கண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்

பழைய செய்திதான் ஆனால் என்றைக்கும் நல்ல செய்தி

சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர்.

அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.

இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார்.

இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள்.

சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.

இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான்.

தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது.

தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.

குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும்.

வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது.

மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.

தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது அந்த குழந்தை.

சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.

இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது.

அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.

காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது.

சாப்பாடு ஊஹூம்.

அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது.

சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.

பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள்.

அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.

டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை.

எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை.

மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை.

மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.

ஒரே மருந்து…. அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும்.

இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும்.

அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.

அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, என் கம்பனிக்கு அடுத்து இருக்கும் ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர்.

முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதை நினைவில் வைத்துக்கொண்டு, என் ஊராக இருக்கும் என்று என்னிடம் வந்தார்.

விபரங்கள் கூறினார்.

குழந்தை போல அழுதார்.

ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.

நான் அவரிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள்.

நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.

அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும்,
எனக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று.

அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தேன்,

அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டேன்.

ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது.

ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது,

கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம்.

நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற,

சௌதி என்னிடம் பேச சொல்ல, நான் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல,

அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல.

அனைத்தையும் சௌதியிடம் கூறினேன்.

அவரோ தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை.

எனக்கு என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.

சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டேன்.

அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை.

சிறிலங்காவிற்கு விசா கிடைப்பது அரிது.

அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு.

அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.

அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தேன்.

அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி,

அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து,

அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.

குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.

நேராக அவர்களை அழைத்துக் கொண்டு சாத் மருத்துவமனைக்கு சென்றோம்.

மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது.

குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.

குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் சென்றோம்.

குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார்.

அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றோம்.

மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது.

இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட

அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற, ஒரே நிசப்தம்.

எனக்கோ எதோ ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.

சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய..

அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.

ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான்,

அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான்,

எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை,

சடார்….. என்று எந்திரிக்க,

உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க,

அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி,

கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய

அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.

எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.

அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள்.

சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.

அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன,

கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.

அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம்,

அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை,

குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால் வாழ்க்கை வசந்தமே.

நன்றி : திரு கணேஷ்குமார் அவர்களின் முகநூல் பதிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.