சைவ சித்தாந்தம் – 3

சைவ சித்தாந்தம் – 3

சுவாமி அவிநாசானந்தர்

(ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை 1998 வெளியீடான “தேவார, திருவாசகத் திரட்டு – பதவுரை, பொழிப்புரையுடன்” நூலின் அறிமுகக் கட்டுரையின் முழுப்படிவம்)

(தொடச்சி)

பெறுதற்கரிய இப்பேற்றைப் பக்தி நெறியால் அடையலாகும். சிவபெருமான் ஆன்மாவோடு கலந்திருத்தல் அவனருளாலன்றி வேறில்லை. ஆகவே அவனது அருளை வியந்து அதனையே நாடி இயன்றவாறு அவனுக்கென்றே தொண்டு வகைகளை அன்போடும் வைராக்கியத்தோடும் அயராது செய்வதே பக்தி நெறி எனப்படும்.

அகங்காரம் போனாலன்றிச் சிவன்பால் அன்பு உண்டாகாது. அது போவதற்குச் சாதனங்களாவன: — சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும்.

அவற்றுள் சரியையாவது: சிவபெருமானது கோயில் தலத்தை அலகிடல், திருமெழுக்குச் சாத்தல், வழிபாட்டுக்காகப் பூக்கொய்தல், பூமாலை கட்டுதல், புகழ்ந்து பாடல், திருவிளக்கிடல், திருநந்தவனம் செய்தல் முதலிய தொழில்களை அன்போடு செய்தலாகும்.

கிரியையாவது: வாசனைத் திரவியம், தூபம், தீபம், தீர்த்தம், புஷ்பம், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம் ஆகிய பூஜைக்குரிய பொருள்களைக் கொண்டு பஞ்சசுத்தி செய்து உட்பூஜை, புறப்பூஜை அக்கினி கார்யம் முதலியவற்றை விதிப்படிச் செய்தலாம்.

யோகமாவது: முக்குணங்களையும் ஐம்புலன்களை அடக்கி, மூலவாயுவை எழுப்புகின்ற இடைபிங்கலை என்னும் நாடிகளை அடைத்துச் சுழிமுனை வழியைத் திறந்து, நடனச் சிலம்போசையுடன் சென்று, பஞ்சாக்ஷரம் ஏகாக்ஷரமாம் தன்மைகண்டு, அருளைத்தரும் புறவெளியிலே புகுந்து அழுந்தியிருத்தலேயாகும்.

ஞானமாவது: பல நூல்களையும் ஆராய்ந்து, பதி, பசு, பாசம் என்னும் மூன்று தத்துவங்களின் இலக்கணங்களைத் தெளிந்து, பண்டை வினையின் பயனாக வந்த சிற்றறிவு முற்றும் நீங்கி, பேரறிவாகிய சிவஞானம் விரிந்து தோன்றும் மனதைப் பெறுதலேயாம்.

சரியை முதலிய நான்கும் நான்கு படிகளாகும்; அவை முறையே அரும்பு மலர் காய் கனி போலாகும் என்பர் தாயுமானவர். அன்போடு சரியை முதலியவற்றைச் செய்து வரும்போது, சிவபெருமானுக்கும் நமக்கும் ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ளுதல் அன்பைப் பெரிதும் வளர்க்கும். இம்முறைப்படி, சரியை முதலிய நான்கு படிகளும், தாசமார்க்கம், ஸத்புத்ரமார்க்கம், ஸஹமார்க்கம், ஸன்மார்க்கம் எனப்படும்.

தாசமார்க்கமாவது இறைவனை ஆண்டானாகவும் நம்மை அடிமையாகவும் கருதி வழிபடுதல்; இதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் திருநாவுக்கரசர். ஸத்புத்ரமார்க்கமாவது இறைவனைத் தந்தையாகவும் நம்மைக் குழந்தையாகவும் நினைந்து வழிபடுதல்; இதை உலகில் நிலைநாட்டியவர் திருஞான சம்பந்தர்.   ஸஹமார்க்கமாவது, இறைவனை நமக்கு தோழனாகக் கருதி வழிபடுதல்; இதை விளக்கியவர் சுந்தரர். ஸன்மார்க்கமாவது இறைவனை ஆன்மாவுக்கு உயிராய் நினைந்து வழிபடுதல்; இந்த ஞானமார்க்கத்தில் நின்று அதனை உலகிற்குப் போதித்தவர் மாணிக்கவாசகர். இந்நான்கு நெறிகளில் ஒன்றை பட்டும் பின்பற்றினாலும் முடிவில் உயர்ந்த ஞானம் உதிக்கப்பெற்றுச் சிவானந்தப்பேறும் முக்தியும் பெறலாகும்.

Continued in next part.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.