்கிக்கொள்ளல்.
  4. ஆன்ம சுத்திக்குப்பின் பரமேச்வரனது ஸ்ரீபாதங்களை அணைதல். அதாவது, ஸ்ரீபஞ்சாக்ஷரச் சிந்தனையால், நாம் சிவன் வசமாயுள்ளோம். நமது செயல் யாவும் அவனருளின் வழி நின்று செய்யும் செயல்களே என்பதை உணர்ந்து நாம் இறைவனோடு ஏகனாகி நிற்க முயலுவோம். அப்போது, மனம் முதலியவைகள் பாச இன்பங்களைப் பழக்கத்தின் பயனாக விரும்பிச் செல்லாதிருத்தற்காக, அவைகளை இறைவனது பணியில் ஈடுபட்டிருக்கச் செய்தலாம்.
  5. பதியைக் கண்டு வழிபடுதல். அதாவது நமது இச்சை ஞானக்கிரியைகள் இறைவன் வழிப்பட்டு, அவனிடத்தும் அவனடியாரிடத்தும் இவனது வடிவினிடத்தும் செலுத்துமாறு செய்தலாம். அவ்வாறு செய்யப்பெறின் நமது உள்ளம் முதலிய அனைத்தும் ஒன்ற உருகவந்து, அவன் நம்முடனும் நாம் அவனுடனும் கலந்து பேரின்பத்தில் மூழ்கி வாழலாம்.

உள்ளம் உருகுதலைச் செய்தற்கு நல்ல சிவயோகம் வேண்டும். சிவயோகத்தை முறையாகப் பழகுவதனால், காண்பான் காட்சி பொருள் என்னும் முப்படியும் கடந்த நிலை வரும்; கரணச் சேட்டையும் தற்போதச் சேட்டையும் ஓயும்; அப்போது ஆன்மாவின் காட்சி உண்டாகும்; பின்னர் நம் ஆன்மாவையே உடம்பாகக் கொண்டு சிவபெருமான் வாழ்வது உணரப்படும்; அதாவது, நம் அறிவிற்குள் அறிவாய் விளங்கும் பேரறிவே சிவன் என்ற உணர்ச்சி உண்டாகும்.

நம் ஆன்மாவுக்கு அவன் எஜமானனாயுள்ள நிலைமையை அறிதலும், அவனை வணங்கும் தன்மையும் உன்டாகும்; அப்போது நம்மிடத்து ஊற்றெனப் பெருகும் அன்பால் அவனை நீராட்டுதலும், அந்த அன்பின் முதிர்ச்சியால் ஆனந்தவடிவாகிய நம்மை மலராக்கி, அம்மலரை அம்மலரின் மணம்போல உறையும் சிவபெருமானுக்கு இட்டுச்செய்யும் பூசை நடைபெறும்.

இதனால் தற்போதம் அடங்கிவிட, அவ்விடத்தே, திருச் சிலம்போசை கேட்கும். அவ்வோசை வழியே செல்ல, சிதாகாசத்திலே நடராஜப் பெருமானது தரிசனம் உண்டாகும். அவனைக் கண்டு தொழுது அவனது அருளை மறவாதிருக்கவே அந்த இறைவன் அடியாரது உள்ளத்தில் புகுந்து அதனை உருகச் செய்து, ஆன்மாவையும் கரணங்களையும் சிவமாக்கி யருளுவான். அப்போது சிவாநந்த அமுதமே சதா பெருகிக் கொண்டிருக்கும்.

இந்நிலையில் உள்ள அடியார்களிடத்துத் தமக்கென ஒரு செயலும் நிகழாது; எல்லாம் சிவச்செயல்களேயாகும். அவர்கள் உடம்புடையராயினும், அவ்வுடம்பால் அனுபவிக்கும் இன்பமும் பேரின்பமாகும். அவர் சென்ற நெறியெல்லாம் செந்நெறியாகும். அவர் செய்தனவெல்லாம் அவச்செயலாகாது தவச் செயலாகும்.

இச்சிவ ஞானிகளின் அன்பின் பெருமையை உலகத்தார் அறியுமாறு இறைவன் தனது அருட்செயல்களையெல்லாம் அவர்கள் வாயிலாகவே அவர்கள் செய்தனவாகவே ஆக்கி யருள்வான். அன்பே சிவமாகும்; மெய்யன்பு மூலமாகத் தற்போதம் இவ்வாறு முற்றும் ஒழிந்து சிவபோதமே எப்பொழுதும் குடிகொண்டிருக்கப்பெறும் நிலையே முத்திநிலையாகும்.

(Concluded)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.