எதுவுமே மிச்சமில்லை — அப்படியா ?

மனப்போக்குகள் உண்மைகளைவிட மிகவும் முக்கியமானவை!
.

ஐம்பத்திரண்டு வயது நிறைந்த மனிதர் ஒருவர் என்னிடம் ஆலோசனை பெற வந்தார். அவர் மிகவும் மனம் தளர்ந்திருந்தார். அவர் முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தனக்கு ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று அவர் கூறினார். தன் வாழ்நாளில் அவர் உருவாக்கியிருந்த அனைத்தும் பறிபோய்விட்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

“அனைத்துமா?” என்று நான் கேட்டேன்.

“ஆம், அனைத்தும் பறிபோய்விட்டது,” என்று அவர் மீண்டும் கூறினார். தனக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று மீண்டும் வலியுறுத்தினார். “என்னிடம் எதுவுமே மிஞ்சவில்லை. எல்லாம் போய்விட்டன. எனக்கு நம்பிக்கை போய்விட்டது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்குவதற்கு எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. நான் என் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்,” என்று அவர் கூறினார்.

எனக்கு அவர்மீது பரிவு ஏற்பட்டது. நம்பிக்கையின்மை என்ற கரிய நிழல் அவர் மனத்திற்குள் புகுந்து அவரது கண்ணோட்டத்தை உருக்குலைத்ததுதான் அவரது முக்கியப் பிரச்சனை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவரது உண்மையான ஆற்றல்கள் இந்த எதிர்மறையான சிந்தனைக்குப் பின்னால் சென்று பாதுகாப்பாக ஒளிந்துகொண்டு, அவரைச் சக்தியற்றவராக ஆக்கிவிட்டன.

“ஒரு காகிதத்தை எடுத்து, உங்களிடம் எஞ்சியுள்ள சொத்துக்களை நாம் எழுதினால் என்ன?” என்று நான் கேட்டேன். அவர் பெருமூச்செறிந்தவாறே, “அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான் ஏற்கனவே கூறியதைப்போல என்னிடம் எதுவுமே மிச்சமில்லை,” என்று கூறினார்.

“இருந்தாலும் நாம் முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் மனைவி இன்னும் உங்களோடு இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

“ஆம், ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? அவர் மிகவும் அற்புதமானவர். எங்களுக்குத் திருமணமாகி முப்பது ஆண்டுகள் ஆகின்றன. என் நிலைமை எவ்வளவு மோசமானாலும் சரி, அவர் என்னைவிட்டு ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டார்.”

“சரி, அதை நாம் எழுதிக் கொள்ளலாம்: உங்கள் மனைவி இன்னும் உங்களோடு இருக்கிறார்; என்ன நிகழ்ந்தாலும் சரி, அவர் ஒருபோதும் உங்களைவிட்டு விலகிச் செல்ல மாட்டார். உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?”

“ஆமாம், எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அற்புதமானவர்கள். ‘அப்பா, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் எப்போதுமே உங்களுக்குத் துணை நிற்போம்,’ என்று அவர்கள் என்னிடம் கூறிய விதம் என் இதயத்தைத் தொட்டது,” என்று அவர் பதிலளித்தார்.

“அப்படியானால், அது நாம் பட்டியலிட வேண்டிய இரண்டாவது விஷயம்: உங்களை நேசிக்கும், உங்களுக்குத் துணை நிற்கும் மூன்று குழந்தைகள். உங்களுக்கு யாரேனும் நண்பர்கள் இருக்கிறார்களா?” என்று நான் வினவினேன்.

“ஆம், எனக்கு உண்மையிலேயே சில அருமையான நண்பர்கள் வாய்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர்கள் என்னிடம் வந்து எனக்கு உதவ விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிந்தவரை, அவர்களால் எனக்கு எதுவுமே செய்ய முடியாது.”

“அது மூன்றாவது விஷயம்; உங்களை மதிக்கும், உங்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். உங்கள் நாணயத்தைப் பற்றிப் பேசலாம். நீங்கள் ஏதேனும் தவறு செய்திருக்கிறீர்களா?”

“எனது நாணயம் அப்பழுக்கின்றி இருக்கிறது. நான் எப்போதுமே சரியான விஷயங்களைச் செய்ய முயற்சித்துள்ளேன். என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது.”
“சரி, அதை நாம் நான்காவது விஷயமாகச் சேர்த்துக் கொள்ளலாம்: நாணயம். உங்கள் ஆரோக்கியம் எப்படி?”

“நான் நோய்வாய்ப்பட்ட நாட்கள் மிகக் குறைவு. நான் கச்சிதமான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன்.”

“அப்படியானால், நல்ல உடல் ஆரோக்கியம் நம் பட்டியலில் ஐந்தாவது விஷயம். அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம் நாட்டில் வியாபாரம் நன்றாக நடக்கிறது, வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“ஆம், இவ்வுலகில் நான் வாழ விரும்பும் ஒரே நாடு இதுதான்.”

“அது ஆறாவது விஷயம்: வாய்ப்புகள் நிறைந்துள்ள அமெரிக்காவில் நீங்கள் வாழ்கிறீர்கள், இங்கு வாழ்வதில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். உங்கள் சமய நம்பிக்கை எப்படி? நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? கடவுள் உங்களுக்கு உதவுவார் என்று நம்புகிறீர்களா?” என்று நான் கேட்டேன்.

“ஆம், கடவுளின் உதவி மட்டும் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், என்னால் இவற்றையெல்லாம் கடந்து வந்திருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
.

நாம் கண்டறிந்துள்ள சொத்துக்களை நாம் இங்கு பட்டியலிடலாம்:

“1. ஓர் அற்புதமான மனைவி – திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகியுள்ளன.

“2. உங்களுக்குத் துணை நிற்கத் தயாராக இருக்கும் மூன்று குழந்தைகள்.

“3. உங்களை மதிக்கும், உங்களுக்கு உதவத் தயாராக இருக்கும் நணபர்கள்.

“4. நாணயம் – அது குறித்து நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்.

“5. நல்ல உடல் ஆரோக்கியம்.

“6. உலகிலேயே தலைசிறந்த நாடான அமெரிக்காவில் வாழ்கிறீர்கள்.

“7. சமய நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.
.

அப்பட்டியலை நான் அவரிடம் கொடுத்தேன். “இதைப் பாருங்கள். உங்களிடம் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. உங்களிடமிருந்து அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக நீங்கள் கூறியதாக நான் நினைக்கிறேன்.”

அவர் வெட்கத்துடன் என்னைப் பார்த்து சிரித்தார். “நான் அவ்விஷயங்களைப் பற்றி யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நான் அவற்றை ஒருபோதும் என் சொத்துக்களாக நினைத்துப் பார்த்ததில்லை. என் நிலைமை அவ்வளவு மோசமானதாக இப்போது எனக்குத் தோன்றவில்லை.

எனக்கு ஓரளவு தன்னம்பிக்கை கிடைத்தால், எனக்குள் இருக்கும் சக்தியை என்னால் சிறிது உணர முடிந்தால்,

ஒருவேளை மீண்டும் ஆரம்பத்திலிருந்து என்னால் துவங்க முடியலாம்,” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினார்.

அவர் புரிந்து கொண்டார். மீண்டும் முதலிலிருந்து துவங்கினார். ஆனால், அவர் தன் கண்ணோட்டத்தையும் மனப்போக்கையும் மாற்றிக் கொண்ட பிறகுதான் அவரால் அவ்வாறு செய்ய முடிந்தது.

நம்பிக்கை அவரது சந்தேகங்களை விரட்டி அடித்தது. அவர் தனது சிரமங்களில் இருந்து மீண்டு வருவதற்குப் போதுமான அளவிற்கும் மேலாகவே அவருக்குள் இருந்த ஆற்றல் வெளிப்பட்டது.

இந்நிகழ்ச்சி ஓர் ஆழமான #உண்மையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

அந்த உண்மை, பிரபல உளவியலாளர் டாக்டர் கார்ல் மெனிஞ்சர் வெளியிட்ட ஒரு முக்கியமான அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

“மனப்போக்குகள் உண்மைகளைவிட மிகவும் முக்கியமானவை,” என்று அவர் கூறினார். அந்த வாசகத்தின் பொருள் உங்களை முழுவதுமாக ஆட்கொள்ளும்வரை அதை மீண்டும் மீண்டும் கூறி வருவது நல்லது.

நாம் எதிர்கொள்ளும் எந்தவோர் உண்மையும், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நம்பிக்கையற்றதாக இருந்தாலும் சரி,

அது குறித்து நாம் கொண்டிருக்கும் மனப்போக்கோடு ஒப்பிடுகையில் அது ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. ஓர் உண்மை குறித்து நாம் சிந்திக்கும் விதம் அந்த உண்மை குறித்து நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பாகவே நம்மைத் தோற்கடிக்கக்கூடும்.

ஒரு விஷயத்தை நீங்கள் நேரடியாகச் சமாளிக்கத் துவங்கும் முன்பாகவே, மனரீதியாக அது உங்களை மூழ்கடிக்க நீங்கள் அனுமதித்துவிடுவீர்கள்.

ஆனால், ஓர் உறுதியான, நன்னம்பிக்கையுடன் கூடிய எண்ணப் போக்கு, அந்த விஷயத்தை மாற்றிவிடும் அல்லது அதிலிருந்து மீண்டுவிடும்.

நன்றி – நார்மன் வின்சென்ட் பீல் (நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி)

Leave a comment