கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது

images

(I am giving extracts from Norman Vincent Peale’s POWER OF POSITIVE THINKING. — நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி – தமிழில் நாகலட்சுமி சண்முகம் – மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்)

 

பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களை மூன்றாகப் பிரிக்கலாம். முதல் பகுதியினரின் நோய்க்கான காரணம் உடல்ரீதியானது. இரண்டாவது பகுதியினரின் பிரச்சனை உணர்ச்சி மற்றும் உடல்ரீதியானது. மூன்றாவது பகுதியினரின் பிரச்சனை முழுக்க முழுக்க உணர்ச்சிரீதியானது என்று கொலராடோ மருத்துவக் கல்லூரியின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபிராங்க்ளின் எபாஹ் கூறினார்.

இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டுள்ள எந்தவோர் அறிவுள்ள மனிதரும், கோபம், பகைமை, வெறுப்பு, தீய எண்ணம், பொறாமை, பழியுணர்ச்சி ஆகிய மனப்போக்குகள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுவது சரிதான் என்பதை உணர்கின்றனர். கோபப்பட்டுப் பாருங்கள். ஒருவித புரட்டல் உணர்வு உங்கள் வயிற்றைக் கசக்கிப் பிழிவதை உங்களால் உணர முடியும். வேகமான உணர்ச்சி வெளிப்பாடுகள் நம் உடலில் வேதியல் வினைகளைத் தூண்டிவிடுகின்றன. இது உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நீடித்தால், உடல்நிலை மெல்ல மெல்லச் சீர்குலையும்.

தனது ஒரு நோயாளி மன வெறுப்பின் காரணமாக இறந்து போனதாக ஒரு மருத்துவர் குறிப்பிட்டார். இறந்துபோன மனிதர் எனக்கும் அறிமுகமானவர். நீண்ட நாட்களாகத் தன் மனத்தில் வெறுப்பைக் கொண்டிருந்ததால்தான் அவர் இறந்ததாக அந்த மருத்துவர் உண்மையிலேயே உணர்ந்தார். “அவரது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து போகும் அளவுக்கு அவர் தன் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். ஒரு நோய் அவரைத் தாக்கியபோது, அதை எதிர்க்கக்கூடிய சக்தியோ, அதிலிருந்து மீண்டு வந்து தன் ஆரோக்கியத்தைப் புதுப்பிப்பதற்கான ஆற்றலோ அவரிடம் இருக்கவில்லை. தனது தீய விருப்பம் என்னும் புற்றுநோயின் மூலம் அவர் தன்னைக் குழிதோண்டிப் புதைத்திருந்தார்,” என்று அந்த மருத்துவர் விளக்கினார்.

சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த மருத்துவர் சார்லஸ் மைனர் கூப்பர் ‘இதயப் பிரச்சனைகள் குறித்து இதயத்தில் இருந்து வரும் ஆலோசனை’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்: “உங்கள் உணர்ச்சி வெளிப்பாடுகளைக் குறைத்து கொள்ள வேண்டும். ஒரு நோயாளி கோபம் கொண்டபோது அதன் பதில்விளைவாக, உடனடியாக அவரது இரத்த அழுத்தம் அறுபது புள்ளிகள் ஏறியதை நான் பார்த்திருக்கிறேன். அத்தகைய கொந்தளிப்புகள் இதயத்தின்மீது எவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.” வெடுக்கென்று கோபம் கொள்ளும் ஒரு நபர், ஒரு தவறு ஏற்படும்போது உடனடியாக அடுத்தவர்மீது அதற்காகப் பழி சுமத்துகிறார். மாறாக, நடந்து போன விஷயம் குறித்து உங்களைத் தொந்தரவு செய்யாமல் தவிர்த்துவிடுவது புத்திசாலித்தனம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜான் ஹன்டரை அவர் மேற்கோள் காட்டினார். டாக்டர் ஹன்டருக்கும் இதயத்தில் ஒரு பிரச்சனை இருந்தது. வலிமையான உணர்ச்சிகள் தன் இதயத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை அவர் நன்றாகப் புரிந்திருந்தார். தனக்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவரின் தயவில் தன் வாழ்வு இருந்ததாக அவர் கூறினார். உண்மையிலேயே, அவர் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒரு நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

டாக்டர் கூப்பர் இவ்வாறு தன் கட்டுரையை நிறைவு செய்கிறார்: “வியாபாரத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனை உங்களுக்கு எரிச்சலூட்டத் துவங்கும்போதோ அல்லது நீங்கள் கோபம் கொள்ளத் துவங்கும்போதோ உங்கள் உடலை நன்றாகத் தளர்த்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அதிகரிக்கும் கொந்தளிப்பை அது வலுவிழக்கச் செய்யும். தன் உடலையும், மனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய, ஒரு மகிழ்ச்சியான, சலனமற்ற மனிதனிடத்தில் தன்னை நிரந்தரமாகக் குடியமர்த்துமாறு உங்கள் இதயம் உங்களைக் கேட்கிறது.”

நீங்கள் சரியான நிலையில் இல்லை என்று நீங்கள் நினைத்தால், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு உங்களை சுயமாக ஆய்வு செய்யும்படி நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

ஏதேனும் தீய எண்ணத்தையோ அல்லது கோபத்தையோ அல்லது வெறுப்பையோ உங்கள் மனத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று நேர்மையாக நீங்களே உங்களைக் கேளுங்கள். அப்படி இருந்தால், உடனே அவற்றை வெளியேற்றிவிடுங்கள். எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக அதைச் செய்யுங்கள். அவை வேறு எவரையும் காயப்படுத்துவதில்லை. யார்மீது அந்த மோசமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களுக்கு அவை தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இரவும் அவை உங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

பல மக்கள் மோசமான ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்கள் உட்கொள்ளும் பொருட்கள் அல்ல, மாறாக, அவர்களை விழுங்கும் விஷயங்கள்தான். தீய உணர்ச்சிகள் உங்கள்மீதே திரும்பி, உங்கள் ஆற்றலை உறிஞ்சி, உங்கள் திறனைக் குறைத்து, உங்கள் ஆரோக்கியத்தைச் சீரழிக்கின்றன. அதோடு, அவை உங்கள் மகிழ்ச்சியையும் வெளியேற்றிவிடுகின்றன.

நம் எண்ணப் போக்குகள் நம் உடல்நிலைகளின் மீது ஏற்படுத்தும் விளைவுகளை இன்று நாம் உணர்கிறோம். கோபத்தின் மூலம் ஒருவரால் தன்னை நோய்வாய்ப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர்கிறோம். ஒரு குற்ற உணர்ச்சியின் காரணமாக, தன் உடலில் அவரால் பல விதமான அறிகுறிகளை உருவாக்க முடியும் என்று நாம் அறிகிறோம். பயம் மற்றும் கவலையாலும் தன் உடலில் ஒருவரால் நிச்சயமான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். எண்ணங்கள் மாற்றப்படும்போது குணமாதல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிகிறோம்.

நூற்று இரண்டு டிகிரி காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி சமீபத்தில் ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார். அவளுக்கு நிச்சயமாக முடக்குவாதம் இருந்தது. அவளது மூட்டுக்கள் மிகவும் வீங்கிப் போயிருந்தன.

அவளது பிரச்சனையை முழுமையாக ஆய்வு செய்வதற்காக, வலியில் இருந்து அவளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு லேசான ஒரு வலி தணிக்கும் மருந்தைத் தவிர வேறு எந்த மருந்தையும் அந்த மருத்துவர் அவளுக்குக் கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த இளம்பெண் அந்த மருத்துவரிடம், “எவ்வளவு காலம் நான் இந்த நிலையில் இருப்பேன்? எத்தனை நாட்கள் நான் இந்த மருத்துவமனையில் இருக்க வேண்டும்?” என்று கேட்டாள்.

“நீங்கள் சுமார் ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்,” என்று அந்த மருத்துவர் பதிலளித்தார்.

“ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறுகிறீர்களா?” என்று அப்பெண் கேட்டாள்.

“என்னை மன்னிக்க வேண்டும். அதைவிடச் சிறப்பான வாக்குறுதியை என்னால் உங்களுக்குத் தர முடியாது,” என்று அவர் கூறினார்.

இந்த உரையாடல் மாலை வேளையில் நடந்தது. அடுத்த நாள் காலையில் அவளது வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. மூட்டு வீக்கமும் போய்விட்டிருந்தது. அந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாததால், அந்த மருத்துவர் அவளை ஒருசில நாட்கள் மருத்துவமனையில் வைத்துக் கண்காணித்தப் பிறகு வீட்டிற்குத் திருப்பி அனுப்பினார்.

ஒரு மாதத்திற்குள் அதே பிரச்சனையுடன் அப்பெண் அந்த மருத்துவமனைக்குத் திரும்பி வந்தாள். உடல் வெப்பநிலை நூற்று இரண்டு டிகிரியாக இருந்தது. மூட்டுக்கள் வீங்கியிருந்தன. பல கேள்விகளுக்குப் பிறகு, விஷயம் என்னவென்று கண்டறியப்பட்டது. வியாபாரத் தொடர்புகளில் தனக்குப் பெரும் இலாபங்களை ஈட்டித் தரக்கூடிய ஒரு குறிப்பிட்ட நபரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணின் தந்தை அவளை வற்புறுத்தினார். அவள் தன் தந்தையை மிகவும் நேசித்தாள். அவரது விருப்பப்படி நடந்து கொள்ள விரும்பினாள். ஆனால் தான் நேசிக்காத ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. எனவே அவளது ஆழ்மனம் அவளது உதவிக்கு வந்தது. அதன் விளைவாக, அவளுக்கு முடக்குவாதத்தையும் காய்ச்சலையும் அது ஏற்படுத்தியது.

அந்தத் திருமணத்தை அவர் தன் மகள்மீது கட்டாயப்படுத்தினால், அவரது மகள் முடமாகக்கூடும் என்று அந்த மருத்துவர் அவளது தந்தைக்கு விளக்கிக் கூறினார். அதையடுத்து, அவள் தனக்கு விருப்பமில்லாதவரைத் திருமணம் செய்து கொள்ளத் தேவையில்லை என்று அவளது தந்தை கூறியவுடன், அவள் விரைவாகவும் நிரந்தரமாகவும் குணமடைந்தாள்.

உங்களுக்கு முடக்குவாதம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் தவறான மனிதரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக நினைக்க வேண்டாம்! இந்த நிகழ்வு, மன வலி எவ்வாறு உடல்நிலையின்மீது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான வெறும் எடுத்துக்காட்டு மட்டுமே.

குழந்தைகள் தங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தொற்றுநோய்களைப் பிடித்துக் கொள்வதைவிட அதிக விரைவாக, பயத்தையும் வெறுப்பையும் ‘பிடித்து’க் கொள்கின்றனர் என்று ஓர் உளவியலாளர் எழுதியிருந்ததைப் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. பயம் என்னும் நுண்கிருமி அவர்களது ஆழ்மனங்களில் ஆழ ஊடுருவி, வாழ்நாள் முழுவதும் அங்கு நிரந்தரமாகக் குடியிருக்கும். “ஆனால் அதிர்ஷ்டவசமாக, அன்பு, நற்குணம், மற்றும் விசுவாசம் ஆகியவற்றையும் குழந்தைகளால் பிடித்துக் கொள்ள முடியும். எனவே அவர்களால் இயல்பான, ஆரோக்கியமான குழந்தைகளாகவும் இளைஞர்களாகவும் வளர முடியும்,” என்று அந்த உளவியலாளர் கூறுகிறார்.

‘லேடீஸ் ஹோம் ஜர்னல்’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், டெம்பிள் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு வெயிஸ், அமெரிக்க மருத்துவர்கள் கல்லூரியில் நிகழ்த்திய ஓர் உரையை மேற்கோள் காட்டுகிறார். அதில், தங்களுக்கு மிக நெருக்கமான ஒருவர்மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் தசைகளிலும் மூட்டுக்களிலும் நாட்பட்ட வலி மற்றும் வேதனையால் துன்புற்றுக் கொண்டிருக்கக்கூடும் என்று டாக்டர் வெயிஸ் குறிப்பிட்டார். வழக்கமாக அப்படிப்பட்ட மக்கள் தாங்கள் ஒரு நாட்பட்டக் கோபத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை முற்றிலும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

“தெளிவாகக் கூற வேண்டும் என்றால், கிருமிகளைப்போல் உணர்ச்சிகளும் உணர்வுகளும் உண்மையானவை, அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். நுண்ணுயிரிகளால் ஏற்படும் வலியும், நோய்களும் எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, உணர்ச்சிகளால் ஏற்படும் வலியும், நோய்களும் உண்மையே, அவை கற்பனையல்ல. எது எப்படி இருந்தாலும், தன் உடலில் உருவாகும் நோய்க்கு ஒரு நோயாளியைக் குறைகூற முடியாது. அவர்கள் எந்தவிதமான மனநோயாலும் துன்புறவில்லை. மாறாக, ஒரு திருமணப் பிரச்சனை அல்லது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட உணர்வுக் கோளாறுகளால் துன்புறுகிறார்கள்,” என்று அந்த ஆசிரியர் தொடர்ந்து கூறினார்.

இதே கட்டுரையில், தனது கையில் ஏற்பட்டிருந்த அரிப்பால் துன்புற்றுக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்டப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர் மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது, அது தோல் அழற்சி நோய் என்பது கண்டறியப்பட்டது. அவரைப் பற்றிக் கூறுமாறு அந்த மருத்துவர் அவரை ஊக்குவித்தார். அப்பெண் எதற்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தெரிய வந்தது. அவரது உதடுகள் மிக மெல்லியதாகவும் இறுக்கமாகவும் இருந்தன. அவருக்கு வாத நோயும் இருந்தது. அந்த மருத்துவர் அவரை ஓர் உளவியலாளரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணின் வாழ்வில் இருந்த ஏதோ ஒரு வெறுப்பூட்டும் சூழ்நிலை அவரது கையில் ஒருவிதமான அரிப்பாக வெளிப்பட்டுள்ளது என்பதை அந்த உளவியலாளர் உடனடியாகக் கண்டுகொண்டார்.

இறுதியில் அந்த மருத்துவர், “எது உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது? நீங்கள் ஏதோ ஒன்றின்மீது கடும் வெறுப்புடன் இருக்கிறீர்கள், சரிதானே?” என்று நேரடியாகக் கேட்டார்.

“அவர் இறுக்கமாகி, மருத்துவமனையைவிட்டு விருட்டென்று வெளியேறினார். நான் அவரது பிரச்சனையைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன் என்பதை அறிந்து கொண்டேன். அது அவரைச் சங்கடத்திற்கு ஆளாக்கி இருக்க வேண்டும். ஒருசில நாட்களில் அவர் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தார். அவரால் தன் கையில் ஏற்பட்டிருந்த வேதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே என் உதவியை ஏற்றுக் கொள்ள அவர் முன்வந்தார். தான் கொண்டிருந்த வெறுப்பைக் கைவிடவும் அவர் தயாராக இருந்தார்.

“அவரது குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஓர் உயில் தொடர்பான பிரச்சனையில், அவரது இளைய சகோதரர் அவரை நியாயமின்றி நடத்தி இருந்தார். அவர் தன் சகோதரர்மீது கொண்டிருந்த வெறுப்பைக் கைவிட்டவுடன் குணமடைந்தார். அவர் தன் சகோதரரோடு சமரசம் செய்து கொண்ட இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் அவரது தோல் அரிப்பு முற்றிலுமாக மறைந்துவிட்டிருந்தது.”

உணர்ச்சிரீதியான தொந்தரவுக்கும் சாதாரண சளித் தொந்தரவுக்கும் இடையேகூட ஒரு தொடர்பு உள்ளது என்று அதைப் பற்றி ஆய்வு செய்த, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எல்.ஜே.சாமுவேல் சுட்டிக்காட்டுகிறார்.

“உணர்ச்சிரீதியான தொந்தரவுகள் மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றின் ஓரத்தில் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கின்றன என்று நம்பப்படுகிறது. அவை சுரப்பிகளின் இயக்கத்தையும் பாதிக்கிறது. இக்காரணிகள், சளி நுண்ணுயிரிகளாலோ அல்லது தொற்று நோய்க் கிருமிகளாலோ சளிச்சவ்வுகள் அதிகமாகத் தாக்கப்படும் நிலையை
உருவாக்கிவிடுகின்றன.”

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எட்மன்ட் ஃபெளலர் இவ்வாறு கூறினார்: “பரீட்சை நேரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சளித் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். ஏதோ ஒரு பிரயாணத்திற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ பலருக்குச் சளி பிடிக்கிறது. ஒரு பெரிய குடும்பத்தைப் பராமரிக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்குச் சளி பிடிக்கிறது. தன் மாமியார் தன் வீட்டிற்கு வந்தவுடன் சளி பிடிப்பதையும், அவர் திரும்பிச் சென்றவுடன் அந்தச் சளி மறைந்துவிடுவதையும் பல நோயாளிகளிடம் காண முடிகிறது.” (அந்த மாமியாருக்குத் தன் மருமகளாலோ அல்லது மருமகனாலோ என்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை டாக்டர் ஃபெளலர் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவருக்கும் சளி பிடித்திருக்கக்கூடும்!)

இருபத்தைந்து வயது நிரம்பிய ஒரு விற்பனைப் பெண்ணைப் பற்றி டாக்டர் ஃபெளலர் தெரிவிக்கிறார். மருத்துவமனைக்குச் சென்றபோது அப்பெண்ணின் மூக்கு அடைத்திருந்தது. மூக்கின் ஓரம் செந்நிறத்தில் இருந்தது. தலைவலியாலும் காய்ச்சலாலும் அவள் துன்புற்றாள். இந்த அறிகுறிகள் சுமார் இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நீடித்திருந்தன. அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கடுமையான சண்டைக்குப் பிறகு ஒருசில மணிநேரங்களில் அவரிடம் இந்த அறிகுறிகள் துவங்கியிருந்தன என்று கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் சில மருந்துகள் கொடுத்து அவரது சளியைப் போக்கினர். ஆனால் ஒருசில வாரங்களுக்குள் வேறொரு பிரச்சனையுடன் அந்த இளம்பெண் திரும்பி வந்தார். இம்முறை, கறிவெட்டுபவர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு பிரச்சனை தொடங்கியிருந்தது. மீண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு, அவருக்கு நிவாரணம் ஏற்பட்டது. ஆனால் இந்த சளித் தொந்தரவு அவரை மீண்டும் மீண்டும் தாக்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு கோப வெளிப்பாட்டிற்குப் பிறகே அது துவங்கியிருந்தது. இறுதியில், அவரது மோசமான கோபம்தான் அவரது நாட்பட்டச் சளி அறிகுறிகளுக்குக் காரணம் என்று டாக்டர் ஃபெளலர் அப்பெண்ணை ஏற்றுக் கொள்ள செய்தார். அவள் அமைதியாக வாழக் கற்றுக் கொண்டபோது, அவளது தும்மல்களும் பிற மூக்கு உபாதைகளும் மறைந்தன.

இருந்தாலும், வெறுக்காதீர்கள் அல்லது கோபப்படாதீர்கள் என்று பைபிள் கூறும்போது, அது வெறும் ‘கோட்பாட்டு ரீதியான ஆலோசனை’ என்றுதான் மக்கள் இன்னமும் நினைக்கின்றனர்.

பைபிள் கோட்பாட்டுரீதியானது அல்ல. அது நமது மாபெரும் ஞானப் புத்தகம். வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பற்றிய நடைமுறை ஆலோசனை அதில் அடங்கியுள்ளது.

கோபம், வெறுப்பு, மற்றும் குற்ற உணர்வு ஆகியவை உங்களை நோய்வாய்ப்படச் செய்கின்றன என்று நவீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பலரால் புறக்கணிக்கப்படும் அல்லது வெறும் மதரீதியானது, நடைமுறைக்கு ஒத்துவராதது என்று கருதப்படும் புனித பைபிள்தான் இன்றைய காலத்திற்கும் பொருத்தமான, தனிமனித நலனுக்கான சிறந்த புத்தகம் என்பதை இது நிரூபிக்கிறது. மற்ற எந்தப் புத்தகத்தைவிடவும் மிக அதிக எண்ணிக்கையில் படிக்கப்படும் புத்தகம் இது என்பதில் வியப்பில்லை.

ஏனெனில், நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை மட்டும் நாம் இப்புத்தகத்தில் கண்டறிவதில்லை. கூடவே, அத்தவறுகளை நாம் எவ்வாறு சரி செய்வது என்பதையும் இதில் பார்க்கிறோம்.

பாதுகாப்பாக உணராத குழந்தைகள் ‘உணர்ச்சிரீதியான சளி’த் தொந்தரவால் துன்புறுகின்றனர் என்பதை டாக்டர் ஃபெளலர் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

சிதைவுபட்டக் குடும்பத்தில் இருந்து வரும் பல குழந்தைகளிடம் நாட்பட்டச் சளிகள் ஏற்படுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார். ஒரு புதிய குழந்தை பிறந்தவுடன் அக்குடும்பத்தில் இருக்கும் ஒரு மூத்தக் குழந்தைக்கு மீண்டும் மீண்டும் மூச்சுப்பாதையில் தொற்றுநோய் ஏற்படுகிறது. அதற்குக் காரணம், அக்குழந்தை தான் புறக்கணிக்கப்படுவதாகவும், பொறாமையாகவும் உணர்வதுதான்.

ஓர் ஒன்பது வயது சிறுவனின் தந்தை மிகவும் கண்டிப்பான பேர்வழி, தாயாரோ அதிகச் செல்லம் கொடுப்பவர். தந்தை கண்டிப்பானவராகவும், தாயார் செல்லம் கொடுப்பவராகவும் இருந்ததால், இந்த முரண்பாடு அக்குழந்தையைத் தொந்தரவு செய்தது. குறிப்பாக, தன் தந்தையின் தண்டனைக்கு அவன் பயந்தான். இச்சிறுவன் பல வருடங்களாகத் தும்மலாலும், பிற சளி உபாதைகளாலும் தொடர்ந்து துன்புற்றான். அவன் தன் பெற்றோரைவிட்டு வெகுதூரம் வெளியே சாகச முகாம்களில் கலந்து கொள்ளச் சென்றபோதெல்லாம் அவனது சளி மறைந்தது என்று கண்டுகொள்ளப்பட்டது.

எரிச்சல், கோபம், வெறுப்பு ஆகியவை நம் உடல் ஆரோக்கியத்தின்மீது இவ்வளவு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்போது, இதற்கான மாற்று மருந்து எது? நல்லெண்ணம், மன்னிப்பு, விசுவாசம், அன்பு, அமைதியுணர்வு ஆகிய போக்குகளால் மனத்தை நிரப்புவதுதான் அதற்கான மாற்று என்பது வெளிப்படை. அதை எவ்வாறு சாதிப்பது? அதை நடைமுறைப்படுத்துவதற்கான சில பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மோசமான உணர்வுகளை, குறிப்பாக, கோப உணர்ச்சியை எதிர்கொள்வதற்காகப் பலரும் இவற்றைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

இப்பரிந்துரைகளை முறையாக, ஒழுங்காகச் செயல்படுத்தி வந்தால், சிறந்த ஆரோக்கியமும் உடல் நலமும் உருவாகும்.

1. ​ கோபம் என்பது ஓர் உணர்ச்சி, உணர்ச்சி எப்போதும் வெதுவெதுப்பாகவும், சில சமயம் சூடாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே ஓர் உணர்ச்சியைக் குறைப்பதற்கு அதைக் குளிரச் செய்யுங்கள். அதை எவ்வாறு குளிரச் செய்வது? ஒருவர் கோபம் கொள்ளும்போது அவரது கைமுட்டிகள் மடங்கும், குரல் கடுமையாக உயரும், தசைகள் இறுகும், உடல் இறுக்கமடையும். (உளவியல்ரீதியாக நீங்கள் சண்டைக்குத் தயாராக இருக்கிறீர்கள். அதனால் அட்ரினலின் உங்கள் உடல் முழுவதும் சீறிப் பாய்கிறது.) எனவே இந்த உணர்ச்சியின் சூட்டைக் குளிரால் எதிர்த்திடுங்கள். அதை உறையச் செய்துவிடுங்கள். உங்கள் கைமுட்டிகள் மடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் விரல்களை நீட்டி வையுங்கள். உங்கள் குரலை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள்; முணுமுணுக்கும் அளவுக்குக் குறையுங்கள். முணுமுணுக்கும்போது விவாதிப்பது கடினம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள் அல்லது கீழே படுத்துக் கொள்ளுங்கள். படுத்திருக்கும்போது கோபப்படுவது சிரமம்.

2. ​ “ஒரு முட்டாளாக இருக்காதே. இது உன்னை எங்கும் கொண்டுபோய்ச் சேர்க்கப் போவதில்லை. எனவே, அதை உதறித் தள்ளிவிடு,” என்று உங்களிடம் சத்தமாகக் கூறுங்கள். அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வது சற்றுக் கடினம்தான். ஆனாலும் முயற்சி செய்து பாருங்கள்.

3. ​ கோபத்தைக் குளிரச் செய்வதற்கான சிறந்த உத்திகளில் ஒன்றைத் திருமதி. கிரேஸ் ஆர்ஸ்லர் பரிந்துரைத்தார். முதலில் அவர் ‘பத்தில் இருந்து ஒன்று வரை எண்ணும்’ உத்தியைப் பயன்படுத்தினார். ஆனால், கடவுளின் பிராத்தனையின் முதல் சில வார்த்தைகள் அதைவிடச் சிறப்பாகச் செயல்படுவதைக் கவனித்தார். “பரம மண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” கோபமாக இருக்கும்போது இதைப் பத்து முறை கூறுங்கள். உங்கள் கோபம் உங்கள்மீது கொண்டுள்ள சக்தியை இழந்துவிடும்.

4. ​ கோபம் என்பது எண்ணற்ற சிறிய எரிச்சல்களின் கூட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு பெரிய வார்த்தை. இந்தச் சிறு எரிச்சல்கள் ஒவ்வொன்றும் அளவில் சிறியதாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று இணையும்போது அதிக ஆற்றல் பெற்று, இறுதியில் ஒரு கடும் ஆவேசத்துடன் வெளிப்பட்டு, பெரும்பாலான நேரங்களில் நம்மைத் தலைகுனிய வைத்துவிடுகின்றன. எனவே, உங்களுக்கு எரிச்சலூட்டும் அனைத்தையும் ஒரு பட்டியலிடுங்கள். அவை எவ்வளவு முக்கியத்துவம் அற்றவையாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபிள்ளைத்தனமானவையாக இருந்தாலும் சரி, அவற்றை அப்படியே பட்டியலிடுங்கள். நாம் இதைச் செய்வது, கோபம் என்னும் மாபெரும் ஆற்றுக்கு உணவளிக்கும் சிறிய ஓடைகளை வற்றச் செய்வதற்குத்தான்.

5. ​ ஒவ்வோர் எரிச்சலையும் குறித்துத் தனித்தனியாகப் பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு நேரத்தில் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் வெற்றி பெறுங்கள். கோபம் என்பது பல எரிச்சல்களின் ஆற்றல்மிக்கத் தொகுப்பு என்பதால், உங்கள் ஒட்டுமொத்தக் கோபத்தையும் அழிக்க முயற்சிப்பதற்கு மாறாக, பிரார்த்தனை மூலம், உங்கள் கோபத்திற்குத் தீனி போடும் சிறிய எரிச்சல்களை ஒவ்வொன்றாகக் கத்தரித்துவிடுங்கள். இவ்வழியில் நீங்கள் உங்கள் கோபத்தை வலுவிழக்கச் செய்துவிடுவீர்கள். காலப்போக்கில் அதை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவீர்கள்.

6. ​ ஒவ்வொரு முறை உங்களிடம் கோபம் ஏற்படுவதை நீங்கள் உணரும்போதும், “உணர்ச்சிரீதியாக இது எனக்கு உண்மையிலேயே நன்மை பயக்கிறதா? இதைச் செய்தால் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்வேன். என் நண்பர்களையும் இழப்பேன்,” என்று கூற உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். இந்த உத்தி உங்களுக்கு முழுமையான பலனைத் தர வேண்டும் என்றால், “எதைப் பற்றிக் கோபப்படுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை,” என்று தினசரி சில முறை கூறுங்கள். “ஐந்து சென்டுகள் மதிப்புடைய எரிச்சல்மீது ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள உணர்ச்சியைச் செலவிடுவது புத்திசாலித்தனம் அல்ல,” என்றும் பிரகடனம் செய்யுங்கள்.

7. ​ பிறர் உங்களைக் காயப்படுத்தும் ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, உடனடியாக அதைச் சரி செய்துவிடுங்கள். அதைப் பற்றி ஒரு கணம்கூட வீணாகச் சிந்தித்துக் கவலைப்படாதீர்கள். அது குறித்து ஏதேனும் செய்யுங்கள். நீங்கள் பிணக்கம் கொள்ளவோ அல்லது சுயபச்சாதாபத்தில் ஈடுபடவோ ஒருபோதும் உங்களை அனுமதிக்காதீர்கள். மனத்தில் கோப எண்ணங்களைச் சுமக்காதீர்கள். உங்கள் உணர்வுகளுக்கு காயம் ஏற்படும்போது, உங்கள் விரலில் காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்களோ அதையே செய்யுங்கள். உடனடியாகச் சிகிச்சை அளியுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால், உங்கள் சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போய்விடும். எனவே, அன்பு மற்றும் மன்னிப்புப் பிரார்த்தனையைக் கூறி, உங்கள் மனக் காயத்தின்மீது சில சொட்டுக்கள் ஆன்மீக அயோடினைத் தெளியுங்கள்.

8. ​ உங்கள் மனக் குறைகளைத் தொடர்ந்து வெளியேற்றுங்கள். அதாவது, உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் சென்று, மனம் திறந்து பேசுங்கள். உங்கள் மனத்தில் ஒரு சொட்டுக் குறைகூட இல்லாதவாறு அவரிடம் அனைத்தையும் கொட்டிவிடுங்கள். பிறகு அதைப் பற்றி மறந்துவிடுங்கள்.

9. ​ உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியவருக்காகப் பிரார்த்திக்கத் துவங்குங்கள். உங்கள் மனத்தில் உள்ள வன்மம் மறைந்து போகும்வரை இதைத் தொடருங்கள் சில சமயங்களில், அந்த விளைவைப் பெறுவதற்கு நீங்கள் சற்று அதிக காலம் பிரார்த்திக்க வேண்டியிருக்கலாம். இம்முறையை முயற்சி செய்து பார்த்த ஒருவர், தன் மனக்குறை நீங்கி அமைதி ஏற்படும்வரை தான் எத்தனை முறை பிரார்த்திக்க வேண்டியிருந்தது என்று கணக்கு வைத்திருந்ததாக என்னிடம் கூறினார். அவர் சரியாக அறுபத்து நான்கு முறை பிரார்த்தித்தார். பிரார்த்தனையின் மூலம் அவர் தன் காயத்தை ஆற்றினார். இது நிச்சயமாக வேலை செய்யும்.

10. ​ இச்சிறு பிரார்த்தனையைச் செய்யுங்கள்: “கடவுளின் அன்பு என் இதயத்தை நிரப்பட்டும்.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.